Home Blog Page 19

சின்மயிக்கு வால் பிடிக்கும் மேல்தட்டு ஊடகங்கள்?!

சின்மயி எதை செய்தாலும் அதை பெரிதாக்கி அவரை தூக்கிப் பிடிப்பதை ஒரு வேலையாகவே செய்து வருகிறார்கள் மேல்தட்டு ஊடகங்கள்.

அதிலும் குறிப்பாக வைரமுத்துவுக்கு எதிராக ஒருதலைப்பட்ச கருத்து உருவாக்கத்தில் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

கமல் பிறந்த நாள் விழாவில் வைரமுத்து கலந்து கொண்டதையே பெரிதாக்கி அவர் ஏதோ செய்யக் கூடாத குற்றத்தை செய்ததைப் போல் இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

வைரமுத்து குற்றம் செய்து இருந்தால் அவரை எப்படி வேண்டுமாலும் தண்டிக்கட்டும். ஆனால் அதை சட்ட அமைப்புகள் மட்டும்தான் செய்ய வேண்டுமே தவிர இவர்களிடம் ஊடகங்கள் இருக்கின்றன என்பதற்காக அவர் வெளியில் தலை காட்டக் கூடாது என்பதைப் போல் இவர்களே தீர்ப்பு தருவது பெரிய கொடுமையல்லவா?

மி டூ வில் யார் குற்றம் சுமத்தினாலும் எந்த விசாரணையும் இல்லாமல் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது என்ன நியாயம்? அவர்களே குற்றம் சுமத்துவார்கள். அவர்களே தண்டிப்பார்களா?

ஏன் சின்மயி காவல் துறையை அணுகவில்லை? ஏன் அச்சப்பட வேண்டும்? ஆதாரம் இல்லை அதனால் புகார் கொடுக்கவில்லை என்றால் அது பொய் குற்றசாட்டுதானே ?

ஒன்று வைரமுத்து விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அல்லது பொய் குற்றச்சாட்டு சுமத்திய சின்மயி தண்டிக்கப் பட வேண்டும்? இரண்டில் ஒன்று நடந்தால் தான் ஊடகங்கள் இதை விவாதிக்கலாம்;

நடவடிக்கை எடுக்க மாட்டாராம். ஆனால் தண்டிக்கப் பட வேண்டுமாம். எப்போது இந்த பிரச்னை தீரும்?

மிசாவில் ஸ்டாலின் கைது சிறுபிள்ளைத் தனமான பாண்டியராஜனின் குற்றச்சாட்டு?!

நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க அமைச்சர் பாண்டியராஜன் திமுக தலைவர் முக ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது அரசியல்  காரணங்களுக்காக அல்ல என்று பேசி யாரோயோ திருப்தி படுத்த முயற்சித் திருக்கிறார்.

1971 முதல் 1977 வரை அமுலில் இருந்த மிசாவில் லட்சக்கணக்கானவர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் வைக்கப் பட்டனர். இந்திரா காந்தியின் அப்பட்டமான  சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடிய காலம் அது. எதிர்க்கட்சிகள் சொல்லொணா தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில் திமுக தொண்டர்களும் தலைவர்களும் அடக்கம்.

அப்போது முக ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் மிருகத் தனமாக தாக்கப் பட்டிருக்கிறார். அவரைக் காப்பாற்ற முயன்ற சிட்டிபாபு என்ற திமுக தொண்டர் உயிர் இழந்தார். அந்த அளவு கொடுமை அரங்கேற்றப் பட்டது.

ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்குப்  பிறகு ஸ்டாலின் கைது தனிப்பட்ட காரணங்களுக்காக என்று அமைச்சராக இருக்கும் ஒருவர் பேசுவதில் ஏதாவது பொருள் இருக்கிறதா?

ஆதாரங்களை திரட்டிக்  கொண்டிருக்கிறாராம் இரண்டு நாளில் வெளியிடுவாராம். பொன்முடி சொல்லவில்லை. இரா செழியன் சொல்லவில்லை என்பதால் மிசாவில்  கைது ஆகவில்லை என்று ஆகி விடுமா? அப்போது ஸ்டாலின் தலைவரின் மகன் என்றாலும் சாதரண தொண்டர் என்பதால் சிலர் குறிப்பிடாமல் விட்டிருக்கலாம்.

பாண்டியராஜனுக்கு துறை சார்ந்து செய்ய வேண்டிய வேலைகள் ஏராளம் இருக்கின்றன. இது போன்ற அசட்டுத் தனங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு உருப்படியாக செயல் பட்டால் நல்லது.

ரயில்வே ஒப்பந்தக்காரரின் சாதி வெறி?!

இந்திய ரயில்வேயின் உணவு தயாரிக்கும் ஒப்பந்தக்காரர் ஒருவர் நூறு ஆண் பணியாளர்கள் வேண்டும் என்று கொடுத்த விளம்பரத்தில் அவர்கள் அகர்வால் அல்லது வைஷ் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது அதிர்ச்சியை அளித்திருக்கிறது .

பிரச்னை ஆனதும் மேலாளரை மட்டும் தற்காலிக நீக்கம் செய்து விட்டு ஒப்பந்தக்காரர் மன்னிப்பு கோரியிருக்கிறார்.

ஆர் கே மீல்ஸ் என்ற அந்த நிறுவனம் தாங்கள் வேறு ஏதோ நிகழ்ச்சிக்கு இரண்டு விளம்பரங்கள் தர விரும்பியதில் தவறு நிகழ்ந்து விட்டதாக கூறி சமாளிக்க முயற்சித்திருக்கிறார்கள். .

ஆக சாதி வெறி எந்த அளவு வேரூன்றி இருக்கிறது என்பதற்கு இது ஒர் அளவுகோல்.

பொது இடங்களில் வழிபாட்டு தலங்களை அகற்ற வழக்கு?!

தமிழகத்தில் உள்ள சாலைகள், நடைபாதைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் நீர்நிலைகள், அரசு அலுவலக வளாகங்கள் என எல்லா இடங்களிலும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், என்று காணுமிடமெங்கும் ஆக்கிரமிப்புகள்.

பொது  இடங்களில் வழிபாட்டு தலங்கள் இருக்க கூடாது என்று தமிழக அரசு  சென்ற 1968ல் அரசாணை வெளியிட்டது. பின்னர் அதை அமுல்படுத்த 1994ல்  உறுதி படுத்த ஆணையிடப்பட்டது. உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை 2010ல் மதம் தொடர்பான நிகழ்ச்சிகள் அரசு அலுவலகங்களில் நடைபெறாமல் இருக்க உத்தரவிட்டது. 2009ம் ஆண்டில் உச்ச நீதி மன்றம் பொது இடங்களில் வழிபாட்டு தலங்களை கட்டுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. 

ஆனால் இவை எதுவும் அமுல்படுத்தப் படவே இல்லை.

இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் அரசு தமிழகம் எங்கும் 3168  வழிபாட்டு தலங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன என்று தகவல் தரப்பட்டு உள்ளது. இதில் 3003 கோவில்கள் 131 தேவாலயங்கள் 27 மசூதிகள் அடங்கும். இவற்றை அகற்ற உத்தரவிடக்கோரி தொடுக்கப் பட்ட பொதுநல வழக்கில் அறிவிப்பு அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதி மன்றம்.

ஆனால் அதில் ஏன் எதிர்மனுதார் களாக வக்பு வாரியம் கிறிஸ்தவ தேவாலய அமைப்புகளை சேர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பியது நீதிமன்றம். தந்தை பெரியார் திராவிடர் கழகம் இப்படி பாகுபாடு காட்டி மனு போட்டிருக்க வேண்டியதில்லை.

அரசு அலுவலகங்களில் மத படங்கள் இருந்தால் யாரையாவது பொறுப்பாக்கி தண்டித்தால்தான் இந்த வழக்கம் நிற்கும்.

அவரவர்கள் வீட்டில் வைக்க வேண்டிய சாமி படங்களை ஏன் பொது அலுவலகத்தில்  வைக்க வேண்டும்?

புகார் கொடுக்கலாம் என்று காவல் நிலையம் சென்றால் அங்கும் இதே நிலை.  காவல் நிலையங்களில் எல்லாம் இப்படி படங்கள் இருந்தால் அவர்கள் மற்றவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? 

அரசு பேருந்துகளில் திருக்குறள் நீக்கமா?!

திருக்குறளை தங்கள் ஆதாயத்துக்கு படுத்த பாஜக தீர்மானித்த பிறகு அதிமுக என்ன செய்யும்?

புதிதாக வரும் அரசு பேருந்துகளில் திருக்குறள் இல்லை என்ற செய்தி உண்மையானால் அதிமுக அரசின் எஜமான விசுவாசம் காரணமா என்ற கேள்வி நிச்சயம் எழும்.

இது தவறாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.

சென்னையில் இருந்து விழுப்புரம் திருவண்ணாமலை வேலூர் புதுச்சேரி செல்லும் பேருந்துகளில் திருக்குறள் ஸ்டிக்கர்கள் அகற்றப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகள் தரப்பு இதை மறுக்கிறார்கள். பராமரிப்பு பணி காரணமாக திருக்குறள் ஸ்டிக்கர்கள் அகற்றப் பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

எப்படியோ திருக்குறள் நீக்கம் என்ற தவறு நிகழாமல் பார்த்துக் கொள்வது போக்குவரத்து கழகத்தின் பொறுப்பு. இருக்கும் பிரச்னைகள் போதாதென்று புது பிரச்னைகள் எழ காரணமாக இருந்து விடாதீர்கள்.

அயோத்தி; உச்சநீதிமன்றத்தின் பஞ்சாயத்து தீர்ப்பு??!!

ஒருவழியாக உச்ச நீதிமன்றம் அயோத்தி ராம ஜன்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் இறுதி தீர்ப்பை இன்று வழங்கி விட்டது.

முடிவுதான் முக்கியம் என்பதால் சம்பந்தப்பட்ட ஏக்கர் 3.77 நிலத்தில் இந்துக்கள் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம். அதற்கு ஈடாக சன்னி வக்பு வாரியத்துக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் மசூதி கட்டிக் கொள்ள ஐந்து ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும். 

1500 பக்கங்கள் கொண்ட முழு தீர்ப்பையும் படித்தால்தான் ஒவ்வொரு பிரச்னையையும் உச்சநீதி மன்றம் எப்படி அணுகியிருக்கிறது என்பதை முடிவு செய்ய முடியும்.

ஆனால் இறுதி முடிவுகளை வைத்து ஆராய்ந்தால் சில முடிவுகள் சரியானவையாகவும் எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் அமைந்திருக்கிறது.

யாருக்கும் வெற்றியோ தோல்வியோ இல்லை என்றும் அமைதி காக்கும் படியும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதைத்தான் அவர் செய்ய முடியும். .

இந்துக்களுக்கு கோவில் கட்ட அதே இடம் கிடைத்து விட்ட பிறகு அது அவர்களுக்கு வெற்றிதானே என்றுதான் எண்ணத்தோன்றும். 

முஸ்லிம்களுக்கு ஈடு செய்யும் வகையில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கியது பஞ்சாயத்து செய்வது போல் தோன்றவில்லையா என்றால் இருக்கலாம் என்பதுதான் பதில். பிரச்னை தீர வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை. 

ஆறுதல் அளிக்கும் முக்கிய முடிவுகள்;

* மத சார்பின்மைதான் அரசியல் சட்டத்தின் அடிப்படை.

* 1949 ல் ராமர் சிலையை மசூதியில் வைத்தது சட்ட விரோதம்.

* 1992 பாபர் மசூதியை இடித்தது சட்ட விரோதம்.

* ஷியா வக்பு வாரியம் நிர்மொஹி அகாரா மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

* மசூதி காலி இடத்தில் கட்டப் படவில்லை.

* மசூதி கட்டப்பட்ட இடத்தில் கோவில் இருந்த ஆதாரம் இல்லை.

* ராம் லல்லா மனு மட்டுமே ஏற்கக் கூடியது.

* சன்னி வாரியம் மனு ஏற்கத்தக்கது ஆனால் நிலஉரிமை இல்லை.

* மத்திய அரசு அறக்கட்டளையில் நிர்மொஹி அகாரா இடம் பெறலாம்.

* மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிடாது.

ஆனால் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் அதிருப்தி தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்வதை ஆராயப் போவதாக தெரிவித்து எல்லாரும் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.

எப்படியோ இத்துடன் வழிபாட்டு தலங்கள் தொடர்பான பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வந்தால் நல்லது.

 ராமர் கோவிலை  மீட்டு விட்டோம்.  இதேபோல்  காசி சிவன் கோவிலிலும் மதுரா கிருஷ்ணர் கோவிலிலும் இது போன்ற முஸ்லிம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம் என்று சங் பரிவார்  கிளம்பாமல் இருந்தால் நல்லது. 

 

 

 

மராட்டியத்தில் நடப்பது பார்ப்பனர் -பார்ப்பனர் அல்லாதார் அதிகாரப் போட்டியே?!

மராட்டியத்தில் பாஜக முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இருக்கிறார். அவர்  செல்வாக்கு மிக்க பார்ப்பனர்.

பார்ப்பனர் அல்லாதாரை முதல்வராக்க சிவசேனா விரும்புகிறது. அதற்கு பாஜக தயாராக இல்லை. வாய்ப்பை பயன்படுத்தி தனது மகனை முதல்வராக்க உத்தவ் தாக்கரே விரும்பலாம்.

பார்ப்பனர்- மராத்தாக்கள் மோதல் முன்னூறு ஆண்டுகள் வரலாறு கொண்டது. சிவாஜி இறந்ததும் அவர் வாரிசுகளுக்குள் ஏற்பட்ட மோதலை பயன்படுத்தி முதன் முதலாக சித்பவன் பார்ப்பனர் ஆன பாலாஜி விஸ்வநாத் என்பவர் பேஷ்வாவாக அறிவிக்கப் பட்டார். அதாவது முதன் மந்திரி. பெயருக்குத்தான் முதன் மந்திரியே தவிர எல்லா அதிகாரங்களும் அவரிடத்தில்தான்.

அடுத்த  நூற்றைம்பது ஆண்டுகள் பேஷ்வாக்கள் ராஜ்ஜியம்தான். பெயருக்குத்தான் மராட்டா மன்னர். அதிகாரம் பேஷ்வாக்கள் கையில்.

ஆனால் பார்ப்பனர்கள் அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம் ஒட்டிக்கொண்டு அதிகாரத்தில் அமர்ந்து விடுவார்கள். பார்ப்பனர்கள் செல்வாக்கு மிக்கவர்களாகவும் அதிகாரத்தில் பங்கு வகிப்பவர்கள் ஆகவும் விளங்கும் மாநிலம் மகாராஷ்டிரா.

அந்த வகையில் இப்போதும் அந்த அதிகாரப் போட்டி நிலவுகிறது.

திடீர் என்று நிதின் கட்கரியை முதல் அமைச்சர் ஆக்கலாமா என்று திட்டம் தீட்டி வருகிறார்கள். அவரும் பார்ப்பனர் தான். எனவே அவர் வந்தால் பிரச்னை இல்லை.

சரத் பவார் தான் இன்று மராட்டா மக்களின் பிரதிநிதி என்று சொல்லலாம்.    அவர்களையும் பிரித்து இந்து என்ற போர்வையில் பல கட்சிகளிலும் சிதறடித்து விட்டார்கள்.

மராத்தாக்களுக்கு 16% இட ஒதுக்கீடு தர பாஜக அரசு முட்டுக் கட்டை போட்டு வருகிறது.

சிவசேனை இந்து மக்களின் உரிமைக்கு குரல் கொடுக்குமே தவிர மராத்தா மக்களின் உரிமைகளுக்கு என்று குரல் கொடுப்பதில்லை. சிவசேனைக்கு வாய்ப்பு வந்தபோது பால் தாக்கரே ஒரு பார்ப்பனரைத்தான் முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்தார். அவர் மனோகர் ஜோஷி. மூன்று  ஆண்டுகளில் அவரை நீக்கி விட்டு மராத்தா நாராயண் ரானே வை முதல்வராக்கினார் பால் தாக்கரே.

பார்ப்பனர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். ஆனால் எங்கிருந்தாலும் பார்ப்பநீயத்துக்கு ஆபத்து வந்து விடாமல் பாதுகாப்பதில் கருத்தாக இருப்பார்கள்.

அந்த வகையில் கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அதிகாரம் தங்கள் கையில் நிலைக்க வைக்க விரும்புகிறது ஆர்எஸ்எஸ் தலைமை.

யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது  நாளை தெரிந்து விடும்.

 

இலங்கை அகதிகளை தற்கொலை முயற்சிக்கு தள்ளி விடும் கொடுமை நிற்குமா?!

திருச்சியில் இலங்கை அகதிகள் இருபது பேர் தற்கொலை முயற்சி என்ற செய்தி நம் நெஞ்சங்களில் ஈட்டியை பாய்ச்சுவது போல் இருக்கிறது.

அந்த செய்தியில் உண்மை இருக்குமானால் இதைவிட கொடுமை இருக்க முடியுமா?

அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை கொடுக்க என்ன தடை? ஏன் அவர்கள் அகதிகளாக நீடிக்க வேண்டும்?

இதுபற்றி சரியான தகவல் தெரிவிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு  இருக்கிறது. அரசின் மௌனம் எதைக் காட்டுகிறது.?

இலங்கையில் தான் கொடுமைப் படுத்தப் பட்டார்கள் என்றால் புகலிடம் தேடி வந்த இங்குமா?

தமிழகம் தமிழர்களின் தாயகம் என்பது உண்மையானால் இப்படி நடக்குமா?

இந்தியா நமது நாடு. அயல்நாட்டில் இருந்து வந்தாலும் இனத்தால் அவர்களும் தமிழர்கள் தானே?

மியான்மரில், வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த இந்து அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்க இந்திய அரசு தயாராக இருக்கிறது. அதில் இலங்கை தமிழ் அகதிகள் மட்டும் விலக்கா என்ன?

காவிக் கட்சிக்கு கும்பிடு போட்ட ரஜினி?! தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறதாம்??!!

காவிக் கட்சிக்கு தாவப் போகிறார் என்ற வதந்திக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரஜினி காந்த்.

அவர் என்றும் சூப்பர்ஸ்டார் ஆகவே நீடிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தமிழர்களின் விருப்பம். எல்லாருமே அவர் ரசிகர்கள் ஆக கடந்த நாற்பது ஆண்டுகளாக நீடித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் எவருடைய மனதையும் நோகச்செய்யும் எந்தக் காரியத்தையும் அவர் செய்ய மாட்டார் என்பது நம்பிக்கை.

ஆனால் அது பொய்த்து விடும் போல் தெரிகிறது.

இன்று அளித்திருக்கும் பேட்டியில் இரண்டு விஷயங்களை தெளிவு படுத்தி இருக்கிறார். ஒன்று அவர்பாஜகவில் சேர மாட்டார். இரண்டாவது அவர் கட்சி ஆரம்பிக்கும் வரை நடிப்பார்.

அதாவது தமிழ் நாட்டில் தற்போது சரியான ஆளுமை மிக்க தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்கிறார். இதுதான் ஆபத்தான கருத்து.   

இது முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஒ பி எஸ்,  வைகோ, திருமாவளவன், மருத்துவர் ராமதாஸ்  உள்ளிட்ட எல்லாருக்குமே விடப்படும் சவால்.

அந்த வெற்றிடத்தை தான்தான் பூர்த்தி செய்ய சரியான ஆள் என்கிறாரா அல்லது அப்படிப்பட்ட ஆளுமையை உங்களிடம் அறிமுகம் செய்து வைப்பேன் என்கிறாரா?

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சித்ததைப் போல் தனக்கும் பூச முயற்சி நடந்து வருவதாகவும் அதில் தானும் சிக்க மாட்டேன் வள்ளுவரும் சிக்க மாட்டார் என்றார் ரஜினி.

திருவள்ளுவர் ஞானி சித்தர். அவரை எந்த சாதி மதத்துக்குள்ளும் அடைக்க முடியாது என்றும் கூறுகிறார் ரஜினி.

வள்ளுவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் நாத்திகர் அல்ல என்றும் கூறியிருக்கிறார் மிகச்சரியாக.

ஆனால் வள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சிக்கும் பாஜக வை கண்டிக்க ரஜினிக்கு மனம் இல்லை என்பதும் தெளிவாக தெரிகிறது. அது அவர்களின் விருப்பம் என்கிறார். அதை பெரிது படுத்த வேண்டாம் என்கிறார். வேறு முக்கிய  பிரச்னைகள் இருக்கின்றன என்கிறார். ஒரு தவறான பிரசாரத்தை அதுவும் தமிழர்களின் அடையாளத்தை மாற்ற முனையும் காரியத்தை எப்படி விட்டு விட முடியும்?

அடுத்த படத்தையும் முடித்து விட்டு தனிக்கட்சி தொடங்குவார் ரஜினி என்பதுதான் இப்போதைய நிலவரம்.

அவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றி எதுவும் சொல்லாமல் தான்தான் சரியான ஆளுமை என்பது மட்டுமே அவர் கொள்கையாக இருக்குமானால் அது தோல்வியில் தான் முடியும்!!

இன்று ரஜினி பேசியதும் காவிகள் வடிவமைத்துக்  கொடுத்த வசனங்களாக  இருக்குமோ என்ற சந்தேகமும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.                            ஏனெனில் ‘அரசியலில் வெற்றிடம்’ என்பது அவர்களுக்குத்தானே ஆதாயம்.    ‘ கழகங்கள் இல்லாத தமிழகம் என்றவர்கள் அவர்கள்தானே?

விவசாயத்தை ஒழிக்க வந்திருக்கும் ஒப்பந்த சாகுபடி சட்டம்?

தமிழ்நாடு விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த சாகுபடி மாற்றும் சேவைகள் (ஊக்குவித்தல் மற்றும் வசதி செய்து கொடுத்தல்) மசோதா (Tamilnadu Agriculgtural Produce and Livestock Contract Farming and Services (Promotion and Facilitation) Bill  இந்தியாவில் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்ற முதல் சட்டமாக ஆகி இருக்கிறது.

சென்ற பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இதன்படி 110 விவசாய விளைபொருள்கள் இந்த ஒப்பந்த சாகுபடி முறையில் அடங்கும். பல்வகை தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மட்டுமல்லாமல் கால்நடை மருந்துகள் உட்பட பல பொருட்கள் இதில் அடங்கும்.

ஒப்பந்த சாகுபடி என்பது சாகுபடிக்கு முந்தைய ஒப்பந்தம். இது விவசாயிகளுக்கும் விளைபொருட்களை வாங்குபவர்களுக்கும் இடையே ஏற்பாடு செய்யப்படும் ஒன்று. அறுவடைக்கு பின்னால் விளைவிப்பவர்களுக்கு சந்தைப்படுத்தலில் ஏற்படும் நிலையில்லாத் தன்மையை ஒட்டி விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களை துடைக்க இது உதவும் என்பது சொல்லப்படும் காரணம்.

ஆனால் இந்த மசோதா மத்திய அரசு பரிந்துரைத்த மாதிரி மசோதாவை பின்பற்றி கொண்டு வந்தது என்பதுதான் இதில் ஏதோ சூது மறைந்திருக்கிறது என்று சந்தேகிக்க வைக்கிறது.

சாகுபடியாளர்களின் நன்மையைக் கருதி இந்த மசோதா வடிவமைக்கப்பட்டது என்பது உண்மையா?

ஒரு நிரந்தர நிறுவன ஏற்பாடு இரு தரப்புக்கும் நன்மை தரத் தக்கதாய் அமையும் என்றெல்லாம் கூறுகிறார்கள். அது எந்தளவு உண்மை?

விளைச்சலுக்கு பிந்தைய பாதிப்பை ஈடு கட்டத்தான் பயிர் காப்பீடு திட்டம் செயல் படுத்தப்படுகிறது. அந்த திட்டம் தோல்வி அடைந்து விட்டதா?

ஒப்பந்தம் போடுகிறவர்கள் எப்படி இந்த இழப்பை ஈடுகட்டி  கொள்வார்கள்? அவர்களும் அதே காப்பீடு திட்டத்தில் சேர்ந்துதானே இழப்பீடு பெற்று அதை சாகுபடியாளர்களுக்கு தருவார்கள்? தனக்கு எந்த லாபமும் இல்லாமல் எப்படி ஒருவர் இந்த ஒப்பந்தத்துக்கு சம்மதிக்க முடியும்?

அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலை என்பது உற்பத்தி செலவை விட லாபம் தரும் விலையாக இருந்தால் சாகுபடியாளருக்கு எந்த இழப்பும் வராது.

லாபம் தரும் விலை நிர்ணயம், சரியான காப்பீடு திட்டம், இடுபொருள் தடையின்றி கிடைக்கச் செய்வது., கொள்முதலில் சுலப ஏற்பாடு இந்த நான்கும் இருந்தால் சாகுபடி சிறக்கும். அதை அரசு இதுவரை சரிவர செய்யாததுதான் விவசாயம் வீழ்ச்சி அடையக் காரணம்.

இந்த ஒப்பந்த ஏற்பாட்டில் விலையை முன்கூட்டியே தீர்மானித்து விடுவார்களாம்.

வாங்குபவர் இந்த ஒப்பந்தத்தில் தீர்மானிப்பவராக இருப்பார். ஆம். வாங்குபவர்தான் என்ன பயிரை சாகுபடி செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ன உரம் போடவேண்டும், எந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் தீர்மானிப்பார். இதில் எதையாவது சாகுபடியாளர் செய்ய தவறினால் அதன் பாதிப்பு சாகுபடியாளருக்குத்தான்.

இந்த ஒப்பந்தத்தை அரசு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அரசு இதில் ஏற்படும் ஒப்பந்த மீறல்களை குறித்து தக்க நடவடிக்கை எடுக்க ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பை உருவாக்கும். அதில் இரு தரப்பையும் பிரதிநிதித்துவ படுத்தும்  10 உறுப்பினர்கள் இருப்பார்கள். வாங்குபவர் தவறு செய்தால் ரூபாய் 15000 அபராதம் சாகுபடியாளருக்கு ரூபாய் 1500 என்றெல்லாம் அம்சங்கள் இருக்கும்.

இதில் மறைந்திருக்கும் உண்மைகள் என்ன?

அரசு இனிமேல் சாகுபடியாளரிடம் இருந்து கொள்முதல் செய்யாது. அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டு தனியாரிடம் பொறுப்பை கொடுத்து விடும்.

புரியாத புதிர். இந்த மசோதா தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் பிப்ரவரி மாதம் 2019ல்  நிறைவேற்றப்பட்டபோது ஏன் விரிவான விவாதம் நடைபெறவில்லை.

சட்ட மன்ற உறுப்பினர்களின் வேலையே அதுதானே?

இந்த சட்டம் 01/01/2020ல் அமுலுக்கு வரும் என்று ககன்தீப் சிங் பேடி கூறுகிறார். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுவிட்டது. இன்னும் தமிழக அரசு என்று அமுலுக்கு வரும் என்று அறிவிக்கவில்லை.

இந்த சட்டம் விவசாயத்தை ஒழித்துவிடும்?

போதும் விவசாயம் என்று நிலத்தை பெருமுதலாளிகளிடம் விற்று விட்டு நகரத்தை நோக்கி சிறு குறு விவசாயிகளை ஓட வைக்க மட்டும்தான் இந்த சட்டம் பயன்படும்.

அதுதானே அவர்களின் நோக்கம்.?

மசோதா நிலையிலேயே கடும் எதிர்ப்புக்கு உள்ளாக வேண்டிய மசோதா சட்டமாக வந்தபின் எழும் எதிர்ப்புகளை பொருட்படுத்தவா போகிறது?

மத்திய பாஜக திட்டமிடும் செயல்களை உண்மையாக நிறைவேற்றி வரும் விசுவாசமான கூட்டாளி அதிமுக அரசு?

ஆனால் எத்தனைதான் திட்டமிட்டாலும் உண்மையின் தாக்கம் விவசாயிகளை பாதிக்கும் போது அவர்கள் விட்டு விடுவார்களா?