மத்திய அரசோ மாநில அரசோ சமுதாய நலன் கருதி கட்டுப்பாடுகளை அறிவிப்பது சரியே.
அதிலும் குறிப்பாக உயிர் பாதுகாப்பு அச்சத்தில் இருக்கும்போது நிச்சயம் கட்டுப்பாடுகள் தேவை. அதில் கருத்து மாறுபாடு இல்லை.
ஆனால் அவைகளை அறிவுக்கும் முன்பு அவகாசம் கொடுத்து அறிவித்தால் மக்கள் தங்களை தயார்ப் படுத்திக் கொண்டிருப்பார்கள்.
பிரதமர் நான்கு மணி நேரம் அவகாசம் கொடுத்து நாடு முழுதும் நடமாட்டக் கட்டுபாடுகளை அறிவிக்கிறார். புலம் பெயர்ந்து பணி செய்யும் தொழிலாளர்கள் ஊர் திரும்ப எந்த ஏற்பாடும் இல்லை. அவகாசம் அல்லது அவர்கள் ஊர் திரும்ப ஏற்பாடு ஏதாவது செய்திருந்தால் பலர் உயிர் இழந்திருக்க மாட்டார்கள்.
நமது முதல்வர் ஊரடங்கு அமுலில் இருக்கும் போதே முழு ஊரடங்கு அறிவிக்கிறார். அதற்கு முன் அவகாசம் கொடுப்பதில் என்ன பிரச்னை? மறுநாள் மக்கள் முந்தியடித்துக் கொண்டு கடைகளில் கூடி பொருள்களை வாங்கியதை கண்டோம்.
எதையும் பதற்றத்தில் செய்யக் கூடாது. எப்படியும் இன்னும் பல மாதங்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே இன்றைய நிலை.
ஒன்று கொரொனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும். அது மார்க்கெட்டிற்கு வர வேண்டும். அல்லது தொற்று பரவுவது கட்டுக்குள் கொண்டுவரப் பட வேண்டும். அது வரை கட்டுப்பாடுகள் தொடரட்டும்.
அரசுகள் கட்டுப்பாடுகளை அறிவிக்கும் முன் பொதுமக்களுக்கு போதிய அவகாசம் அளித்து போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்ட பின்னரே அறிவிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
This website uses cookies.