Home Blog Page 13

இட ஒதுக்கீட்டை புறக்கணிக்கும் ஆசிரியர் நியமன வாரியம்! பாமக குற்றச்சாட்டு?

இட ஒதுக்கீட்டு கொள்கையை அரசு அமைப்புகளே குழி தோண்டி புதைக்கின்றன என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினால் அது அரசியல். கூட்டணி கட்சியான பாமக  வே குற்றம் சாட்டினால் அது உண்மைதானே.

மருத்துவர் ராமதாஸ் இந்த முறைகேட்டை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமூக நீதிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் துரோகம் செய்கிறது என்பது அவரது குற்றச்சாட்டு.

அதிகாரத்தில் உள்ள செல்வாக்கு படைத்த முற்பட்டோர் செய்யும் ஆரோக்கியத் தனம இது.

வழக்கமாக செய்யும் முறைகேடு என்றாலும் எத்தனை முறை நீதிமன்றத்தின் கையால் குட்டு வாங்கினாலும் தங்கள் தவறுகளை அவர்கள் திருத்திக் கொள்வதே இல்லை.

பொதுப் பிரிவில் பிற்பட்ட மாணவர்கள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்  பட்டால் அவர்களை ஒதுக்கி விட்டுத்தான் 69% இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை தேர்ந்து எடுக்க வேண்டும். ஆனால் அவர்களையும் இட ஒதுக்கீட்டு பிரிவினராக கணக்கு காட்டி மோசடி செய்கிறார்கள்.

இந்த முறைகேட்டை செய்யும் அமைப்பு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எனவே இதை களைய வேண்டிய கடமை அதிமுக அரசுக்குத்தான் இருக்கிறது.

பாஜக கூட்டணியில் சேர்ந்ததால் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அதிமுக கரைந்து விட்டதா?

கூட்டணி வேண்டாம் என பொன் ராதாகிருஷ்ணன் சொன்னதின் ரகசியம்?

இன்று மறைமுகமாக தமிழகத்தை மத்திய பாஜகதான் ஆண்டு வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.

கூட்டணி வைத்து உள்ளாட்சி தேர்தலை சந்தித்து எதிர் பார்த்த வெற்றியை அடையவில்லை. தனித்து நின்றால் என்ன கிடைக்குமோ அதுதான் கூட்டணி வைத்தும் பாஜக வுக்கு கிடைத்தது.

அதுவும் மற்ற கூட்டணி கட்சிகளை வஞ்சித்து ஆளும் கட்சியை மிரட்டி அதிக இடங்களை பெற்றும் இந்த நிலை.  

அதனால் தான் நேற்று பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளிக்கும்போது பாஜக தனித்தே உள்ளாட்சி தேர்தலில் போட்டி  இட்டிருக்கலாம் என்றார். அது அதிமுகவுடன் இருக்கும் அதிருப்தியா அல்லது கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு இல்லையா என்பது பற்றி எல்லாம் எந்த தெளிவும் இல்லை.

ஆனால் அதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது பொன்னார் கூறுவது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது என்று தனது  அதிருப்தியை தெரிவித்தார்.

தேமுதிகவிற்கும் அதிமுக பற்றி அதிருப்தி இருக்க்கிறது. விழுப்புரம் மாவட்ட தேமுதிக செயலாளர் வெங்கடேசன் அதிமுக கூட்டணி ஒருங்கிணைப்பை சரியாக செய்யவில்லை. 27 மாவட்டங்களில் தேமுதிகவினர் வஞ்சிக்கப்பட்டோம். தேவைப்பாட்டால் தனித்து நின்று ஒட்டு வங்கியை நிரூபிப்போம் என்றார்.                                                                                                                                                    கூட்டணி சேர்ந்தால் வாக்குகளை இழப்பதால் பாஜக தனியாக நிற்பதுபோல் பாவனை செய்து தங்கள் மதவாத வாக்கு வங்கியை பலப்படுத்துவதுடன் பாஜகவின் மறைமுக ஆசியோடு அதிமுக கூட்டணியை வெற்றி பெறச்செய்து விட்டால் தாங்கள் மறைமுகமாக ஆளலாம் என்று பாஜக கணக்குப்போட்டு வேலை செய்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது.

ஆனால் என்ன செய்வது? என்ன வேடம் போட்டு வந்தாலும் அடையாளம் கண்டு கொள்கிறார்களே தமிழ் மக்கள்!

சீமானை கைது செய்ய முடியுமா? கே எஸ் அழகிரியின் கோரிக்கையில் வலு இல்லை?

நெல்லை  கண்ணன் கைதை கண்டிக்க வந்த மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஏன் சீமானை கைது செய்யவில்லை என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

வன்மத்தை தவிர இந்த கேள்வியில் எந்த பொருளும் இல்லை.

ராஜீவ் காந்தி கொலையில் விசாரணை முடிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் புதிதாக குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்க என்ன முகாந்திரம் இருக்கிறது?

சீமான் நாங்கள்தான் ராஜீவ் காந்தியை கொன்று புதைத்தோம் என்று பேசினாரா என்பது ஒரு புறம் இருக்கட்டும். அப்படியே பேசியிருந்தாலும் அவரை ராஜீவ் கொலை குற்றவாளி என்று கைது செய்து தண்டிக்க முடியுமா?

ராஜீவ் செய்த செயல்களின் மீதான வெறுப்பின் சீமான் அப்படி பேசினார் என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமே தவிர கொலை குற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கு அவரது பேச்சு மட்டுமே போதுமா என்றால் போதாது என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும்.

இப்படி கேள்வி கேட்பதின் மூலமாக காங்கிரஸ் கட்சி தன்னை மீண்டும் மீண்டும் குற்றவாளிக் கூண்டில் தன்னையே நிறுத்திக் கொள்கிறது.

நெல்லை கண்ணனை கைது செய்திருப்பதற்கும் ராஜீவ் கொலைக்கும் என்ன தொடர்பு.?

கே எஸ் அழகிரி போன்றவர்கள் காங்கிரசை வளர்க்க இன்னும் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க முடியாத சக்தியானார் தினகரன்?

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தினகரனின் அமமுக 94 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றி இருக்கிறது.

முடிந்து விட்டது என்று சொல்லப் பட்ட தினகரனின் அரசியல் துளிர்த்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

திமுக -அதிமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்துதான் போட்டியிட்டன. அதில்  திமுக பெருவாரியான இடங்களை பெற்று அதிமுகவை வென்று விட்டது. இந்த வெற்றியில் அமமுக வின் பங்கும் ஓரளவிற்கு இருக்கும் போல்தான் தெரிகிறது.

தினகரனுக்கு கூட்டணி பலம் இல்லை. எப்படி இதை சாதிக்க முடிந்தது?

பாமக தேமுதிக, பாஜக, போன்ற அதிமுக கூட்டணி கட்சிகளும் காங்கிரஸ், விசி, இடது சாரி கம்யுனிஸ்டுகள்  மதிமுக போன்ற திமுக கூட்டணி  கட்சிகளும் பெற்ற வெற்றியை தனித்து நின்று பெற்றதால் தினகரன் கூடுதல் மதிப்பெண் பெறுகிறார்.

அதாவது அதிமுகவை எதிர்காலத்தில் உடைக்கும் வல்லமையை இன்னமும் தக்க  வைத்துக் கொண்டிருக்கிறார் தினகரன் என்றுதான் சொல்ல வேண்டும்.

வெற்றி தோல்வி என்பதை தவிர்த்து தமிழக அரசியலில் தான் தவிர்க்க முடியாத சக்தி என்பதை தினகரன் நிருபித்து விட்டார் .

அதாவது வெல்லவும் முடியும் எவரும் வெல்வதை தடுக்கவும் முடியும்.

பணபலத்தை முறியடித்த மக்கள் சக்தி? உள்ளாட்சி தேர்தல் தரும் செய்தி?

பெரிய சட்ட போராட்டத்திற்குப் பிறகு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் திமுக அணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது.

ஆட்சியில் இருந்தும் கூட தேர்தல் கமிஷன் அனுசரணை இருந்தும் கூட பணத்தை அள்ளி இறைத்தும் கூட அதிமுக அணியினால் முழு வெற்றியை பெற முடியவில்லை.

அதிமுக வாக்கிற்கு ஆயிரம் கொடுத்தது. திமுகவும் ஐநூறு கொடுத்ததாக சொல்கிறார்கள். உண்மை என்ற வைத்துக்  கொண்டால் கூட அதிமுகவிடம் அதிகம் பணம் வாங்கினாலும் திமுக குறைவாக கொடுத்தாலும் அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்றால் என்ன பொருள்? பணம் மட்டுமே காரணி அல்ல. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களோ              அவர்களுக்குத்தான் வாக்கு.

அதுதான் ஜனநாயகத்தின் வெற்றி.

பல விசித்திரங்களை இந்த தேர்தல் முடிவுகளில் பார்க்க முடிகிறது.

இரு மனைவிகளையும் ஒருவர் தேர்தலில் நிறுத்தி வைத்து வெற்றி பெற வைக்கிறார்.  ஒரு 79  வயது மூதாட்டியும் 21 வயது மாணவியும் சுயேட்சையாக நின்று வெற்று பெறுகிறார்கள். சம வாக்குகள் வாங்கியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் வெற்றி பெறுகிறார். எதிர்காலம் இனி இல்லை என்ற தினகரன் கட்சி  94 ஒன்றிய குழு இடங்களில் வெற்றி பெற்றதுடன் பல இடங்களில் அதிமுகவின் வெற்றியை தடுத்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்து களம் கண்டு ஒரு இடத்தில வென்று கணக்கை தொடங்கி இருக்கிறது.

அதிமுக பெற்ற வெற்றிகளுக்கு பண பலம் காரணம் என்றால் திமுக பெற்ற வெற்றிகளுக்கு பண பலம் காரணம் யாருமே சொல்ல வில்லையே ஏன்?

இனி நகர்ப புற உள்ளாட்சி தேர்தல் களை நடத்த அதிமுக அரசு முன்வருமா என்றது சந்தேகமே.

நீதிமன்றம் தலையிட்டு ஆணையிட்டால் வேறு வழியின்றி ஒருவேளை நடத்தலாம்.    அதற்கும் ஏதாவது காரணங்களை தேடிக் கொண்டிருப்பார்கள்.

இந்த தேர்தலில் கடந்த  ஒருமாதமாக அரசு யந்திரம் முழுவதுமாக முடங்கிவிட்டது.    எல்லாம் தேர்தல் வேலை. அமைச்சர்கள் எல்லாரும் தேர்தல் வேலை பார்த்துக்  கொண்டிருந்தால் எப்படி அரசு இயங்கும்?

இனி நகர்ப்புற தேர்தல் விடுபட்ட ஒன்பது மாவட்ட ஊரக தேர்தல் என்று வருடம் முழுதும் தேர்தல் நடத்திக் கொண்டே இருப்பார்களா?

ஒன்று மட்டும் உறுதி. பணம் விளையாட வில்லை என்று சொல்ல முடியாதுதான். ஆனால் இனி பணத்தை இறைத்து மட்டும் வெற்றி பெற்று விடலாம் என்ற நிலையை இந்த தேர்தலில் மக்கள் மாற்றி விட்டார்கள்.

அந்த வகையில் மக்கள் சக்திக்கு வெற்றிதான்.

“சோலிய முடிங்க” நெல்லை கண்ணன் ஏன் சொன்னார்?

நெல்லையில் நடந்த குடி உரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன் கடுமையாக பிரதமர் மோடியையும் அமித் ஷாவையும் கண்டித்து பேசியிருக்கிறார்.

அவர் அவர்களை மட்டுமா பேசினார். நமது முதல் அமைச்சரையும் ஒ பி எஸ் யும் கூட விட்டு வைக்கவில்லை.

75 வயதான கண்ணன் தமிழ்க்கடல் என்று போற்றப் படுபவர். சிறந்த பேச்சாளர். சரளமாக பேசுவார். அதுவே தொழில். நெல்லைத் தமிழ் அவரது சிறப்பு.

காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்.

குடி உரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேச வந்தவர் மோடியையும் அமித்  ஷாவையும் தாக்கிப் பேசினார். அப்போது பேசிய சோலிய முடிங்க என்ற சொல்லுக்கு நெல்லையில் தீர்த்துக் கட்டுங்க, கொலை செய்யுங்க என்று பொருள் என பாஜகவும் போராட்டம் ஆரம்பித்தது.

கண்ணன் வீட்டு முன்பு ஆர்பாட்டம் நடத்த காவல் துறை துணை செய்தது. மருத்துவ மனை கொண்டு செல்ல ஆட்சேபித்தார்கள். வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நான் அப்படி பேசவில்லை. இறைவனிடம் முறையிடுங்கள். அவன் பார்த்துக் கொள்வான் என்றுதான் பேசினேன் என்று விளக்கம் சொன்னார் கண்ணன். எந்த பொருளில் பேசினார் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறதா என்பது இனிதான் தெரியும் .

எங்கே இப்படி என்று கேட்டால் சும்மா ஒரு சோலியா என்று பதில் சொல்வது சோலிக்கு வேலை என்று பொருள் என்று தெரிகிறது

சோலிய முடிக்க வேண்டும் என்றால் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்று அர்த்தம். ஆக சோலிக்கு பொருள் இடத்துக்கும் ஆளுக்கும் தகுந்தபடி மாறுபடும்.

அரசியலில் சோலியை முடி என்றால் அரசியலில் அவருக்கு  இருக்கும் இடத்தை காலி செய் என்றுதான் பொருள். அதாவது வெற்றி கொள் என்று சொல்லலாம்.

ஆனால் ஒரு கேள்வி எழுகிறது. கோர்ட்டாவது மயிராவது என்று பேசிய எச் ராஜா மீது என்ன நடவடிக்கை எடுத்தது போலிஸ்?.

ஊடகங்களில் பணி புரியும் பெண்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளமலா வேலை செய்கிறார்கள் என்று பேசிய எஸ் வி சேகர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது போலிஸ்.?

வைரமுத்துவின் தலையை வெட்டலாமா என்று கேட்டவர் நயினார் நாகேந்திரன்.  என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? 

நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம் என்றார் ஒரு ஜீயர். நடவடிக்கை இருந்ததா? 

நிறைய நல்ல விபரங்களை பேசினார் கண்ணன். ஆனால் அவரது பேச்சு நடை கொச்சைதனமாக அமைந்தது துயரம்.

ஒருவருடைய பேச்சை முழுவதுமாக பார்த்துதான் எடை போட வேண்டுமே தவிர அங்கொன்றும் இங்கொன்றுமாக எடை போடக்கூடாது.

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலில் வைக்கப்பட்டு பிணை மறுக்கப்பட்டிருக்கிறது. மேல் நீதிமன்றம் தான் பிணை தரவேண்டும்.

பேசியது குற்றம் என்றால் அது பிணையில் வரத் தக்க குற்றம் தான்.

பாஜகவுக்கு பயந்து நடவடிக்கை தீவிரமாக எடுப்பது போல் இருக்கிறது அதிமுக அரசின் நடவடிக்கை.

அது சரியல்ல. அரசுக்கு கெட்ட பெயர் தான் கூடும்.

பொதுவாழ்வில் நாகரிகத்தை கடைப்பிடிப்பது எல்லாருடைய கடமை.

அதற்காக நெல்லை கண்ணனை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுப்பது அதைவிட தவறு.   

ஓ அவளா நீ? தேவதாசி முறையை ஆதரித்த சின்மயி தாயார்?

சின்மயி தாயார் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு தேவதாசி முறையை ஆதரித்து பேசியிருக்கிறார்.

இணையத்தில் உலவும் அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பது ஆவது;

தேவதாசி முறை என்பது இந்த பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது மிகச் சிறந்த சிஸ்டம். அதை சிதைத்ததால் நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன்.“

சின்மயி தன் தாயார் கருத்தோடு உடன்படவில்லையாம். இவரைக் கேட்காமல் பேசிவீட்டாரோ?

எவ்வளவு அனுபவம் இருந்தால் சின்மயி தாயார் தன் கருத்தை ஆழமாக பதிவிட்டிருப்பார்.

தேவதாசி முறையை ஒழித்துக் கட்டியதால் பெரியார் மீது அவருக்கு இருக்கும் கோபம் நியாயமாகத்தான் தெரிகிறது.

எங்க அம்மா கருத்துக்களால என்னை தேவதாசி ஆகு என்று சொல்வது நியாயமும் இல்லை என்று வேறு சின்மயி கூறுகிறார்.

அம்மாவின் கருத்து பெண்ணிற்கு இத்தனை நாள் தெரியாமலா இருந்திருக்கும் ?

ஆனாலும் அம்மா கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறாராம். அது ஏன் ?

அம்மா கருத்துக்கு இவர் எப்படி மன்னிப்பு கேட்க முடியும்?

தேவதாஸ் என்பது ஆண்பால். இறைவனின் அடிமை என்று பொருள்.

தேவதாசி என்பது பெண்பால். இறைவனின் அடிமை என்றுதான் பொருள்

அது எப்படி ஆண்பாலில் சொன்னால் தப்பில்லை. பெண்பாலில் சொன்னால் தப்பா?

இறைவனுக்கு தன்னையே ஒப்புக் கொடுத்த தேவதாஸ் ஆண் பக்தன். அதையே ஓர் பெண் தன்னை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தால் தேவதாசி. ஆனால் ஒழுக்கக் கேடானவளா?

எனவே இறைவனுக்கு தன்னையே ஒப்புக் கொடுத்த ஆண்டாள் வழிபடத்தக்க இடத்தில் தானே இருந்திருக்க வேண்டும். அந்த பொருளில் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்ட தேவதாசி மரபினர் என்று சொன்னதை மேற்கோள் காட்டியதையே  பொருத்துக் கொள்ள முடியாமல் வைரமுத்துவின் மீது அவதூறு பரப்புகிறீர்களே அதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

பின்னால் அந்த சிஸ்டம் பாழ்பட்டுப் போனது என்றால் அதற்கும் எல்லாரும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

குன்றின் மீது விழும் எச்சங்களால் குன்று அழுக்குப்பட்டுப் போவதில்லை.

அதைப்போல் தான் எத்தனை அவதூறுகளை நீங்கள் திட்டமிட்டுப் பரப்பினாலும் குன்றைப்போல் நிமிர்ந்து நிற்கிறார் வைரமுத்து.

காவல் துறை புகார் கூட செய்யாமல் பார்ப்பன ஊடக பலம் இருப்பதால் சின்மயி உள் நோக்கத்துடன் புகார் பரப்புகிறார் என்றுதான் எண்ணினோம். ஏன் இப்படியெல்லாம் பிதற்றுகிறார் என்று காரணம் தெரியாமல் இருந்தது. இப்போதுதான் புரிகிறது அவரின் தாயாரின் கூற்றில் இருந்து.

ஓ அவளா நீ?

பள்ளிக்கல்வித் துறையை இயக்குவது செங்கோட்டையனா? மோடியின் பிரதிநிதிகளா?

மாட்டுப்பொங்கல் அன்று விடுமுறை நாள் என்றாலும் அன்று பிரதமர் மோடி மாணவர்களுக்கு உரையாற்றுகிறார் என்பதற்காக ஜனவரி 16ம் தேதி ஒன்பது முதல் ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறையின் இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்புகிறார்.

அப்படி ஒரு சுற்றறிக்கை அனுப்பவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் சொல்கிறார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மானவர்கள் விரும்பினால் வரலாம் வரவேண்டும் என்று கட்டாயம் இல்லை என்கிறார். அதாவது முதல் அமைச்சருக்கு தெரிந்தது அமைச்சருக்கு தெரியவில்லை. டெல்லி நேரடியாக முதல் அமைச்சாருக்கு உத்தரவிட்டதா? துறை அமைச்சருக்கு மரியாதை அவ்வளவுதானா?

அடிமை சேவகம் செய்வதில் ஏன் இப்படி தள்ளாட்டம்.?

எதிர்ப்பு வலுத்ததும் இப்போது அன்று விடுமுறைதான் என்கிறார்கள். சுற்றறிக்கையில் விலாவாரியாக மின் தடை ஏற்படா வண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றெல்லாம் தாக்கீது கொடுத்தவர்கள் இப்போது பின் வாங்குகிறார்கள்.

வெளியே வந்திருப்பது செங்கோட்டையனுக்கும் முதல் அமைச்சருக்கும் இருக்கும் இடைவெளி. அது பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வீட்டு வாசலில் கோலம் போட்டால் கைதா?

எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது மோடிக்கு சேவகம் செய்வதில் யார் அதிகம் பெரியவர் என்ற போட்டி ?

குடி உரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு மூன்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.

எல்லாம் மக்களை பிரித்து ஆளுகிறது, பாரபட்சம் காட்டுகிறது பிரிவினைக்கு வித்திடுகிறது  என்று பல காரணங்களுக்கு ஆக எல்லா கட்சிகளும் பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சி பிரச்சாரம் ஆக சென்னையில்  பெசன்ட் நகர் பகுதியில் சில பெண்கள் தங்கள் வீட்டு முன் கோலங்கள் போட்டார்கள். அதில் குடிஉரிமை திருத்த சட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். இது எப்படி சட்ட ஒழுங்கை  கெடுப்பதாய் அமையும் என்று தெரியவில்லை? .

அவர்களை காவல் துறை கைது செய்திருக்கிறது.

இதைவிட கொடுமை அமைச்சர் கடம்பூர் ராஜு இதை நியாயப்படுத்தி இருப்பது.    சட்ட ஒழுங்க கெடுமாம்!

இன்றைக்கு ஸ்டாலின் வீட்டு வாசலில்  கோலம போட்டு எதிர்ப்பை பதிவு  செய்திருக்கிறார்கள். போய் கைது செய்ய வேண்டியதுதானே?

புது போராட்ட வழியை அதிமுக ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதுதான் கோலம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்வது.

காவல்துறையின் விசுவாசத்துக்கு எல்லையே இல்லையா?

மதச் சண்டைகள் தீர வழி காட்டிய வள்ளல் வள்ளலார்!!

மதம் வேண்டாம். கடவுளை ஒளி வடிவில் வழிபடுவோம் என்பதே வள்ளலாரின் கொள்கை.

Yes God! No Religion! இதுதான் வள்ளலார் கொள்கை. இதுதான் தமிழர் மதம். இதை கடைபிடித்தால் உலகமெங்கும் நிலவும் மதச் சண்டைகள் அனைத்தும் மறைந்து போகும்.

யாரும் தங்களை இந்து முஸ்லிம் கிறித்தவர் பார்சி ஜைனர் பௌத்தர் சீக்கியர் என்று சொல்லிக்கொள்ளாமலேயே எல்லார் போதனைகளையும் ஏற்றுக் கொள்ள முடியும்.  முரணாக இருப்பவைகளை தவிர்க்கலாம்.

அரசியல் கலக்காமல் மதம் வாழ முடியாது.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்துக்கு அப்பால் உண்டு என்று நம்புகிறவர்கள் தங்கள் கடவுளர்களை ஏதாவது ஒரு மதத்துக்குள் அடக்கி விடுகிறார்கள். சூரியனையே விழுங்கக் கூடிய கருந்துளைகள் இருக்கின்றன என்ற அறிவியல் கண்டிபிடிப்பு இறைவன் ஒளியா இருளா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

இந்தியாவில் அறுவகை சமயங்களான சைவ வைணவ சாக்த காணபத்ய கௌமார சௌர சமயங்களை நாம் இந்து எனது சொல்லாடலில் மிகத் தவறாக கையாண்டு கொண்டிருக்கிறோம்.

நானும் எல்லா சாமிகளையும் கும்பிட்டுக் கொண்டு எதையும் ஏன் எதற்கு என்றெல்லாம் ஆராயாது பட்டை போட்டுக் கொண்டிருந்தவன் தான்.

ஆனால் புராணங்கள் அவைகளில் கூறப்பட்ட கதைகள் எல்லாம் படித்தபோது என் மனதில் எழுந்த கேள்விகள் அவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுத்தன.

பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தமிழர்கள் சிவன் முருகன் மாலவன் போன்றவர்களை வணங்கி வந்தாலும் அவர்கள் தங்கள் முன்னோர் என்றே கருதி வணங்கினார்களே தவிர இப்போது நாம் கருதும் சனாதன வாதிகள் கற்பித்த வேத வழி கதைகளுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பே இல்லை என்று நம்பத் தொடங்கினேன்.

அப்போதுதான் தமிழர்கள் அறமே இறை என வாழ்ந்தவர்கள் எனக் கண்டேன்.   நடுகல் நாட்டி முன்னோர்களுக்கு வணக்கம் செலுத்தியவர்கள் எனத் தெளிந்தேன்.

அதற்கு சாட்சியாக விளங்குவது திருவள்ளுவரும் திருமூலரும். அவர்கள்தான் தமிழர்களின் அற வாழ்வை உலகத்துக்கு வெளிக்காட்டியவர்கள்.

நான் எப்படி வள்ளலார் அபிமானியாக மாறினேன் என்றால் அதற்கு காரணம் தந்தை  பெரியார். 1935-ம் ஆண்டு திருவருட்பா நூலின் ஆறாம் திருமுறையின் நூறு பாடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியானது. இந்த நூலைத் தொகுத்தவர் சாமி சிதம்பரனார். குடியரசு பதிப்பகம்தான் இதை வெளியிட்டது. ராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு என்ற பெயரில் குடியரசு வெளியீடாக பெரியார் வெளியிட்டார். மேலும், திருவருட்பாவின் இந்த வெளியீடு எல்லா மக்களையும் சென்று சேர வேண்டும் என்று எண்ணி மலிவு விலை பதிப்பாகவும், கட்டணச் சலுகை அளித்தும் விற்பனையை அதிகரித்து வியந்து விளம்பரமும் கொடுத்தார்.

பெரியாரின் இந்த வேண்டுகோளை தமிழ்ச்சமூகம் அன்று ஏற்றிருந்தால் வரலாறே மாறியிருக்கும். பெரியாரின் நாத்திகப் பிரசாரத்துக்கு தேவையே ஏற்பட்டிருக்காது.

நான் எப்படி  வள்ளலார் அபிமானியாக வாழ்கிறேன் என்பதை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முழுமையான சுத்த சன்மார்க்கியாக நான்  இன்னும் ஆகவில்லை. ஆக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

முதலின் நான் வள்ளலார் அபிமானி என்று சொல்வதில் கூட எனக்குத் தயக்கம் இருந்தது.

ஒரு சன்மார்க்கி எப்படி இருக்க வேண்டும்.? வள்ளலே சொல்கிறார்;

“ இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் , வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார, சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாவண்ணம் அருள் செய்தால் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விடத்தும் எவ்வளவும் விலகாமல், நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.

சாதி மதங்களை விடாதவர்கள் எப்படி சன்மார்க்கியாக முடியும்.?

அப்போதுதான் எந்த சமயத்தவரும் அந்தந்த சமயங்கள் சொல்வதை பின் பற்றுவதே இல்லை. ஆனாலும் அவர்கள் தங்களை அந்த சமயத்தை சொந்தம் கொண்டாடுவதை நிறுத்துவதும் இல்லை.

எந்த இந்துவுக்கும் தங்கள் மதம் சொல்வது பற்றி முழுமையாக தெரியாது. யாரோ சொல்வதை எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே கேட்டுக் கொண்டு வாழ வேண்டும். இந்து மதத்தில் இருக்கும் பூரண சுதந்திரம் தான் அதை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. யாரும் யாருக்கும் கட்டுப் பட்டவர் இல்லை. கோவிலுக்குப்  போகலாம் போகாமல். இருக்கலாம் சடங்கு செய்யலாம் செய்யாமல் இருக்கலாம். ஏன் நாத்திகம் கூட பேசலாம். ஆனாலும் நான் இந்துதான் இன்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூட பேசியிருக்கிறார் இந்தியாவில் வாழும் கிறித்தவர் முஸ்லிம் உட்பட அனைவைரும் இந்துக்களே என்று.

முஸ்லிம்கள் குரான் சொல்வதை அப்படியே கடைப்பிடிக்கின்றார்களா? சக முஸ்லிமை கொல்பவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?

ஏசு தன்னை கடவுள் என்று சொல்லிக்கொண்டதில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் ஏசுவை எப்படி வழிபடுகிறார்கள்? ஏசு பிரான் போதித்ததை அப்படியே கடைப்பிடிக்கின்றார்களா?

புத்தம் ஒரு மதமல்ல. கடவுளை ஏற்றுக் கொள்ளாதது. அது ஒரு தர்மம். சனாதனத்தை எதிர்த்து உருவானது

ஜைனம் அல்லது சமணம். கடவுளை ஏற்காமல் கர்ம விடுதலையை போதிக்கும் மார்க்கம்.

சீக்கியர்கள், பார்சிகள் இன்னும் எண்ணில் அடங்கா மதத்தவர்கள் எல்லாருமே தங்கள் மதங்கள் போதிப்பவற்றில் தங்களுக்கு சௌகரியமனவற்றை மட்டும் கடைப்பிடித்துக் கொண்டு தாங்கள் தான் உண்மையானவர்கள் என்று நினைத்து வாழ்கிறார்கள்.

அதாவது கட்டுப்பாட்டை மீறுவதில் எல்லாருமே ஒன்றுதான்.

அப்போதுதான் எனக்கும் தைரியம் வந்தது.

வள்ளலார் போதனைகளில் பலவற்றை அப்படியே அமுல்படுத்த முடியாதவர்கள் கூட வள்ளலார் அபிமானி என்று சொல்லிக் கொள்வதின் தவறே இல்லை.

அதற்காகத்தான் மற்ற மதத்தவர்களை பாருங்கள் என சொல்கிறேன்.

சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை இல்லை. வள்ளலாரோடும் சமரசம் செய்து  கொள்வோம்.

சட்ட பூர்வமாக மதங்களை ஒழிக்க முடியுமா?

முடியும். அதற்கு நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஆதரவளிக்க வேண்டும். சீனா ரஷ்யாவெல்லாம் மத சார்பின்றி இயங்க வில்லையா?

இன்று இந்தியாவில் நிலவும் கலவரத்திற்கு காரணம் மதங்கள். அகதிகளாக வந்தவர்களில் முஸ்லிம்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதற்கு காரணம் அச்சம்.

மதத்தை விட்டு எப்படி வெளியே வருவது?  மதம் என்ன என்று கேட்டால் நான் கடவுள் நம்பிக்கையாளன் . எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்ல என்று குறிப்பிட இடம் வேண்டும். அதற்கு ‘நம்பிக்கையாளர்’ அல்லது Believer என்ற சொல் போதும். போராடிப் பெற வேண்டிய உரிமை அது. அதுவரை இந்து என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

எந்த இறை உருவை பார்த்தாலும், அது ஒளி மயமான ஆண்டவரின் அம்சம் என்ற உணர்வு வரவேண்டும். தனிக்கடவுளர் அல்ல என்ற தெளிவு பிறக்க வேண்டும். முதலில் வள்ளலாருக்கு விபூதி அணிவித்தல் தவிர்க்கப் பட வேண்டும். நான் சைவத்தை கைவிட்டு விட்டேன் என்று வள்ளலார் சொன்ன பிறகும் 135 ஆண்டுகள் வழக்கு நடத்தி வடலூர் சத்திய ஞான சபையில் இருந்த லிங்கத்தை அகற்றி ஜோதி தரிசனமே வழிபாட்டு முறை என்று நிலைநிறுத்திய பின்பும் இன்னமும் அவருக்கு விபூதி அணிவிப்பதை எப்படி ஏற்க முடியும்?

என்னைப் பொறுத்தவரையில் நான் விபூதி குங்குமம் சந்தனம் என்று புறசின்னங்கள் அணிவதை நிறுத்தி விட்டேன். யாராவது அவற்றை பிரசாதங்களாக வழங்கினால் மரியாதைக்காக ஏற்றுக் கொண்டு அவருக்குத் தெரியாமல் பின்னர் அகற்றி விடுவேன்.

காலையில் வழிபடும்போது ஜோதி ஏற்றி வள்ளலார் அருளிய  திருமந்திரமான

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

திருவள்ளுவர் திருக்குறள் கடவுள் வாழ்த்தில் குறிப்பிடும் கடவுளின் குணங்களை குறிப்பிட்டு

இறைவனடி போற்றி

ஆதி பகவன் போற்றி

வாலறிவன் நற்றாள் போற்றி

மலர்மிசை ஏகினான் மாணடி போற்றி

வேண்டுதல் வேண்டாமை இலானடி போற்றி

பொறிவாயில் ஐந்தவித்தான் போற்றி

தனக்குவமை இல்லாதான் தாள் போற்றி 

எண்குணத்தான் தாள் போற்றி                     

( அறவாழி அந்தணன் தாள் என்பது இடைச்செருகல் )

கம்பர் பாடிய கடவுள் வாழ்த்தான

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

நிலை பெருத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகு இலா விளையாட்டு உடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

வள்ளலார் படத்துடன் குலதெய்வங்கள் படங்களையும் பெற்றோர் முன்னோர் படங்களையும் வைத்து வழிபடுவேன்.

எங்கள் ஊர் சுப்பிரமணியசாமி மடத்தில் வள்ளலார், திருவள்ளுவர், திருமூலர் படங்களை வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறேன்.

எப்போதும் அருட்பெருஞ்சோதி சிந்தனையிலேயே இருப்பது.

வள்ளலார் வாக்கின்படி,

சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியை பெற வேண்டுமென்பது சன்மார்க்கக் கொள்கை. சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும் காமக்குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் கொலை புலால் தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள்தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்கு மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிசெய்வதால் அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. இப்படித்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

“பாதி இரவி லெழுந்தருளிப் பாவி யேனை யெழுப்பியருட்

சோதி யளித்தென் னுள்ளத்தேசூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்

நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான்பெற்ற நெடும்பேற்றை

ஓதி முடியா தென்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே ”

ஆனால் இந்த அனுபவம் நமக்கு இல்லையே. எனவே கொஞ்சம் மாற்றிக் கொண்டு உலகில் அனைத்து உயிர்களும் அமைதியும் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்து வாழ இறைவா அருள்புரி என்று வேண்டுவேன்.

சீக்கிய குருத்வாராக்களுக்கு சென்று அங்கே பாடப்படும் குரு கிரந்த சாஹிப் எனப்படும் இறை வாழ்த்துப் பாடல்களை கேட்கும்போது மனதுக்கு இதமாக இருக்கும்.

அவ்வளவுதான் எனது இறை வழிபாடு.

எரிக்காதே புதை எனவும் திதி கருமாதி வேண்டா என்பன கொள்கைகள். ஆனால் அவற்றை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளச் செய்தால்தான் அமுல் படுத்த  முடியும்.

அடிகளின் 1849 முதல் 1874 வரையான 25ஆண்டுப்பணிகளில்,

1871 ல் சத்திய ஞான சபை அமைத்து, 1872 ல் அருட்பெருஞ்சோதி அகவல் எழுதி , ஞானசபை வழிபாட்டு விதி வகுத்து சன்மார்க்க கொடி கட்டி பேருபதேசம் செய்து   1874  ல் மறைந்து நிறைந்தது வரையிலான மூன்று ஆண்டு வாழ்க்கையில் அவர் எதையெல்லாம் உபதேசித்தாரோ கடைப்பிடித்தாரோ அவற்றைக் கடைப்பிடிப்பதுதான் வள்ளலாருக்கு செய்யும் மரியாதை.

ஆனால் இன்றைக்கு  சனாதனவாதிகளின் கையில் வள்ளலார் அடைக்கப் பட்டு கிடப்பதை அனுமதிப்பது அவருக்கு செய்யும் துரோகமா இல்லையா?

ஆறாம் திருமுறையை  மட்டுமே பாட வேண்டும். போற்ற வேண்டும். முதல் ஐந்து திருமுறைகளையும் மூட்டை கட்டி வைத்து விட வேண்டும்.   அடிகள் மறைந்து பதினோரு ஆண்டுகளுக்குப் பின் வழக்குகளை சந்தித்து 1885 ல் வெளி வந்தது ஆறாம் திருமுறை. அது வரக்கூடாது என்று போராடியவர்கள் இன்று அது போற்றப் படாதவாறு தடுத்து தந்திரமாக முதல் ஐந்து  திருமுறைகளை போற்றும் படி செய்து வருகிறார்கள்.

என்றும் எங்கும் இருக்கும் பரம்பொருள் ஒன்றுதான். அந்த ஒரே பரம்பொருளாகிய இறைவன்தான் அருட்பெரும்ஜோதி என்பதுதான் வள்ளல் பெருமானின் கொள்கை.

முதல் நான்கு திருமுறைகளும் 1867  ல் தொழுவூர் வேலாயுதனார் வெளியிட  1880  ல்  அடிகளின் மறைவிற்குப்பின் ஐந்தாம் திருமுறையும்  1885  ல் ஆறாம் திருமுறையும் வெளிவந்திருக்கின்றன.

இவை அனைத்திலும் விநாயகர் ,முருகப் பெருமான் , சிவபெருமான், நடராசர் , அம்மன்கள், திருமால், இராமர், திருமகள் கலைமகள் போன்ற தெய்வங்கள் அடிகளால் பாடப்பெற்றவர்கள் .

அடிகள் சித்தி பெற்ற 6 ஆண்டுகளுக்குப் பின் 1880 ம் ஆண்டில் ஐந்தாம் திருமுறையை வெளியிட்ட தொழுவூர் வேலாயுதனார் ஆறாம் திருமுறையை வெளியிடும் முயற்சியில்  ஈடுபடவில்லை. அவர் மட்டுமல்ல இறுக்கம் இரத்தின முதலியார் புதுவை வேலு முதலியார் சிவானந்தபுரம் செல்வராய முதலியார் மயிலை சிக்கிட்டி சோமசுந்தர செட்டியார் ஆகியோரும் ஆறாம் திருமுறையை அச்சிட்டு வெளிப்படுத்த தலைப்பட வில்லை. அடிகள் சித்தி பெற்று 11 ஆண்டுகள் கழிந்து  இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்ற எண்ணத்தில் வேலூர் பத்மநாப முதலியார் முயற்சியில் 1885 ல் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் அவர்களால் ஆறாம் திருமுறை வெளியிடப் பட்டது. அடிகளின் அடியவர்களுக்குக் கூட அதை வெளியிட காலம் கனியவில்லை என்ற அச்சம். காரணம் ஐந்து திருமுறைகளிலும் பாடப் பெற்ற தெய்வங்கள்  அடிகளால் ஒதுக்கி வைக்கப் பட்டு ஒரே இறைவனாக அருட்பெரும்ஜோதியை அவர் அறிவித்ததுதான்.

வள்ளலார் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் அருளிய பேருபதேசம் இறுதியானது. ‘

“இதற்கு மேற்பட நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம் இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்க்ஷியம் வைக்க  வேண்டாம்.”

“இதுபோல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்”.

“நான் முதலில்  சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவு என்று அளவு சொல்ல முடியாது. அந்த லட்சியம் இப்போது எப்படி போய் விட்டது பார்த்தீர்களா? “‘

“ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலை மேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதனால் வந்த லாபம் இது. “

ஆறாம் திருமுறையில் எண்ணற்ற இடங்களில் சாதியையும் மதத்தையும் சடங்குகளையும் குப்பைகள் என்றும் சழக்குகள் என்றும் பிணிகள் என்றும் பல்வேறு  வார்த்தைகளில் விமர்சிக்கிறார். தனது சங்க ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் பாருங்கள்;

“கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என் தனக்கே “  (187 )

இருட்சாதி  தத்துவச் சாத்திரக்  குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

தெருட்சாறும் சுத்தசன் மார்க்கநன் நீதி

சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருட்ஜோதி வீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ்  சோதிஎன் ஆண்டவர் நீரே.             (496)

“நாத்திகம் சொல்கின்றவர்தம்  நாக்குமுடை நாக்கு “  என்பதே அவர் முடிபு.

இந்துக்களுக்கு என்று சட்டங்கள் இயற்றியதும் ஆங்கிலேயர்கள்தான். முதல் இந்து சட்டம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி கொண்டு வந்த இந்து  விதவைகள் மறுமண சட்டம் 1856. அதற்குப் பின்தான் இந்து என்ற பெயரிலேயே சட்டங்கள் வந்தன. உச்ச நீதி மன்றமும் இந்து என்பது மதமல்ல வாழ்க்கை  முறை என்று தீர்ப்பும் சொல்லி  விட்டது.  ஆனாலும் இந்து என்பது ஒரு மதமாக பாவிக்கப்படுவது மட்டுமல்ல யாரெல்லாம் சீக்கியர், பௌத்தர், ஜைனர் அல்லரோ  அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று எதிர்மறை விளக்கத்தோடு சட்டங்களும் அமுலில் இருப்பது என்னவொரு விந்தை.

இந்தியா முழுவதும் இப்போது அமுலில் இருக்கும் இந்து மதம் என்பது உண்மையில் பார்ப்பனீய மதமே ஆகும். அதனால்தான் எல்லா பார்ப்பனீய எதிர்ப்பு சீர்திருத்த மதங்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு இந்து என்ற மாயப் பெயரில் இயங்கி வருகிறது. லிங்காயத்துக்கள், அய்யா வைகுண்டர் வழி நம்பிக்கையாளர்கள், போல சன்மார்க்கிகளும் தனி அடையாளத்தோடு இயங்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களும் இந்து என்ற வளையத்திற்குள்தான் அடங்கிக் கிடக்கிறார்கள்.

வள்ளலார் சீடர்கள் இந்து மத வளையத்துக்குள் இருந்து வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்.

தந்தை பெரியாரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் வள்ளலாரை ஏற்றுக் கொண்டவர்கள். அறிஞர் அண்ணாவும் திருமூலரை பின்பற்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே கொள்கை என்று அறிவித்தார்.

ஆறாம் திருமுறையில் வள்ளலார் குறிப்பிடும் சிவம், சித்சபை போன்றவை சைவ சமய குறியீடுகள் அல்ல. எல்லாவற்றிற்கும் தத்துவ விளக்கம் சொன்னார் வள்ளலார்.

“சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியை பெற வேண்டுமென்பது சன்மார்க்கக் கொள்கை. சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும் காமக்குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் கொலை புலால் தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள்தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்கு மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிசெய்வதால் அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. இப்படித்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

தமிழர்களுக்கு ஆன்மிக வழிகாட்ட வள்ளலார் அன்பர்களை ஒருங்கிணைத்து செயல்பட ஒரு மைய அமைப்பு இல்லை. அப்படி ஒன்று உருவானால்தான் உண்மையான வள்ளலார் கருத்துக்கள் பரவிட வழிவகை பிறக்கும். அதுவரை வள்ளலார் சொன்னதற்கு மாறான கருத்துக்களை அவர் பெயரிலேயே பரப்பிக் கொண்டுதான் இருப்பார்கள்.  அதற்கு  அந்த அருட்பெருஞ்சோதி ஆண்டவர்தான் அருள்புரியவேண்டும். அமைப்பு வலுப்பெற்றால் அது உலகம் முழுமைக்கும் வழிகாட்டியாக விளங்கும் என்பதில் ஐயம்  இல்லை.