பெரியகோயில் மட்டுமல்ல இன்னும் அதனுடன் இணைந்த ஏறத்தாழ 90 கோயில்களுக்கு மராட்டிய சரபோஜி வாரிசாக போன்ஸ்லே என்பவர் அறங்காவலர் ஆக தொடர்கிறார்.
அவர்கள் தஞ்சை அரண்மனையில் வாழ்கிறார்கள். எந்தப் பிரச்னைகளிலும் தலையிடாமல் கௌரவமாக ஒதுங்கி வாழ்கிறார்கள்.
ஒரு காலத்தில் மராட்டியர் மட்டுமல்ல முஸ்லிம் நவாப்புகள், தெலுங்கு நாயக்கர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர்கள் என பல பேர் தமிழகத்தை வாள்முனையில் கைப்பற்றி ஆண்டிருக்கிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகளில் களப்பிரர் காலம் தவிர்த்த ஏனைய காலங்களில் தமிழர்களை மற்றவர் ஆண்டு வந்ததால் தமிழர்கள் மீண்டும் ஒன்று கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
அதே நிலை நீடித்திருந்தால் தமிழர்கள் மீண்டும் ஒன்று கூடி அவர்களை வென்று ஆட்சியை பிடித்திருக்கக் கூடும். அந்த தேவை இல்லாமல் போய்விட்டது.
மக்களாட்சி மலர்ந்து விட்டது.
இனி எதற்கு மன்னராட்சியின் எச்சம். அதுவும் நம்மவரல்ல. ஆக்ரமித்து ஆட்சி செய்தவர். அவர்களுக்கு உரிய மரியாதை அரசு கொடுக்கட்டும். வசதிகள் செய்து தரட்டும். ஆனால் அவர்கள்தான் நிரந்தர ஆட்சியாளர்கள் போல பாவித்து அவர்களின் வாரிசுகளுக்கு உரிமை வழங்குவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது மக்களாட்சிக்கு உகந்ததும் அல்ல.
சோழர்கள் வாரிசுகளுக்கு உரிய உரிமையை மராட்டியர் களவாட அனுமதிப்பது சோழர்களுக்கு இழைக்கப்டும் அநீதி. வாரிசுகளை தேடினால் அதற்கு போட்டி ஏராளம். இது மக்களாட்சி. எனவே மக்களின் பிரதிநிதிகளே அறங்காவலர்கள் ஆக வேண்டும்.
எனவே அரசு உடனடியாக தஞ்சை கோவில்களுக்கு மராட்டியர் போன்ஸ்லே அறங்காவலராக நீடிப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இதற்கெல்லாம் மக்கள் போராடித்தான் ஆக வேண்டும் என்பதே ஒரு இழுக்கு.
பெருந்தன்மை வேறு. இழுக்கை அகற்றல் வேறு.
எந்தக் கட்சி ஆண்டாலும் அவர்கள் தமிழர்கள் தானே.
அவர்களுக்கு இந்த இழுக்கு கண்ணுக்கு பட வில்லையா?