ஜெயலலிதா குற்றவாளி இல்லையாம்?
குற்றவாளி ஜெயலலிதாவுக்கு மரினாவில் நினைவிடம் கட்ட தடை கேட்டு தொடரப் பட்ட வழக்கில் உயர்நீதி மன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. அதற்கு நீதிமன்றம் கூறிய காரணம்தான் ஏற்க முடியாத , அறிவுக்குப் பொருந்தாத, நியாயமில்லாத , கேலிக்கூத்தான ஒன்றாக இருக்கிறது.
ஒருவேளை சட்டப்படி சரியான எல்லாரையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆனால் அநியாயமான தீர்ப்புகளில் ஒன்றாக இது இருந்து விடும் வாய்ப்பும் அதிகம்.
நீதிமன்றங்களின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பதற்கு இது போன்ற தீர்ப்புகள் காரணமாக இருந்து விடக் கூடாதே என்ற கவலைதான் நமக்கு.
அரசு மேன்முறையீடு செய்யாது. வழக்குப் போட்டவர் போடலாம். போடுவாரா தெரியாது. மேன்முறையீடு செய்யப் பட்டு அது அனுமதிக்கப் படும் வரை இந்த அநியாய தீர்ப்பு அமுலில் இருக்கும் என்பது அவலம்.
உயர்நீதி மன்றம் விடுதலை செய்தது. அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வில்லை. எனவே ஜெயலலிதா குற்றவாளி இல்லை. இதுதான் உயர்நீதி மன்ற தீர்ப்பு.
ஆளுக்கு தக்கபடி மாறும் தீர்ப்புகள் என்பது எப்படி நீதியாகும்? குற்றம் செய்தது ஜெயலலிதா. அவருக்கு துணை நின்றவர்கள் சசிகலாவும் மற்றவர்களும். மற்றவர்கள் குற்றவாளிகள் ஜெயலலிதா குற்றவாளி அல்ல என்ற தீர்ப்பை எப்படி விமர்சிப்பது.? சிறை தண்டனை விதித்து தண்டிக்கப் பட முடியாத குற்றவாளி என்பதுதானே உண்மை.
வழக்கில் முதல் எதிரி ஜெயலலிதா. இரண்டு முதல் நான்கு வரையிலான எதிரிகள் முதல் எதிரி பதவியில் இருக்கும்போது ஊழல் செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து குவிப்பதற்கு துணை நின்றவர்கள். அதாவது ஜெயலலிதாவின் பினாமிகள். ஜெயலலிதா இறந்ததால் மேன்முறையீடு அற்றுப் போனது. மற்றவர்கள் மீதான மேன்முறையீடு விசாரிக்கப் பட்டு முதல் எதிருக்கு துணை நின்றதற்காக மூவருக்கும் சிறை தண்டனை விதிக்கப் பட்டு சிறையில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவும் உயிருடன் இருந்திருந்தால் அவரும் சிறையில் தான் இருந்திருப்பார். வழக்கு அற்றுப் போனால் விளைவு அவர் சிறை தண்டனை அனுபவிக்க முடியாதே தவிர மற்றபடி அவரது சொத்துக்கள் தீர்ப்புக்கு உட்பட்டதுதான். சிறையில் இருந்திருக்க வேண்டியவர் குற்றவாளி இல்லை என்பதை எப்படி ஏற்பது?
ஜெயலலிதா ஒரு மக்கள் தலைவர். அவருக்கு மணி மண்டபம் கட்டுவது மரபாக இருக்கலாம். அதில் கூட யாருக்கும் பெரிதாக ஆட்சேபணை இருக்க வாய்ப்பில்லை.
எம்ஜியார் சிலைகளுக்கு அருகே யாருக்கும் சொல்லாமல் ஜெயலலிதா சிலைகளை ஆளும் கட்சிக்கார்கள் வைக்கிறார்கள். ஏன் திருட்டுத் தனமாக வைக்க வேண்டும்? ஆட்சேபணை வரும் என்ற பயம்தானே?
அதிகார வர்க்கம் அத்து மீறும்போது நீதிமன்றங்கள் தான் ஜனநாயகத்தை காத்து வருகின்றன. நீதிமன்றத்தின் மாண்பை காக்க வேண்டிய கடமை நம் எல்லாருக்கும் இருக்கிறது. அந்தக் கடமை நீதிமன்றங்களுக்கும் இருக்க வேண்டும். இந்த முரணுக்கும் ஒரு பதிலை நீதி மன்றம் தர வேண்டும். தந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் டெக்னிக்கல் ஆக அணுகி தீர்ப்பு தருவது வெளிப்படையாக இருக்கும் முரண்பாட்டுக்கு விடை தராமல் விட்டு விடுவது என்பதெல்லாம் இது மாற்றப் பட வேண்டிய தீர்ப்பு என்பதையே உறுதிப்படுத்தும்.