சட்டம்

இயக்குனர் முருகதாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்! முன் ஜாமீன் எதற்கு?

Share

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது அரசை விமர்சித்த தாக வழக்கு பதிவுசெய்ததை அடுத்து அவர் முன் ஜாமீன் கேட்டு மனு போட்டு விசாரணை  நடந்து வருகிறது.

அதுவும் அரசுக்கு எதிராக சதி செய்வது கடுமையாக விமர்சிப்பது என்றெல்லாம் குற்றசாட்டுகள்.   இவைகள் எல்லாம் எப்படி குற்றங்கள் ஆகும்?

திரை உலகம் உள்ளிட்ட பலரும் தமிழக அரசின் இந்த பாசிச போக்கை கண்டித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்ஜாமீன் கேட்ட மனுவில் அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் எதிர்காலத்தில் அரசை விமர்சிக்க மாட்டேன் என்றும் உத்தரவாதம் தர வேண்டும் என்றும்  அரசு கேட்க அவர் மறுத்து விட்டார். விமர்சிப்பது என்பது அரசியல் சட்டம் தந்திருக்கும் அடிப்படை உரிமை.  அதை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஜாமீன் தருவதற்கும் அரசை விமர்சிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் தருவதற்கும்  என்ன தொடர்பு?

முருகதாஸ் சர்கார் படத்துக்கு தணிக்கை  சான்றிதழ் பெற்றிருக்கிறார்.    அரசை  விமர்சித்தது குற்றம் என்றால் படத்தை வெளியிட  அனுமதித்தது யார் குற்றம்?    குற்றம் அல்ல என்பதால்தானே அனுமதி அளித்திருக்கிறார்கள் .   தணிக்கை குழுவிற்கு மேலே இது யார் சூப்பர் தணிக்கை குழு? சட்டப்படி இப்படி கேட்க முடுயுமா?

முருகதாஸ் செய்தது குற்றம் என்றால் தண்டிக்கட்டும். அதை விட்டு விட்டு சட்டத்திற்கு புறம்பாக மிரட்டி பணிய வைக்க முயல்வதை அரசு கைவிட வேண்டும்.

முன் ஜாமீன் வழங்கினால் மட்டும் போதாது. பதியப் பட்ட வழக்கையே ரத்து செய்து  சட்டத்தை நிலை நாட்ட வேண்டும் நீதி மன்றம் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் .

This website uses cookies.