ஜெயலலிதாவை விஷம் வைத்து கொன்று விட்டனர்; திண்டுக்கல் சீனிவாசனின் சர்ச்சை பேச்சு??!

Jayalalithaa-PTI
Jayalalitha

ஜெயலலிதா மரணம் குறித்து  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் நடை பெற்று வருகிறது.

அதில் சாட்சிகள் விசாரிக்கப் பட்டு  குறுக்கு விசாரணை செய்யப்பட்டு இன்னும் சில மாதங்களில் தீர்ப்பு  வர இருக்கிறது.

அப்போதும் கூட அதை மட்டும் வைத்தே ஒருவரை சிறைக்கு  அனுப்பி விட முடியாது.

கமிஷன் ஒருவரை குற்றவாளி என்று கூற வேண்டும் அந்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்   ஏற்றுக்கொண்டு அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு  தொடுக்க வேண்டும் அந்த வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் தான் என்று மீண்டும் தீர்ப்பு வர வேண்டும் அதற்குப் பிறகுதான் அவர்கள் குற்றவாளிகள் ஆவார்கள்..

இந்த நிலையில் கமிஷன் விசாரணை நிலுவையில் இருக்கும் போதே அமைச்சர் பொறுப்பில் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா சர்க்கரை நோயாளி அவருக்கு எதை கொடுக்க கூடாதோ அதை வேண்டுமென்றே கொடுத்து ஸ்லோ பாய்சன் கொடுப்பது போல் அவரை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர் என்று நிலக்கோட்டை தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாக மாலை மலர் செய்தி வெளியிட்டிருக்கிறது.

கமிஷன் போட்டது நீங்கள். அதன் முடிவு வரும் முன்னரே நீங்களே தீர்ப்பு சொல்வதாக இருந்தால் ஏன் கமிஷன் அமைக்க வேண்டும்.? நேராக வழக்கு போட்டிருக்க வேண்டியதுதானே?

மறைமுகமாக கமிஷன் இப்படித்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை சொல்வதாகவோ மிரட்டுவதாகவோ ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?

ஏற்கெனெவே பல சர்ச்சை பேச்சுக்களை பேசி கெட்ட பெயர் வாங்கியவர்தான் சீனிவாசன்.

இத்தகையவர்களிடம் தமிழகம் மாட்டிக் கொண்டு இருப்பதுதான் வேதனை  அளிக்கிறது.

வகிக்கும் அமைச்சர் பொறுப்புக்காவது மரியாதை பெற்றுத் தர வேண்டாமா?

பொறுப்பற்றுப் பேசுவதுதான் அமைச்சராவதற்கு தகுதியா?

இப்படி பொறுப்பற்றுப் பேசுபவர்களுக்கு என்ன தண்டனை?    யார் கொடுப்பது?