ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கி ஆதாயம் அடைய துடிக்கும் அதிமுக ??!! துணை போகிறதா விசாரணை கமிஷன்??

ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கி ஆதாயம் அடைய துடிக்கும் அதிமுக

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் திசை தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது.

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அதிமுக அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கள் விசாரணை கமிஷன் முடிவு எப்படி எடுக்க வேண்டும் என கட்டளை இடுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சசிகலா குடும்பம் ரூபாய் ஒரு கோடிக்கு இட்லி தோசை சாப்பிட்டது என அமைச்சர் சண்முகம் குற்றம் சாட்டுகிறார். இவர்தான் முன்பு  சசிகலாவை அவர் எங்க சின்னம்மா இல்லை அம்மாதான் அம்மாதான் என்று தொலைக்காட்சி முன்பு கதறியவர்.

கமிஷன் முடிவு  எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.   அதன்படி இந்த அரசு நடக்க தயாராக இருக்கிறதா என்பதே தெரியவில்லை.  கமிஷன் முடிவு வந்தபின் அரசு என்ன முடிவு எடுக்கப்;  போகிறது என்பதும் தெரியவில்லை.

முடிவு  வரும் முன்பே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என்று  எதிர்பார்க்கிறார்களா?   அது சட்டப்படி சரியாக இருக்குமா?

அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சட்ட அமைச்சர் கூறுகிறார்.    விசாரணை கமிஷன் ஓராண்டு செயல்பட்டு சாட்சிகளை விசாரித்து வருகையில் மருத்துவ துறை செயலாளரை எதிர்பார்ட்டியாக சேர்க்க வேண்டும் என கமிஷனின் வழக்கறிஞர் மனு  போடுகிறார்.  ஏன் அவரை இன்னும் வைத்துக்  கொண்டிருக்கிறீர்கள். ?

எல்லாமே தவறாக போய்க்கொண்டிருக்கிறது. சட்டம் நாட்டில் ஆட்சி செய்கிறதா அல்லது சட்டத்தை வளைக்கிறவர்கள் ஆட்சி செய்கிறார்களா என்ற கவலையை நடக்கும் சம்பவங்கள் ஏற்படுத்து கின்றன.

எடப்பாடி சசிகலாவை நோக்கி குற்றம் சாட்ட மறுக்கிறார். தினகரனை மட்டுமே ஒதுக்கி  வைத்து மற்றவர்களை வளைக்க திட்டமிடுகிறார்.

கமிஷனும் தன் கடமையை  செய்வதில்  காட்டும் தாமதம் உண்மையை நோக்கித்தான் விசாரணை செல்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

ஏனென்றால் கமிஷன் ஒன்றும் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது.  பரிந்துரை தான் செய்ய முடியும்.   சந்தேகம் இருந்தால் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியும்.   அதையும் வேறொரு அமைப்புதான் மீண்டும் பரிசீலனை  செய்து குற்றப் பத்திரிகை  தாக்கல் செய்யமுடியும்.

நடக்கும் சம்பவங்கள் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தும் சட்ட மன்ற இடைத்தேர்தல்களை எதிர்நோக்கியும் ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கி ஆதாயம் அடையும் நோக்கில் கொண்டு செல்லபடுகின்றனவோ என்ற சந்தேகத்துக்கு இடமில்லாமல் செய்யவேண்டும் என்றால் அதை விசாரணை கமிஷன் தான் செய்ய வேண்டும்.

இத்தகைய விமர்சனங்களை கமிஷன் அனுமதிக்க கூடாது.  அமைதி காத்தால் தவறான ஊகங்களுக்கு இடம் கொடுத்தது போல் ஆகிவிடும்.   கமிஷனும் உடந்தையா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது ஆகி விடும்.

விமர்சனங்களை தவிர்க்க ஆணையிடுவதுடன் விசாரணையை துரிதப் படுத்தி விரைந்து தனது முடிவை வெளியிட வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.