இட ஒதுக்கீடு எதனால் வந்தது.?
நாங்கள் 90% இருக்கிறோம். ஆனால் கல்வியிலும் சமுதாயத்திலும் பின் தங்கி இருக்கிறோம். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 10% உள்ள மேல்தட்டு சிறுபான்மை மக்கள் 90% வாய்ப்பை பெற்று வாழ்கிறார்கள். எனவே எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். இதுதானே இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படை.
இப்போது கல்வியிலும் சமுதாயத்திலும் முன்னேறிய ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்கிறோம் என்பதை விட ஒரு மோசடிதிட்டம் இருக்க முடியுமா?
இட ஒதுக்கீடு பெற்ற மக்கள் எத்தனை சதம் பேர் முன்னேறி இருக்கிறர்கள்? ஏதாவது ஆய்வு செய்திருக்கிறீர்களா? ஒதுக்கீடு பெற்ற எல்லாரும் முன்னேறிவிடவில்லை என்பதுதானே உண்மை. அதனால்தானே 27% பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிஷன் பரிந்துரையை அமுல்படுத்த விபிசிங் முனைந்தபோது மந்திர் பிரச்னையை கிளப்பி அவரை ஆட்சியிலிருந்து அகற்றினிர்கள் .
முக்கியமான கேள்வி. முற்பட்ட பொது வகுப்பினரில் எத்தனை சதம் பேர் கல்வி வேலைவாய்ப்பில் தொழில்துறையில் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள்? அதே துறைகளில் பின் தங்கிய மிக பின் தங்கிய, பட்டியல், மலைவாழ் மக்கள் எத்தனை சதம் பேர் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள்? இந்த ஆய்வை செய்த பின்தானே யாருக்கு எத்தனை சதம் ஒதுக்கீடு தேவை என்பதை நிர்ணயிக்க முடியும்?
இட ஒதுக்கீடு நிரந்தர ஏற்பாடாக இருக்க முடியாது. கூடாது. பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை முன்னேறிய வகுப்பினர் எத்தனை சதம் வாய்ப்பை பெற்றிருக்கிறார்களோ அந்த அளவை தாழ்த்தப் பட்டோரும் பிற்பட்டோரும் பெற்ற பிறகு இட ஒதுக்கீடை ரத்து செய்து எல்லாரும் தகுதி அடிப்படையில் வாய்ப்புகளை பெற வைப்பது தான் சமூக நீதி.
ஆனால் ஒதுக்கீடு கொடுத்தவர்களை எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறீர்கள் என்று கணக்கீடு செய்யாமல் அவர்களை பாதிக்கும் வகையில் முற்பட்டோரில் ஏழைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு ஒதுக்கீடு என்பது குட்டையை குழப்பி பின்னால் இட ஒதுக்கீடு முறையை இல்லாமல் செய்வது என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இதை பார்க்க முடியும்.
நரசிம்மராவ் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இதே ஒதுக்கீடை உச்ச நீதிமன்றம் முன்பு ரத்து செய்தது. இப்போது என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்.?
அரசியல் சட்டத்தில் இல்லாத பொருளாதார அளவுகோலை நுழைத்து அனுமதிக்கப் பட்ட சமூக கல்வியறிவு பிற்பட்ட நிலை ஒதுக்கீடை அசைத்துப் பார்ப்பதுதான் உள் நோக்கம்.
இப்போது தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் நிலவும் 49.5% பட்டியல் வகுப்பார், மலைசாதியினர், பிற்பட்டோர் ஒதுக்கீடு தவிர மிச்சமிருக்கும் 50.5% வாய்ப்புகளை முன்னேறிய சமூகத்தினர்தான் பெரும்பாலும் கைப்பற்று கிறார்கள்.
இதனால் ஏறத்தாழ மக்கள் தொகையில் 95% பேர் ஏதாவதொரு ஒதுக்கீடுக்கு தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள்.
இதுவா சமூக நீதி?
இன்னும் இதைப்போல் பல அஸ்திரங்களை வீசப்போவதாக சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சொல்லியிருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
என்ன வேண்டுமானால் செய்வார்கள். மோடி மீது அச்சம் பரவுவது மட்டும்தான் இந்த அறிவிப்பின் பலன்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய பின் குடியரசுத் தலைவர் ஒப்புதல் என்பது முடிவாகிபோன ஒன்று. சட்ட மன்றங்களில் நிறைவேற்ற முனையும் போது எதிர்த்துப் பேசிய அதிமுக தலைவர்கள் நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றுவார்களா? வாக்கெடுப்பின் பொது எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தவர்கள் ஆயிற்றே?
உச்ச நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என்பதில் இருக்கிறது சமூக நீதி நிலைக்குமா பறக்குமா என்பது?