சட்டம்

பொன் மாணிக்கவேல் – தமிழக அரசு மோதலால் தமிழர்களுக்கு இழப்பு?

Share

உயர் நீதிமன்றத்தின் நன்மதிப்பை பெற்ற சிலை கடத்தல் பிரிவு ஒய்வு பெற்ற ஐ ஜி பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தின் உத்தரவில் ஓராண்டு பணி நீட்டிப்பு பெற்று  சிறப்பு  அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவர் தனது பதவியை மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்ய மனு செய்திருந்த நிலையில் தமிழக அரசு மறுத்து உடனே ஆவணங்களை ஒப்படைக்க கோரி கடிதம் எழுதியிருக்கிறது.

அவரும் நான் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி எனவே என்னிடம் நீங்கள் ஆவணங்களை கேட்கக் கூடாது என்று பதில் எழுதி இருக்கிறார்.

ஒரு  நல்ல அதிகாரியிடம் அரசுக்கு ஏன் இத்தனை வன்மம்.?

பணி நீட்டிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றும் அங்கும் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நீட்டிப்பு செய்து ஐந்து மாதம் கழித்தே அரசு அவரது பணிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்பதில் இருந்தே அரசு அவரை எந்த அளவு உதாசீனப்படுத்தி வந்திருக்கிறது என்பது தெரிகிறது.

ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் ஆவணங்களை அரசு கேட்கிறது என்றும் அதில் அமைச்சர்களுக்கு அக்கறை இருக்கிறது என்றும் புகார்கள் எழுப்பி இருந்தார் அவர்.

விலை மதிப்பற்ற தமிழக கலைச் செல்வங்கள் திருடு போனது பற்றி எல்லாருக்கும் இருக்கும் பதற்றம் அரசுக்கு ஏன் இல்லை.?

அதை மீட்பது முக்கியமான கடமை என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

ஆனால் அந்தப் பணியில் சுயநலமுடன் சிலர் குறிக்கிட்டு குந்தகம் செய்வதை அரசு எப்படி அனுமதிக்கிறது?

எப்படி இருந்தாலும் ஒரு கடமை வீரருக்கும் அதிகாரத்தில் இருக்கும் கட்சிக்கும் ஏற்பட்ட மோதல் மிகவும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உரியதாகும்.

ஆனால்  எந்த அதிகாரியும் ஆவணங்களை தான் வைத்துக்கொள்ளமுடியாது.

ஒன்று  அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும். இரண்டில் ஒன்றை பொன்.மாணிக்கவேல் செய்து  இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

அரசும் அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுத்து மீட்கப் பட வேண்டிய கலைச்செல்வங்களை மீட்க வேண்டிய பணிக்கு வலு சேர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

இப்போது உச்சநீதிமன்றம் பொன் மாணிக்கவேலுக்கு ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு இருக்கிறது.   பணி நீட்டிப்பு தொடர்பாக உயர்நீதி மன்றம் முடிவு செய்யும் என்றும் கூறியிருக்கிறது .      இனி உயர்நீதி மன்றம் இதில் தலையிடுவதற்கான வாய்ப்பு  குறைவு.

எந்த அதிகாரியும் ஓய்வு பெறாமல் உழைக்க முடியாது. அரசுப் பணி தொடரும். அதிகாரிகள் மாறலாம். நான்தான் தொடர்வேன் என்று எந்த அதிகாரியும் உரிமை கோர முடியாது.

அதிக பட்சம் அரசிடம் நம்பிக்கை இல்லையென்றால் என்னிடம் இருக்கும் ஆவணங்களை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் பார்த்து யாரிடம் ஒப்படைக்கிறீர்களோ செய்யுங்கள் என்று ஒப்படைப்பது மட்டும்தான்  அவரின் கடைமையாக இருக்கும்.   அதிலும் இப்போது உச்சநீதி மன்றம் அரசிடமே ஒப்படைக்க உத்தரவிட்டு விட்டது.

இந்த விவகாரம் தமிழக  அரசுக்கு ஒரு களங்கம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

This website uses cookies.