அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நெஸ்லே , ரிலையன்ஸ் பால் பவுடர்களில் காஸ்டிக் சோடா வும் ப்ளீச்சிங் பவுடரும் கலப்பதாக பேட்டி கொடுத்து அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.
இரண்டு கம்பெனிகளும் குற்றச்சாட்டை மறுக்கின்றன. ஆய்வறிக்கை தன்னிடம் இருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.
எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் யார் குற்றம் சாட்டப் படுகின்றாரோ அவருக்கு வாய்ப்பு அளித்து அதன் பின்னரே வெளியே சொல்ல வேண்டும்.
அமைச்சரின் குற்றச்சாட்டு பொறுப்புள்ளதாக தெரியவில்லை.
நாட்டில் உணவுப் பொருள் கலப்பட தடுப்பு சட்டம் அமுலில் இருக்கிறதா இல்லையா?
தனியாரோ கம்பெனியோ குற்றம் செய்திருந்தால் அந்த சட்டப் படி நடவடிக்கை எடுக்க என்ன தடை?
ஒரு சாம்பிள் எடுத்து அதை தகுதி வாய்ந்த பரிசோதனை கூடத்தில் அறிக்கை பெற்றால் மட்டும் போதாது. அதன் தொடர்ச்சியாக சட்டப் படியான நடவடிக்கை வேண்டும். அப்போதுதான் அது குற்றம் நிரூபிக்க வேண்டிய அமைப்பின் முன் விசாரணையை சந்திக்க நேரிடும்.
அமைச்சர் தனக்கும் கீழே இருக்கும் அதிகாரிகளை காரணம் காட்டுகிறார் நடவடிக்கை எடுக்காததற்கு.
குற்றச்சாட்டு மிகவும் முக்கியமானது. மக்களின் நல வாழ்க்கையோடு தொடர்புடையது.
அதை மிக சாதாரணமாக அமைச்சர் கையாளுவது சரி அல்ல.
குற்றம் நிரூபிக்கப் பட்டால் நிறுவனங்களுக்கு தண்டனை. இல்லை என்றால் குற்றம் சாட்டியவருக்கு என்ன தண்டனை ?
ஒரு வழக்கை கூட போடாமல் யார் மீதும் குற்றம் சுமத்த கூடாது என்பது கூடவா அமைச்சருக்கு தெரியாது.
அவசரமாக காவல் துறை தலையிட்டு விரிவாக ஆராய வேண்டிய குற்றச்சாட்டு இது.