ஆதார் சட்டம் செல்லும் ; உச்சநீதி மன்ற தீர்ப்பு பிரச்னைகளை தீர்க்க உதவுமா?
ஆதார் அட்டைஅரசுக்கு அவசியம் தனியாருக்கு தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு சொல்லிவிட்டது .
நிரந்தர கணக்கு எண் இணைக்க ஆதார் அவசியம் . வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கட்டாயம் வேண்டும்.. நலத்திட்டங்கள் மற்றும் அரசின் மானியங்கள் பெற அவசியம் தேவை .
தேவையில்லாதது. வங்கிக் கணக்குடன் இணைக்க தேவையில்லை செல்போன் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டியதில்லை. மத்திய கல்வி வாரியப் பல்கலைக்கழக மானியக்குழு தேர்வுகளுக்கு அவசியமில்லை பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தேவையில்லை. . சிறுவர்-சிறுமிகள் பயன்களை பெறுவதற்கு ஆதார் தேவையில்லை.
ஒட்டுமொத்தமாக ஆதார் அடையாள அட்டை செல்லும். ஆதார் சட்டத்தை நிதி மசோதாவாக மக்களவையில் நிறைவேற்றியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இருக்கிறது . அதாவது ராஜ்யசபாவை தவிர்த்து இந்த சட்டம் இயற்றியது சரி என்கிறது . அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் எண்ணை பெறும் உரிமை இல்லை என்றும் தீர்ப்பளித்தது.
யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்பதை விடுத்து இரண்டு தரப்புகளும் தங்களுக்கே வெற்றி என்று கூறுவதுதான் வேடிக்கை. ஒரு பக்கம் பாஜக தங்களுக்கு வெற்றி என்கிறது. மறுபக்கம் காங்கிரஸ் தங்களுக்கு வெற்றி என்கிறது. ராஜ்யசபாவுக்கு இந்த சட்டத்தை கொண்டு செல்லவில்லை என்றால் மேல் முறையீடு செய்யப்போவதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது .
தீர்ப்பின் பெரும்பாலான பகுதிகளை வரவேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கருத்து தெரிவித்திருக்கிறார். தனியார் நிறுவனங்களுக்கு உரிமை கொடுக்கும் பிரிவு 57. நடவடிக்கை எடுக்க நிறுவனத்திற்கு உரிமை அளிக்கும் பிரிவு 47 இரண்டும் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. 4 நீதிபதிகள் பெரும்பான்மை தீர்ப்பு எழுதி சட்டம் செல்லும் என்றும் ஒரு நீதிபதி சிறுபான்மை தீர்ப்பு எழுதி சட்டம் செல்லாது என்றும் அறிவித்து இருக்கிறார்கள். நீதிபதி சந்திரசூட் இந்த சட்டம் அரசியல் சட்டத்தின் மீது செய்யப்பட்ட ஒரு மோசடி என்று கூட சொல்லியிருக்கிறார் .
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரு பிரச்சனை தீர்வை நோக்கி சென்று இருக்கிறது என்றாலும் பாமர மக்கள் ஆதார் அட்டை காரணமாக பாதிக்கப் படக்கூடாது என்பது இந்த தீர்ப்பின் மூலமாக உணர்த்தப்பட்டிருக்கிறது . பல நாடுகளில் பல விதமாக அடையாள அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதார் அட்டை இன்று ஒரு சட்ட பின்புலத்தை பெற்றிருக்கிறது. அது வரவேற்கத்தக்க ஒரு அம்சமாக பார்க்கப்படும் . ஆதார் தகவல்களை பாதுகாப்பதற்கு என சட்டப்படியான ஒரு அமைப்பு தேவை என்பதை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. மக்களின் துன்பங்களை களைய செய்யப்படும் எந்த சீர்திருத்தமும் வரவேற்கத்தக்கதே.
ஒரு நாடு தனது குடிமகனை அடையாளம் காண ஒரு அட்டையை பயன்படுத்துவதில் தவறில்லை. அதே நேரத்தில் அது எவரையும் துன்புறுத்துவதாகவும் அமையக்கூடாது . எவரையும் தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ அல்லது உளவு பார்ப்பதற்காகவோ ஆதார் அட்டை பயன்படுத்தப்படக் கூடாது. இந்த திட்டத்தின் வெற்றி அவைகளை உறுதி செய்வதில் தான் இருக்கும். மொத்தத்தில் பாதி வரவேற்பும் பாதி அதீருப்தியுமாக இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது
பிற்குறிப்பு; தமிழ்நாட்டரசு தனது மாநிலத்தில் வாழும் மக்களை அடையாளம் காணவும் நலத்திட்ட உதவிகளை வழங்கவும் இன்னும் சட்டம் அனுமதிக்கின்ற காரியங்களுக்காகவும் ஒரு மாநில அடையாள அட்டையை வழங்கினால் என்ன என்பதை பற்றி பொது மேடை முன்பே எழுதியிருக்கிறது.
This website uses cookies.