பட்டாசுத் தொழிலும் நடைமுறைப் படுத்தவே முடியாத உச்ச நீதிமன்ற தீர்ப்பும்?

crackers-2-hours
crackers-2-hours

இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி அமுல் படுத்தப்படப் போகிறது என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது .

பட்டாசுகள் எழுப்பும் ஒலி 120 டெசிபலுக்கு கீழாகத்தான் இருக்க வேண்டும் என்பது நியாயமான கட்டுப்பாடு .

ஒரே ஒருநாள் பட்டாசுகள் வெடிப்பதால் மாசு ஏற்பட்டு விடும் என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

லட்சக்கணக்கான ஆலைகளும்  கோடிக்கணக்கான மோட்டார் வாகனங்களும் ஏற்படுத்தாத  மாசை ஒருநாள் வெடிகள் ஏற்படுத்தி விடும் என்பது ஏற்றுக் கொள்ளக் முடியாத ஒன்று.

பசுமை பட்டாசுகள் தான் இனி வரும் ஆண்டுகளில் இருக்கும் என்பதும் அதை அமுல் படுத்த பட்டாசுத் தொழில் இருக்குமா என்பதும் அடுத்த கேள்விக்குறி. பசுமை பட்டாசுகளை வியாபார ரீதியில் லாபகரமாக தயாரித்து நடத்த முடியுமா என்பதும் சந்தேகம்தான். முடிந்தால் நல்லதே!!!

தீபாவளி தவிர ஏனைய பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள் வருமா அல்லது இந்த வரையறையே அவற்றிற்கும் பொருந்துமா என்பதும் தெரியவில்லை.

காலை 4 மணி முதல் 5 வரையிலும் அதன் பின் இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் வெடிக்கலாம் என்ற உத்தரவு எப்படி அமுல்படுத்தப் படும் என்பதுதான் மிகப் பெரிய சவால்.

இதை அமுல்படுத்த காவல் துறைக்கு போதிய பலம இருக்கிறதா?

யார் மணியை கண்காணிப்பது? மீறி வெடிப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் படும். எடுத்தால் குழந்தைகள் மீதுதான் எடுக்க வேண்டும். அடு சாத்தியமா? ஏனென்றால் வெடிகள் வெடிப்பது பெரும்பாலும் குழந்தைகள்தான். இதையெல்லாம் சிந்திக்காமலா உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கும்!

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளுக்கு மூடு விழா நடத்த அரசும் நீதிமன்றங்களும் தீர்மானித்து விட்டனவா என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இந்த கட்டுப்பாடுகள் ஏனைய நாடுகளில் இருக்கின்றனவா? அங்கெல்லாம் இல்லாத புதிய கட்டுப்பாடுகள் இங்கு மட்டும் எதற்கு?

நம்மை பொறுத்தவரை தீபாவளி பண்டிகையே கொண்டாடப்பட வேண்டிய ஒன்றா என்பதில் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன.

இருந்தாலும் கொண்டாடுபவர்கள் உரிமை பற்றித்தான் நாம் பேசுகிறோம்.

அமுல்படுத்தப்படும் என்ற எந்த நம்பிக்கையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது?

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது இந்த பட்டாசுத் தீர்ப்பு??!!