Home Blog Page 15

மத்திய பாஜக அரசின் அடங்காத சமஸ்கிருத வெறி?

மூன்று சமஸ்கிருத நிகர் நிலை பல்கலை கழகங்களை மத்திய அரசின் பல்கலை கழகங்களாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது.

ஏன் சமஸ்கிரிததுக்கு மட்டும் மத்திய அரசு பரிவு காட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்?

எட்டாம் அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆதரிக்க வேண்டும். செம்மொழி என்றால் தமிழ் உள்ளிட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் நிதி ஒதுக்கி ஆதரிக்க வேண்டும்?

ஆட்சி உங்கள் கையில் இருப்பதால் மொழிகளுக்கு இடையே பாரபட்சம் காட்டும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா?

பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் கணேஷ் சிங் சமஸ்கிருதம் பேசினால் நீரிழிவு வராது என்று பேசுகிறார். ஆதாரம் கேட்டாம் அமெரிக்காவில் ஒரு கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் இது கண்டறியப் பட்டுள்ளது என்கிறார். உலகின் சில இஸ்லாமிய மொழிகள் உள்பட 97 சதவீத மொழிகள் சமஸ்கிருத அடிப்படை கொண்டவைகள் என்கிறார்.

விவாதத்தில் அமைச்சர் பிரதாப சந்திர சாரங்கி சமஸ்கிரிததில் பேசுகிறார். இந்த வெறி எங்கு கொண்டு போய்விடும்?

கடைசியில் மத்திய சமஸ்கிருத பல்கலை கழகங்கள் அமைக்க வகை செய்யும் மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது.

சமஸ்கிருத மொழிக்கு ஊக்கம் கொடுப்பதை நியாயப் படுத்த வேண்டும்  என்றால் அனைத்து மொழிகளையும் சமமாக பாவித்து அனைத்துக்கும் அதே சலுகைகளை கொடுக்க வேண்டும்.

இப்படி பாரபட்சம் காட்டுவதன் மூலம் வெறுப்புதான் வளரும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் வெறுப்பு எங்களை என்ன செய்யும் என்று மமதையுடன் செயல்பட்டால் அதன் விளைவுகள் உங்களுக்கே ஊறு விளைவிப்பதா கத்தான் அமையும்.

தமிழகத்தில் 90% வேலை தமிழருக்கே? யார் உறுதி செய்வது?

சிவசேனை ஆட்சிக்கு வந்தவுடன் மகாராட்டிரத்தில் இனி உள்ளூர் மக்களுக்கே 80% வேலை என அறிவித்துள்ளது.

அதிமுக அரசு இதுபற்றி இன்னும் வாய் திறக்கவில்லை.

மத்திய பாஜக எஜமானர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.

ஆனால் நிலைமை கைமீறி போய்க்கொண்டிருக்கிறது. தமிழகத்தை வெளி மாநிலத்தவர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சரியான தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

தமிழகத்தில் மட்டும் அல்ல. எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தவர்களுக்கே வேலையில் முன்னுரிமை என்பது அமுல் படுத்தப்பட்டால் பிரச்னையே வராது.

இந்நிலையில் தமிழகத்தில் வாழும் வெளி மாநிலத்தவர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும் அயல் மாநிலதவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கர்நாடகத்தில் வாட்டாள் நாகராஜ் மும்பையில் முன்பு சிவசேனா போன்றவர்கள் வைத்த பழைய கோரிக்கைதான் என்றாலும் இன்றைய மத்திய பாஜக அரசு இதை எப்படி எடுத்துக் கொள்ளும் என்று தெரியவில்லை.

வெறுப்பை வளர்க்காமல், மத்திய மாநில அரசுப் பணிகள் தனியார் நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் அதிகாரத்தில் உள்ளோர் மாநில மக்களின் உரிமைகளை  பாதுகாத்திட கவனத்துடன் உடனடியாக கவனிக்க வேண்டிய அவசர பிரச்னை இது.

பழ.கருப்பையா ஏன் விலகினார் திமுகவில் இருந்து?

பழ.கருப்பையா ஏன் விலகினார் திமுகவில் இருந்து?

திமுக கார்பரேட் நிறுவனம் போல் நடத்துகிற விதம் பணமே எல்லாம் என்று கருதுகிற தன்மை திமுகவில் இருப்பதாக கூறி பழ கருப்பையா திமுகவில் இருந்து விலகி இருக்கிறார். ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து விலக போவதை தெரிவித்து அவரும் உபசரித்து கைகுலுக்கி விடை கொடுத்தார் என்று சொல்லி இருக்கிறார்.

விலகுவது அவர் உரிமை. காரணம் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. கருணாநிதி அழைத்ததால் திமுகவில் சேர்ந்தேன் என்றவர் அப்போது திமுக எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறது. இதில் என்ன மாற்றத்தை கண்டுவிட்டார் அவர்.

ரஜினியிடம் போவதற்காக நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பட்டியலில் இவரும் சேருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் ரஜினியிடம் போவீர்கள என்று கேட்டதற்கு அவர் என்னை சந்திக்க விரும்புவாரா என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். அதாவது ரஜினி விரும்பினால் சந்திக்க தயார் என்று பொருள். .

ரஜினி என்ன சொல்லப் போகிறார் என்பது தெரியாமலேயே அவருடன் சேரத்தயார் என்போர் பட்டியலில் கருப்பையாவும் இணைந்து விட்டதாகவே தோன்றுகிறது.

பத்தோடு பதினொன்று.

சீட்டும் இல்லே சட்டமும் இல்லே ! மூன்று நம்பர் லாட்டரி கோடிக்கணக்கில்?!

சீட்டும் இல்லே சட்டமும் இல்லே!

மூன்று நம்பர் லாட்டரி கோடிக்கணக்கில்?!

கேரளாவில் மூன்று நம்பர் லாட்டரி நடக்கிறதாம். ஆனால் அதை வைத்து தமிழ்நாட்டில் சீட்டே இல்லாமல் கோடிக்கணக்கில் மூன்று நம்பர் லாட்டரி வியாபாரம் கொடிகட்டி பறக்கிறதாம்.

காவல்துறை தன் பங்கிற்கு மூவாயிரம் வழக்கிற்கு மேல் பதிவு செய்திருக்கிறதாம்.    எத்தனை பேர் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது கேள்வி?

யாரோ நடத்தும் லாட்டரியை வெறும் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து வியாபாரம் செய்கிறார்கள் என்றால் அதையும் மக்கள் நம்பி அதில் பணத்தை முதலீடு செய்கிறார்களே அவர்களை என்ன சொல்வது?

இதில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டதும் தான் விவகாரம் வெளியில் வந்திருக்கிறது.

பொதுமக்கள் ஏமாறாமல் இருந்தால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும்.   சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் அதில் பணத்தை முதலீடு செய்யும் மக்களும் சரியான நடவடிக்கை எடுத்து தண்டிக்காமல் இருக்கும் காவல் துறையும் தான் இதற்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

காவல் துறையை சரிக்கட்டாமல் இந்த சட்ட விரோத வியாபாரம் நடத்த முடியாது என்பதால் காவல் துறையே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

ராகவா லாரன்ஸ் அமெரிக்காவில் பிறந்தவரா?! அவரே எழுப்பிய கேள்வி?

ராகவா லாரன்ஸ் அமெரிக்காவில் பிறந்தவரா?! அவரே எழுப்பிய கேள்வி?

ரஜினி பிறந்த நாள் விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ் சீமானை தாக்குவதற்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.

அதில் நாங்கதான் இங்கே பிறந்தோம் என்று பேசுகிறீர்களே நாங்கள் எல்லாம் அமெரிக்காவிலா பிறந்தோம் என்று ஒரு கேள்வியை அவரே எழுப்பினார். அதை அவர்தான் விளக்க வேண்டும்.

லாரன்ஸ் பேச்சில் ரஜினியின் மேல் இருக்கும் விசுவாசம் தெரிந்ததே தவிர முதிர்ச்சி தெரியவில்லை.

அரசியலுக்கு வராதே என்று ரஜினியை பார்த்து யார் சொன்னார்கள்? யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் உன் கொள்கை என்ன என்று சொல் என்றுதானே கேட்கிறார்கள். சொல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் எப்படி?  

அரசியலுக்கு வருவதற்குக் உனக்கு உரிமை இருக்கும்போது கொள்கை சொல்லாமல் வந்தால் உன்னை தோற்கடிப்போம் என்று சொல்ல மற்றவர்களுக்கு உரிமை இல்லையா?

ஓட்டப்பந்தயத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். உண்மைதான்.   வெற்றி பெற்றால் கோப்பையை பெற்றுக் கொள். ஆனால் யாரும் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதற்காக ஆட்சியை கையில் கொடுத்து விட மாட்டார்கள்.

சினிமாவில் வெற்றி பெற்று விட்டாய். கோடிகளை குவித்துக் கொண்டாய், போதாது.  ஆட்சியை தூக்கி என் தலையில் வை என்றால் எப்படி?

எம்ஜியாரோடும் ஜெயலலிதாவோடும் ரஜினியை ஒப்பிடுவதே தவறு.

லாரன்ஸ் சீமான் அண்ணா என்று பேசியபோது ரசிகர்கள் பேரை சொல்லாதே என்று கூச்சல் இட்டார்கள்.

ரஜினி வருவது உறுதி என்றும் முதல் அமைச்சர் ஆவது நிச்சயம் என்றும் அவரது அண்ணன் சொல்கிறார்.

மற்றவர்கள் சொல்ல வேண்டியதை குடும்பம் சொன்னால் சரியா?

ராகவா லாரன்ஸ் தனது கொடை வழங்கும் உள்ளத்தால் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர். எதிரிகள் இல்லாத நல்ல கலைஞன். அதனால் சொல்கிறோம்.

ராகவா லாரன்ஸ் கொஞ்சம் அடக்கி வாசிப்பா?

ஈழத் தமிழர்களை கைவிட்ட எடப்பாடி – ஒபீஎஸ் கூட்டணி?

குடிஉரிமை சட்ட திருத்தம் இரு அவைகளிலும் நிறைவேறிவிட்டது.

மற்றவர்களைப்போல் இலங்கைத் தமிழர்களையும் சேர்த்து அவர்களுக்கும் குடிஉரிமை வழங்க வேண்டும் என்று ஆந்திராவின் ஒய் எஸ் ஆர் கட்சி கூட குரல் கொடுத்தது.

திமுக எம்பிக்கள் உரத்துக் குரல் கொடுத்தார்கள்.

ஆறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு  கொடுக்கபட்ட சலுகை முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கப் பட்டது.

இலங்கையில் மத ரீதியிலும் மொழி ரீதியிலும் இன ரீதியிலும் அடக்கு முறைக்கு  உள்ளானவர்கள் அகதிகளாக இந்தியாவில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களுக்கு குடிஉரிமை தர முடியாது என்று அமைச்சர் கூறுகிறார். அமித் ஷா அது வேறு பிரச்னை என்கிறார்.

அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினர் ரவீந்திர நாத் கூட இதைப்பற்றி  பேச மறுக்கிறார்.

மாநிலங்கள் அவையிலும் எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் மட்டும் ஏன் இலங்கை தமிழர் களுக்கு  இந்த உரிமையை வழங்கக் கூடாது என்று  கேட்டார். ஆனால் அதிமுக ஆதரித்து வாக்களித்து விட்டது.

ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தாததின் மூலம் தன் பாஜக விசுவாசத்தை அதிமுக நன்றாக வெளிக்காட்டிவிட்டது.

ஏலம் போடப்படும் பஞ்சாயத்து தலைவர் பதவிகள்?

உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் வந்தது. அரசியல் வியாபாரிகளுக்கு கொண்டாட்டமாக போய்விட்டது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வாக்குகளை பெற்று வெற்றி பெறுவதை விட சுலபமான வழி ஊரில் உள்ளவர்களை சரிக்கட்டி பதவியை ஏலத்துக்கு விடச்செய்து காசைக்கொடுத்து பதவியை விலைக்கு வாங்கி விடுவது என்று கண்டுபிடித்து அமுல் படுத்தவும் துவங்கி விட்டார்கள்.

கடலூர் பக்கத்தில் ஒரு ஊராட்சி தலைவர் பதவியை அதிமுக முன்னாள் தலைவர் ஒருவர் ஐம்பது லட்சத்துக்கும் துணைத் தலைவர் பதவியை தேமுதிக தலைவர் ஒருவர் பதினைந்து லட்சத்துக்கும் ஏலம் எடுத்திருக்கிறார்கள்.

பத்திரிகைகளின் வந்தபின் எனக்கு ஏது அவ்வளவு பணம் என்று அதிமுக பிரமுகர் மறுத்தாலும் உண்மை விளங்கிவிட்டது.

இனி பதவிகள் பணத்துக்குத்தான் என்று.

தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் ஏலம் விடப்பட்டு பணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதால் இப்போது அதே தொகைக்கு விடுவதா அல்லது புது ஏலம் விடுவதா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் பனைகுளம்பஞ்சாயத்து தலைவர் பதவியும் இருபத்தி  ஐந்து லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக தெரிகிறது.

நாமக்கல் மாவட்டம் பெரமாண்டம் பாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவியை ஒருவர் இரண்டு லட்சத்து நாற்பத்தி ஐந்து லட்சத்துக்கு ஏலம் போயிருக்கிறது.

விருத்தாசலம் அருகே பிஞ்சனூர் பஞ்சாயத்து தலைவர் பதவி பதினாறு லட்சத்துக்கு  ஒருவர் ஏலம் எடுத்துள்ளாராம்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஊராட்சி தலைவர் பதவியும் இருபத்தி  ஐந்து  லட்சத்துக்கு கேட்கப்பட்டு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

ஒரு ஊராட்சியில் ஏலம் விடுவதை தட்டிக் கேட்ட ஒருவர் அடித்துக் கொலை செய்யப் பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வந்திருக்கிறது.

இது பற்றியெல்லாம் மாவட்ட ஆட்சியர் விசாரணை  நடத்தி அறிக்கை தர கோரப்பட்டுள்ளதாக தகவல் வந்தாலும் அது எந்த அளவு பயன்படும் என்பது  தெரியவில்லை.

மக்களாட்சியை கேலிக்குள்ளாக்கும் இத்தகைய ஏலங்கள் நிறுத்தப்பட்டால்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் பொருள் இருக்கும்.

முடியாவிட்டால் அதிகாரபூர்வமாகவே பதவிகளை ஏலத்தில் விட்டு விடுங்களேன் .

தேர்தல் நடத்தும் செலவாவது மிஞ்சும்.

கட்சி பதிவான பின்பும் தினகரனுக்கு சின்னம் கொடுக்க மறுக்கும் தேர்தல் கமிஷன்?

தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு  ஆதரவாக சின்ன சின்ன விடயங்களுக்கு கூட பாரபட்சம் காட்டுகிறது.

எந்த கட்சிக்கு ஆதரவு என்பது மக்களின் மனநிலையை பொறுத்தது.

ஏற்கெனெவே தினகரன் நீதிமன்றத்துக்கு போய்தான் பரிசுபெட்டி சின்னம் வாங்கினார். ஐந்து சதம் வாக்கும் வாங்கினார். இப்போதும் நீதி மன்றம் சென்றால்  ஏதாவது ஒரு சின்னம் கொடுக்கும். நீதிமன்றம் சென்றுதான் அதை வாங்க வேண்டுமா?

தேர்தல் கமிஷன் தானாக அதை கொடுக்கக் கூடாதா?

இப்படி எல்லாம் நடந்து கொண்டால் தமிழர்கள் ஜனநாயகத்துக்கு அருகதை அற்றவர்கள் என்ற பெயர் தான் கிடைக்கும்.

எடப்பாடி தனது அதிகாரத்தை இப்படி எல்லாம் பயன் படுத்தக் கூடாது. கேட்டால் எங்களுக்கும் அதற்கும் தொடர்பே கிடையாது என்பார்கள். வேண்டாம் இந்த விளையாட்டு!

தோற்க வேண்டிய கட்சிதான் தினகரன் கட்சி. அது தானாக நடக்கட்டும். அதை தேர்தல் கமிஷன்தான் முடக்கி விட்டது என்ற குற்றச்சாட்டு வேண்டாம்.

ஆளும் கட்சி  தேர்தல் ஆணையத்தை ஆட்டுவிக்கிறது என்ற குற்றச்சாட்டு இதன் மூலம் உறுதியாகும் என்பது தான் உண்மை.

ரசிச்ச பாவத்துக்கு வெச்சு செய்றீங்களா ரஜினி, கமல்?

இதுவரை நடிகர்கள் அரசியலில் செய்யாததை இப்போது  ரஜினியும் கமலும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மக்களை சோதிப்பது. ரொம்பத்தான் சோதிக்கிறார்கள்.!

விஜயகாந்த் வந்தார். திராவிட பெயரை கைவிட வில்லை. அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பத்தரை சதம் வரை சென்று இப்போது இரண்டு சதத்துக்கு வந்து விட்டார்.

உடல்நலமின்றி இருக்கும் அவரை தொந்தரவு செய்ய யாருக்கும் விருப்பம் இல்லை.    நல்ல மனிதர் என்ற பெயரோடு நீடிக்கிறார். அவரை வைத்து அவர் குடும்பம் அரசியல் செய்கிறது. போகட்டும்.

ஆனால் கமலும் ரஜினியும் செய்வது சகிக்க முடியவில்லை.

ரஜினியை இழுக்கப் பார்த்தார் கமல். ரஜினி மாட்டவில்லை. உள்ளாட்சி தேர்தலில் படம் பெயரை பயன்படுத்தினால் நடவடிக்கை என்று அறிவித்திருக்கிறார்.

இப்போதைக்கு தர்பார் வெளியாகி இன்னொரு படமும் பண்ணியபிறகு 2021 தேர்தல் வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் வந்தால் போதும் என்று நினைக்கிறாராம். அதுதான் மகா எரிச்சலை தருகிறது.

கமல் பலம் 3-72% தான் என்று தெரிந்து விட்டது. கொள்கையே சொல்லாமல் வாங்கிய இந்த வாக்கு எந்த வலுவுள்ள சுயேச்சைக்கும் கிடைக்கும். கமல் பார்ப்பனீயத்தின் பிரதிநிதி என்ற சந்தேகத்தை துடைக்க அவர் ஒருபோதும் முன்வரவில்லை. சும்மா தானும் ஒரு நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு நடைமுறையில் சனாதனிகளை கண்டிக்காத வரை யாரும் உங்களை நம்பப்போவதில்லை.

இந்த இரண்டு பேரும் தமிழர்களை எப்படி எடை போட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்தால்தான் கோபம் பல மடங்காகிறது.

இந்த இருவரையும் தமிழகம் நாற்பதாண்டுகளாக தலையில் தூக்கி கொண்டாடி இருக்கிறது. அந்த அன்பைக் காட்டியதற்குத்தான் இப்போது இருவரும் தமிழர்களை வெச்சு செய்கிறார்கள்.

நீதிக்கட்சியும் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் போற்றி வளர்த்த திராவிட சித்தாந்தத்தை ஒழித்துக் கட்ட புறப்பட்டிருக்கும் இந்த இருவரும் யாரை கொண்டாடப் போகிறார்கள் எந்த சித்தாந்தத்துக்கு வலு சேர்க்கப் போகிறார்கள் என்பது தெரியாமல் அதை அவர்களும் சொல்லாமல் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்களே அதை தமிழகம் அனுமதித்தால் தன் தலையில் தானே கொள்ளி வைத்துக் கொண்டது போல.

பேசாமல் ரஜினி இப்படியே சொல்லிக் கொண்டு காலத்தைக் கடத்தி விட்டால் தமிழர்களுக்கு ஒரு நிம்மதி.

யாரோ சொல்லிக் கொடுத்து இதுதான் சமயம் இவர்கள் தலையில் மிளகாய் அரைக்க என்று ரஜினி வந்து விட்டால் ரசித்தவர்கள் கையாலேயே வலியையும் அவர் ருசிக்க வேண்டி வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

குடி உரிமை தருவதில் ஈழத் தமிழர்களுக்கு வஞ்சகம்?

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கலாகி உள்ளது.

அதில் பங்களா தேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து 31/012/2014க்கு முன் இந்துக்கள் என்பதற்காக அடித்து விரட்டப்பட்ட அகதிகளுக்கு இந்தியக் குடிஉரிமை வழங்குவதற்கு இந்த மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

உலகநாடுகள் எதிர்க்கும் என்பதால் கிறிஸ்தவர்களுக்கு உரிமை கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களுக்கு இந்த உரிமை இல்லை. ஏன் என்றால் அவர்கள் மதத்தின் காரணமாக அந்த நாடுகளில் ஒடுக்கப்படவில்லையாம்.

ஈழத் தமிழர்கள் தொண்ணூறு சதம் பேர் இந்துக்கள் என்றாலும் அவர்களை இந்திய அரசு இந்துக்களாக கருதியதில்லை. தமிழர்கள் என்ற அடையாளத்தை அவர்கள் வலியுறுத்துவதால் அவர்கள் இந்துக்கள் என்றாலும் இந்துக்களாக பாவிப்பதில்லை.

ஏன் இந்த பாரபட்சம்? இந்தியாவில் இருக்கிறோம் என்பதால் தமிழர்கள் தங்கள் முடிவுகளை எடுப்பதில் இருந்து ஏன்  தடுக்கப்பட வேண்டும்?

தமிழர்கள் தொடர்புடைய பிரச்னை என்றால் அதை தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்க வேண்டும். அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஆனால் இந்திய வெளியுறவுக் கொள்கையை டெல்லியில் இருக்கும் உயர் அதிகாரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் உயர்சாதி செல்வாக்கு  மிக்கவர்களாக இருப்பதால் சாமானியர்கள் சொல் அங்கே அரங்கேறுவதில்லை.

இன்றைக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஏன் குடிஉரிமை வழங்கக் கூடாது என்று திமுக டி அர் பாலு கேட்கும் போது மற்றவர்கள் ஆட்செபிக்கிரர்கள்.

சட்ட பூர்வ அனுமதி பெறாமல் இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு குடி உரிமை  கொடுக்க முடியாது என்று அமைச்சர் பதில்  கூறுகிறார்.

பங்களாதேசத்தில் இருந்தும் பாகிஸ்தான ஆப்கானிஸ்தானில் இருந்தும் வந்தவர்கள் அனுமதி பெற்று குடி வந்தவர்களா? அதிலும் இந்துக்களுக்கு மட்டுமே இந்த சலுகை என்றால் நாம் மத சார்பற்ற நாடு என்ற நிலையில் இருந்து மாறி விட்டோமோ?

இந்த மசோதா நிறைவேறினால் இந்தியாவின் பிம்பம் ஒரு மத வெறி நாடாகிப்போகும். அது நடவாது என்று நம்புவோம்?