Home Blog Page 119

தாலி பெண்களுக்கு தேவையா? டி.வி. விவாதத்தை தடுத்து நிறுத்திய கைக்கூலிகள்!!! மீண்டும் விவாதம் நடத்துமா புதிய தலைமுறை? அல்லது பயந்து ஒதுங்குமா?

               புதிய தலைமுறை டி.வி.'உரக்க சொல்வோம் " நிகழ்ச்சியில் தாலி என்பது கௌரவத்தின் அடையாளமா அல்லது பெண்கள் மீதான அடக்கு முறையின் அடையாளமா?  என்ற பொருளில் " தாலி பெண்களுக்கு தேவையா? என்ற விவாதம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது.   

                 பெரியார் காலத்திலிருந்தே விவாதிக்கப் பட்டு வரும் விடயம்தான் தாலி.    கடவுள் மறுப்பாளர்கள் கூட தொன்று தொட்டு வழங்கும் மரபை மாற்ற மனமின்றி தாலி அணிவிப்பதை தொடர்கிறார்கள்.      
                இந்து என்பதன்  உண்மைப் பொருள் ' யாதும் ஊரே யாவரும் கேளிர்"   என்பதே.   
                ஆனால் பலரும் இந்த பதத்தை தவறாகவே புரிந்து பயன் படுத் திக்கொண்டிருக்கிரார்கள்.     பார்ப்பனர் எழுதி வைத்ததை அப்படியே நம்பி கடைபிடிப்பவன் தான் இந்து என்பதாகவே இங்கு பொருள் கொள்ளப் படுகிறது.    
                 அது உண்மையல்ல.     நான் பார்ப்பனீய ஆதிக்கத்தை ஏற்கவில்லை.     ஆனால் கடவுள் நம்பிக்கை கொண்டவன்.    நான் இந்துவா இல்லையா?      இல்லை என்று சொல்ல இங்கு எவருக்கு உரிமை இருக்கிறது. 
                பெரியார் தான் இறக்கும் வரை இந்து என்று சொல்லிகொள்ளவுமில்லை.     ராமசாமி என்ற பெயரை மாற்றிக்கொள்ளவுமில்லை.    நீதான் நாத்திகனாயிற்றே   ராமசாமி என்ற எங்கள் சாமி பேரை வைத்துக் கொள்ள உனக்கு உரிமை இல்லை என்று எவரும் வாதாடி வென்றதும் இல்லை. 
                 என்.எஸ்.கிருஷ்ணன்  ஒரு பாடலில் " தாலி பெண்களுக்கு வேலி "   என்று பாடியிருப்பார். அதில் தாலி எப்படி மற்றவர்களால்  மதிக்க வைக்கப் படுகிறது என்பதையும் ஏன் அதேபோல் கணவன்மார்களுக்கும் ஏதாவது ஒரு குறியீடு , அதாவது மெட்டி போல ஏதாவது ஒன்று, கூடாது என்றும் கேட்டுவிட்டு கடைசியில், இங்கிலாந்து, அமெரிக்கா , ஜப்பானில் தாலி என்பது கேலி என்றும் முடித்திருப்பார்.    இப்போதும் வெளிநாடு செல்லும் இந்துப் பெண்கள் பலர் தாலியை மறைத்துக் கொண்டோ நீக்கிக் கொண்டோதான் வாழ்கிறார்கள். .  அதனால் அவர்களின் மண வாழ்க்கை எந்த விதத்திலும் பாதித்து விட வில்லை. 
              விவாதம் நடத்தப் போவது இந்துப் பெண்கள்.    அவர்கள் தங்கள் உரிமைகள் கடமைகளை , விவாதிப்பதில் என்ன தடை. ? 
               இப்போதைய பிரச்சினை விவாதம் நடத்துவது சரியா? தவறா?  அந்த கருத்து உரிமையை வன்முறை மூலம் தடுக்க முனைவது சரியா? 
              காவல்துறை நடவடிக்கை எடுத்து சிலரை கைது செய்திருக்கிறது.       வழக்கு தன் போக்கில் போகட்டும். 
             இந்து முன்னணி என்று சொல்லிக்கொண்டு மூளைச்சலவை செய்யப் பட்டவர்களை தூண்டி விட்டு இம்மாதிரியாக வன்முறை நிகழ்த்துவது பிரச்சினை! 
                புதிய தலைமுறை  டி.வி. நிர்வாகம்  இம்மாதிரியான மிரட்டல்களுக்கு அடி பணியக் கூடாது.     
              பல கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். 
             முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது தேவையா என்ற விவாதத்தை முஸ்லிம் பெண்களைக் கொண்டே நடத்தத் தயாரா என்று கேட்கிறார்கள்.    நியாயமான கேள்விதான்?   அம்மாதிரியான விவாதம் நடத்தப் பட்டால் அதற்கும் காவல்துறை தக்க பாதுகாப்பு கொடுக்கத்தான் வேண்டும். 
               மனிதர்களுக்காக மதங்களா?    மதங்களுக்காக மனிதர்களா? 
      பல  பரிசோதனைகளுக்குப் பிறகு வள்ளலார் " மதம் என்னும் மாயையை ஒழித்தேன்" என்றார். 
              கொச்சைப்படுத்தும் நோக்கம் இல்லாமல் நடுநிலை நின்று யார் மனதும் புண்படாமல் நடத்தப்படும்  அறிவு சார்ந்த  எந்த விவாதமும் நிச்சயம் வரவேற்கப் பட வேண்டியதே! 
                தாலி பெண்களுக்கு தேவையா என்ற விவாதத்தை தொடர வேண்டும். 

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

விவசாய நிலங்களை கம்பெனிகளுக்கு தாரை வார்க்க தயாராகும் மோடி? ஆட்சேபிக்கும் ஆர்.எஸ்.எஸ். !! நன்றாகத்தான் நடிக்கிறார்கள்!!!!

                        நிலம் கையகப் படுத்தும் சட்டம் முந்தைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்  பட்டு இப்போதைய மோடி அரசால் சில திருத்தங்களோடு அவசர சட்டமாக கொண்டுவரப்பட்டு நாடாளுமன்ற மேலவையில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தை கூட்டியாவது சட்டமாக கொண்டு வர பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். 

                     ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கூட்டணி கட்சிகள் சிலவும் , இது விவசாயிகளுக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில்  எப்படியாவது இந்த சட்டத்தை கொண்டு வர மோடி துடிப்பது ஏன்?   
                   பா. ஜ.க. தலைவர் அமித்  ஷா   இதற்காக சங்க தலைவர்களை பார்த்து சம்மதம் கேட்டு விளக்கியிருக்கிறார். எதற்காக?    சட்டம் வந்தால்தான் வெளி நாட்டு முதலாளிகள் நிதிகளைக் குவிப்பார்களாம்!     மோடியின்   ' மேக் இன் இந்தியா " திட்டம் வெற்றி அடையுமாம்? 
                     இந்த சட்டம் முன்பே அமுலில் இருப்பதுதான்!    பிரச்சினை என்னவென்றால் இப்போது இருக்கும் சட்டத்தில் விவசாயிகளுக்கு இருந்த பாதுகாப்பு இந்த சட்டத்தில் நீக்கப் படுகிறது.  
                  அதாவது,  தேசிய பாதுகாப்பு தொடர்பாகவோ , ராணுவம் தொடர்பாகவோ, மின்சார திட்டத்தை  உள்ளடக்கிய  ஆதார வசதிகள் தொடர்பாகவோ, தொழில் பூங்காக்கள் தொடர்பாகவோ ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் தொடர்பாகவோ  நிலத்தை கையகப் படுத்தும்போது , அது விவசாயம் செய்ய ஏற்ற நிலமா என்பது கவனிக்கப் படவேண்டும் என்று இருந்த நிபந்தனை இப்போது நீக்கப்பட்டு விட்டது.  அதாவது அந்த நிலம் விவசாயம் செய்கின்ற நிலமா என்பதை பார்க்க தேவை இல்லை.. 
              அதேபோல் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப் படாவிட்டால் நிலம் விவசாயிகளுக்கே திரும்ப தந்து விட வேண்டும் என்ற பிரிவும் நீக்கப் பட்டு விட்டது. 
             இழப்பீடு அதிகப் படுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப் பட வில்லை. 
               கவனிக்க வேண்டிய அம்சம் ,- தொழில் பூங்காக்கள் (  இன்டஸ்ட்ரியல் காரிடார் ) அதாவது  வெளி நாட்டவர்கள் இந்திய விவசாயத்தை அழித்தாலும் கூட தொழில் பெருகும் என்றால் அதற்கு இந்த அரசு கவலைப்படாது. 
             மோடி மீது அதிகமாக கூறப்படும் குற்றச்சாட்டு – அவர் கார்பரேட் நிறுவனங்களின்  கூட்டாளி என்பதுதான். 
             அதானியுடன் ஆஸ்திரேலியா சென்று வியாபார ஒப்பந்தம் போட்டது-  பதினைந்து லட்சம் சூட்டை நாலேகால் கோடிக்கு ஏலம விட்டது-   தொள்ளாயிரம் கோடி அளவு தேர்தல் நிதி வாங்கி செலவு செய்தது. – எல்லாம் ஏழை பங்காளர்  செய்யும் செயல்களாக தெரிய வில்லை. 
                  மக்கள் விரோத சட்டத்தை எப்படியாவது கொண்டு வந்து விட மோடி பிடிவாதம் காட்டினால் ,, பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் அது நிறைவேறினாலும் கூட அமுல் படுத்த முனையும்போது , அரசே ஆட்டம் காணும் விதத்தில் , மோசமான எதிர்ப்புகளை விவசாயிகள் காட்டுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 


வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

இந்து – சேலத்தில் வன்னியர் -தலித் மோதலில் தடுக்கப் பட்ட கோவில் குடமுழுக்கு!!! வெல்லப்போவது மதமா? சாதியா?

                சைலாம்பிகை- சைலகிரீச்வரர் – வரதராஜா பெருமாள் கோவில்கள்   21 கிராமங்களை சேர்ந்த வன்னியர்களுக்கு சொந்தமானது என்றும் தாங்கள் மூன்று கோடி செலவு செய்து கட்டிய கோவிலில் குடமுழுக்கு நடத்தும்போது தலித்துகள் வரக்கூடாது என்று ஒரு தரப்பும் நாங்கள் கேட்பது வழிபாட்டு உரிமைதான் என்பதால் நாங்கள் நீதிமன்றம் சென்றாவது அந்த உரிமையை நிலை நாட்டுவோம் என்றும் மறு தரப்பும் வாதிட்டு வந்த நிலையில் கோவில் பூட்டப் பட்டு ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டு கலவர சூழ்நிலையை அதிகப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

                 வன்னியர்களுக்கோ தாங்கள் அறங்காவலர்கள் என்பதிலும் நிர்வாகப் பொறுப்பு தங்களிடம் இருந்தால் போதும் என்பதிலும் இருக்கும் அக்கறை கும்பாபிஷேகம் தமிழிலா அல்லது வட மொழியிலா என்பதிலோ கருவறையில் தமிழா வடமொழியா என்பதிலோ எந்தக் கவலையும் இல்லை.   
                 அதை யார் செய்தாலும் எப்படி செய்தாலும் ஆட்சேபனை தெரிவிக்காதவர்கள் அந்த சாமியை யார் கும்பிடுவது என்பதில் சாதி பார்த்து உரிமை மறுப்பது என்ன நியாயம்?   அதில் என்ன பகுத்தறிவு, இனமானம், சுயமரியாதை இருக்கிறது என்பதுதான் புரியவில்லை.
               இரண்டு பெரும் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில்தான் என்ன பொருள் இருக்கிறது. ? 
                அ.தி.மு.க.-பா.ம.க. என்று கட்சி வித்தியாசம் இல்லாமல் இதில் மட்டும் ஒன்று பட்டு நிற்கிறார்கள்.  தமிழர் ஒற்றுமையில் அக்கறை காட்டும் மருத்துவர் ராமதாஸ் இந்த பிரச்சினையில் காவல் துறை அதிகாரிகள் மீது குற்றம் காண்பது ஏமாற்றம் அளிக்கிறது. 
                அரசியலை தனியாகவும் மதம் -மதம் சார்ந்த சாதி தொடர்பான பிரச்சினைகளையும் பகுத்துப் பார்த்து இணக்கமான முடிவை எடுக்க அந்தந்த சாதிகளை சேர்ந்த அறிவாளிகள் முன்வந்தால் தவிர தமிழர் ஒற்றுமை என்பது கானல் நீராகவே போகும்!!!!

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

காவிரி- இறுதித் தீர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா!! மௌனம் சாதிக்கும் மத்திய மாநில அரசுகள்!!! வஞ்சிக்கப் படும் டெல்டா விவசாயிகள்!!!!!

              காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்து அதை அமுல் படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய மத்திய அரசு காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதால் தைரியம் கொண்ட கர்நாடகா அரசு மேகதாது என்ற இடத்தில அணைகள் கட்ட போவதாகவும் அதற்கு உலகளாவிய டெண்டர் விடப்போவதாகவும் அறிவித்து இருக்கிறது.

              அங்கே காங்கிரெஸ் -பா.ஜ.க.என்றெல்லாம் பாகுபாடு பாராமல் அது எங்களது உரிமை என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.

              இங்கோ தமிழக அரசு ஏதும் செய்ய முன்வராத நிலையில் விவசாயிகள் ஒன்று திரண்டு மேகதாதுவை முற்றுகை இடும் போராட்டம் அறிவித்து இரண்டாயிரம் பேர் கர்நாடகாவுக்குள்  நுழைய முயன்று கைதாகி விடுதலை யாகி உள்ளனர். 
              தேசிய கட்சிகளான காங்கிரசும் பா.சக வும் அங்கொரு நிலையம் இங்கொரு நிலையும் எடுக்கிறார்கள். 
               இங்கோ தலை இல்லாத விசித்திரமான  ஆட்சி நடந்து வருகிறது. 
               மத்திய அரசு அரசியல் காரணமாக தலையிட தயாராக இருக்காது.    மத்திய அரசு நியாயமாக நடந்து கொண்டால் உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து விட்டால் அதை மீறி செயல் பட முடியாமல் கர்நாடகம் தடுக்கப் படும்.     மோடி அரசு அதற்கு தயாராக இல்லையே !
               உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை மாநில அரசு தட்ட வில்லை என்றால் விவசாயிகள் கூட்டமைப்பு அந்த முயற்சியில் இறங்க வேண்டும். .   அப்போதாவது மாநில அரசு உணர்வு பெறுகிறதா என்பதை பார்க்கலாம்.

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

எல்லை தாண்டி வந்தால் இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வோம் !!! ரணில் விக்கிரம சிங்கேவின் ஆணவப் பேச்சு???

              தந்தி டி.வி. பேட்டியில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே  சொன்ன கருத்துக்கள் அவரது ஆணவத்தை வெளிப்படுத்துகிறதா ?
தமிழர்கள் இனப்படுகொலையில் இந்திய அரசின் பங்கை காட்டிக் கொடுக்கிறதா?   இந்திய அரசின் தமிழர் விரோத கொள்கையை வெளிச்சமிடுகிறதா?
              ரணில் என்ன சொன்னார்?    
      ”   ஒருவர் ஏன் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றால் நான் அவரை சுடலாம்.    சட்டம் அதை அனுமதிக்கிறது. ”  
        ” போரில்  வெல்ல இந்தியா நிச்சயமாக உதவி செய்தது. ”   
         ” இந்தியா இதை தொடர்ந்து மறுத்து வருகிறதே என்று கேட்கிறீர்கள்?  மறதி என்பது அரசியல்வாதிகளுக்கு மிக சாதாரணம்.”
         ”    கச்சத்தீவை நாங்கள் விட்டுத் தரப் போவதுமில்லை. ஒப்பந்தத்தில் கொடுக்கப் போவதுமில்லை. இந்தியா இதை எழுப்பப் போவதுமில்லை. இந்தியா இதை எழுப்பாது.”   
              ரணில் பேசியது இலங்கையின் குரலா இந்தியாவின் குரலா என்ற சந்தேகம் தேவை இல்லை.     ஏனென்றால் அவர் பேசிய எதையும் இந்தியா மறுக்கவுமில்லை மறுக்கப் போவதுமில்லை.  
            தமிழர்களின் எந்தக் கோரிக்கையையும் பரிசீலிக்கக் கூட இந்திய அரசு தயாராக இல்லை. 
           பிரதமர் மோடி அங்கே சென்று என்ன  செய்ய போகிறார்? 
       1987 ல் தமிழர்கள்  சார்பில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்து செய்த ஒப்பந்தத்தை அமுல் படுத்தப் போகிறோம் என்று சென்ற இந்திய அமைதிப் படை புலிகளோடு சண்டையிட்டதால்   மடிந்த  1140 வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்.   
          அமைதிப் படையாலும் சிங்கள ராணுவத்தாலும் அழிக்கப் பட்ட லட்சக்கணக்கான தமிழர்கள்தான் மனிதர்கள் என்ற கணக்கில் வர மாட்டார்களே? 
        சிறிசேநாவின் புதிய அரசு வந்தும் இந்திய தமிழ் மீனவர்கள் தாக்கப் படுவது நின்ற பாடில்லை.    சிங்கள கடற்படை தாக்கியது என்றால் இந்தியக் கடற்படை எங்கே போனது என்ற கேட்க இங்கே யார் இருக்கிறார்கள்?
         புலம் பெயர்ந்தவர்கள் திரும்ப வாருங்கள் என்று அழைத்து அவர்கள் வந்தால் கைது என்ற வஞ்சகம் தொடர்கிறதே?
         வீடுகள் கட்டிகொடுக்கிறோம் , ரயில் விடுகிறோம், கலாச்சார மையம் திறக்கிறோம் , என்றெல்லாம் அறிவுப்புகள் செய்து உலக நாடுகளை திசை திருப்பி இனப்படுகொலை , போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கையை காப்பாற்ற மட்டுமே இந்தியா தொடர்ந்து முயற்சிக்கும்.     அதற்கு இந்திய முதலாளிகள் துணை நிற்பார்கள்.  அவர்களுக்கு இலங்கையில் இந்திய வணிக ஆதிக்கம் முக்கியம். 
       ஆட்சிகள் மாறலாம் , .   சிங்கள இனவெறி தொடரும்!     
  இதுதான் இன்றைய நிலவரம். 
       அதிகாரப் பகிர்வு , அரசியல் தீர்வு ,இவைகளை தமிழர்களுக்கு சிங்களர்கள் தருவார்கள் என்று யாரேனும் நம்பினால் ஒன்று அவர்கள் வரலாறு தெரியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது நான் முட்டாள் என்று பெருமை பேசிக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். 
       ஜனநாயக வழியில் போராடியவர்களை சிங்களர்கள் கொன்றார்கள். 
      ஆயுதமெடுத்துப் போராடியவர்களையும்  இந்தியா சீனா உதவியோடு சிங்களர்கள் ஒழித்தார்கள். 
       வாழ வேண்டுமென்றால் போராடித்தான் ஆக வேண்டும்!     இந்த முறை காந்திய வழியில் !!!!
       சிங்களர்களை எதிர்த்து மட்டுமல்ல.    அந்த நரிகளிடம் காந்தியமே தோற்று விடலாம்.
      சிங்கள இனவெறியை ஊக்குவிக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கையை எதிர்த்து,    ஆயுதங்கள்  வழங்கும் சீனாவை எதிர்த்து, தமிழ் அகதிகளை அலைக்கழிக்கும் அனைத்து நாடுகளையும் எதிர்த்து , உலகமெங்கும் பரவிக் கிடக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் காந்திய வழியில் ஒன்று பட்டு போராட முன்வர வேண்டும். 
       வாய்மையே வெல்லும்!!!!!! 
              

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

+91-91766-46041

கற்பழிப்புக் குற்றவாளியை அடித்துக் கொன்ற பொதுமக்கள் !நாகாலாந்தில் நிலவும் கலவர சூழ்நிலை !!!!

                   அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சையத் பரித் கான் என்பவர் மீது நாகாலாந்து பெண் ஒருவரை கற்பழிப்பு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு திமாபூர்  சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.   
                  சிறைக்குள் புகுந்த ஐந்தாயிரம் பொதுமக்கள் அவனை வெளியே இழுத்து வந்து நிர்வாணமாக்கி பொது இடத்தில அடித்தே கொன்றிருக்கிறார்கள்.
                 துப்பாக்கி சூடு நடந்ததில் ஒருவர் இறந்திருக்கிறார்.   .அதிகாரிகள்  சஸ்பெண்டு ,விசாரணை, எல்லாம் நடந்து வருகிறது. 
               இந்த நிகழ்வு காட்டும் உண்மைகள் என்ன?
               கற்பழிப்பு நடத்தியவன் முஸ்லிம் என்பதாலும் வெளி மாநிலத்தவன் என்பதாலும் மக்கள் சட்டத்தை தங்கள் கையிலே எடுத்துக் கொண்டார்களா?
               எவ்வளவு பெரிய குற்றம் என்றாலும் மக்கள் தண்டனை  தருவது சரிதானா?
                டெல்லியிலே வட கிழக்கு மாநில இளைஞன் ஒருவன் ஒரு சிறிய சண்டையிலே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இதற்கு தொடர்பு உடையதா?
                மத்திய மாநில அரசுகள் விழித்துக் கொண்டு சட்டத்தை நிலை நிறுத்தா விட்டால் – மக்களே நீதி வழங்கும் இந்த காட்டுமிராண்டித்தனம் பரவ வாய்ப்புகள் அதிகம்!!!
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

+91-91766-46041

அரியானா முன்னாள் முதல்வருக்கு பத்து ஆண்டு சிறையை உறுதி செய்தது உயர் நீதி மன்றம் !!!

               ஓம் பிரகாஷ் சவுதாலா –   ஐந்து முறை முதல்வர் – ஜாட் இனத்தின் தனிப்பெரும் தலைவர். அவர் மகன் அஜய் சவுதாலா – ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஞ்சீவ குமார் மற்றும் ஒருவர் -அனைவருக்கும்  சி.பி.ஐ. நீதிமன்றம் அளித்த பத்து ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதி மன்றம் உறுதி செய்ததுடன் மற்ற ஐம்பது பேர்களுக்கு மட்டும் தண்டனையை இரண்டு ஆண்டுகளாக குறைத்தது.  

              குற்றம் 2000 ம் ஆண்டில் 3206  இளநிலை பயிற்சி பெற்ற ஆசிரியர் நியமனங்களை முறைகேடாக செய்தார்கள் என்பதுதான்.    
             ” மாநிலத்தில் நிலவும் முதுகு எலும்பை சில்லிடச் செய்யும் அதிர்ச்சி அளிக்கும் நிலவரம் ” என்று ஊழலின் தன்மையை நீதிபதி மிருதுல் தனது நானூறு பக்க தீர்ப்பில் விமர்சிக்கிறார். 
             அவரை ஒருமுறையாவது தமிழ் நாட்டுப் பக்கம் வரச் சொன்னால் எப்படியெல்லாம் விமர்சிப்பார் என்பதை நாம் கற்பனைதான் செய்து கொள்ள வேண்டும்.   
             கூடவே இருந்து காட்டிக் கொடுக்க முயற்சித்து தானும் மாட்டிக் கொண்ட அதிகாரி சஞ்சீவ் குமார் யார் , அவர் பின்புலம் என்ன என்பதெல்லாம் ஆய்வுக்குரியது.   
             உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கும் இந்த வழக்கின் முடிவு ஜெயலலிதா வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

சட்டம்- குழந்தை திருமண தடை சட்டம் முஸ்லிம்களுக்கும் பொருந்தும்- உயர் நீதி மன்றம்

ஷரியத் சட்டம் 1937 ன்படி பெண் பருவம் அடைந்தபின் திருமணம் செய்ய உரிமை உண்டு என்று மனு செய்தார் பெண்ணின் தந்தை.     முஸ்லிம்   பெண்ணுக்கு உரிய வயது வரவில்லை என்பதால்      குழந்தை திருமண தடை சட்டத்தை அமுல் படுத்த கோரி பெரம்பலூர் மாவட்ட அதிகாரி கொடுத்த மனுவை கீழ் நீதிமன்றம் ஏற்றது.

             உயர் நீதி மன்றம் சென்றார் தந்தை.    நீதிபதி சி .டி. செல்வம் வழக்கை விசாரித்து குழந்தை திருமண தடை சட்டம் அமுலில் இருக்கும்போது குழந்தை தாய்மார் உருவாக இந்த நீதிமன்றம் அனுமதிக்காது என்று தீர்பளித்த நீதிபதி கீழ் நீதி மன்றம் கொடுத்த ஆணையை உறுதி செய்தார்.

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

அ.தி மு.க. அரசில் -முட்டை கொள்முதலில் கோடிக்கணக்கில் ஊழல்~ குற்றம் சாட்டும் ஒப்பந்தக்காரர்!!

             வேலூர் மாவட்ட முட்டை ஒப்பந்தக்காரர் எம்.ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுத்துள்ள மனு பல முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

             தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டியால் நிர்ணயிக்கப் படும் விலைக்கு மாறாக தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்ட விதிகளுக்கு மாறாக நிபந்தனைகளை திருத்தி அனுபவம் இல்லாத முன்பே கர்நாடகா அரசால் கருப்பு பட்டியலில் வைக்கப் பட்ட இரண்டு நிறுவங்களுக்கு , உள் நோக்கத்தோடு , உரிமம் வழங்கப் பட்டிருப்பதால் அவைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதனால் ஒரு முட்டைக்கு 98  -Rs. 1.75  வரை  அதிக விலை கொடுத்ததால்  பத்து கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை மார்ச் 24 ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
            ஜெயலலிதா மக்கள் முதல்வராக இருந்து ஆட்சி செய்யும் அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் குவிய துவங்கி இருப்பது எதைக் காட்டுகிறது?
          ஆட்சியின் அந்திம காலத்தில் இருக்கும் நேரத்தில் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் முடிவிற்கு ஆட்சியாளர்கள் வந்து விட்டார்களா?
         ஊழல் வழக்கு வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு தலைவியே வந்த பிறகு தொண்டர்கள் என்ன சளைத்தவர்களா?
அதுவும் அமைச்சர் வளர்மதி தைரியத்துக்கு பேர் போனவர்!!!

மாட்டு மாமிசம் வைத்திருந்தால் ஐந்து ஆண்டு ஜெயில் ! 19 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகாராஷ்டிரா அரசு சட்டத்துக்கு பிரணாப் முகர்ஜி ஒப்புதல்! நிலைக்குமா சட்டம்?

         ஒன்றரைகோடி  பேர் வேலை செய்யும் தொழிலை ஒரே கையெழுத்தில் மாற்றி விட்டார் பிரணாப் முகர்ஜி.

         மகாராஷ்ட்ராவில் பசுக்களையும் கன்றுகளையும் கொல்ல தடை சட்டம் 1976  முதலே அமுலில் இருக்கிறது.  அப்போதே காளைமாடுகளையும் கொல்ல தடை சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி விட்டு காத்திருந்தது அரசு.    இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு திடீரென பிரணாப் முகர்ஜி ஒப்புதல் தெரிவித்து கையெழுத்து இட்டதால் உடனே சட்டமாகிவிட்டது.
       900  க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற  மற்றும் ஏராளமான உரிமம் பெறாத மாட்டிறைச்சிக் கடைகள் இனி என்ன ஆகும் என்பது பெரிய கேள்வி. 
       வாழ்வாதாரம், ,உணவுப் பழக்கம் மத நம்பிக்கைகள், போன்ற பல பிரச்சினைகள் இந்த சட்டத்தில் உள்ளன.     இவைகளை பொது விவாதங்கள் நடத்தி அனைத்து தரப்பினரையும் இணங்கச் செய்து சட்டமாக்குவது நல்லதா?       எங்களிடம் ஆட்சி இருக்கிறது. எனவே நாங்கள் சொல்வதுதான் சட்டம்.     எல்லாரும் பணிந்துகொண்டு தான் ஆக வேண்டும்  என்ற அணுகுமுறை சரியா? 
       மகாராஷ்டிரா முதல்வரும்  குடியரசு தலைவரும் ஒரே சமுதாயத்தினர் என்பதுகூட  சந்தேக விதைகளை  தூவும்!
      ஆந்திரா, குஜராத் , ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, டெல்லி மற்றும் பல்வேறு வட கிழக்கு மாநிலங்கள் பசுவதைக்கு தடையும் மாட்டு மாமிசத்தை பயன்படுத்த பல்வேறு நிபந்தனைகளையும் கொண்டுள்ளன.     தமிழ் நாட்டிலும் சான்று பெற்று உரிமம் பெற்ற இடத்தில  மாட்டு மாமிசம் பயன் படுத்தும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. 
        ஜெயலலிதா முன்பு ஒருமுறை ஆடு கோழி பலி கொடுக்க தடை சட்டம் கொண்டு வந்து பின்பு அதை அமுல் படுத்த முடியாது என்பதை புரிந்து கொண்டும் எதிர்ப்புக்கு அஞ்சியும் சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார் என்பது வரலாறு. 
      புலால் உண்ணாமையை வலியுறுத்தி திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தையே அர்ப்பணித்திருக்கிறார். 
     வள்ளலாரும் ஜீவகாருண்யத்தை உபதேசிக்கிறார்.
      வங்காளம் உள்பட பல பகுதிகளில் பிராமணர்கள் மீன்களை கடல் புஷ்பம் என்று உண்கிறார்கள். 
       கோழிகளும் ஆடுகளும் மட்டும் எந்த ஆட்சேபணையும் இன்றி கோடிக்கணக்கில் தினமும் கொல்லப் படுகின்றனவே  அவைகளை தடுக்க முடியுமா? 
      எந்த உரிமைக்கும் நியாயமான கட்டுப்பாடுகள் உண்டு.    அதை அரசியல் சட்டம் அங்கீகரிக்கும்.  இந்தத் தடை நியாயமான கட்டுப் பாட்டில் வருமா? 
     ஆட்சி செய்யுங்கள் என்று அதிகாரத்தை கொடுத்தால்  மிரட்டப் பார்க்கிறார்களே?    
   

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)