திப்பு ஜெயந்தியை பா ஜ க எதிர்ப்பது ஏன்?

tipu jeyanthi

நவம்பர் 10 ம் தேதியன்று திப்பு சுல்தானின் பிறந்த நாளை கொண்டாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

குடகு பகுதியை சேர்ந்த ஒருவர் அதை ஆட்சேபித்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட நீதிபதிகள் அரசிடம் மனுகொடுக்க சொல்லி மனுவை முடித்து வைத்தார்கள்.   அப்போது நீதிபதிகள் கேட்ட கேள்விதான்  பிரச்சனையானது.   ‘ திப்பு ஒரு  அரசர்தானே அதற்கு ஏன் அரசு விழா?’ என்றனர் நீதிபதிகள்.

முந்தைய ஆண்டுகளில் திப்பு ஜெயந்தியின் பொது ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு பேர் மாண்டு போனது வரலாறு.

திப்பு ஜெயந்தியை கொண்டாடி முஸ்லிம்களை வளைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்பது பா ஜ க வின் குற்றச்சாட்டு.

மைசூரின் புலி என்று அழைக்கப் பட்ட திப்பு சுல்தானின் வரலாறு பல போராட்டங்களை உள்ளடக்கியது. தந்தை ஹைதர் அலியை விட திப்பு புகழ் பெற காரணம் அவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட துதான்.   எனவே அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரராகவே பார்க்கப் படுகிறார்.

48   ஆண்டுகளே வாழ்ந்த திப்பு  1799 ல்  நான்காம்   ஆங்கிலோ-  மைசூர்   போரின்போது  போர்க்களத்திலே உயிரிழந்தார்..

தப்பி விட பிரெஞ்சு அதிகாரிகள் ஆலோசனை சொன்ன போது ‘ ஆயிரம் ஆண்டுகள் ஆடு போன்று வாழ்வதை விட ஒரு நாள் புலியாக வாழ்வதே சிறந்தது” என்று  சொன்னவர்.    செய்தும் காட்டியவர். .

கத்தியாலேயே புலியை கொன்றதால் புலி என்ற பெயர் நிலைத்தது. .

கிறிஸ்தவர்களை மதம் மாற்றினார் கொடுமைப் படுத்தினார். போரில் வெற்றி பெற்ற போதெல்லாம் கைதிகளை  இஸ்லாத்துக்கு மதம் மாற்றினார்.   கோவில்களை கொள்ளையடித்தார்.  பெர்சியனை அலுவல் மொழியாக வைத்திருந்தார்.  கொடுங்கோலன் .   என்றெல்லாம் விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள்.

எல்லா  மதங்களையும் சமமாக நடத்தினார்.  கிருஷ்ணாராவ் என்பவரை பொக்கிஷ அமைச்சராகவும் சாமைய அய்யங்கார் என்பவரை காவல்துறை அமைச்சராகவும் இன்னும் பல இந்துக்களை பொறுப்புள்ள பதவிகளில் வைத்திருந்தவர்.    இந்துக் கோவில்களுக்கு பல சனதுக்களை வழங்கி பூஜைகள் தொடர்ந்து நடக்க ஏற்பாடுகள் செய்தவர். .   என்றெல்லாம் அவரை போற்றி புகழ்பவர்களும் ஏராளம்.

கொடகு பகுதியில் படையெடுத்து அவர்களை வஞ்சனை மூலம் வென்று அடிமைபடுத்தி இஸ்லாத்துக்கு மாற்றினார் என்று வரலாறு சொல்கிறது.   அதனால் குடகு பகுதிகாரர்கள் திப்பு ஜெயந்தியை எதிர்க் கிறார்கள்.

எப்படியிருந்தாலும் நாம்  இங்கு ராஜராஜன் சதய விழாவை அரசு விழாவாக கொண்டாடுகிறோம் இல்லையா அதைப்போல் அங்கே திப்பு ஜெயந்தியை கொண்டாட அரசு முடிவு செய்தால் அதில் அரசியல் செய்யாமல் வரலாற்றை விவாதிப்பதுதான் முறை.    அதற்காக விழாவே நடத்தக் கூடாது என்றால் அவர் முஸ்லிம்  என்பதுதான் பிரச்னையா. ?

அவர் எங்கேயிருந்து வந்தவர் என்று விவாதித்தால் கைபர் கணவாயில் இருந்து யார் வந்தார்கள் என்ற கேள்வியும் எழுமே?

எதிர்ப்புகளை மீறி விழா நடத்துவதில்  கர்நாடகா அரசு உறுதியாக இருக்கிறது.

வரலாற்றின் பக்கங்களை சாதி  மத அடையாளங்களோடு ஒப்பிடாமல் வரலாறாகவே பார்ப்பதுதான் நாகரிக சமுதாயத்தின் அடையாளம்.

நடக்கட்டும் திப்பு ஜெயந்தி விழா  !!!!!