Latest News

பசு மூத்திரம், சாணி, பால், தயிர், நெய் கலவை பஞ்சகவ்யம் -ஆராய உயர் மட்ட குழு அமைத்தது மோடி அரசு??!!

Share

பசு மூத்திரம், சாணி , பால், தயிர்  நெய் ஐந்தும் கொண்ட கலவை பஞ்சகவ்யம் எனப்படும்.

இதற்கு என்னென்ன குணங்கள் உள்ளன என்பதை பற்றி  ஐ ஐ டி ஒன்றில் நடந்த ஒரு ஆராய்ச்சிக் கூட்டத்தில் விஞ்ஞானிகளால் விவாதிக்கப் பட்டது.

ஏற்கனெவே கங்கை ஆற்றின் தண்ணீரை தபால் நிலையங்களில் விற்று வரும் மோடி அரசுக்கு பசு பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாடுகளை சந்தைப் படுத்துவதில் பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.    அதனால் பல பகுதிகளில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக பலர் கொல்லப் பட்டு வரும் நிலையில் இந்தப் பிரச்னை இப்போது உச்ச நீதி மன்றத்தில் இருக்கிறது.

மோடி அரசு இப்போது கோமியத்தை கையில் எடுத்திருக்கிறது.

19 பேர் கொண்ட கமிட்டி – எல்லாம்  மெத்தப் படித்தவர்கள் –  கூடி ஆய்வு செய்து முடிவு செய்யப் போகிறார்கள். எதைப்பற்றி? பஞ்சகவ்யம் விஞ்ஞான மதிப்பும் ஆராய்ச்சியும்  என்ற தலைப்பில் . இதன்  தலைவர் விஞ்ஞான மற்றும் தொழில் வள அமைச்சர் ஹர்ஷ வரதன்.

ஆர் எஸ் எஸ் – விஸ்வ இந்து பரிஷத் இணைந்த விஞ்ஞான அனுசந்தன் கேந்திரா அமைப்பை பல  ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள்.   அது பசு மூத்திரம் சாணம் பற்றி ஆராய்ந்து  வருகிறது.

பல அமைச்சகங்கள் கொண்ட குழுவாக அமைத்ததன் மூலம் இதற்கு ஒரு விஞ்ஞான அங்கீகாரம் தர முயல்கிறது மோடியின் அரசு.

எதைப்பற்றியும் ஆராய்வதிலோ உண்மையை கண்டறிவதிலோ எந்த ஆட்சேபணையும் இருக்க முடியாது.

அதுவும் இந்த  பஞ்சகவ்யம் எப்படியெல்லாம் மருத்துவ குணம் கொண்டது – மருந்தாக விவசாய பயன்பாடு பொருளாக   உணவு ஊட்டச்சத்து பொருளாக மற்றும்  பயன்படு பொருளாக – என நான்கு விதமாக ஆராய்ச்சி செய்கிறார்கள்.

செய்யட்டும்.   நன்மை விளைந்தால் நல்லதுதானே.    ஆனால் இவர்களை பற்றி மக்கள்  வைத்துள்ள கருத்துரு- இவர்கள் எதை செய்தாலும் மதம் சார்ந்து செய்வார்கள் என்பதுதான்.      இவைகளை பற்றிய அவநம்பிக்கை தான் இந்த ஆராய்ச்சியையும் சந்தேகிக்க வைக்கிறது.

நாட்டையே சைவமாக ஆக்கும் முயற்சியில் இப்போது  ஆர் எஸ் எஸ் வழிகாட்டலில் இயங்கும்  மோடியின் அரசு இறங்கி இருக்கிறது.    அது முடியுமா என்றால் முடியாது என்பதுதான் எல்லாருடைய பதிலாக இருக்கும் .     ஆனாலும் தங்கள் முயற்சியில் அவர்கள் பிடிவாதமாக இருப்பார்கள்.     நாளை நடக்காததை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து செய்வோமே என்பது அவர்கள் குணம்.

ஆட்சி அதிகாரத்தை பயன் படுத்தி தங்களின் வர்ண தர்ம  கொள்கை யை அமுல் படுத்தும் திட்டத்தை ஒருபோதும் அவர்கள் கைவிடப் போவதில்லை.

ஏன் இந்த முயற்சியில் மாற்றுக்கருத்து கொண்டோரையும் இணைத்துக் கொள்ளக் கூடாது?      ஏன் அரசுப் பணியில் உள்ளோர் கட்சி சாராதோர் தானே என்பார்கள்.      ஆனால் உண்மையில் அவர்களும் ஒரு வகையில் ஒத்த கருத்து கொண்டவர்களாக இருப்பார்கள்.

விஞ்ஞான ஆராய்ச்சி என்றால் ஏன் அது இந்திய ஆராய்ச்சியாக இருக்க வேண்டும். சர்வ  தேச விஞ்ஞானிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டியது தானே?

விஞ்ஞானத்திற்கு எது எல்லை. ?     நாடு கடந்த ஆராய்ச்சியே உண்மையை வெளிக்கொணரும்.

உண்மை வெளிவரும் நாளை நாடு எதிர் நோக்கி காத்திருக்கிறது.

 

 

This website uses cookies.