நீதிபதிகள் நியமனத்தில் தலையீடுகள் நீதி பரிபாலனத்தை பாதிக்கின்றன?! தலைமை நீதிபதி புகார்?!

tahil-ramani
tahil-ramani

நீதி பரிபாலனம் நீதிபதிகள் நியமனத்தில் தலையிடுவதால் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவிக்கிறார் என்றால் நிலைமை எவ்வளவு தூரம் மோசமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கொலிஜியம் என்ற உச்சநீதி மன்ற சீனியர் நீதிபதிகளின் அமைப்பு நீதிபதிகளின் நியமனத்தில் அதிகாரம் செலுத்தி வருவது எந்த சட்டத்தின் அடிப்படையில் என்பதை  உச்ச நீதிமன்றம் தான் விளக்க வேண்டும்.

நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்ற கொலிஜியமும் மத்திய அரசும் முட்டி மோதிக் கொண்டுதான் இருக்கின்றன.

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி திரிபுராவுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ளாமல் ராஜினாமா செய்ததும் அதை தாமதித்து குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டதும் வழக்கறிஞர்கள் போராடியதும் இன்னும் ஈரம் காயவில்லை.

இப்போது குஜராத் தலைமை நீதிபதி குரேஷியை ம பி தலைமை நீதிபதியாக சிபாரிசு செய்து கொலிஜியம் தகவல் அனுப்புகிறது. அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாமல் பரிந்துரையை கிடப்பில் மூன்று மாதங்கள் போட்டுவிட்டு அவரை மும்பை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றுகிறது. பின் பல கடிதங்களுக்குப் பின் அவரை சிறிய நீதி மன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்து தகவல் கொடுக்கிறது. அதையும் கொலிஜியம் ஏற்றுக்கொண்டு குரேஷியை திரிபுரா நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கிறது.

ஆக குரைஷி நியமனத்தில் கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதில்தான் உச்ச நீதிமன்றம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இத்தகைய தலையீடுகள் நீதி பரிபாலனத்தை பாதிக்கும் என்றும் இது நீதிமன்றம் என்ற நிறுவனத்துக்கு நல்லதல்ல என்றும் தனது கருத்தை உச்சநீதி மன்றம் பதிவு செய்கிறது.

நீதிமன்றங்கள் அரசியல் வழக்குகளில் நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை இத்தகைய நிகழ்வுகள் பொடிப் பொடியாக்குகின்றன.

நீதிமன்றங்களை தங்கள்  கைப்பிடியில் வைத்திருக்க விரும்பும் அந்த சக்திகள் யார்?