தமிழனை ஆளும் ஆசை எல்லாருக்கும் வரும்போது கமலஹாசனுக்கு ஏன் வரக்கூடாது?
வந்து விட்டது!
தீபா , தீபா கணவர் மாதவன், ரஜினி இப்போது கமல்.
யாரும் ஸ்டாலினை முன்னிறுத்தி விடக்கூடாது என்பதில் ஒரு கூட்டம் கவனமாக இருக்கிறது.
அவர்கள் தங்களுக்கு உள்ளேயே ஒருவரை எதிர் முகாமுக்கு தள்ளுவார்கள். அங்கும் தங்கள் ஆள் இருக்க வேண்டும் என்பதே நோக்கம். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே பா ஜ க தலைவர்கள் எதிர்ப்பதை உண்மை என்று எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் செய்யும் விமர்சனங்கள் எல்லாம் ஊருக்காக என்பது அவர்களுக்கும் தெரியும் கமலுக்கும் தெரியும்.
தமிழ்நாட்டில் ஊழல் பெருகிவிட்டது என்று எப்போது கமல் சொன்னார்?. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பார்ப்பனப் பெண் ‘ சேரி நடத்தை ‘ என்று பேசி அது கண்டனத்துக்கு உள்ளாகியபோது அதற்கு பொறுப்பேற்க வேண்டும் கமல் என்ற குரல் எழுந்த பிறகு ‘ கெட்ட வார்த்தையெல்லாம் சாதாரணமாகி விட்டது என்று கடந்து போனார் கமல். கண்டிக்க தைரியம் இல்லை. அல்லது தேவையில்லை என்று கருதி இருக்கலாம்.
தமிழ் நாட்டில் ஊழல் என்று கமல் சொல்ல அதை எளிதாக கையாண்டிருக்க வேண்டிய அமைச்சர்கள் அதை ஊதி பெரிதாக்கி ஆளாளுக்கு பதில் கொடுக்க சவால் விட அதையே காரணமாக்கி ‘ முடிவெடுத்தால் யாம் முதல்வர் ” என்று அறிவிக்கும் துணிவை பெற்றுவிட்டார் கமல் ஹாசன்.
சுயமரியாதை கருத்துகளுக்கு ஆதரவாக பேசி வருபவர்தான் அவர்.
சினிமாவில் இருந்ததால் மக்கள் பிரச்னைகள் பற்றி பேச வேண்டிய அவசியம் எழாமல் போயிருக்கலாம்.
ஆனால் தமிழன் தலையெழுத்து யார் வேண்டுமானாலும் அவனை ஆள முடியும் என்று இருக்கிறதே?
பொது தொண்டு செய்ய வருபவர்கள் யாரும் பெரியார் மாதிரி பதவிகளுக்கு ஆசைப் படாமல் ‘ நான் சாதி ஒழிப்பு கிளர்ச்சிக் காரன் ‘ என்று சொல்லிக் கொள்ள வேண்டாம் குறைந்தது நான் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று சொல்ல தயாராக இல்லையே?
ஒருவர் போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிறார். மற்றொருவர் முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்கிறார்.
சிவாஜி , விஜயகாந்த் எல்லாம் போய் இன்னும் விஜய் , அஜித் சிம்பு எவரையும் அந்த ஆசை விடாது போல் தெரிகிறது.
ரசிகர் மன்றங்களை ஒழிக்க ஏதாவது வழி இருக்கிறதா?
பிள்ளைகளை கண்டிக்கும் தைரியம் பெற்றோருக்கு இல்லையா? முடியாதா? மெளனமாக அனுமதிப்பதும் குற்றமல்லவா?
கமல் மட்டுமாவது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றினார். மற்றவர்கள் அதைகூட செய்யவில்லை .
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்களுக்குரிய அரசியல் உரிமையை பயன் படுத்த தடை போட முடியாது.
ஐம்பது ஆண்டு காலம் வேறு துறையில் பணியாற்றி விட்டு திடீரென்று ஞானோதயம் பிறந்து அரசியல் களத்தில் குதிக்கிறேன் என்றால் குதிக்கட்டும்.
அதற்கு முன் மக்கள் பிரச்னைகளில் தன் கருத்து என்ன என்பதையாவது சொல்ல வேண்டாமா?
வந்த பிறகு சொல்கிறேன் என்றால் இப்போது சொல்ல விரும்ப வில்லை என்று தான் பொருள்.
எந்த பிரபலம் அரசியலுக்கு வந்தாலும் பொறுப்பு கிடைக்கும் என்று ஒரு கூட்டம் காத்திருக்கிறது. ஏற்கெனெவே அவருக்கு இருபது லட்சம் நற்பணி மன்ற உறுப்பினர்களாம்.
ஐம்பது கட்சி ஐம்பத்து ஒன்றாக ஆகப் போகிறது.
கொள்கை என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சொல்லி கொள்ளலாம். கட்சி நடத்தலாம்.
ஏதோ அறிவிப்பு செய்யப் போகிறாராம். செய்யட்டும். காத்திருப்போம்.
This website uses cookies.