தகுதி நீக்க எம் எல் ஏ வாங்கிய சம்பளத்தை திருப்பித் தர உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்?
2006-2011 ல் காங்கிரஸ் உறுப்பினராக போட்டியிட்ட வேல்துரை வெற்றி பெற்றபின் சந்தித்த தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் வெற்றி பெற்றது செல்லும் என்றும், உச்ச நீதிமன்றம் செல்லாது என்றும் தீர்ப்பளித்தது.
காரணம் அவர் பதிவு செய்த அரசு ஒப்பந்தக்காரர் என்பதுதான். அந்த தகுதிகுறைவுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் அவர் பதவிக் காலத்தை நிறைவு செய்துவிட்டார்.
வழக்கு போட்டது 2006ல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது 13.04.2011ல். இடையில் ஏற்பட்ட தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்ற நடைமுறைகள் தானே.
சட்ட மன்ற செயலாளர் ஜூலை மாதம் 2011 ல் அறிவிப்பு ஒன்றை அனுப்பி அதில் வேல்துரை தன் சம்பளமாக 2006-2011 காலகட்டத்தில் பெற்ற ரூபாய் 21.58 லட்சத்தையும் திருப்பி செலுத்த கோருகிறார். அதில் 2019 ல் தீர்ப்பளிக்கும் உயர்நீதி மன்றம் வழக்கில் ஏற்பட்ட தாமதம் தகுதி நீக்கத்தின் தாக்கத்தை நீக்கி விட்டது என்றாலும் அந்த தாமதத்தின் பலனை வேல்துரை பெற முடியாது என்று தீர்ப்பளித்து துகையை திரும்ப செலுத்த உத்தரவிட்டுள்ளது.
இது சரியான தீர்ப்பாக தெரியவில்லை.
வேல்துரை தேர்தல் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன நேரத்தில் அவர் தனக்கு சேர வேண்டிய சம்பளம் என்று நினைத்துத்தான் பெற்று செலவு செய்திருப்பார்.
உச்ச நீதிமன்றம் மாற்றி தீர்ப்பு சொல்லும் என்று அவருக்கு தெரியுமா? அப்படியே இருந்தாலும் தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு சொன்ன உச்சநீதி மன்றம் அவர் பெற்ற சம்பளம் பற்றியும் விளக்கம் தந்திருக்கலாம்.
இப்போது மீண்டும் வழக்கு உச்சநீதிமன்றம் போகவேண்டுமா. அல்லது தனி நீதிபதி தீர்ப்பு என்றால் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மேன்முறையீட போக வேண்டும்.
அவர் இறந்திருந்தால் அவரது வாரிசுகளிடம் வசூல் செய்வார்களா? அல்லது சொத்து இல்லையென்றால் கைது செய்து சிறையில் அடைப்பீர்களா ?
அரசு ஊழியர்களுக்கு தவறுதலாக கணக்கிடப் பட்டதன் காரணமாக கூடுதல் சம்பளம்/ படிகள் தரப்பட்டிருந்தால் அப்படி தவறாக தரப்பட்ட பணப்பயன்கள் திரும்பப் பெறத் தக்கவை அல்ல என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கிறது.
சம்பளம் பெற்ற காலத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோதே நீதி மன்றங்கள் இந்த சம்பளப் பட்டுவாடா பற்றியும் ஏதாவது ஒரு நிபந்தனை உத்தரவு இட்டிருக்கலாம் அல்லவா? நீங்கள் பெறும் சம்பளம் நீதி மன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப் பட்டது, தோற்றால் திரும்பப் செலுத்த நேரலாம் என்று உத்தரவிட்டிருந்தால் இந்த முரண்பாடு எழுந்திருக்காது.
நீதிமன்றங்கள் இன்னும் கொஞ்சம் நீதிசெய்யலாம்.