ஜெயலலிதா நினைவிடம் அமைத்தல் அவசர சட்டம் 2019க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதாவது சொத்துக் குவிப்பு வழக்கில் மற்ற மூன்று பேர்தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறியது . ஆனால் ஜெயலலிதா குற்றவாளி என்று கோர்ட்டு சொல்ல வில்லை . எனவே நினைவிடம் அமைப்பதற்கு ஆட்சேபனை செய்ய முடியாது என்பது தமிழக அரசின் நிலைப்பாடு.
இது சரியா? சொத்துக் குவிப்பு வழக்கின் ஆணிவேறே ஜெயலலிதாதான் . அவர்தான் முதல் எதிரி..மற்றவர்கள் அந்த குற்றத்தை செய்வதற்கு அவருக்கு துணை நின்றவர்கள
குற்றம் இழைத்தவர்க்கு துணை நின்றவர்கள் குற்றவாளிகள் என்றால் குற்றம் இழைத்தவர் எப்படி நிரபராதி ஆவார்.?
பிரச்னை ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கலாமா அமைக்க கூடாதா என்பதல்ல.
மூன்று முறை முதல்வராக இருந்தவர் . அவருக்கு நினைவிடம் அமைப்பது அவரது தொண்டர்களின் தனி உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. தொண்டர்கள் செய்யும் காரியத்தில் குற்றவாளியா இல்லையா என்ற பிரச்னையே எழாது.
ஆனால் அரசு பணத்தில் நினைவிடம் அமைக்க முயன்றால் அது சட்டப்படி சரியா என்ற கேள்வி நிச்சயம் எழத்தான் செய்யும்.
குற்றவாளி என்றாலும் மக்கள் பிரதிநிதிகள் முடிவெடுத்து அரசு பணத்தை செலவு செய்யும் உரிமை உள்ளது என்று சொல்லட்டும். அதை நீதிமன்றம் அங்கீகரிக்கட்டும். அது வேறு.
ஆனால் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லவில்லை . எனவே அரசு செலவு செய்வதை ஆட்சேபிக்க முடியாது என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
பட்டப் பகலில் இத்தகைய அக்கிரமங்கள் அரங்கேற்றப் படுகின்றன. எல்லாம் சட்டத்தின் பேரால்.
இறந்து விட்டதால் தண்டனையை அனுபவிக்க முடியாத நிலைமையில் அவர்மீதான வழக்கு அற்றுப் போனது என்பதுதானே உண்மை.
அதாவது குற்றவாளிதான். ஆனால் தண்டனையை அனுபவிக்க அவர் இல்லை. எனவே வழக்கு அற்றுப் போகிறது.
அதாவது உயிரோடு இருந்திருந்தால் சசிகலாவோடும் இlளவரசியோடும் சுதாகரனோடும் ஜெயலலிதா சிறையில் நான்காண்டு காலம் கழித்திருப்பார்.
ஜெயலலிதாவுக்கு நூறு கோடி அபராதம். மற்றவர்களுக்கு தலா பத்து கோடி அபராதம் விதிக்கப் பட்டது உண்மையா இல்லையா?
வாதங்கள் முடிந்து உடனே தீர்ப்பு வந்திருந்தால் தமிழக அரசியலே திசை மாறியிருக்கும். காலம் கடத்தியது உச்சநீதி மன்றம். யாரும் உள்நோக்கம் கற்பிக்க முடியாது. சசிகலா முதல்வராக உரிமை கோரியதும் உடனே வருகிறது தீர்ப்பு..
நொந்து கொள்வதை தவிர என்ன செய்ய முடியும் சாமானியனால் .
இப்போது வந்திருப்பது அவசர சட்டம் சட்டமானால் அது நீதி மன்ற பரிசீலனைக்கு போகும். அதில் தீர்ப்பு வருவதற்குள் நினைவிடம் அமுலில் இருக்கும். யார் இடிப்பது.? போகட்டும் என்று விட்டு விடுவார்கள். ஆக ஒரு அநீதி சட்ட பூர்வமாக்கப் பட்டுவிடும்.
பொதுவாகவே இறந்தவர் தொடர்பாக நினைவிடம் அமைப்பதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதை நாகரீக சமுதாயம் விரும்பாது.
ஆனால் ஒரு குற்றவாளிக்கு அரசு அங்கீகாரம் அளித்து நினைவிடம் அமைப்பது என்பது குற்றத்தை நியாயப் படுத்துவதாக அமையாதா என்பதற்கும் நீதிமன்றம் தான் விடை கூற வேண்டும்.
ஒரு தவறான முன்னுதாரணமாக இது அமைந்து விடக் கூடாதே என்பதே பொதுமேடையின் கவலை.