எழுவர் விடுதலை பற்றி மாநில அரசின் அமைச்சரவை தீர்மானம் ஆளுனரை கட்டுப் படுத்தும் என்று உச்ச நீதி மன்ற தீர்ப்புகள் எல்லாம் இருக்க அதையெல்லாம் விட்டு விட்டு மாநில அரசின் தீர்மானம் சைபர் மதிப்பு கொண்டது என்று மத்திய அரசின் வழக்குரைஞர் நீதி மன்றத்தில் தெரிவித்த அவலம் நடந்தேறியிருக்கிறது .
அதற்கு மாநில அரசின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பை தெரிவிக்காததுதான் வேதனை.
அரசியல் சாசன பிரிவு 161 படி விடுதலை செய்வது என்பது மாநில அரசின் விருப்பத்துக்கு உட்பட்டது என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி அரசு மாறிவிட்டது.
பரிந்துரை செய்ததோடு எங்கள் வேலை முடிந்தது. இனி ஆளுநர் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாடு நம்மை நாமே விற்று விட்ட நிலை போன்றது.
மாநில அரசும் ஆளுநரும் மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் எல்லாம் சேர்ந்து கொண்டு நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் இந்த நாடகம் இப்போது முடிகிறது போல் தோன்றவில்லை.
முதல்வர் நேரில் சென்று பிரதமரை பார்த்தால் வேண்டுகோள் விடுத்தால் ஒருவேளை காரியம் நடக்கலாம் என்று விசாரணை அதிகாரியாக இருந்த ரகோத்தமன் கூறுகிறார். அப்படி என்றால் இது அரசியலின் ஒரு அங்கமாக ஆக்கப் பட்டு விட்டதா?
நாங்கள் தான் விடுதலை செய்தோம் என்று வாக்கு அரசியல் செய்ய முயற்சிக்கிறதா மத்திய அரசு?
நடக்கும் நிகழ்வுகள் மத்திய மாநில அரசுகள் மீதான மக்களின் வெறுப்பை தூண்டத்தான் செய்யும்.
மாநில அரசின் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் அளவுக்கு எடப்பாடி அரசு தயாராகி விட்ட நிலையில் மாற்றம் கண்ணுக்கு தெரியவில்லை.