விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதோ எழுதுவதோ சட்டப்படி குற்றமல்ல என்று முன்பே பல தீர்ப்புகளில் தெளிவு படுத்தப் பட்டிருக்கிறது.
வைகோ கூட அதனால்தான் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம்.
விடுதலை புலிகள் இயக்கமே இல்லாத நிலையில் அதை தடை செய்வது என்பது நகைப்புக் கிடமானது. செயல் படாத ஒரு இயக்கத்தை ஏன் தடை செய்ய வேண்டும்?
விடுதலை சித்தாந்தத்தை தடை செய்ய முடியுமா? விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை தடை செய்யலாம். அற வழியில் கூட போராடக் கூடாது என்று தடை செய்ய முடியும் என்றால் இந்தியாவுக்கு சுதந்திரமே கிடைத்திருக்காது.
இலங்கையில் சிங்களர்களோடு இனி சம உரிமை பெற்று வாழ முடியும் என்ற நம்பிக்கையை இழந்தவர்கள் விடுதலை கேட்கிறார்கள். அந்த நம்பிக்கையை விதைத்து வளர்த்து அதன் அடிப்படையில் இலங்கையில் ஒற்றுமையை உறுதி செய்ய வேண்டியவர்கள் சிங்களர்கள்.
இலங்கையிலிருந்து விடுதலை பெறுவதா அல்லது ஒன்று பட்ட இலங்கையில் சம உரிமையுடன் வாழ அற வழியில் போராடுவதா என்பதெல்லாம் இலங்கையில் வாழும் தமிழினம் எடுக்க வேண்டிய முடிவுகள்.
இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் ஆகிய நாம் நம் தொப்புள் கொடி உறவுகளான தமிழர்களின் நலன் காக்க குரல் கொடுப்பதும் தார்மீக ஆதரவு அளிப்பதும் நமது சட்ட பூர்வமான உரிமை. இது எந்த வகையிலும் இந்தியாவுக்கு எதிரானது அல்ல.
பழ.நெடுமாறன் பழுத்த தேசியவாதி. இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல. அதே நேரம் ஈழத் தமிழர்கள் தன்னுரிமை பெற வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்.
அவர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய பேச்சுக்களின் தொகுப்பு ‘தமிழீழம் சிவக்கும்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.
அதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. ஆனால் 2006 ல் அரசு அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது. அவர் 18.10.2006 விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி பறிமுதல் செய்யப் பட்ட 1709 புத்தக படிகளை திருப்பி கொடுக்க மறுத்து விட்டார். மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதி மன்றமும் இப்போது அந்த படிகளை அழிக்க உத்தரவிட்டிருகிறது.
இது சரியான தீர்ப்பல்ல. மேன்முறையீடு சென்று மாற்றப்பட வேண்டிய தீர்ப்பு.
தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக பேசுவதும் தமிழ் மக்கள் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோருவதும் எப்படி குற்றம் ஆகும்? பிரச்சாரம் ஒரு ஜனநாயக வழிமுறைதானே?
விடுதலி புலிகள் அழிக்கப்படும் வரை இந்திய அரசும் இலங்கை பிரச்னை தீர அரசியல் தீர்வு மட்டுமே சாத்தியம் என்று தானே சொல்லி வந்தது. இப்போது யாருமே அரசியல் தீர்வைப் பற்றியே பேச மறுக்கிறீர்களே ஏன்?
மாண்புமிகு நீதிபதி முரளிதரன் அவர்கள் இந்த புத்தகங்களை திருப்பி கொடுத்தால் அவர் மக்களிடம் விநியோகிப்பார் என்று கூறுகிறார். அவர் பேசியது குற்றமல்ல என்றுதானே அவர் மீதான வழக்கை வாபஸ் பெற்றார்கள். பின் எப்படி அதை புத்தகமாக போட்டது மட்டும் குற்றம் ஆகும்?
வன்முறைக்கு தூண்டாத எந்த கருத்தும் புத்தகமும் தடை செய்யப் படக் கூடாது. பிறகு எந்த புதிய கருத்தும் புத்தகமும் வெளிவரவே முடியாது.
இந்திய அரசியல் சட்டம் நமக்கு தந்திருக்கும் அடிப்படை உரிமையை இந்த தீர்ப்பு பாதுகாக்க வில்லை என்பதால் மேன்முறையீடு செய்து மாற்றப் பட வேண்டிய தீர்ப்பு இது என்பதே நமது கருத்து.