கொலைப்பழி சுமக்கும் முதல்வர் எடப்பாடி
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை சம்பவங்கள் ஒரு திகில் நாவலை படித்த உணர்வை தருகிறது.
ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து அவரது எஸ்டேட்டில் இருந்த ஆவணங்களை ஒரு கும்பல் திருடி அதை முதல்வர் எடப்பாடி வசம் கொடுத்ததாகவும் அதன் பின் அதில் சம்பந்தப் பட்ட நபர்கள் ஒவ்வொருவராக கொல்லப் படுவதும் அதிர்ச்சியை அளித்தது. பின்னால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடந்து வருகிறது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு சம்பந்தப் பட்டவர்களை தெஹெல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யு சாமுவேல் தொடர்பு கொண்டு தகவல் சேகரித்து அதை ஒரு ஆவண படமாக வெளியிடுகிறார்.
அதில் சம்பந்தப் பட்ட நபர் முதல்வர் பழநிசாமியை தொடர்பு படுத்தி கொலைப்பழி சுமத்தி இருந்தார்.
குற்றச்சாட்டுகளை மறுத்து முதல்வர் பேட்டி கொடுத்து குற்றம் சுமத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படியே அவர்களை காவல் துறை கைது செய்து பல மணி நேரம் விசாரணை செய்து அவர்களை நீதிமன்றத்தில் காவலுக்கு அனுப்பியபோதுதான் நீதிமன்றம் அவர்களை காவலுக்கு அனுப்பவும் காவல் துறை விசாரணைக்கு அனுப்பவும் மறுத்தது.
அதன்பின் அவர்களை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்களை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிகிறது. அது சட்டப்படி சரி அல்ல.
தனது மகள் மனைவியை விபத்தில் இழந்து சயான் அதில் இருந்து தப்பியபின் விரக்தி மனநிலைக்கு வந்து அச்சமின்றி உண்மைகளை கூற முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.
எப்படி இருந்தாலும் எடப்பாடி, நத்தம் விஸ்வநாதன், ஒபிஎஸ், வைத்திலிங்கம் ஆகிய நால்வரின் ஆவணங்கள் தான் எடப்பாடியால் மீட்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
சிக்கலின் இருந்து தப்பிக்க மத்திய அரசு உதவும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பாஜக-வுடன் கூட்டணி வைக்க இருந்ததாகவும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் மீண்டும் பாஜக ஆட்சியில் அமர்வது அவ்வளவு சுலபம் அல்ல என்பது தெரிந்ததும் அதில் இருந்து விலகி சிந்திக்க ஆரம்பித்து விட்டதாகவும் தெரிகிறது.
கட்சியை அடகு வைத்தாலும் மக்கள் ஏற்க வேண்டுமே?
வேறு வழியில்லாமல் பாஜக வுடன் அதிமுக பாமக கிருஸ்ணசாமி கூட்டணி சேர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். எனவே மத்திய அரசு நியாய விசாரணைக்கு முயற்சி எடுக்கும் என்று தோன்றவில்லை.
திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுனரிடம் மனு கொடுத்து சிபிஐ விசாரணை கோரியிருக்கிறார்.
நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகி சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டுமா என தீர்மானிக்க இருக்கிறது.
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தனது அரசியல் எதிரிகள் சதி செய்து இந்த குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. அதை யார் தீர்மானிப்பது?
குற்றம் சுமத்தப் படுபவர் தானே நீதிபதியாக இருந்து குற்றம் இல்லை என்று சொல்ல முடியுமா?
ஒரு முதல்வரின் மீது கொலைப்பழி சுமத்தப் படுகிறது. அவர் மறுக்கிறார். குற்றம் சுமத்தியவர்கள் மீது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் சொல்வது புதிது என்பதால் மட்டுமே அவர்கள் குற்றச்சாட்டு பொய் என்று முடிவு செய்ய முடியுமா என்பதுதான் விடை காண வேண்டிய கேள்வி.
குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிறதா என்பதை யார் முடிவு செய்வது.? நீதிமன்றம் சொல்லித்தான் நியாயமான விசாரணை நடக்க முடியும் என்பது நமது அரசியல் தலைவர்களின் தரம் எப்படி இருக்கிறது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
எடப்பாடி தானே முன்வந்து நியாயமான விசாரனை நடைபெறும் என்பதற்கு உத்தரவாதமாக பதவி விலகி வழி காட்டுவதுதான் ஆரோக்யமான அரசியல். கடைசி வரையில் பதவில் ஒட்டிக்கொண்டு விசாரணையை தடுப்பேன் என்று முரண்டு பிடித்தால் அவரது மீதான குற்றச்சாட்டு வலுப்பெறும் என்பதில் ஐயமே இல்லை.
அதிமுகவில் வேறு தலைவர்களே இல்லையா ?