அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தனியார் பால் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டு பல ஊகங்களுக்கு வித்திட்டிருகிறது.
தயிரையே பாலாக மாற்றுகிறார்களாம். ஹைட்ரஜன் பெராக்சிட், க்ளோரின் மற்றும் யூரியா போன்ற பொருட்களை கலந்து விற்பதால் பதினைந்து நாட்கள் வரை தனியார் பால் கெடுவதில்லை யாம்.
அமைச்சர் சொல்வதுபோல் ஐந்து நாட்களில் உறை ஊற்றவில்லை என்றால் பால் கெட்டுப்போக வேண்டும். கெட்டால்தான் பால்.
தனியார் நிறுவனங்கள் குற்றச்சாட்டுகளை மறுத்தாலும் ஆய்வுக்குப் பின்தான் அவர்கள் குற்றம் அற்றவர்களா என்பது தெரியும்.
இன்று மாதவரம் பால் பண்ணையில் தனியார் பால் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு முடிவுகள் வந்ததில் அவைகள் ரசாயனம் கலந்து இருப்பது உறுதிப் பட்டு இருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.
மிரட்டி பணம் பறிக்கும் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டா என்றெல்லாம் கூட பலர் விமர்சிக்கிறார்கள். அவைகளில் உண்மை உள்ளதா என்பது இனி அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பொறுத்தே தெரிய வரும்.
தனியார் பால் நிறுவனங்கள் மூடப் பட வேண்டிய நிலை வந்தால் அதனால் பெறும் பயன் அடையப் போவது ஆவின் நிறுவனம். எனவே போட்டி நிறுவனம் சுமத்தும் பொய் குற்றச்சாட்டாக இது அமைந்து விட கூடாது.
நீதி மன்றங்கள் இதில் நிச்சயம் தலையிடும். அப்போது அரசு சட்டப் படி நடந்திருக்கிறதா என்பது பரிசீலிக்கப் படும்போது உண்மை தெரிந்து விடும்.
கலப்படம் உண்மையென்றால் தண்டனை தவறக்கூடாது.