அரசியல் வழக்குகளில் தீர்ப்புகள் தாமதமாக வந்து ஆட்சியின் போக்கையே திசை திருப்பி விடுகின்றன.
திருப்பரங்குன்றம் தேர்தலில் ஏ கே போஸ் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்றார். ஆனால் அவரது வேட்பு மனுவில் கையெழுத்திட வேண்டிய செல்வி ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்ததால் தேர்தல் கமிஷன் அவரது கைரேகையை பெற அனுமதித்தது. மருத்துவர் பாலாஜி அதற்கு சாட்சியாக இருந்தார்.
திமுக சார்பில் மருத்துவர் சரவணன் தாக்கல் செய்த வழக்கில் ஏ கே போஸ் இறந்து போய் விட்ட நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டு அங்கே தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இப்போது வந்திருக்கிறது தீர்ப்பு.
தேர்தல் சட்டம் வழக்கை ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் விசாரணையை தினந்தோறும் நடத்த வேண்டும் என்றும் கூறுகிறது. ஏன் நீதிமன்றங்கள் இத்தனை ஆண்டுகள் தீர்ப்பு சொல்ல எடுத்துக் கொள்ளவேண்டும்?
தேர்தல் கமிஷன் மீது குற்றம் சாடுகிறது நீதிமன்றம். ஏன் அரசு அலுவலர்களை சான்றளிக்க பயன்படுத்தாமல் ஒரு மருத்துவரை பயன் படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறது.
டாக்டர் பாலாஜி தனது சாட்சியத்தில் தான் வரும் முன்பே ஜெயலலிதா கைரேகை இட்டு விட்டார் என்று சொல்லி இருந்தால் அவர் ரேகைக்கு சாட்சியாகவே இருக்க முடியாது .
இப்போது தேர்தல் கமிஷன் அங்கும் தேர்தல் அறிவிக்குமா? அல்லது தேர்தலை தள்ளிபோடுமா என்பது தெரியவில்லை.
ஆனாலும் நீதிமன்றம் தினந்தோறும் விசாரணையை நடத்தி இருந்தால் தீர்ப்பு முன்பே வந்திருக்கும். நிலைமையே மாறியிருக்கும்.
எனவே நீதிமன்றங்கள் அரசியல் வழக்குகளை தினந்தோறும் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது மிக மிக அவசியம்.
தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயித்தது ஜெயலலிதா வழக்கின் தீர்ப்புகள். ஆனால் அதற்கு நீதிமன்றங்கள் அனுமதித்த தாமதம் ஏற்றுக்கொள்ளவே முடியாதது.
ஜெயலலிதாவை தவிர வேறு யாருக்கும் இப்படி தாமதிக்க அனுமதி தரப் பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே??
ஆக நீதிமன்றங்களே ஆள் பார்த்து வாய்தா வழங்குகின்றன என்பது கசப்பான உண்மை.
காரணம் என்ன என்பதை ஆராய முடியாது. பல காரணங்கள். ஆனால் பாதிக்கப் பட்டது தமிழ் நாட்டின் தலைவிதி.
அரசியல்வாதிகளின் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்தால் மட்டும் போதாது .
அவற்றில் விசாரணையை விரைந்து நடத்தி குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்ப்பை வழங்கவும் நீதிமன்றங்கள் உத்தரவாதம் வழங்க வேண்டும். அப்போது மட்டுமே வழங்கும் தீர்ப்புகளுக்கு மரியாதை இருக்கும்.