சட்டம்

அயோத்தி; உச்சநீதிமன்றத்தின் பஞ்சாயத்து தீர்ப்பு??!!

Share

ஒருவழியாக உச்ச நீதிமன்றம் அயோத்தி ராம ஜன்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் இறுதி தீர்ப்பை இன்று வழங்கி விட்டது.

முடிவுதான் முக்கியம் என்பதால் சம்பந்தப்பட்ட ஏக்கர் 3.77 நிலத்தில் இந்துக்கள் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம். அதற்கு ஈடாக சன்னி வக்பு வாரியத்துக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் மசூதி கட்டிக் கொள்ள ஐந்து ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும். 

1500 பக்கங்கள் கொண்ட முழு தீர்ப்பையும் படித்தால்தான் ஒவ்வொரு பிரச்னையையும் உச்சநீதி மன்றம் எப்படி அணுகியிருக்கிறது என்பதை முடிவு செய்ய முடியும்.

ஆனால் இறுதி முடிவுகளை வைத்து ஆராய்ந்தால் சில முடிவுகள் சரியானவையாகவும் எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் அமைந்திருக்கிறது.

யாருக்கும் வெற்றியோ தோல்வியோ இல்லை என்றும் அமைதி காக்கும் படியும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதைத்தான் அவர் செய்ய முடியும். .

இந்துக்களுக்கு கோவில் கட்ட அதே இடம் கிடைத்து விட்ட பிறகு அது அவர்களுக்கு வெற்றிதானே என்றுதான் எண்ணத்தோன்றும். 

முஸ்லிம்களுக்கு ஈடு செய்யும் வகையில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கியது பஞ்சாயத்து செய்வது போல் தோன்றவில்லையா என்றால் இருக்கலாம் என்பதுதான் பதில். பிரச்னை தீர வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை. 

ஆறுதல் அளிக்கும் முக்கிய முடிவுகள்;

* மத சார்பின்மைதான் அரசியல் சட்டத்தின் அடிப்படை.

* 1949 ல் ராமர் சிலையை மசூதியில் வைத்தது சட்ட விரோதம்.

* 1992 பாபர் மசூதியை இடித்தது சட்ட விரோதம்.

* ஷியா வக்பு வாரியம் நிர்மொஹி அகாரா மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

* மசூதி காலி இடத்தில் கட்டப் படவில்லை.

* மசூதி கட்டப்பட்ட இடத்தில் கோவில் இருந்த ஆதாரம் இல்லை.

* ராம் லல்லா மனு மட்டுமே ஏற்கக் கூடியது.

* சன்னி வாரியம் மனு ஏற்கத்தக்கது ஆனால் நிலஉரிமை இல்லை.

* மத்திய அரசு அறக்கட்டளையில் நிர்மொஹி அகாரா இடம் பெறலாம்.

* மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிடாது.

ஆனால் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் அதிருப்தி தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்வதை ஆராயப் போவதாக தெரிவித்து எல்லாரும் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.

எப்படியோ இத்துடன் வழிபாட்டு தலங்கள் தொடர்பான பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வந்தால் நல்லது.

 ராமர் கோவிலை  மீட்டு விட்டோம்.  இதேபோல்  காசி சிவன் கோவிலிலும் மதுரா கிருஷ்ணர் கோவிலிலும் இது போன்ற முஸ்லிம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம் என்று சங் பரிவார்  கிளம்பாமல் இருந்தால் நல்லது. 

 

 

 

This website uses cookies.