நித்தியானந்தா மீது வழக்குகள் இருந்தால் அவற்றை அவர் சந்தித்துத் தான் ஆகவேண்டும்.
குற்றம் செய்திருந்தால் சிறையில் தள்ளட்டும். யாருக்கும் எந்த ஆட்சேபணை யும் இருக்காது.
எத்தனையோ சாமியார்கள் சிறையில் கிடக்கிறார்கள். அவர்கள் பட்டியலில் இவரும் சேர்க்கப் பட வேண்டும் என்றால் நடக்கட்டுமே?
ஆனால் விசாரித்து தீர்ப்பு வழங்கும் முன்பே ஊடகங்கள் தீர்ப்பு வழங்குவதை எப்படி ஏற்க முடியும்?
எல்லா சாமியார்களும் மக்களின் அறியாமையை நம்பிக்கையை தேவையை பயன்படுத்தி சௌக்கியமாக வாழ்கிறார்கள்.
வெளிநாடு செல்லும் எந்த சாமியாரும் இந்தியாவில் சொல்லும் புராணக் கதைகளையோ சாத்திரங்களையோ உபதேசித்து அங்கே பேர் சொன்னதில்லை. எல்லாம் தத்துவ முத்துக்கள். அதுவும் ஆங்கிலத்தில் புலமை பெற்று அவர்களையே அசத்துவது அவர்களின் கைவந்த கலை.
பெரும்பாலும் பார்ப்பன சாமியார்கள் தான் அதிகம். அவர்கள் வேறு யாரையும் விடுவதில்லை. யாராவது அப்படி இருந்தால் அவர்கள் பார்ப்பனர்களின் பிடியில் கட்டுண்டு கிடப்பவர்களாகவே இருப்பார்கள்.
நமக்குத் தெரிந்தவரை வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முதன்மையானவர். கிரிஷ்ணபக்தி இயக்கத்தை பரப்பியவர்களும் அவர்கள்தான். சுவாமி நாராயண் இயக்கமும் அவர்களின் பிடியில். இன்னும் நூற்றுக் கணக்கில். எல்லாரும் ஆயிரக்கணக்கான கோடியில்தான் புரள்கிறார்கள். யாரும் அவர்களை மோசமாக விமர்சித்ததில்லை.
ஆனால் நித்தியானந்தா என்று வந்தால் பிடி பிடி என்று பிடித்துக் கொள்கிறார்கள்.
நித்தியானந்தாவும் ஆன்மிக சொற்பொழிவாளர் தான். நூற்றுக் கணக்கான புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவருக்கென சீடர்கள் இருக்கிறார்கள். எவரும் வயதுக்கு வராதவர்கள் அல்ல. எல்லாம் மெத்தப் படித்தவர்கள்.
எல்லாரையுமா மூளை சலவை செய்து விட முடியும்?
யாராவது பார்ப்பனர் கூடவே இருந்து கடைசியில் குழி பறிப்பான். அதுதான் நித்தியானந்தாவுக்கும் நடந்தது. நடந்து கொண்டு இருக்கிறது .
சிறுமிகளை வைத்து நிதி வசூலித்தார் என்பது நன்கொடை கொடுப்பவர்களையும் அவமானப் படுத்துவதாகும். அவ்வளவு மலிவானவ்ர்களா கோடிக்கணக்கில் நிதி தர முடியும்?
சரி. இப்போது அமெரிக்க அருகே ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாச நாடு என்று பெயர் சூட்டி அவர் தன் சீடர்களுடன் தங்கி இருப்பதாக தகவல்.
இதில் ஏதேனும் குற்றம் இருந்தால் அதை ஈக்வடார் நாடு அல்லவா சொல்ல வேண்டும்?
அவருக்கு அமெரிக்கா நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் சட்ட ஆலோசனைகளை கொடுத்து செயல் படுத்தி வருவதாக தெரிகிறது.
இந்திய பாஸ்போர்டை முன்பே ரத்து செய்து விட்டதாகவும் அவரிடம் இந்திய பாஸ்போர்ட் இல்லை என்றும் சொல்கிறார்கள். அவர் வேறு எந்த நாட்டிடமும் குடிஉரிமை கேட்டு மனுக் கொடுத்ததாகவும் தெரியவில்லை.
இந்திய குடிஉரிமை சட்டத்துக்கு எதிராகவோ இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ ஏதேனும் செய்திருந்தால் அதையும் விசாரிதுத்தான் முடிவு செய்ய வேண்டும். எதையும் அவருக்கு விளக்கம் கொடுக்க அவகாசம் கொடுக்காமல் முடிவு செய்ய முடியாது.
இன்டர்போல் அறிவிப்பு கொடுத்து இருப்பதாகவும் அவர்கள் இதில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிகிறது.
எப்படியோ உண்மை வெளிவர வேண்டும் என்றுதான் எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள்.
கைலாச நாடு பாஸ்போர்ட் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அதில்
” By the grace of Parmashiva the holder of this passport is allowed free entry in all eleven dimentions and fourteen lokas including Kailasa.
“Paramashiva accepts the passport holders devotion and Integrity to Paramashiva and to this Avatar on Planet Earth, His Divine Bhagawan Nithyaananda the website said. It has space for making donations to the course of reviving Sanatana Hindu Dharma and building the world’s greatest Hindu Nation. ” He claims to have converted about 3 Lakh foreigners to Hindusim.
நித்யானந்தா பார்ப்பனர் அல்ல. அவர் எப்படி நான்கு வர்ணத்தை நியாயப் படுத்தும் சனாதன தர்மத்தை புதுப்பிக்கப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை.
மூன்று லட்சம் வெளிநாட்டவரை அவர் இந்து மதத்துக்கு மாற்றி இருப்பதாக வரும் செய்திகளில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதும் தெரியவில்லை.
நித்தியானந்தாவின் வீடியோ தான் இதில் முக்கியம்.
தான் ஏதோ பிள்ளையார் கோவில் ஆண்டி போலவும் தன்னை ஒழிக்க சர்வதேச சதி நடைபெறுவதாகவும் சொல்லும் அவர் தன்னை பொறம்போக்கு என்றும் பரதேசி என்றும் அழைத்துக் கொள்கிறார். தன்னை பரமசிவனும் காலபைரவரும் பராசக்தியும் காத்து வருவதாக கூறும் நித்தியானந்தா தான் யாருக்கும் பயப்படப் போவதில்லை என்று கூறுகிறார்.
அவர் சொல்வது உண்மையென்றால் பணம் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் ஒரு நாட்டை உருவாக்கி கொள்ள முடியுமே? அதுவா சர்வதேச சட்டம்.? நிச்சயமாக இருக்க முடியாது. ஆனால் அவருக்கு சட்ட ஆலோசனை கொடுப்பவர்கள் அவருக்கு அந்த நம்பிக்கையை ஊட்டி இருக்கிறார்கள். அது எந்த அளவு செல்லும் என்பது இனிதான் தெரியும்.
பொதுவாக இந்து ஒருவர் ஒரு நாட்டை உருவாக்குகிறார் என்றால் எல்லாருமே பாராட்ட வேண்டுமே ? ஏன் நித்தியானந்தா விடயத்தில் அது நடக்க வில்லை?
அதை ஒரு பார்ப்பனர் அல்லாதவர் செய்வதா? அதுவும் ஒரு தமிழ் நாட்டில் பிறந்த ஒருவன் செய்வதா ? இவை மட்டுமே இத்தனை எதிர்ப்புகளுக்கும் காரணம் என்றால் அதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
நடப்பது சர்வதேச சமூகம் சார்ந்தது. எனவே இதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் .
அதாவது இந்திய சட்டமும் சர்வதேச சட்டமும் .