ஜெயலலிதாவை வீழ்த்த யாரால் முடியும் என்பதற்கான தேர்தலே 2016 ?

jayalalitha
jayalalitha

பொதுவாக தேர்தல் என்றால் யார் ஆள வேண்டும் என்பதற்காக நடத்தப் படும் தேர்தல் என்றே பொருள்படும்.
ஆனால் எதிர்வரும் தேர்தல் இதற்கு மாறானது.    கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதா அப்படிப்பட்ட நிலைமையை உருவாக்கி இருக்கிறார்.
எதேச்சாதிகாரத்தின்  உச்சம்.    பொதுக்குழுவிலும் சட்டமன்றத்திலும் காலில் விழ வைத்து இவர்கள்  எனது அடிமைகள் என்று உலகுக்குக் காட்டும் ஆணவம்.    நினைத்த கணத்தில் தூக்கியடித்து அடுத்தவர்களை அடுத்த வாய்ப்பு எனக்கு என ஏங்க வைக்கும் தந்திரம்.   தன் படத்தை தவிர வேறு எவர்  படத்தையும் போடக்கூடாது என்று எல்லாரும் ஒன்றுமில்லாத ஜீரோக்கள் என்று பறை சாற்றும் துணிச்சல்.   பணம் சேர்ப்பது ஒன்றே குறிக்கோள் என்று சகல மட்டத்திலும் ஊழலை  மிகச் சாதாரணமான நியாயமாக நிலை பெறச் செய்து விட்ட தைரியம்.     பொய் வழக்கு போட்டு எதிர்கட்சிகளை அடக்கும் அடக்கு முறை. மொத்தத்தில் சட்ட விரோதமே சட்டம் என்று ஆகி விட்டது.
மீண்டும் ஜெயலலிதா ஆட்சி தொடர்ந்தால் தமிழ் நாட்டு நிலைமை  என்ன என்று நினைத்துப் பார்த்தாலே அச்சமாக இருக்கிறது.
பெரியார் பிறந்த மண் என்று சொல்லிக் கொண்டே  பார்ப்பனீயம் ஆட்சி செய்ய தோள் கொடுக்கும் தமிழர்களை நினைத்து நொந்து கொள்வதை விட என்ன செய்ய முடியும். ?
தனக்கு எதிரான சக்திகள் ஒன்று திரண்டு விடக்கூடாது என்பதில் ஜெயலலிதா எச்சரிக்கையாக இருக்கிறார்.
வைகோவின் கடந்த கால சட்ட மன்ற தேர்தல் நிலைபாடுகளை எண்ணிபாருங்கள்.    அவைகள் எல்லாமே ஜெயாவுக்கு சாதகமான ஒன்றாகத்தான் இருக்கும்.
அவரது தலைமையில் அமைந்திருக்கும் மக்கள் நல கூட்டணியும் அதே நோக்கத்தில் உருவானதுதான் என்ற உண்மை தெரிகிறதா இல்லையா?   தங்களால் ஜெயலலிதாவை தோற்கடிக்க முடியாது என்பது தெரிந்தும் ஏன் இந்த முயற்சி?    ஜெயலலிதா வந்தால் வரட்டுமே என்பதுதானே?
விஜயகாந்தும் ஜெயாவுக்கு துணை போவார் என்பது அடுத்த சந்தேகம்?     பா ஜ க விடம் எம்பி பதவி கிடைக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் – தி மு க விடம் போகாமல் இருப்பதற்கு என ஜெயா  வைக்கும் விலையும் கிடைக்கும் – கருணாநிதியையும் ஸ்டாலினையும் கொண்டு வந்து தனக்கு என்ன லாபம் என்று நினைத்தால் -அவர் பாஜக மடியில் விழுவது நிச்சயம்!!!
ஆனால் அத்துடன் அவரது அரசியல் அஸ்தமித்து விடும்.
மாறாக இந்த அழிவு சக்தியை வீழ்த்த கலைஞரோடு சேர்ந்து வலு சேர்த்தால் , அப்படி  நிலை எடுக்கும் போது தி மு க ஆட்சியின்போது குற்றம் சாட்டப்பட்ட சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க என்னென்ன முன் நிபந்தனைகள் என்பதை தெளிவு படுத்திக் கொண்டு மக்கள் மன்றத்திலும் அதை விளக்கி விட்டு பிரசாரத்தில்  இறங்கினால் அவர் வரலாற்றில் நிற்பார்.
விஜயகாந்தின் எதிர்காலம் அவர்  எடுக்கும் நிலைப் பாட்டில் இருக்கிறது.