சட்டம்

நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை தகற்கும் நியமனம் ?!

Share

ஓய்வு  பெற்ற பின்  அரசு தரும் பதவிகளை பெற்றுக் கொள்வது நீதிபதிகளுக்கு பெருமை தருமா என்பது கேள்விக்குறியே.?!

முன்பு நீதிபதி சதாசிவம்  ஓய்வு பெற்ற பின் கேரள ஆளுனராக நியமிக்கப் பட்ட போதும் இப்படிப்பட்ட விமர்சனம் எழுந்தது.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் குடியரசுத் தலைவரால் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப் பட்டிருக்கின்றார்.

அயோத்தியா வழக்கில்  , ரபேல் விமான கொள்முதல் வழக்கில் என பல முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி ரஞ்சன் கோகாய்.

முன்னாள் முதல்வரின் மகன். செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.அயோத்யா வழக்கில்  எப்படி தீர்ப்பு வருமோ என்று அகில உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில் தீர்வை வழங்கியவர். அது சட்டப்படியானது அல்ல தீர்வை இலக்காக கொண்டது என்று விமர்சிக்கப்பட்டது.

எப்படியானாலும் ஒரு நீதிபதி அரசு தரும் பதவியை வாங்கினால் அதற்கு பலரும் பல விமர்சனங்களை முன் வைப்பார்கள். அதற்கு இடங்கொடுத்து விட்டாரே ரஞ்சன் கோகோய் என்ற ஆதங்கம் நீதித்துறையை சேர்ந்த பலருக்கும் இருக்கிறது என்பது  மட்டும் உண்மை .

பாஜக வின் முன்னாள் அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி நீதிபதிகள் ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளுக்குள் பதவி  பெறுவது தவிர்க்கப் பட வேண்டும் என்றார் .    மோடி ஜெட்லி சொன்னதை நினைவு கூற வில்லையா என்று காங்கிரசின் அபிஷேக் சிங்வி கேட்கிறார்.

இதே கோகோய்தான் மேலும் மூன்று  உச்ச நீதி மன்ற நீதிபதிகளான சலமேஸ்வர் , மதன் பி லோகுர் , குரியன் ஜோசப் உடன் சேர்ந்து பத்திரிகை யாளர்களை  சந்தித்து அரசிடம் இருந்து முக்கிய வழக்குகளில் குறிப்பிட்ட அமர்வை நியமிக்க அழுத்தம் தரப் படுகிறது என்று கூறி  இதை சொல்ல வேண்டியது  நாங்கள் நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமை  என்றும் கூறினார்கள்.    இப்போது அதே கோகாய் ஆறு மாதத்திற்குள் பதவியை ஏற்றுக் கொள்கிறார் என்றால் என்ன சொல்வது?

நாளை பதவே ஏற்றபின் விளக்கம் சொல்கிறேன் என்று சொல்கிறார் கோகாய் .   ஏதோ ஒரு இடத்தில் அரசும் நீதிதுறையும் சந்தித்து தானே ஆக வேண்டும் என்பது அவர் கருத்து.    அவர்  தான் மேலவையில் சட்ட பூர்வமாக ஆலோசனைதானே சொல்லப்  போகிறேன் என்று சொல்லலாம். அதை அரசு கேட்கும் என்பது என்ன உத்தரவாதம்?   மேலவை உறுப்பினர்க்கு உரிய  சலுகைகளை பெற தனது தீர்ப்பில் குறை காணலாம் என்று  கோகோய் அச்சப்  பட வேண்டாமா?

இந்தியாவில் நீதித்துறை நெருக்குதலுக்கு உள்ளாக்கப் படுகிறது என்று  குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில் இந்த நியமனம் தேவையா?

சாமானிய மக்கள் நீதித்துறையின் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையை தகர்க்கும் செயல் இது என்ற குற்றச்சாட்டை  எப்படி எதிர்கொள்வீர்கள் ?

தவிர்த்திருக்கலாம்.

 

This website uses cookies.