பேனர் வைப்பதில் அரசியல் கட்சிகளுக்கு ஒரு நீதி! அரசுக்கு ஒரு நீதியா! விலக்கு விதித்த உயர்நீதிமன்றம்

banner
banner

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்து போனதின் காரணமாக அரசியல் கட்சிகள் பேனர் வைப்பது தடை செய்யபட்டது.

ஒரு வழியாக இனி பேனர் கலாசாரம் இருக்காது என்று நினைத்த நேரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் சென்னை வருகையை ஒட்டி அவர்களை வரவேற்பதற்கு பேனர்  வைக்க அனுமதி  கேட்டு மாநில அரசு உயர் நீதிமன்றத்தை அணுக நீதிமன்றமும் அனுமதி அளித்து உத்தரவிட்டு  இருக்கிறது.

நீதிமன்றம் தானாக இந்த அனுமதியை தரவில்லை அரசு அணுகியது. அதுவும் பிரதமரும் சீன அதிபரும் வருவதை ஒட்டி அனுமதி கேட்கும்போது நீதி மன்றத்தால் மறுக்க முடியவில்லை.

அனுமதியையும் வழங்கி விட்டு பேனர் விழுந்து யாராவது இறந்தால் அதிகாரிகளின் மேல் குற்ற வழக்கு  பதியுங்கள் என்று உத்தரவும் இட்டிருக்கிறது. 

பேனர் வைக்காமல் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடியாது என்பதா நிலைமை.

கட்டுபாடுகளை விதித்து  ஐந்து நாட்களுக்கு மட்டும் இந்த அனுமதி அதற்கு வாக்குமூலம் தாங்கள் செய்யுங்கள் என்று எல்லாம் உத்தரவிட்டு இருந்தாலும் நாளை வேறு  சிலர் தங்களுக்கும் அனுமதி வேண்டும் என்று இதே நீதிமன்றத்தை அணுகினால் மறுக்க முடியுமா நீதிமன்றம்??

நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு அரசியல் கட்சிகளுக்குத்தான் அரசுக்கு அல்ல என்றாலும் அரசு தார்மீக ரீதியாக முன் உதாரணமாக பேனர் கலாச்சாரத்துக்கு  முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா? 

இந்த விதி விலக்கு கோரியதில் மத்திய அரசின் பங்கு என்ன?

கவனிக்கத் தக்க அம்சம் என்னவென்றால் உயர்நீதி மன்றம் அரசுக்கு அனுமதி பெற தேவையில்லை என்ற கருத்தையும் பதிவு செய்திருப்பதுதான். 

அரசு அனுமதி பெற தேவையில்லை என்றே வைத்துக் கொள்வோம்.   பிறருக்கு அனுமதி மறுக்கும் அரசு தான் மட்டும் பேனர் வைப்பது எப்படி நியாயமாகும்.?

தான் விதித்த விதியை தானே மீறலாமா?

பேனர் வைப்பதில் அரசியல் கட்சிகளுக்கு ஒரு நீதி! அரசுக்கு ஒரு நீதியா!!