விடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்??!!

7-per-viduthalai
7-per-viduthalai

ராஜிவ் காந்தி கொலைவழக்கின் குற்றவாளிகளான 26 பேரில் 19 பேரின் மரண தண்டனையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். அப்போது அதை எதிர்த்து  பெரிதாக குரல் எதுவும் எழவில்லை.

மீதி 7 பேருக்கும் கொடுக்கப்பட்ட மரண தண்டனையையும் அவர்களின் கருணை மனுக்களை முகாந்திரம் இல்லாமல் கிடப்பில் போட்டதற்காக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

அவர்களும் 28 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டார்கள்.

அவர்கள் குற்றவாளிகளா நிரபராதிகளா என்ற விவாதம் தேவையே இல்லை.      குற்றவாளிகள்தான் என்றே வைத்துக் கொள்ளலாம்.

இப்போது உச்சநீதிமன்றம் அந்த ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து இருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி ஏழு பேரையும் விடுதலை செய்ய கேட்டுக்கொண்டது. அதை ஏற்றுக் கொள்ள ஆளுநர் கடமைப்பட்டவரா அல்லது அதற்கு மாறாக தனிப்பட்ட முறையில் தீர்மானிக்க உரிமை படைத்தவரா? இதுதான் இப்போது கேள்வி!

அரசியல் சட்டத்தின் பிரிவு 161 ஆளுநருக்கு தந்திருக்கும் விடுதலை செய்யும் உரிமை தமிழக அரசின் உரிமையா ஆளுனரின் தனிப்பட்ட உரிமையா? அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுபட்டவர் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது. பின் ஏன் தாமதம்? 

ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு இல்லை என்பது உண்மைதான் என்று மருத்துவர்  ராமதாஸ் கூட்டணி லாலி பாடிவிட்டு இருந்தாலும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்.

ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி. ஏற்கனெவே ஏழு பேரையும் விடுவிக்க முடியாது என்று மத்திய அரசு முடிவு செய்து உச்சநீதிமன்றதுகு தெரிவித்துவிட்டது. அந்த மத்திய அரசின் முடிவுதான் ஆளுநரின் முடிவாக இருக்கும் பட்சத்தில் எப்படி  முரணாக முடிவு எடுப்பார்?

மத்திய அரசை கேட்டு  முடிவு எடுப்பதை விட வேறு வழி இல்லை என்றால் ஆளுநர் முடிவு எடுப்பார் என்று ஏன் உச்ச நீதிமன்றம் கூற வேண்டும்.

ஆளுநரின் அதிகாரம் என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு இசைவாக அமைய வேண்டுமே தவிர முரணாக இருக்க முடியுமா?

பாஜகவாக இருந்தாலும் காங்கிரஸாக இருந்தாலும் சரி தமிழர்களுக்கு எதிரான முடிவைத்தான் எடுக்கிறார்கள்.

ஆளுநர் விடுவித்தால் மத்திய, மாநில ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகள் எல்லாரும் விடுதலைக்கு சொந்தம்  கொண்டாடுவார்கள். இது நடந்தால் அதிசயம்தான். எப்படியோ நல்லது நடத்தால் சரி.

அப்படி நல்லது நடக்க வலதுசாரி உயர்சாதி வக்கிர புத்திக்காரர்கள் விட்டு விடுவார்களா என்ற ஐயம் இருக்கவே செய்கிறது.

தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் சகோதரன் கோபால் கோட்சேவை பதினாறு ஆண்டுகளில் விடுதலை செய்தார்களே அப்போது ஏன் என்று யாருமே கேட்கவில்லையே ஏன்? அவர் பார்ப்பனர் என்பதால்தானே?

சட்டப் பேரவை தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போடலாம். அப்போதும் நீதிமன்றம் சென்று ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று மனு போட்டால் அதில்  எப்போது தீர்ப்பு வருமோ?

சட்டப் பேரவை தீர்மானத்தை ஏற்க மறுத்து ஏழு பேரையும் விடுவிக்க மறுக்கலாம். மத்திய அரசு சொல்லிய காரணத்தையே சொல்லி விடுதலை மறுக்கலாம். அந்த முடிவு தவறு என்று மீண்டும் நீதிமன்றம்தானே செல்ல வேண்டும். அதில் எப்போது தீர்ப்பு வருமோ?

சட்டம் போட்டுவிட்டோம் என்று கடமை முடிந்தது போல் பாசாங்கு காட்டி வரும் எடப்பாடி அரசு எந்த அவசரத்தையும் காட்டவில்லையே?

தமிழன் தலைவிதி மிதிபட்டு சாவதுதான் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். 

பாரதி வந்து மீண்டும் பாட வேண்டும்.   

                               என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் ?