Home Blog Page 122

பகவத் கீதை தேசிய நூலா? சுஷ்மாவின் அதிரடி!


பகவத் கீதை தேசிய நூலா? சுஷ்மாவின் அதிரடி!
ஜூன் 21 ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட ஐ.நா. அறிவிக்க இருப்பதை தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நூற்று எழுபது நாடுகள் மோடியின் அழைப்பை ஏற்று ஆதரவு அளித்ததை குறிப்பிட்டார்.   
அத்துடன் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.     பிரதமர் மோடிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த எந்த வாய்ப்பையும் இவர்கள் தவற விடமாட்டார்கள் போல் இருக்கிறது.
அரசியல் சட்டம் மத சார்பற்றது.    மத சார்பின்மையை வலியுறுத்துகிறது. மத சார்பற்ற அரசு எப்படி ஒரு பிரிவினரின் புனித நூலை எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வற்புறுத்த முடியும்?
கொஞ்ச நாட்களுக்கு முன்பு மற்றுமொரு மத்திய அமைச்சர் நிரஞ்சன் சாத்வி இப்படித்தான் ராமரின் பிள்ளைகள் ஆள வேண்டுமா?  
 முறைகேடாக பிறந்தவர்கள் ஆள வேண்டுமா என்று கேட்டு நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் செய்தார். பிறகு மன்னிப்பு கேட்டும் இன்னும் அந்த பிரச்னை தீர்ந்த பாடில்லை.   அதற்குள் மீண்டும் ஒரு பிரச்னையை சுஷ்மா கிளப்புவதன் நோக்கம் என்ன?
ஆட்சியில் கவனம் செலுத்துங்கள். ஆட்டுவிக்க முயற்சிக்க வேண்டாம்.. 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


இந்தி படிக்க வேண்டுமாம்- பொன்னார் சொல்கிறார்

இந்தி படிக்க வேண்டுமாம்- பொன்னார் சொல்கிறார்
இந்தி படியுங்கள். எத்தனை மொழி  முடியுமோ அத்தனை மொழிகளையும் படியுங்கள். திரு பொன். ராதாகிருஷ்ணன் ,மத்திய துணை அமைச்சர் கன்னியாகுமரியில் பேசிய பேச்சு இது.
பா.ஜ.க  மீது ஏற்கனவே இந்தியை ,சமஸ்க்ரிததை திணிக்க முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
பிரதமர் மோடி மீது இந்திய மக்கள் ஒருவித நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதை குலைக்கும் வகையில் செயல்படுவது எந்த வகையிலும் பா.ஜ.க வுக்கு பயனளிக்காது.
ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்ற வகையில்தான் பா.ஜ.க வின் வளர்ச்சி தமிழகத்தில் இருக்கிறது. ஏற்கனேவே இந்தி பிரசார் சபா தமிழகத்தில் செயல்பாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. விரும்புபவர்கள் படித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  அதை யாரும் தடை செய்ய கோரவில்லை.
எந்த வகையிலும் மொழி திணிப்பு  இருக்க கூடாது என்பது மட்டுமே தமிழர்களின் எதிர்பார்ப்பு. 
இப்போதுதான் திருக்குறளை வட இந்தியாவில் அறிமுக படுத்த முயற்சி எடுத்து நல்ல பெயரை எடுத்தீர்கள்.
அதற்குள்ளாக இப்படி பேச வேண்டிய அவசியம் என்ன?   மும்மொழி திட்டத்தை எத்தனை வட மாநிலங்கள் அமுல் படுத்துகின்றன. ?
தேவைப் படுவோர் எந்த மொழியையும் கற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கும் போது  ஏதாவது சாக்கு சொல்லி மொழித் திணிப்பில் ஈடுபட்டால் அது எதிர்  மறை விளைவு களையே ஏற்படுத்தும். 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


டிசம்பர் ஆறு – ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்கலாமா ?

பாபர் மசூதி மீண்டும் கட்ட கோரி முஸ்லிம்
அமைப்புகளும் ராமர் கோயில் கட்ட கோரி இந்து அமைப்புகளும் போராட்டம் நடத்துவது
வழக்கமாகி விட்டது.
உயர் நீதி மன்றத்தில் தீர்ப்பு வந்து பல
ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு நிலுவையில் உள்ள
நிலையில்  இந்து முஸ்லிம் அமைப்புகள்
யாருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்?
அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலையில்
இருப்பவர்களைத் தவிர மற்ற யாருக்கும் இந்த பிரச்சினையில் முன்பு  இருந்த ஆர்வம இப்போது இல்லை.
அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் நிகழ்ச்சிகள்
பின்னுக்குத் தள்ளப்பட்டு இந்த மத வாத போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுவது
நாட்டுக்கு நல்லதல்ல. 
நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு
பற்றி தெருவில் நின்று சத்தம் போட்டால் நீதி கிடைத்து விடுமா?
அவரவர்க்கு உரிய இடம் எது என்பதில் நீதிமன்றம்
தீர்ப்பு சொன்ன பிறகு அவரவரும் தங்கள் இடத்தில் கோயிலோ தர்காவோ கட்டிக் கொள்வதில்
என்ன ஆட்சேபம் இருக்க முடியும்?
அலஹாபாத் உயர்நீதிமன்றம் மூன்றில் ஒரு பகுதி
மட்டும் முஸ்லிம்களுக்கு சொந்தம் என்றும் மற்ற இரண்டு பகுதிகள் இரண்டு இந்து
அமைப்புகளுக்கு சொந்தம் என்றும் தீர்ப்பு சொல்லி இருக்கும் நிலையில் , தற்போது
ராமர் சிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு ஆராதனைகள் செய்யப் பட்டு
வருகின்றன.  உயர் நீதி மன்ற தீர்ப்பில்
மசூதிக்கு முன்னால் பெரிய கோவில் ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று
சொல்லப்பட்டிருக்கிறது. 
உயர் நீதி மன்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்
பட்டிருக்கிறது.   இறுதி தீர்ப்பு உச்ச
நீதி மன்றத்தில் வர வேண்டும். இப்போதிருக்கும் நிலை நீடிக்க உச்ச நீதி  மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
எனவே இது தொடர்பாக இரு தரப்பும் எது செய்வதாக
இருந்தாலும் அதை உச்ச நீதி மன்றத்தின் அனுமதியோடு மட்டுமே செய்ய முடியும் . அதை
மட்டுமே இரு தரப்பும் செய்ய வேண்டும்.
மாறாக இன்னமும் மசூதி கட்டுவோம் கோயில்
கட்டுவோம் என்று யார் வெளியே நின்று போராடினாலும் அவர்கள் உச்ச நீதி மன்றத்தை
மதிக்காதவர்கள். கண்டனத்துக்கு உரியவர்கள். தண்டனைக்கு உரியவர்கள்.
வி. வைத்தியலிங்கம் 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


இந்தி மொழி திணிப்பு பிரச்சினை – மோடி அரசின் அடுத்த சறுக்கல் !

இந்தி மொழி திணிப்பு பிரச்சினை ; மோடி அரசின் அடுத்த சறுக்கல் !
வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் அரசின் திட்டங்களை வெளியிடுவதில் இந்தி மொழிக்கு முதல் இடம் கொடுக்குமாறு மத்திய அரசு அனுப்பி இருக்கும் சுற்றறிக்கை இந்தி பேசாத மாநிலங்களில் சூட்டைக் கிளப்பி இருக்கிறது.
அதற்கு இப்போது அவசியம் அவசரம் என்ன?
இந்திய அரசின் தொடர்பு மொழிக் கொள்கையில் ஏதாவது மாற்றம் வந்து விட்டதா?
கலைஞர் எதிர்த்து அறிக்கை வெளியிட முதல்வர் ஜெயலலிதாவும் கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இந்திக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப் படும் என்பதில் மற்ற மொழிகளுக்கு அது கிடையாது என்பது தெரிகிறது.
எந்த மொழிக்கும் தனி உரிமை கொடுக்க அரசியல் சட்டம் இடம் கொடுக்கவில்லை என்பது நடைமுறை என்றாலும் சட்டப்படி இந்தியும் ஆங்கிலமும் தான் ஆட்சி மொழிகளாக உள்ளன என்பதும் உண்மை.
இந்தி திணிப்பின் முதல் படியாக இது அமைந்து உள்ளது என்பதை மறைக்க முடியாது.
இந்தி பேசும் மாநிலங்கள் இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசும் மாநிலங்கள் ஆங்கிலம் மட்டுமே பயன் படும் மாநிலங்கள் என மூன்று வகை பிரிவினைகளில் இப்போது தொடர்பு மொழி பயன் பாட்டில் இருக்கிறது.
இந்த உத்தரவு இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும் என்றால் பிரச்சினை இல்லை.  மற்ற மாநிலங்களுக்கும் இது பொருந்தும் என்றால் இது திணிப்பாகவே பொருள் கொள்ளப் படும்.
இனி அடுத்தடுத்து இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற அச்சம் நியாயமானது.
எனக்கு தமிழ் தவிர இந்தி ஆங்கிலம் மராட்டி தெலுங்கு வங்காளி போன்ற எல்லா மொழிகளும் பிற மொழிகள்தான்.
எந்த ஒரு மொழிக்கும் மத்திய அரசு சிறப்பு அந்தஸ்தை கொடுக்க சட்டம் இடம் கொடுக்கவில்லை.  அப்படி கொடுப்பதாக யாராவது உரிமை கோரினால் அந்த சட்டம் திருத்தப் பட வேண்டியதே ஆகும்.
இந்திய தேசிய மொழி என்று ஒன்றும் இல்லை.   ஆட்சி மொழி மட்டுமே இந்தியும் ஆங்கிலமும் உள்ளன. இந்தி பேசாதவர்களுக்கு ஆங்கிலம் இருப்பதால் எல்லாம் சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது.
இதைக் கெடுக்க வேண்டிய அவசியம் இப்போது என்ன வந்தது. ?
முன்னேற்றம் என்ற வழியில் செல்ல வேண்டிய அரசு இந்தி திணிப்பு என்ற சுழலில் சிக்கி திசை மாற வேண்டாம்.
எதிர்ப்பு கண்டு எந்த மொழியையும் திணிக்க மாட்டோம் என்ற உறுதி மொழி கொடுத்தாலும் கூட அரசின் மீது விழுந்த இந்த குற்றச்சாட்டு ஒரு களங்கமாகவே விளங்கும்.
இந்தி பேசாத மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஒரே நாட்டில் வாழ விரும்ப மாட்டார்கள்.
அரசியல் சட்டத்தின் எட்டாம் அட்டவணையில் கண்ட மொழிகள் அனைத்திற்கும் ஆட்சி மொழி தகுதி கொடுப்பது ஒன்றே ஒற்றுமையை கட்டிக் காக்கும் ஒரே வழி.
இந்திய ஒருமைப்பாடு என்றாவது கேள்விக்குறியானால்  . அதற்கு இந்தித் திணிப்பே முக்கிய காரணமாக  இருக்கும். 
வி.வைத்தியலிங்கம்
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


தொடக்கப் பள்ளி என்பது பெரும்பாலும் தனியார் வசம இருக்கும் ஒரு வணிக மையமாகவே மாறி இருக்கிறது

வீட்டுக் கல்வி முறையை ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகல்வி துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை செய்தால் தற்போது நிலவும்  பல பிரச்சினைகளை சமாளித்து விடலாம்.
அது, ஐந்தாவது எட்டாவது வகுப்புகளில் அரசு பொது தேர்வு  நடத்தி அதில் பங்கு பெற வீட்டுக் கல்வி பெற்ற மாணவர்களை அனுமதிப்பதுதான் தற்போது பத்து மற்றும் பனிரெண்டாவது வகுப்புகளுக்கு மட்டுமே அரசு பொது தேர்வு நடத்தி வருகிறது.
எந்த பொது  தேர்வு வரை வீட்டுக் கல்வி பெற்ற மாணவர்களை அனுமதிப்பது என்பதை ஆய்வு நடத்தியும் பொது  மக்கள் கருத்து கேட்டும் அரசு மேற்கொள்ள வேண்டிய கொள்கை முடிவுகள்.
முந்தைய காலத்தில் வீட்டுக் கல்வி பெற்றவர்களை தேர்வு வைத்து ஆறாம் வகுப்பில் சேர்த்துக்  கொள்ளும் முறை இருந்தது.
அந்த முறையை ஏன் கை விட்டார்கள் என்பது ஆராயப் பட வேண்டிய ஒன்று.
இன்றைக்கு தொடக்கப் பள்ளி என்பது பெரும்பாலும் தனியார் வசம இருக்கும் ஒரு வணிக மையமாகவே மாறிஇருக்கிறது.
மெட்ரிகுலேஷன் , ஓரியண்டல் ,ஆங்கிலோ-இந்திய முறைகள் ஒழிக்கப் பட்டு சமச்சீர்கல்வி அமுலுக்கு வந்தும் இன்னும் பாகுபாடுகள் அகன்ற பாடில்லை.
எட்டாம் வகுப்பு வரை எல்லாப் பாடத்திலும் போது அறிவு எட்ட வகை செய்யும் முறையில்தான் நமது பாடத் திட்டங்கள் இருக்கின்றன.
பெரும்பாலான குடும்பங்களில் படித்து விட்டு வீட்டோடு இருப்பவர்கள் தங்கள் குடும்பத்து பிள்ளைகளுக்கு அரசு வகுத்து கொடுக்கும் பாட திட்டத்தை வீட்டிலேயே சொல்லிக் கொடுத்து போது தேர்வுக்கு தயார் செய்ய முடிந்தால் அனுமதிப்பதில் தவறு என்ன?
அப்படி படித்தவர்கள் இல்லாத பத்து குடும்பங்கள் ஒன்று சேர்ந்து அவர்களின் குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரை அமர்த்தி சொல்லிக் கொடுக்க  செய்து அவர்களை பொதுத் தேர்வில் அனுமதித்தால் என்ன தவறு?
எல் கே ஜி , யு கே ஜி  வகுப்புகளில் சேர்க்க பெற்றோர் படும் துன்பத்தை மனதில் கொண்டால், அத்தகைய பள்ளிகள் விதிக்கும் கட்டணங்களை ஏற்க இயலாத பெற்றோர் படும் இன்னல்களை கருத்தில் கொண்டால் பள்ளிக் கல்வியில் வீட்டுக் கல்வியை இணைக்கும் அவசியம் புரியும்
இப்போதிருக்கும் நிலையை அப்படியே விட்டு விட்டு ஐந்தாவது எட்டாவது வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தி அதில் வீட்டுக் கல்வி மாணவர்களை அனுமதிப்பது என்பது மிகப் பெரிய சூழ்நிலை மாற்றத்தை உருவாக்கும்.
பாடத் திட்டங்கள் அப்படியே இருக்கும். இதில் கட்டாயத் தன்மை என்பதும் இல்லை.
நான் வீட்டுக் கல்வியில்  ஐந்தாம் வகுப்பு வரை படித்து ஆசிரியரின் சான்றுடன் தேர்வு எழுதி ஆறாம் வகுப்பில் சேர்ந்தவன்.
கல்வி நிறுவனங்களின் முக்கியத்து வத்தை இது எந்த வகையிலும் குறைக்காது. தவிரவும் ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே எந்த மாணவரும் ஆழமான அறிவைப் பெற முடியும்.
ஒரு பத்து சதம் மாணவர்கள் பயனடைந்தால் பெரிதுதானே ?
மொத்தத்தில் தொடக்க கல்வியில் வீட்டுக் கல்வியை அனுமதித்து அரசு மற்றும் பெற்றோரது சுமைகளை குறைக்கும் வழிகளை ஆராய்வோமாக !


வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


மோடி அரசு –செல்லும் திசை என்ன ?

பதவியேற்புக்கு ,ராஜபக்சே, நவாஸ் ஷெரிப் அவசியமா என்ற கேள்வி எழுந்தது. முதன் முதலாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது மோடி தலைமையில்தான்.   எனவே சார்க் நாடுகளின் தலைவர்களை பங்கு பெற அழைத்து தனது நல்லெண்ணத்தை பதிவு செய்ய மோடி விரும்பியிருக்கலாம்.

ஆனால் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடரும் நிலையில், இலங்கையில் நடத்தப் பட்ட இனப்படுகொலைகள் ஐ.நா. மன்றந்தின் முன் விசாரணையில் இருக்கும் நிலையில் ,இவர்களது வரவு என்ன மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்றெல்லாம் கேள்விகள் எழும்பின.
பதவியேற்பு விழாவுக்கு வருபவர்களிடம் பிரச்சினைகளை பேச வாய்ப்பு இல்லை.  தீர்வு காணவும் முடியாது.  நவாஸ் ஷெரிப் பிடம் தாவூத் இப்ராஹிமையும் ஹபீசையும் ஒப்படையுங்கள் என்று கேட்க முடியவில்லை.தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொண்டு அவர்களுக்கு சம உரிமை கொண்ட அரசியல் தீர்வை தாருங்கள் என்று ராஜபட்சேவை கேட்க முடியவில்லை.  

இது இரண்டையும் செய்ய முடியாத பட்சத்தில் அந்த  அழைப்பு என்பது வெறும் சடங்காகவே இருந்தது.  மோடி அரசின் முதல் சறுக்கல் அந்த  நடவடிக்கை.

அமைச்சர்கள் சொத்துக் கணக்குகள் தர வேண்டும் என்றது வரவேற்கப் பட்டது . அகங்காரத்தில் குதிக்காமல் அடக்கத்தோடு ,நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஆற்றப் பட்ட குடியரசுத் தலைவர் உரையும் அதை தொடர்ந்த மோடியின் பதிலுரையும் எல்லாரோடும் இணக்கமாகப் போகத் தயார் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப் படுவது மட்டும் நின்ற பாடில்லை.   இந்திய அரசின் தலையீட்டின் பேரில் மீனவர்கள் விடுவிக்கப் படுகிறார்களே தவிர படகுகள் விடுவிக்கப் படவில்லை.

இந்திய கடற்படை எங்கே போனது என்றும் தெரியவில்லை. ஆண்டாண்டு காலமாய் இலங்கை கடற்படை மட்டும் கைது செய்து கொண்டிருக்க இந்திய கடற்படை இந்திய எல்லையில் நிறுத்தப் பட்டு நமது மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறுவது ஏன்?

முதன்முதலாக  பூடான் சென்று நமது நல்லெண்ணத்தை விதைத்து வந்திருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கர்நாடகா அமைச்சர்கள் கட்சி பேதம் பார்க்காமல் அமைக்க கூடாது என்று குரல் கொடுக்க தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட தேவை இல்லை என்கிறார் நமது முதல்வர். துறை தாண்டி கருத்து சொல்லாதீர்கள் என்ற கட்டுப்பாடு மத்திய அமைச்சர்களுக்கு மோடி அரசு விதிக்க வேண்டும். கலைஞர் அனுப்பிய வாழ்த்திற்கு மறக்காமல் நன்றி சொல்லி இருக்கிறார். சரியான திசையில் செல்வது போல் தோன்றினாலும் உறுதிப் படுத்த இன்னும் சில மாதங்கள் ஆகும்.

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


அகில இந்திக் கட்சிகள்

காங்கிரசு , பாரதீய ஜனதா ,ஜனதா தளம் ( எஸ் ) ,கம்யுனிஸ்டு , போன்ற எந்த அகில இந்தியக் கட்சியாக இருந்தாலும் சரி ,அது இந்தி தெரிந்த வர்களுக்கான கட்சிகளாகதான் இருக்கின்றனவே தவிர , மாநில மொழிகள் மட்டும் தெரிந்தவர்களுக்கான கட்சிகளாக இல்லை.
தாய்மொழி தவிர்த்த மற்றும ஒரு மொழியை கற்றால் தான் , அது இந்தியோ அல்லது ஆங்கிலமோ , இந்தியனாக வாழ முடியும் என்பது கொடுமை அல்லவா ? ஆங்கிலம் மட்டும் இல்லையென்றால் இந்தி பேசாத மக்கள் தவித்துப் போவார்கள்.
இந்து, டைம்ஸ் ஆப இந்தியா , ஹிந்துஸ்தான் டைம்ஸ் , டெக்கான் , க்ராநிகில் , போன்ற ஆங்கில பத்திரிக்கைகள் மட்டும் இல்லையென்றால் இந்தி பேசாத மக்கள் வடநாட்டு செய்திகளையே ஆராய முடியாது.   தினமணி, தினத்தந்தி ,தினகரன் போன்ற நாளிதழ்கள் தரும் அரைகுறை செய்திகளையே நம்பி இருக்கவேண்டிய நிலை ஏற்படும். இந்த நாளிதழ்கள் செய்யும் மொழிபெயர்ப்பு வேலையைத்தான் அகில இந்திய கட்சிகள் ,அமைப்புகள் அனைத்தும் செய்ய வேண்டும் என்கிறேன்.
எத்தனை அகில இந்தியக் கட்சிகளில் இந்தியோ ஆங்கிலமோ தெரியாத தாய் மொழி மட்டுமே தெரிந்த ,இந்தியர்கள் அகில இந்திய அளவில் தெரிந்த தலைவர்களாக, இருக்கிறார்கள்.    ஓரிருவர் இருந்தால் அரிது.   காமராசர் இருந்தார் என்றால் அவரும் ஓரளவு ஆங்கிலத்தை கற்றுக் கொண்டதனால் அது முடிந்தது.     விதிவிலக்குகள் விதிகள் ஆக முடியாது .
கர்நாடக, ஆந்திர ,கேரளா , மராட்டிய, வங்காள மாநிலத்தவர்கள் கூட இந்தியை வைத்துக் கொண்டுதான் சமாளிக்கிறார்கள் என்றால் அவர்களது தாய் மொழிகளில் சமஸ்க்ரிதம் கலப்பு அதிகம் என்பதால் இந்தியை எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது.   அவர்களிலும் கூட தாய் மொழி மட்டுமே தெரிந்த அகில இந்திய தலைவர்களை அடையாளம் காண முடியாது.
நான் பாஜகவில் இருந்தபோது அகில இந்திய விவசாய அணி கூட்டங்களுக்குப் போனபோது , எல்லாரும் இந்தியிலேயே பேசினார்கள்.  ஒன்றும் புரியவில்லை.   அப்போது அகில இந்திய தலைவராக இருந்த ஜனா. கிருஷ்ணமுர்த்தி , தலையிட்டு , தமிழ் நாட்டில் இருந்து வைத்தியலிங்கம் வந்திருக்கிறார் எனவே ஆங்கிலத்திலும் பேசுங்கள் என்று சொல்லிய பிறகும் அங்கே மொழி பெயர்த்து சொல்ல ஆளில்லை.    பயணம் வீணானதுதான் மிச்சம்.
பாராளுமன்றதிலேயும் அதுதான் நடக்கிறது.     அரசியல் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் கண்ட மொழிகள் அனைத்தும் இந்தியர்களின் மொழிகள் தானே.  அவர்களுக்கு தங்கள் தாய் மொழியில் தங்கள் நாட்டு பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தாலும் சரி பேச முடியாது, அதற்கு முன்பே ஒப்புதல் பெறவேண்டும், மொழி பெயர்க்க அவகாசம் வேண்டும் என்றெல்லாம் விதிகள் இருந்தால் , நினைத்ததை பேச முடியாமல் போனால் இது என் நாடு என்ற உணர்வு எப்படி வரும்?
என்னை வைத்துக்கொண்டு நாலு நண்பர்கள் மலையாளத்திலோ தெலுங்கிலோ கன்னடத்திலோ உருதிலோ பேசினால் நான் அன்னியர் மத்தியில் இருப்பதாக உணர்கிறேன். அது என் தவறா?    அவர்கள் தவறா?
எனக்கு பஞ்சாபி ,உருது, இந்தி மராட்டி, வங்காளி ,ஓடியா ,தெலுகு, கன்னடம்,   எல்லாமே ஒன்றுதான் அதாவது அன்னியம்தான்.      பேசினால் புரியாது ஆங்கிலம் கற்பிக்கப் பட்டதால் விதிவிலக்கு.
தாய்மொழி தமிழேகூட சொல்லிக்கொடுத்தால்தான் எழுத படிக்க  தெரியும்.   ஆனால் சொல்லிக் கொடுக்காமலே என் தாய் தந்தையருடன் உறவாடியே என் தாய் மொழியை பேச முடியும்.
எல்லா மாநிலங்களிலும் அகில இந்திய கட்சிகள் செல்வாக்கு இழந்து வருவதற்கு முக்கிய காரணம் மொழிதான்.  இந்தித் தலைவர்கள்தான்.  இவர்களால் நிர்வகிக்க படுகிற கட்சிகளில் இந்தி தெரியாதவர்களுக்கு இடம் இல்லாததால் ஆங்கிலம் தெரிந்த மக்கள் செல்வாக்கு இல்லாத நபர்கள் முக்கிய பொறுப்புகளுக்கு வந்து விடுகிறார்கள்.
எண்ணங்களை வெளிப்படுத்த மொழியை தவிர வேறு சாதனங்கள் இல்லை.   அதை இரவல் வாங்கி வெளிப்படுத்த முடியாது.
ஒற்றுமையைபற்றி யார் பேசினாலும் கேட்கிறவர்களுக்கு புரிய வேண்டும் என்ற உணர்வு வண்டும்.
பாரதிய ஜனதா , காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் , சி.பி.ஐ , சி.பி.ஐ (எம்) ஆகிய ஆறு கட்சிகள்தான் அகில இந்திய கட்சிகள். மாயாவதி, ராஜ்நாத் சிங் , சோனியா, சரத் பவார், சுதாகர் ரெட்டி , பிரகாஷ் கரத் தலைவர்கள். மராத்தி பேசும் பவார் , தெலுகு பேசும் ரெட்டி உள்பட அனைவருமே இந்தி அல்லது ஆங்கிலம் மூலம்தான் நிர்வாகம் செய்கிறார்கள்.   இவர்களோடு தொடர்பு கொள்ளும் மற்ற மொழி மட்டும் தெரிந்தோர் கருத்து பரிமாற்றம் செய்ய முடியாது.
இந்தியோ ஆங்கிலமோ தெரிந்தால்தான் அகில இந்தியக் கட்சிகளில் நிர்வாகிகளாக வர முடியும் செயல்பட முடியும் என்ற நிலைமை நீடிக்கும் வரை அகில இந்தியக் கட்சிகள் அகில இந்திக் கட்சிகளாகத் தான் காட்சி தரும்.  மாநிலங்களில் மெல்ல மெல்ல மறையும்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

+91-91766-46041

பொய்த்தது காவிரியா ஒருமைப்பாடா ? குற்றவாளி யார் ?

இந்த ஆண்டும் காவிரியில் ஜூன் மாதம் தண்ணீர் வராது என்று தெரிந்து விட்டது.   தெரியாதது இந்த நாட்டில் சட்டம் ஆட்சி செய்கிறதா இல்லையா என்பதுதான்.

பாகிஸ்தான் ,சீனா போன்ற அண்டை நாடுகளுடன் நாம் நதி நீரை பகிர்ந்து கொள்கிறோம்.  ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட  பெரிய பிரச்சினைகளை நாம் எதிர் கொண்டதில்லை .    நதி நீர் உற்பத்தி ஆகும் நாட்டிற்கு என்றும் வெளியேறும் நாட்டிற்கு என்றும் உலக அளவில் உடன்படிக்கைகள்  நடைமுறையில் இருக்கின்றன.

மாநிலங்களுக்கு இடையிலும் நதி நீர் வழக்குகளை தீர்த்து வைக்க தனி சட்டமும் உள்ளது.   அந்த நீதிமன்றமும் பல ஆண்டுகள் விசாரித்து ,நிபுணர் குழுக்களை அமைத்து இரு தரப்பையும் தீர விசாரித்து இறுதி தீர்ப்பையும் வெளியிட்டு அதை அரசிதழிலும் வெளியிட்டு விட்டது.   அதை அமுல்படுத்துவதற்கான ஆணையம் அமைக்க வேண்டியதுதான் பாக்கி.

அதை தட்டி கழிக்க மத்திய அரசுக்கு தயக்கம்  ஏன் ?

இறுதி தீர்ப்பில் இரு தரப்புக்குமே திருப்தி இருக்கிறதா இல்லையா என்பது கேள்வியல்ல.   ஏனென்றால் இரு தரப்பும் சம்மதித்தால் தான் தீர்ப்பை அமுல் படுத்துவோம் என்றால் நாட்டில் எந்த தீர்ப்பும் அமுல் படுத்தவே முடியாது.

தண்ணீர் இருந்தால்தான் தருவோம் என்று கர்நாடகா  சொன்னால் தீர்ப்பு எதற்கு ?   நீர் வரத்து காலத்தில் எந்த தீர்ப்பும் தேவையில்லாமலே நீர் வந்து விடுமே? வெள்ளக் காலத்தில் தண்ணீரை கர்நாடகம் தக்க வைத்துக்கொள்ள முடியுமா ?   தமிழகம் என்ன கழிவு நீர் குட்டையா?

தீர்ப்பை அமுல்படுத்த   மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காலம் கடுதுவது எதற்காக ? வறட்சி காலத்தில் எப்படி பங்கிட்டுக் கொள்வது என்பது பற்றியும் இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது .  எனவே நேரடியாக மேலாண்மை வாரியம் அமைக்காமல் தற்காலிக காவிரி நீர் இறுதி தீர்ப்பு அமலாக்க திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்திருப்பது பிரச்சினையை மேலும் சிக்கலாகும் என்பது நிச்சயம். ஏனென்றால் எந்த உத்தரவையும் இடும் அதிகாரம் இந்த கண் காணிப்பு குழுவிற்கு இருக்காது.  அது மீண்டும் உச்ச நீதி மன்றதைதான் நாட முடியும். மத்திய அரசின் ஊசலாட்ட மனப பான்மையை தான் இது காட்டுகிறது.

கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால்தான் இந்த ஊசலாட்டம் என்ற பழிக்கு மத்திய அரசு ஆளாவதை தவிர்க்க முடியாது.  

தமிழக அரசு கடிதம் எழுத முடியும். கோர்ட்டுக்கு போக முடியும்.   தீர்த்து வைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே இருக்கிறது.     தனது கடமையில் இருந்து மத்திய அரசு தவறினால் ,, தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப் பட்டால் ,  நாட்டில் சட்ட ஒழுங்கு கெட்டால், மத்திய அரசே முழு பொறுப்பேற்க நேரிடும்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


கச்சதீவுப் பகுதியில் இலங்கை போர்க்கப்பல். யாரை மிரட்டுகிறார்கள் ?

கச்சதீவுப் பிரச்சினையில் இந்திய அரசின் அணுகுமுறை தமிழர்களுக்கு எதிராகவே இருந்து வருகிறது.
பாராளுமன்ற அனுமதி பெறாமல் கச்சதீவை இலங்கையிடம் ஒப்படைத்ததில் தொடங்கி ஐநுருக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது வரை இந்திய அரசு இதுவரை தமிழ் மீனவர்களை இந்தியர்களாகவே பார்க்கவில்லை.
சோனியா ,ராகுல் அதிகாரத்தில் இருக்கும் வரை இலங்கை அரசு  தமிழர்களை அச்சுறுத்து வதை இந்திய அரசு எந்த விதத்திலும் கண்டு கொள்ளாது என்பதே உண்மை .  
கச்சதீவுப் பிரச்சினை உச்ச நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அங்கே நீதி கிடைத்தால்தான் உண்டு என்பதே நிலைமை.
கச்சத்தீவு மீட்கப் பட்டால்தான் கடல் எல்லை மாறும். தமிழ் மீனவர்களின் மீன்பிடி உரிமை அந்தப் பகுதியில் நிலை நாட்டப் படும். இலங்கை அத்து மீறுவது தடுக்கப் படும்.        
இலங்கை நட்பு நாடு என்று இந்தியா சொல்லி வருகிறது. பிறகு ஏன் போர்க்கப்பலை அனுப்பி மிரட்ட வேண்டும்?  
இலங்கை தன்னை மிரட்டவில்லை என்று இந்தியா நினைக்கிறது.
தமிழர்களை இலங்கை மிரட்டி வைப்பதில் இந்தியாவுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை.
இப்படி தன் குடி மக்களின் உரிமைகளை விட உணர்வுகளை விட பக்கத்துக்கு நாட்டின் உணர்வுதான் முக்கியம் என்று நினைக்கிற நாடு உலகத்தில் வேறு எங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
இந்தியாவில் இணைந்திருப்பதில் தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதா? வெட்கப் படுவதா?
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

தாய்க்கு சிலை –தனயனுக்கு கயிறா

எல்லாருக்கும் தொடக்க கல்வி தாய்மொழியில்
தமிழர்களுக்கு மட்டும் ஆங்கிலத்தில் என்றால்
தமிழர்களின் தாய்மொழி ஆங்கிலமாய் மாறுமானால்
தமிழர் என்ற பெயரே நிலைக்காதே
தனித்தியங்கும் தனிச்சிறப்பு இந்திய மொழிகளில்
தமிழுக்கு மட்டுமே என்றால் ,அதை நீடிக்க விடாமல்
எத்தனை சதி ,எத்தனை திட்டங்கள்  எல்லாம் மறைமுகமாக
ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்துக்கும் –ஜெயலலிதாவின்
ஆங்கிலத்தில் தொடக்க கல்வி திட்டத்துக்கும் –நோக்கம்
ஒன்றுதான் –அது தமிழரை அடிமை படுத்துவது – முன்னது
தொழில் வழி பின்னது கல்வி வழி
வசதி படைத்தோருக்கு மட்டுமே கிடைப்பதை 
ஆங்கிலவழி தொடக்க கல்வி முறையை
அனைவருக்கும் கிடைக்க செய்வது எப்படி தவறாகும்
நியாயமான கேள்விதான்- அதனால்தான் சொல்கிறோம்
வேற்று மொழியை தாய்மொழியாக கொண்டோர் தவிர –மற்ற
அனைவர்க்கும் தமிழகத்தில் தொடக்க கல்வி தமிழிலேதான் .
அது எத்தகைய பாடதிட்டமானாலும் சரி
தமிழ்வழிக் கல்வியை குழி தோண்டி புதைத்துவிட்டு
தமிழ்த் தாய்க்கு சிலை வைத்தால் -உலகம் சிரிக்கும்
அறிவற்ற இனம் இவரென்று காரி உமிழும் –எனவே
மாற்ற வேண்டியது தமிழ்நாட்டில் அனைவர்க்கும்
தமிழ் வழி தொடக்க கல்வியே தவிர
ஆங்கிலவழி தொடக்க கல்வியல்ல –தமிழனை
ஆங்கிலேயனாக மாற்றும் முயற்சியை முறியடிப்போம்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041