Home Blog Page 20

திருவள்ளுவர் சிலைக்கு படத்துக்கு மத சாயம் பூசுவோர் மீது அரசு கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும்?!

தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி ஆடை போர்த்தி விபூதி அணிவித்து தீப தூபம் காட்டிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன்  சம்பத் காவல் துறையால் கைது செய்யப்பட்டு மாலை வரை காவல் நிலையத்தில்  வைக்கப் பட்டு விடுவிக்கப் பட்டிருக்கிறார்.

இந்து மக்கள் கட்சியோ, அல்லது வேறு யாருமோ வள்ளுவரை தங்கள் மதத்தை சார்ந்தவர் என்று எழுதி வாதிடவும் புத்தகம் எழுதவும் கருத்துரை பரப்பவும் உரிமை உண்டு.

அதன் படி வள்ளுவரை கிறிஸ்தவர் என்று கூற கிறிஸ்தவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அவர்களுக்கு வள்ளுவர் சிலைக்கு அல்லது படத்துக்கு சிலுவை அணிவிக்க உரிமை கிடையாது. அது தண்டிக்கத் தக்க குற்றமாக்கப் பட வேண்டும்.

முஸ்லிம்கள் வள்ளுவரை இஸ்லாமியர் என்று கூறட்டும். போற்றட்டும் ஆனால் திருவள்ளுவருக்கு பச்சை ஆடை உடுத்தி குல்லா போட்டு அழகு பார்க்க உரிமை கிடையாது. அந்தச் செயலை செய்தால் அது தண்டிக்கத் தக்க குற்றமாக்கப் படவேண்டும்.

அதைப்போலத்தான் ஜைனர்களும், பல ஆய்வுகள் திருவள்ளுவரை ஜைனராக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருக்கின்றன அவர்களும் போற்றட்டும். ஆனால்  அவர்கள் கூட தங்கள் சமய சின்னங்களை திருவள்ளுவர் மீது பூசக் கூடாது. அப்படி செய்தால் அது தண்டிக்கப் பட வேண்டிய குற்றமாக்கப் பட வேண்டும்.

அதைப்போல் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வோரும் வள்ளுவரை இந்து என்று சொல்லிக் கொள்ளட்டும். அப்போது இந்து என்ற சொல்லே இல்லை என்ற வாதமெல்லாம் இருக்கட்டும். ஆனால் அவர்களுக்கு திருவள்ளுவருக்கு விபூதி பூசவும் ருத்ராட்சம் அணிவிக்கவும் காவி உடுத்தவும் உரிமை இல்லை. சாணம் பூசுவதற்கு ஒப்பான செயல்கள் தான் இவை. அப்படி செய்வது தண்டிக்கப் படத் தக்க குற்றமாக்கப் படவேண்டும்.

யாரும் யாரையும் போற்றலாம். அவமதிக்க அதிகாரமில்லை

அப்படி செய்பவர்களை கைது செய்து வழக்கு போட்டால் தான் அப்படி செய்வதற்கு அவர்களுக்கு உரிமை  இருக்கிறதா என்பதை நீதி மன்றம் ஆராயும். உரிமை இல்லை என்று நீதி மன்றம் சொல்லும் வரை இந்த வாதம் நீடித்துக் கொண்டு தான் போகும். 

அடுத்த ஆண்டு நாட்காட்டிகளை வள்ளுவருக்கு விபூதி பூசி காவி உடுத்தி வெளியிடுங்கள் என்று பாஜக அறிவுறுத்தி இருக்கிறது. முன்பு பட்டையும் காவியும் இருந்ததாம் நீங்கள் பூணூல் கூடத்தான் போட்டீர்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா?  நீங்கள் செய்த அநியாயங்களை அக்கிரமங்களை ஒழிக்கத் தானே உதித்தது சுயமரியாதை இயக்கம்.

நாளையே கிறிஸ்தவர்கள் வள்ளுவருக்கு சிலுவை அணிவித்து படம் வெளியிடலாம் .    முஸ்லிம்கள் குல்லா அணிவித்து படம் வெளியிடலாம். ஏற்கெனவே கமல்ஹாசன் முகத்தோடு வள்ளுவர் படம் வெளியான கொடுமையும் நடந்திருக்கிறது. வள்ளுவருக்கு கருப்பு ஆடை அணிவித்து படம் வெளியிடுகிறார்கள். அவர் நாத்திகராம் கடவுள் வாழ்த்து பாடியவர் எப்படி நாத்திகராக இருக்க முடியும்?

1964 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது அனைவரிடமும் ஆலோசனை செய்து இறுதி செய்யப்பட்ட படம் அண்ணா ஆட்சிக்கு வந்த பின் அரசு அலுவலகங்களை அலங்கரித்து வருகிறது. அதை மாற்றுவது சமூக நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும்.

இருப்பதை மாற்றுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? பட்டையையும் காவியையும் நீக்கியது தவறு என்பது உங்கள் கருத்தானால் இதுவரை மௌனிகளாக இருந்தது ஏன்? இந்த துணிவை ஆளுகிறோம் என்ற மமதை கொடுத்ததா?

எனவே அப்படி செய்து அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பவர்கள் மீது அரசு குற்ற நடவடிக்கைகள் எடுக்க உயர் நீதி மன்றம் சொல்லித்தான் அரசு செய்ய வேண்டும் என்பதில்லை. அரசு எடுக்கத் தவறினால் நீதி  மன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியுமில்லை.

இந்த அசிங்கங்கள் நடவாமல் தடுக்க ஒரே வழி அப்படி செய்வதை தண்டிக்கத் தக்க குற்றமாக்குவதுதான்.

குற்ற நடவடிக்கைகள் எடுப்பதுதான்.

செய்யுமா தமிழக அரசு?

மாட்டிறைச்சியுடன் நாய்க்கறியும் சாப்பிடுங்கள்; பாஜக தலைவர் பேச்சு?!

பாஜக வின் மேற்கு வங்க மாநில தலைவர் திலிப் கோஷ் .

சர்ச்சை பேச்சுகளுக்கு சொந்தக் காரர். பாஜக தலைவர்கள் என்றால் இப்படித்தான் பேசுவார்கள் என்ற கெட்ட பெயரை சம்பாதித்திருப்பவர். ஆனால் அவருக்கு இப்படி பேசுவது பெருமையாக இருக்கும் போல் இருக்கிறது.

கட்சி மேலிடம் கூட இப்படிப் பட்டவர்களைத்தான் ஊக்குவிக்கிறது.

மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்கள் அவர்கள் அத்துடன் நாய்க்கறி யையும் சேர்த்து சாப்பிடலாம் என்று ஒரு பொதுக்கூட்டதிலேயே பேசியிருக்கிறார். ஏனென்றால் மாட்டிறைச்சி என்ன பலனை தருமோ அதையே தான் அந்த இறைச்சிகளும் தரும் என்பது அவரது கருத்து.

பசுக்களை வதைப்பவர்கள் சமூக விரோதிகள் என்றவர் உலகில் உள்ள மற்ற நாடுகளில் உள்ள பசுக்களை காட்டிலும் இந்தியப் பசுக்கள் பல்வேறு சிறப்புகளை கொண்டிருக்கின்றன. இந்தியப் பசுக்களில் கிடைக்கப் பெறும் பாலில் தங்கம் கலந்திருக்கிறது. இதனால் தான் அந்த பாலில் சிறிது  மஞ்சள் நிறமும்  இருக்கிறது என்றார் கோஷ். 

ஆராய்ச்சி மையம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

பாஜக மீது  மக்களுக்கு வளர்ந்து வரும் வெறுப்புக்கு இத்தகைய பேச்சுக்கள் தான் காரணம் என்பதை இவர்கள் அறிய மாட்டார்களா?

இவ்வளவு செய்தும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெல்ல முடியவில்லையே?!

காஷ்மீர் மாநிலத்தை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருமாற்றி சாதித்து விட்டோம் என்று பாஜக அரசு மார் தட்டிக் கொண்டிருக்கிறது.

இனி யார் வந்தாலும் சுலபமாக பிரிவு 370ஐ மீண்டும் காஷ்மீர் பகுதிக்கு கொண்டு  வர முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி விட்டது பாஜக.

இன்னும் ராணுவம் சூழ்ந்திருக்கும் நிலையில் தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் வாழ்கிறார்கள்.

ராணுவத்தை முற்றாக அகற்றி அங்கு மக்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையில் இந்திய தேசிய கட்சிகள் மக்கள் நம்பிக்கையை பெற முடிந்தால் அதுதான் உண்மையான ஜனநாயகம்.

சமீபத்தில் நடந்து உள்ளாட்சி தேர்தல்களில் உமர் அப்துல்லா மெகபூபா, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் பாஜகவும் சுயேட்சைகளும்  தான் முக்கிய போட்டியாளர்கள்.

நியாயமாக பார்த்தால் பாஜக அனைத்து இடங்களையும் வென்றிருக்க வேண்டும்.

ஆனால் என்ன நடந்தது? 307 வட்டங்களில் 217 இடங்களில் வென்றது சுயேட்சைகள்.    மக்கள் 96% முதல் 99% வரை தேர்தலில் கலந்து கொண்டதுதான் சாதனை.

இந்துக்கள் பெருவாரியான ஜம்மு பகுதியில் கூட 148  வட்டங்களில் 88 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்று பாஜக வென்றது 52 இடங்களில்தான்.

என்ன செய்து என்ன லாபம் என்ற நிலையில்தான் காஷ்மீரில் பாஜக நிலைமை  இருக்கிறது.

காஷ்மீர் மக்கள் பெருவாரியாக தேர்தலில் கலந்து கொண்டதை பாராட்டி பிரதமர் மோடி டிவீட் செய்து இருப்பது எதை காட்டுகிறது?

மீசையில் மண் ஒட்டவில்லை என்பதையா?!

பாஜக வளர தோள் கொடுக்க தயாரான ஜி கே வாசன்?

பிறந்தது காங்கிரஸ் பாரம்பரியம். அரசியல் செய்வது இன்னும் காங்கிரஸ் பெயரில். ஆனால் சோனியா ராகுல் இருவரும் ஒத்துப் போகாத நிலையில் தனி ஆவர்த்தனம் செய்து வந்த ஜி கே வாசன் வேறு வழியின்றி கடைசியில் பாஜகவில் ஐக்கியம் ஆவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன.

மாநிலத் தலைவர் பதவிக்காக தன் கட்சியை பாஜகவில் இணைத்து தற்கொலை செய்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால் பதவி ஆசை அரசியல்வாதிகளை எப்படியும் ஆட்டுவிக்கும் என்பதால் வாசன் எந்த முடிவுக்கும் தயாராகத்தான் இருப்பார். இனியும் செலவு செய்து கொண்டிருக்க  முடியாது அல்லவா?

சென்னையில் பிரதமர் மோடி வாசனை தன் வீட்டுக்கு அழைத்த போதே தெரிந்து விட்டது. ஆபரேஷன் ஆரம்பித்து விட்டது என்று.

இன்று டெல்லியில் வாசன் மோடியை சந்திக்க சென்றிக்கிறார். ஏதாவது ஒரு முடிவோடுதான் சென்றிருக்க வேண்டும். ஒன்றுமில்லாமல் செல்ல மாட்டார் அல்லவா?

அதிமுக கொடுக்கும் சலுகைகளை விட மத்தியில்  உத்தரவாதமாக இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கும் பாஜக நிச்சயம் அதிகமாக சலுகைகள் வழங்க வாய்ப்புகள் அதிகம்.

இதை வாசன் தவற விட மாட்டார்.

இன்னும் எத்தனை துரோகங்கள் நடந்தாலும் பாஜகவுக்கு  தமிழ் மக்கள் ஆதரவு அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது.

ஏன் அதிமுகவிலும் கூட பிளவுகள் வெடிக்கலாம். எல்லாருமா அடிமைகள் ஆகிட ஒப்புக் கொள்வார்கள்?

இன்னும் ஆறு மாதங்களில் இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறதோ பாஜக?

பிற மாநிலத்தவர் மேகாலயாவில் பதிவு செய்யாமல் நுழைய தடை ??!!

மத ரீதியாக தாக்குதலுக்கு ஆளானவர்கள் இந்தியாவில் நுழைந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

அந்த முயற்சியை எதிர்க்கும் முதல் அரசாக பாஜக அங்கம் வகிக்கும் மேகாலயா ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து விட்டது.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிற மாநிலத்தவர் நுழைய அனுமதிக்கும் இன்னர் லைன் பெர்மிட் முறை அருணாச்சல், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் அமுலில் உள்ளது. பெர்மிட்டை மத்திய அரசு வழங்கும். அந்த உரிமையை மேகாலயாவில் மாநில அரசு வழங்கும்.

ஆட்சியில் இருப்பதற்காக பாஜக எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும் என்பதற்கு  சாட்சியாக மேகாலயா கூட்டணி அரசின் இந்த முடிவு அமைந்திருக்கிறது.

பிற மாநிலத்தவர் நுழைவு  தங்களுக்கு ஆபத்து என்று கருதும் மாநிலங்கள் இதே முறையை பின்பற்றத் துவங்கும் என்பதற்கு இது முன்னோட்டமா?! 

பிற மாநிலத்தவர் ஆதிக்கம்  அதிகரித்து விட்டது என்று குமுறும் சிவசேனா இதே முறையை பின்பற்ற முனையுமோ?

மராட்டியர் ஆதிக்கம் அதிகம் என்று கர்நாடகம் தடுக்க முனையுமோ?

எதிர்காலம் தான் பதில் அளிக்க வேண்டும்!!!

விஜய் சேதுபதிக்கு எதிரான அர்த்தமற்ற போராட்டம்?

மொத்த விற்பனை செய்யும் பெரு நிறுவனம் மண்டி. அவர்கள் மளிகை பொருட்களை ஆன் லைனில் மொத்த விற்பனை செய்கிறார்கள்.

மொத்த விற்பனையை ஆன்லைனில் விற்பனை செய்வதை எதிர்த்து போராட்டம் நடத்தினால் அதில் அர்த்தம் உள்ளது. அதனால் சிறு குறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

21 லட்சம் வணிக குடும்பங்கள் தொழிலாளர்கள் வாழ்வு பெரிதும் பாதிக்கப்படும் என்றால் போராட்டம் நடத்தி ஆக வேண்டும் என்பதிலும் மாறுபட்ட கருத்து இல்லை.

ஆனால் அந்த பெரு நிறுவனம் தனது தொழிலை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஒரு நடவடிக்கை எடுத்து அதில் நடிகர் விஜய் சேதுபதியை பயன்படுத்தி இருக்கும்போது நீ ஏன் அதில் நடித்தாய் என்று கேட்டு அவர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்து வணிகர் சங்கம் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

காவல்துறைக்குத் தான் வேலை கொடுத்திருக்கிறார்கள். இதனால் அந்த நிறுவனம் தன் தொழிலை நிறுத்தி விடப்போகிறார்களா?

ஆன்லைனில் வணிகம் நடத்த அனுமதி வழங்கிய ஆட்சியாளர்களை சந்தித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வழி வகை காணாமல் இடையில் விளம்பரத்தில் வந்து போகிற நடிகருக்கு எதிராக போராட்டம் நடத்தி தங்கள் சக்தியை வணிகர்கள் வீணாக்க வேண்டாம்.

இன்று வீடு தேடி உணவு வழங்கும் ச்விக்கி உபேர் போன்ற வியாபாரிகளால் தங்கள் வணிகம் பாதிக்கப்படுகிறது என்று ஓட்டல்காரர்கள் எல்லாம் புலம்புகிறார்கள். அந்த வணிகத்தை தடை செய்ய முடியுமா?

பல ஓட்டல்கள் வியாபாரம் இன்றி மூடப்பட்டு வருகின்றன.

நவீன கால டிஜிட்டல் வணிகம் பாரம்பரிய நிறுவனங்களை புரட்டி போட்டு வருகிறது. அவைகளை சமாளிக்க புதிய உத்திகளை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

ஒரு விளம்பரத்தை நிறுத்தினால் வணிகம் நின்று விடும் என்ற நிலைமை இல்லையே? இவர் இல்லாவிட்டால் இன்னொருவர் தோன்றப் போகிறார். உங்களுக்கு பிரச்னை விஜய் செதுபதியா? ஆன்லைன் வர்த்தகமா? 

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து போராடுங்கள். விஜய்சேதுபதியை விட்டுவிடுங்கள்.

கோவில் இருப்பதால் இந்துவாகி விடுவாரா வள்ளுவர்?!

மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு 1935ல் கோவில் உருவானதாக அங்கிருக்கும் கல்வெட்டு சொல்கிறது.

27/04/1973ல் முதல் அமைச்சர் கருணாநிதி கோவில் திருப்பணியை தொடங்கி வைத்திருக்கிறார். நெடுஞ்செழியன், கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்க குன்றக்குடி அடிகள் தலைமையில் திருப்பணி குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதெல்லாம் கல்வெட்டு விபரங்கள்.

திருவள்ளுவர்-வாசுகி சிலைகள் இருந்தாலும் கூடவே ஏகாம்பரேசுவரர் உடனுறை காமாட்சி அம்மன் கருமாரி அம்மன், நவக்ரகம், சனீஸ்வரர் சந்நிதிகளும் இருக்கின்றன.

இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த கோவிலுக்கு குருக்கள் நியமிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் தெரியும் உண்மை என்ன?

கலைஞர் ஏமாந்தாரா? வள்ளுவரை இந்து என்று ஒப்புக் கொண்டாரா?

வள்ளுவரை யார் எப்படி போற்றினாலும் திருக்குறளை யாரும் மாற்ற முடியாதல்லவா?

உலகப் பொதுமறை என்று எல்லாரும் ஒப்புக் கொள்ளும் திருக்குறள் எல்லா மதத்தினருக்கும் பொதுவானது.

வள்ளுவம் பார்ப்பனீயத்திற்கு எதிரானது என்பதால் அதை கபளீகரம் செய்ய பார்பனீயம் செய்யும் முயற்சிகளில் ஒன்றுதான் இந்த கோவில் விவகாரமும்.

எதை பார்ப்பனீயம் விழுங்கவில்லை.?

உலகம் முழுதும் பரவியிருக்கும் பௌத்தம், தான் பிறந்த இந்தியாவில் செல்வாக்கற்றுப் போனதற்கு பார்ப்பனீயம் செய்த தந்திரங்கள்தான் காரணம்.

பார்ப்பநீயத்திற்கு இரையான மதங்கள் ஜைனம், சீக்கியம் என்றும் சொல்லலாம்.    தன்னை ஏற்றுக் கொள்ளாத தத்துவத்தை உறவாடி அழிப்பதே பார்ப்பனீயத்தின் இயல்பு.

அந்த வகையில் உருவானதுதான் இந்த வள்ளுவர் கோவில் பிரச்னையும். தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் தமிழகம்  முழுதும் வள்ளுவர் கோவில்கள் பரவி இருக்குமே? அவர்கள் உண்மை அறிவார்கள்.

பார்ப்பனர்கள் வள்ளுவரை தனதாக்கிக் கொள்ள செய்த சூழ்ச்சிகள் ஆயிரம். அவைகள் ஏன் எடுபடவில்லை என்றால் அவர்களுக்கு உண்மையில் அதில் ஈடுபாடு இல்லை. நாடகத்துக்கு ஒரு கோவில் கட்டினால் அதை உண்மையாக பரப்ப அவனுக்கு என்ன பைத்தியமா ?

அது மட்டுமல்ல. முன்னோர்களை நடுகல் நாட்டி வழிபடுவது தமிழர் மரபு. அந்த வகையில் கூட வள்ளுவருக்கு கோவில் அமைந்ததாக கொள்ளலாம். 

இந்த ஒன்றை சான்றாக காட்டி வள்ளுவரை இந்துவாக மத மாற்றம் செய்யும் சங்கப் பரிவாரங்களின் முயற்சி ஒருபோதும் வெற்றி அடையப் போவதில்லை.

வள்ளுவர் பற்றி உளறிக் கொட்டிய அமைச்சர் பாண்டியராஜன்?

திருவள்ளுவர் படத்துக்கு காவி பூசிய பாஜகவின் செயலுக்கு எல்லாத் தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் இது பற்றிய தனது கண்டனத்தை தெரிவித்த அதே வேலையில் இன்று நிருபர்களை ச்ந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் திருவள்ளுவர் பற்றி தனது அறியாமையை அள்ளித் தெளித்தார்.

“திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பில்லை. அவர் எந்த சமயத்தவர் என்பதற்கும் ஆதாரம் இல்லை. அவர் சைவராக இருக்கலாம். வைணவராக இருக்கலாம். எனவே அவருக்கு திருநீறு பூசுவதில் தவறு இல்லை. விரும்பினால் கிறிஸ்தவர்கள் அவருக்கு சிலுவை கூட போட்டுக் கொள்ளட்டும்.” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

அமைச்சர் உதகுமாரும் கூட இருக்கிறார். அவர் ஏதும் சொல்லவில்லை.

திருவ்ள்ளுவர் காலம் கிறிஸ்துவுக்கு 31 ஆண்டு முந்தையது என்று ஒப்புக் கொண்டு  தமிழக அரசு காலண்டர் வெளியிடுகிறது. அது கூடவா பாண்டியராஜனுக்கு தெரியாது.?

ஏன் இப்படி வைகைச்செல்வனும் பாண்டியராஜனும் முரண்பட்டு கருத்துக்கள் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் இதில் பாஜக சம்பத்தப்பட்டிருக்கிறது. அவர்களை பகைத்துக்கொள்ள பாண்டியராஜன் விரும்பவில்லை.

இனிதான் வள்ளுவர் எந்த மதம்  என்று ஆராய வேண்டும் என்கிறார் பாண்டியராஜன்.

இப்போதுதான் கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பாக நிதி ஒதுக்கி அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்த வகையில் கொஞ்சம் நல்ல பெயர் எடுத்திருந்தார் பாண்டியராஜன். அதற்குள் ஏன் இப்படி கெடுத்துக் கொள்ள வேண்டும்?

பழைய பாசத்தை எல்லாம் பாண்டியராஜன் விட்டு விட வேண்டும்.

திருவள்ளுவர் சிலைக்கு பிள்ளையார்பட்டியில் கயவர்கள் அவமதிப்பு?

திருவள்ளுவர் சிலைக்கு பிள்ளையார்பட்டியில் அதிகாலை நேரத்தில் சில கயவர்கள் சாணத்தை வீசி அவமரியாதை செய்திருக்கிறார்கள்.

எல்லாரும் கண்டனக் குரல் எழுப்பி விட்டார்கள். கட்சி மாச்சரியங்களை கடந்து எதிர்ப்புக் குரல் வலுத்த நிலையில் அதிமுக மட்டும் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வனை விட்டு கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

கட்சி சார்பில் அதிமுக கண்டனம் தெரிவித்து இருக்கிறது என்றாலும் ஆட்சியாளர்கள் தரப்பில் அரசு சார்பில் என்ன நடவடிக்கை என்று விளக்கம் தர வேண்டாமா?

திருவள்ளுவர் உருவப் படத்திற்கு பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் காவி உடை உடுத்தி விபூதி பூசி அவமரியாதை செய்ததை அனைவரும் கண்டித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை என்றால் இதற்குப் பின்னால் காவி சக்திகள் இருக்கின்றனவா என்ற கேள்வி இயல்பாக எழத்தானே செய்யும். இதை தெளிவு  படுத்த வேண்டிய நிலையில்  இருப்பது காவல் துறை.

சிலைகளை அவமரியாதை செய்யும் முட்டாள்தனம் பெரியார், அம்பேத்கார், தேவர்  அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கும் அவ்வப்போது நிகழ்வது வழக்கம்.

இப்படி செய்வதனால் அவர்களின் புகழ் ஓங்குமே தவிர மங்காது.

இப்போது டிஜிபி சிலையை அவமதித்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார். அவர்கள் மீது நான்கு பிரிவுகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் குற்றவாளிகளின் சிசிடிவி காட்சிகள் கிடைத்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். எனவே குற்றவாளிகள் பிடிபடுவது உறுதி.

உண்மை வெளிவரும் என நம்புகிறோம்.

அமித்ஷாவை மாட்டிவிட்ட எடியூரப்பா??!!

அமித்ஷாவை மாட்டிவிட்ட எடியூரப்பா??!!

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்த மத சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்து குமாரசாமியை வீட்டுக்கு அனுப்ப எடியூரப்பா தீட்டிய திட்டம் கட்சி தாவல் தடை சட்டத்தை கேலிக்குரியதாக்கியதுதான்.

17 உறுப்பினர்கள் கட்சி மாறினால்தானே தகுதி இழப்பு ?

அந்த 17 பேரையும் ராஜினாமா செய்ய வைத்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டு அவர்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்த்தார் எடியூரப்பா.

அவர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்தார்கள். எங்களுக்கு எதுவும் பங்கில்லை  என்று அன்று சொன்னார் எடியூரப்பா.

இன்று ஆட்சிக்கு வந்த பிறகு கட்சி மாறிய அவர்களுக்கு தேர்தலில் போட்டி போட வாய்ப்பு கொடுக்க நினைத்த அவருக்கு உட்கட்சியில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக ;உறுப்பினர்கள் கூட்டத்தில் ‘தியாகம் செய்த அவர்களுக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்க வில்லை என்றால் நான்  குற்றம் செய்தவன் ஆகி விடுவேன். எனது முயற்சியாலும் பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா வழி காட்டுதல் படியும்தான் இந்த 17 பேரும் ராஜினாமா செய்தார்கள். மும்பை ரிசார்ட்டில் அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் அவர்கள் பாதுகாக்கப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்கும் வகையில் பாஜக பிரமுகர்கள் நடந்து  கொள்ள வேண்டும்.” என்று எடியூரப்ப பேசிய பேச்சு சமூக வலை  தளத்தில் வீடியோ ஆடியோ வெளியாகி அதை எதிர்கட்சிகள் பிரச்னை ஆக்கி அவரது ராஜினாமாவை கோரியுள்ளார்கள்.

இனி இது நீதிமன்றம் செல்லும். அமித் ஷாவுக்கு தலைவலி கொடுக்கும். எடியூரப்பா மறுப்பார். ஆனால் சோதனையில் உண்மையா பொய்யா என்று தெரிந்து விடுமே?

இடைத்தேர்தலில் இந்த பேச்சு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆட்சியை பிடிக்கவும் கலைக்கவும் பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு கர்நாடகாவில் அது கடைப்பிடித்த மலிவான தத்திரங்கள் சாட்சி சொல்லி நிற்கும்.