தேர்தலில் நிற்பவர்கள் தங்கள் சொத்து மற்றும் கடன் பற்றி படிவம் 26 ல் தகவல் தர வேண்டும்.
அதை நோட்டரி ஒருவர் சான்றிட வேண்டும்.
அதில் பெரம்பூர் தொகுதியில் நிற்கும் மோகன்ராஜ் என்ற ஓய்வு பெற்ற காவல் அதிகாரி தனது படிவத்தில் தேர்தல் கமிஷன் செயல்முறை எந்த அளவு பலவீனமாக உள்ளது என்பதை உலகுக்கு உணர்த்த நினைத்தார்.
அதன் படி தனக்கு 1.76 லட்சம் கோடி சொத்துக்கள் (2G ஊழல் என்று எதிர்கட்சிகள் விளம்பரப்படுத்திய துகை) இருக்கின்றன என்றும் 4 லட்சம் கோடி உலக வங்கி கடன் இருப்பதாகவும் ஒரு பொய் வாக்குமூலம் பதிவு செய்து அதையும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அவருக்கு பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கி இருக்கிறார்கள்.
இந்த தவறை தான் தெரிந்தே செய்ததாகவும் தேர்தல் கமிஷனின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தவே தான் இவ்வாறு செய்ததாகவும் இது தண்டிக்கத் தக்க குற்றம் அல்ல, இது ஒரு சிவில் குற்றமே என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் ஒரு ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர். தான் ஓய்வு பெறும் முன்பு ஒழுங்காக பணியாற்றியதாகவும் ஓய்வு பெறும் மூன்றாண்டுகளுக்கு முன்பு லஞ்சம் வாங்கி உயர் அதிகாரிகளுக்கு பங்கு கொடுத்து தப்பித்ததாகவும் கூறுகிறார்.
சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுவதில் தவறில்லை.
அதற்காக இப்படியா என்றும் கேள்விகள் எழுகின்றன. பதில்தான் கிடைக்கவில்லை.
தேர்தல் கமிஷன் நடைமுறைகள் ஓட்டைகள் நிறைந்தது என்பது இதன் மூலம் நிரூபிக்கப் பட்டு விட்டது. ஓட்டைகளை அடைக்க என்ன செய்யப் போகிறது தேர்தல் கமிஷன்.??