ஐதராபாத் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி இரண்டு லாரி டிரைவர்கள் அவர்களின் உதவியாளர்கள் இருவர் ஆகியோரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கொடூரமாக எரித்திருக்கிறார்கள்.
நால்வருக்கும் உடனடியாக தண்டனை தர வேண்டும் என்று பொது மக்கள் போராட ஆரம்பித்து விட்டனர்.
முதல்வர் சந்திரசேகர ராவ் விரைவு கோர்ட்டில் விசாரித்து தீர்ப்பை வெளியிட உத்தரவிட்டு இருந்தார்.
மேலவையில் பேசிய அதிமுக எம்பி நால்வரையும் தூக்கில் இட வேண்டும் என்றார். ஜெயா பச்சன் அவர்களை அடித்துக் கொல்லவேண்டும் என்றார். காங்கிரஸ் தெலுகு தேசம் உறுப்பினர்களும் இதையே சொன்னார்கள்.
ஒட்டு மொத்த இந்தியாவும் கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே திடீர் என்று நேற்று காலை காவல் துறை அவர்களை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்று விட்டது.
பொதுமக்களிடம் இருந்து இதற்கு பெருத்த வரவேற்பு.
கருணை காட்ட தகுதி இல்லாதவர்கள் அந்த கொலையாளிகள் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் அவர்களை காவல் துறை நீதி மன்றமாக தன்னை பாவித்து சுட்டுக் கொன்றது தான் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
லாரி டிரைவர்கள் என்பதால் சுட்டுக் கொன்று விட்டார்கள்.
பணக்கார வீட்டுப் பிள்ளைகளாக இருந்தால் இப்படி சுட்டுக் கொன்று இருப்பார்களா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
வழக்கு பதிவு செய்வதில் தொடங்கி எந்த எல்லையில் குற்றம் நடைபெற்றது என்பதற்காக ஏற்பட்ட தாமதம் கொலையாளிகளை உடனடியாக அடையாளம் காண தடையாக இருந்திருக்கிறது. அதிகாரிகள் சிலர் இதற்காக பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நாடு முழுதும் கற்பழிப்பு கொலைகள் பெருக காவல் துறைதான் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
பயம் அற்றுப் போய் விட்டது.
35 ஆண்டுகள் கன்னியாஸ்திரி ஆக தொண்டு செய்த லூசி தன்னை பேராயர் நான்கு முறை கற்பழிக்க முயற்சி செய்தார் என்று புகார் செய்தார். என்ன நடவடிக்கை? இது தொடர்பாக அவர் ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார்.
பொள்ளாச்சி கற்பழிப்பு சம்பவத்தில் என்ன நடந்தது? காவல் துறை பெரிய இடத்துப் பிள்ளைகளிடம் மெத்தனமாக நடந்து கொள்ள வில்லையா?
குற்றம் கொடிது! ஆனால் அதற்கு காவல் துறையே நீதி மன்றமாக மாறி தண்டனை கொடுத்தது அதைவிட கொடிது.
பிறகு எதற்கு நீதி மன்றம்?
சாட்சிகளை விசாரித்து பத்து நாளில் விசாரணையை முடித்து இதே தண்டனையை நீதி மன்றம் மூலமாக நிறைவேற்றிட காவல் துறையால் முடியாதா? நிச்சயமாக முடியும்.
என்கவுண்டர் தொடர்பாக உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்புகளை புறந்தள்ளி காவல் துறை செயல்பட்டிருப்பது எதிர்காலத்தில் பல பிரச்னைகளை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.