Home Blog Page 21

வள்ளுவருக்கு காவி பூசிய களவாணிகள் தண்டிக்கப்பட வேண்டும்?

வள்ளுவருக்கு காவி பூசிய களவாணிகள் தண்டிக்கப்பட வேண்டும்?

திருவள்ளுவர் தந்த திருக்குறள் உலகப் பொதுமறையாக கொண்டாடப்படுகிறது.

எம்மதமும் சாராத இறைக்கொள்கையே வள்ளுவம்.

இதில் இதுவரை எந்த குழப்பமும் ஏற்பட்டதில்லை.

ஆனால் பார்ப்பனர்கள் சிலர் வள்ளுவர் அந்தணர் மரபில் வந்தவர் என்று கட்டுக் கதைகளை பரப்ப முயன்றனர். எடுபடாத முயற்சியாகி விட்டது. இன்று பிரதமர் மோடி வள்ளுவரை புகழ்கிறார். திருக்குறளை மேற்கோள் காட்டுகிறார். ஏன் என்று எங்களுக்கு தெரியாதா?

உண்மையையும் உள்நோக்கத்தையும் பாகுபடுத்தி பார்க்கத் தெரியாதவர்களா தமிழர்கள்.

தாய்லாந்து சென்று அங்கு திருக்குறளின் தாய் மொழி ஆக்கத்தை வெளியிட்டு பெருமை சேர்த்திருக்கிறார் பிரதமர் மோடி.

அதைப் பாராட்ட முனைவதற்குள் இங்குள்ள பாஜகவினர் தங்கள் வலை தளத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை போட்டு நெற்றியிலும் கையிலும் திருநீறு பூசி அவரை சைவ சமயத்தை சார்ந்தவர் போல சித்தரிக்க முற்பட்டிருப்பது கடைந்தெடுத்த ஏமாற்று வேலை.

திருவள்ளுவரை அவமதித்திருக்கிறார்கள். குற்றம் இழைத்திருக்கிறார்கள். நீதிமன்றம் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.

பொறுப்புள்ளவர்களாக இருந்தால் அவர்களாகவே முன்வந்து இந்த தவறான படத்தை உடனே நீக்க வேண்டும்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறதே மாநில அரசு ?

பல கட்சிகளும் இந்த செயலை கண்டித்து அறிக்கை விடுத்திருக்கிறார்கள். அரசு விழித்துக் கொள்ளுமா?

வெந்த புண்ணில் வேல பாய்ச்சுவதுபோல் சனாதன தர்மத்தை தான் வள்ளுவர் அறம் பொருள் இன்பம் என்று எழுதியிருக்கிறார் என்று ஒருவர் விளக்கம் சொல்கிறார்.

கடவுள் வாழ்த்தில் வள்ளுவர் சொன்ன ‘வாலறிவன் நற்றாள்‘ சொல்லாடலை சுட்டிக்  காட்டி பாஜக வாதிடுகிறது.

முக ஸ்டாலின் யாகாவாரினும் நாகாக்க குறளை பிழையில்ல்மல் சொல்லி விட்டால் மேற்படி பதிவை நீக்கி விடுகிறோம் என்று பாஜக டிவிட்டர் கூறுகிறது. ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் உள்ள பிரச்னையை தீர்க்க திருவள்ளுவர் ஏன் பந்தாடப்பட வேண்டும்?

வள்ளுவர் நாத்திகர் என்று எப்போது யார் சொன்னார்கள்? பார்ப்பனீயத்தை ஏற்றுக் கொள்ளாத ஓரிறை கோட்பாட்டை வள்ளுவம் ஏற்றுக் கொள்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவம் எப்படி பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் சனாதனத்தை ஏற்றுக் கொள்ளும்.?

சென்னை போலிஸ் ரசீதில் இந்தி புகுந்தது?

சென்னை போலிஸ் ரசீதில் இந்தி புகுந்தது?

அமித் ஷா இந்தியாவின் மொழி இந்தி என்று  என்று கூறினாரோ அப்போதே தெரிந்து விட்டது.

இனி எல்லா துறைகளிலும் இந்தி புகுந்துவிடும் என்று.

அச்சப்பட்டதைப்போலவே நடந்து வருகிறது.

சென்னை போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்து அளிக்கப்படும் ரசீதுகளில் இதுவரை ஆங்கிலம் மட்டுமே இருந்து வந்தது. இப்போது இந்தி புகுத்தப்பட்டு இந்தியும் ஆங்கிலமும் கொண்ட ரசீதுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

கேட்டால் இவைகளை தேசிய தகவல் மையம் வடிவமைப்பதால் எங்களால் தடுக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள்.

இந்தியை எல்லாவகையிலும் புகுத்துவதும் எதிர்ப்பு கிளம்பினால் ஏதாவது விளக்கம் சொல்லி முயற்சியை வேறு வகையில் தொடர்வதும் பாஜக அரசின் மொழிவெறி தொடர் கதையாகி வருகிறது.

தமிழ்நாட்டில் தரப்படும் ரசீதுகளை கூடவா மத்திய அரசு வடிவமைக்க வேண்டும்?

கண்டும் காணமல் இருக்கும் படி தமிழக அரசை மத்திய அரசு கட்டுப் படுத்துகிறது என்றுதான் மக்கள் எண்ணுவார்கள்.

இதுபற்றி தமிழக அரசுதான் நடவடிக்கை எடுத்து  தமிழ்நாட்டில் நமது நலனை பாதுகாக்க வேண்டும். 

தொடர்ந்து வரும் இந்தித் தாக்குதல்கள் இனிமேலாவது தடுக்கும் வழிகளை ஆராய்ந்து அறிவாயுதம் ஏந்தி தடுக்க முனைவோம்.

ஆங்கிலத்தில் ரசீதுகள் இருக்கும்போது ஆங்கிலேயன் நம்மை ஆளுகிறான் என்ற உணர்வு வராது. ஏனென்றால் ஆங்கிலேயன் ஆட்சி இங்கே இல்லை.

உண்மையில் அவன் தந்த மொழிதான் இந்தியாவை இதுவரை ஒற்றுமையாக கட்டுக்குள் வைத்திருக்கிறது.

ஆனால் இந்தியைப் பார்க்கும்போது இந்திக்காரன் நம்மை ஆளுகிறான் என்ற உணர்வு வருமா வராதா? ஏனென்றால் இந்தி மொழி பேசுபவர்கள் நான்கு மாநிலத்தில் இருக்கிறார்கள். ஏன் அவர்கள் மொழி என் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிர்வாகத்திற்கு பயன் படுத்தப்பட வேண்டும்?

தமிழக அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

ரஜினியை வளைக்க என்னவெல்லாம் செய்கிறது மோடி அரசு?

ரஜினியை வளைக்க என்னவெல்லாம் செய்கிறது மோடி அரசு?!

ரஜினி ஓடி ஒளிந்தாலும் விடமாட்டார்கள் போல் இருக்கிறது.

‘தர்பார்’ முடிந்து அடுத்த படத்திற்கு ரஜினி தயாரான நிலையிலும் பாஜக அவரை இழுக்கும் தன் முயற்சியை கைவிடவில்லை.

சர்வதேச திரைப்பட பொன் விழா கோவாவில் நடக்க இருக்கிறது.

அதில் இந்திய சினிமாவுக்கு பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் செய்துவரும் தன்னிகரற்ற பங்களிப்பையும் சேவையையும் கவுரவித்து அங்கீகரிக்கும் வகையில் சிறப்பு  விருதாக ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூபிலி‘ என்ற விருதை மத்திய அரசு அளிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக மத்திய  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருக்கிறார்.

சினிமாவுக்கு தொண்டு செய்ததற்கு பரிசு என்றால் எல்லாரும் மகிழ்ச்சி அடையலாம்.

உள் நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் தான் சிலரது மனதை உறுத்துகிறது.

என்ன செய்தாலும் ரஜினி அதற்கெல்லாம் மசியமாட்டார் என்றாலும் அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்ற பழமொழிக்கேற்ப சரிந்து விடுவாரோ என்ற அச்சமும் எழாமல் இல்லை.

மத்திய அரசுக்கு ரஜினி நன்றி தெரிவித்து இருக்கிறார். நாமும் வாழ்த்துவோம்.

அரசியல் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன்.      

மராட்டியத்தில் சிவசேனாவும் பாஜகவும் நடத்தும் குடுமி பிடி சண்டை?

மராட்டியத்தில் சிவசேனாவும் பாஜகவும் நடத்தும் குடுமி பிடி சண்டை?!

பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலில் நின்று ஆட்சி அமைக்கத் தேவையான 105+56 = 161 இடங்களை பெற்று விட்டார்கள். 145 இடங்கள் மட்டுமேஆட்சி அமைக்கத் தேவை.

பத்து நாளாக முதல்வர் பதவி எனக்கு உனக்கு என்று சண்டை போட்டுக் கொண்டு தேர்ந்தெடுத்த மக்களை கேலி செய்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்தலுக்கு முன் உடன்படிக்கை என்றால் அது மக்கள் மு ஏன் முன்பே வைக்கப்படவில்லை? அதிகாரத்தை சரி பாதியாக பகிர்ந்து கொள்வது என்பதே உடல்படிக்கை என்கிறது சிவசேனா. மறுக்கிறது பாஜக. இப்படிப்பட்டவர்கள் மக்கள் நலனை எப்படி முன்வைப்பார்கள்.?

2014லும் இதுபோல்தான் பாஜக முதலில் ஆட்சி அமைத்து பின்னால் சிவசேனா கூட்டு சேர்ந்தது. இப்போதும் அதே பல்லவி என்றால் மக்கள் தீர்ப்பை மதிக்கும் லட்சணம் இதுதானா?

தேசியவாத காங்கிரஸ் 54 + காங்கிரஸ் 44 ஆக எதிர்கட்சிகள் 98 இடங்களை பெற்று இருப்பதால் சிவசேனாவின் 56 இடங்களை சேர்த்து பெரும்பான்மைக்கு தேவையான 154 எண்ணிக்கை வருவதால் அதற்கும் முயற்சித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

இந்த முயற்சிக்கு தான் தயாராக இல்லை  என்று சொல்லிக் கொண்டு  இருந்த சரத் பவார் இப்போது மறுபரிசீலனை செய்கிறாராம்.

ஆனால் முதலில் பாஜகவின் படனாவிஸ் முதலில் முதல் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு பிறகு கூட்டணி விளையாட்டை தொடரலாம் என்பதே இப்போதைய நிலவரம்.

மத்தியில் ஆண்டு கொண்டு அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுவார்களா?

பாராளுமன்றத்தில் பெற்ற மகத்தான வெற்றியை சட்ட மன்ற தேர்தலில் பாஜக பெறமுடியவில்லை என்பதே நல்ல அறிகுறி.

எப்போது முடிவுக்கு வரும் இந்த விளையாட்டு?

நவம்பர் 1 தமிழ்நாடு நாள்; இழந்ததை மீட்க இருப்பதை கொண்டாடுவோம்!

நவம்பர் 1 தமிழ்நாடு நாள்; இழந்ததை மீட்க இருப்பதை கொண்டாடுவோம்!

1956  நவம்பர் மாதம் 1ம் தேதி மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள். ஆனால் அன்று தமிழ்நாட்டுக்கு இருந்த பெயர் சென்னை மாநிலம்.

நம்மிலிருந்து பிரிந்து சென்ற கர்நாடகா, கேரள, ஆந்திரமாநிலங்கள் இதே நாளை  கொண்டாடுகிறார்கள்.

நாம் கொண்டாட முடியுமா? பல பகுதிகளை இழந்திருக்கிறோம். ஆனாலும் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட 79 நாள் உண்ணாவிரதம் இருந்த தியாகி சங்கரலிங்கனார் 13/10/1956 ல் உயிர் பிரிந்த பிறகு 01/11/1956ல் தமிழ் பேசும் மக்களுக்காக ஒரு மாநிலம் உருவான போது அதற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட அன்றைய ஆட்சியாளர்களால் முடியவில்லை.

1967 ல் அண்ணா ஆட்சிக்கு வந்து தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டி இருந்தது.

அன்றைய திமுக நவம்பர் 11ம் நாளை தமிழக அமைப்பு நாளாக கொண்டாடும்படி கேட்டுக்  கொண்டது.  ஆனால் இன்று  வரை எந்த ஆட்சியாளரும் இந்த குழப்பங்களால் இதுவரை தமிழ்நாடுநாள் கொண்டாடவில்லை என்பதை மறுக்க முடியாது.

ஆனால் இன்றைய அதிமுக ஆட்சி நவம்பர் 1ம் நாளை தமிழ்நாடு நாள் ஆக அறிவித்து அரசு நிதி ஒதுக்கி விழா கொண்டாட முடிவு செய்து நிறைவேற்றி இருக்கிறது.

கொண்டாடுவோம். ஆனால் வரலாற்றை பேசி, கொண்டாடுவோம்.

இழந்த பகுதிகளை மீட்க முடியுமா என்பது வேறு. ஆனால் இழந்தோம் என்பதைக் கூடவா பேசக் கூடாது.

தியாகிகள் மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி.சங்கரலிங்கனார் நடத்திய போராட்டங்களை நினைவு கூறுவோம்.

ஆந்திரா மாநிலம் அமைய பொட்டி ஸ்ரீ ராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பிறகுதான் அங்கு போராட்டக் களம் உருவானது.

எனவே எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன்று தமிழ்நாடு நாள் கொண்டாட வேண்டிய அவசியம் அதிகரித்து விட்டது.

தமிழையும் தமிழர் பண்பையும் தனித்துவத்தையும் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் அதிகரித்துவிட்டன.

எனவே விழிப்புணர்வு மட்டுமே தமிழரையும் தமிழையும் காக்க முடியும். அதை உறுதிப்படுத்த தமிழ்நாடு நாளைக் கொண்டாடுவோம்.

தீபாவளியை தமிழர் கொண்டாடியது எப்படி?

புராணக் கதையை நம்பி யாரும் தீபாவளியை கொண்டாடுவதில்லை.

ஏதோ பாரம்பரியம் என்று எதையும் சிந்திக்காமல் கொண்டாடும் வழக்கம் மறைந்து வருகிறது நம்பிக்கையை தருகிறது.

பார்ப்பனீயம் சொல்லித்தந்த புராணக் கதைகள் ஏட்டில் மட்டுமே இருக்கின்றன.   அதற்கு ஆயிரம் விஞ்ஞான விளக்கம் சொல்லி நியாயப் படுத்தும் முயற்சிகளும் தொடர்கின்றன.

இரண்யாட்சன் பூமாதேவியை கடலுக்குள் மூழ்கடித்தான் என்றால் உலக உருண்டையான பூமி கடலையும் உள்ளடக்கியது தானே என்ற கேள்விக்கு என்ன பதில்?

நிலத்தை மட்டுமே கொண்ட பூமி எங்கே இருக்கிறது?   யார் பிரிக்க முடியும்? பிரித்தால் பூமி என்பது உருண்டையாக நீடிக்கவே முடியாதே? மச்சாவதாரம் எடுத்த மகாவிஷ்ணு பூமாதேவியை கலந்து உருவானவன்  நரகாசுரன்   அவனை அழித்த நாள் தீபாவளி என்றால் ஏன் உலகத்தில்  உள்ள பிற மனிதர்கள அதைப்பற்றி அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்?

பழமையை விட முடியாதவர்கள் தங்கள் சிந்தனையை செழுமைப் படுத்திக் கொள்ளலாம்.

தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கட்டும் என்று இறைவனை ஒளி வடிவில் வணங்குவதே சிறப்பு!

பட்டாசு வெடிப்பது மாசு விளைவிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது.

அன்றுதான் புத்தாடை அணிய வேண்டும் என்றும் அவசியமில்லை.

தீபாவளி மட்டுமல்ல. பழகி விட்ட பல பண்டிகைகளை சீர்தூக்கி பார்த்து அதனதன் தன்மைக்கேற்ற வகையில் பார்ப்பனீய சடங்குகளை தவிர்த்து நம் வழியில் கொண்டாட பழகிக் கொள்வோம்.

முற்றாக உடனடியாக நிறுத்த முடியாத பார்ப்பனீய பண்டிகைகளை அதன் சடங்குகளை தவிர்த்து நம் தன்மைக்கேற்ற வகையில் கொண்டாடி மாற்றுப் பாதையை உருவாக்க உறுதி ஏற்போம்.

திமுக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து செய்திகள் வெளியிட்டார்கள். அதில் மாற்று மதத்தினர் உட்பட எல்லாரும் அடக்கம். ஆனால் எவருமே தீபாவளியில் நரகாசுரன் வதம் பற்றி எதுவுமே சொல்ல விரும்பாமல் அல்லது சொல்ல வெட்கப்பட்டு அதை தவிர்த்து பொதுவாக தீமைகள் அகன்று நலம் பிறக்கட்டும் என்றோ ஒளி பிறக்கட்டும் என்றோ சொல்லித்தான் வாழ்த்தினார்கள்.

அந்த அளவுக்காவது சுயமரியாதையை பெற்றிருக்கும் இந்த தலைமுறை தமிழ் சமுதாயத்தை யாரும் அடக்கி ஆண்டு விடமுடியாது.

சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது பாஜக உறுதி? கோட்சேவுக்கும் கொடுப்பார்களோ?

விநாயக் தாமோதர் சாவர்க்கர்!

இந்து மகாசபையின் பிதாமகர். 5 ஆண்டுகள் அதன் தலைவராக இருந்தவர். 1923லேயே இந்துத்வா என்ற தனது கொள்கை நூலை எழுதியவர்.

இந்து மகா சபையில் இருந்துதான் ஹெக்டேவார் விலகி ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தொடங்குகிறார். இந்து மகா சபைக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவர்கள் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க இலக்கு வைத்தார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கம் அதிகாரத்தில் இல்லாமல் சமுதாய இயக்கமாக இயங்கி ஆட்சிக்கு வருபவர்களை தனது ஆளுகைக்குள் அடக்கி வைக்க இலக்கு வைத்தது. அவ்வளவுதான். இருவருக்கும் இடையே கொள்கை அளவில் பெருத்த வேறுபாடு இல்லை.

சாவர்க்கர் ஒன்றும் விடுதலை போராட்ட வீரர் இல்லை. பிரிட்டிஷ் அரசு அவரை  அந்தமான் சிறையில் வைத்தது விடுதலை போராட்டத்துக்காக அல்ல. ஆங்கில அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காகவும் நாட்டில் இந்து முஸ்லிம் குழப்பம் ஏற்படுத்துகிறார் என்பதற்காகவும்தான்.

வெள்ளையனே வெளியேறு என்ற குயிட் இந்தியா இயக்கம் அரசாங்க வேலையில் இருப்பவர்களை விலகி வரச்சொல்லி காங்கிரஸ் அழைப்பு விடுத்தபோது ஒரு இந்து மகா சபை உறுப்பினர் கூட வேலையை  விடக் கூடாது என்று உத்தரவு போட்டவர் சாவர்க்கர்.

காந்தி கொலையான நாளுக்கு முன்னர் கோட்சேவும் நாராயண் ஆப்தேவும் சாவர்க்கரிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றதாகவும் வெற்றியுடன் திரும்புங்கள் என்று சவர்க்கர் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பி வைத்ததாகவும் சில சாட்சிகள் கூறினார்கள். காந்தி கொலையானவுடன் 05/02/1948ல் சாவர்க்கர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப் பட்டார். விசாரணையில் ஊர்ஜிதப் படுத்தும் சாட்சி இல்லை கூறி விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் காந்தி கொலை பற்றி  விசாரிக்க அமைக்கப்பட்ட ஜீவன் லால் கபூர் கமிஷன் தனது அறிக்கையில் சாவர்க்கரின் மேற்பார்வையில் தான் காந்தி கொலைக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன என்று கூறியது. ஆனால் அந்த அறிக்கை 1969ல் வெளியானபோது 1966 லேயே சவர்க்கர் இறந்திருந்தார்.

அதேபோல் பாரதிய ஜன சங்கத்தை தொடங்கிய டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியும் முன்னாள் இந்துமகா சபை உறுப்பினர்தான்.

ஆக ஆர்எஸ்எஸ் இன்றைய பாரதீய ஜனதா கட்சியாகிய முன்னாள் பாரதிய ஜன சங்கம் இரண்டையும் தொடங்கியவர்கள் முன்னாள் இந்து மகா சபை உறுப்பினர்களே.

இன்றளவும் காந்தி கொலை செய்யப்பட்ட ஜனவரி 30 தேதியை வீர நாள் ஆக (Bravery Day) கொண்டாட கோரிக்கை வைக்கிறது இந்துமகா சபை. அவரது சிலையை திறந்து வைக்க பிரதமர் மோடியை அழைக்கும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் இருக்கிறது.

ஒருபுறம் காந்தியை தேசத்தின் தந்தை என்று அழைத்துக் கொண்டே அந்த தேசபிதாவை கொன்ற கோட்சேவையும் அவரின் குருவான சவர்க்கரையும் கொண்டாட முனையும் தந்திரம், துணிச்சல், வெட்கமின்மை பாஜகவுக்கு மட்டுமே உண்டு. கேட்டால் நாங்கள் எங்கே கோட்செவை கொண்டாடுகிறோம் அது  இந்துமகா சபை செய்யும் வேலை என்பார்கள்.      

காந்தியை கொன்ற கோட்சேவை கொண்டாடும் நாட்டில் கூண்டில் ஏற்றப்படப் போவது நீதியாகத்தான் இருக்கும்.

ஸ்டாலினுடன் அடாவடி சண்டை போடும் மருத்துவர் ராமதாஸ்?

அசுரன் படம் பார்த்து விட்டு முக ஸ்டாலின் வெற்றிமாறனையும் தனுஷையும் பாராட்டும் நோக்கில் இது படம் அல்ல பாடம் என்று கருத்து பதிவிட்டிருந்தார்.

காலம் காலமாக அடிமைப் படுத்தப்பட்டு வரும் ஒரு சமூகத்தின் தற்கால தலைமுறை எதிர்த்து நின்று போராடத் தயாராகி விட்டதை படம் உணர்த்துகிறது. இது காலத்தின் கட்டாயம்.

ஆனால் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து ஒருகாலத்தில் ‘தமிழ்க் குடிதாங்கி’ என்று திருமாவளவனால் பாராட்டப் பெற்ற மருத்துவர் ராமதாஸ் இப்போதெல்லாம் தலைகீழாக மாறிவிட்டார்.

எனவே படத்தின் கருத்துக்கு பாராட்டு தெரிவிப்பதற்கு மனமில்லாமல் பாராட்டிய ஸ்டாலினை சீண்டும் நோக்கில் நல்லது முதலில் உங்கள் முரசொலி ஆக்கிரமித்துள்ள பஞ்சமி நிலத்தை திருப்பி கொடுங்கள் என்று பதிவிட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் ஸ்டாலின் முரசொலி தனியார் பட்டா நிலம் என்றும் அதன் பட்டா நகலையும் வெளியிட்டார். அதற்கு மீண்டும் மருத்துவர் ராமதாஸ் பட்டா 1985, ஆண்டில் வாங்கப்பட்டது. அதற்கு முன்பு யார் பெயரில் இருந்தது. முன்பு எப்படி அந்த இடத்தில் அரசு சார்பில் தாழ்த்தப்பட்டோர் விடுதி இயங்கியது என்று கேள்வி கேட்டுள்ளார். இப்படி டிவிட்டரில் நிலம் தொடர்பான விசாரணை நடத்துவது எந்த விதத்தில் சரி என்பதை மருத்துவர் ராமதாஸ்தான் சொல்ல வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் என்றால் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

அதிக காலம் ஆண்டது அதிமுகதான். அவர்கள் விட்டு விடுவார்களா? அண்ணா அறிவாலயம் இருக்கும் இடம் தொடர்பாக வழக்கு போட்டு ஜெயலலிதா அலைக்கழிக்கவில்லையா? அதேபோல் முகாந்திரம் இருந்தால் அரசுதான் இது தொடர்பாக விளக்கமோ நடவடிக்கையோ எடுக்க வேண்டுமே தவிர முறைகேடாக குற்றம் சாட்டுவது மருத்துவருக்கு அழகல்ல.

உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டு தொடரும் என்று ஜிகே மணி அறிவித்து இருப்பதன் மூலம் பாஜக விடம் இருந்து மருத்துவருக்கு சிக்னல் கிடைத்துவிட்டது தெரிகிறது. 

அரசியல் தரம் தாழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.

எழுவர் விடுதலை; அமைச்சரவை முடிவை ஏற்க மறுத்த ஆளுநர்?! மௌனம் காக்கும் அரசு??!!

நீட் தேர்வு விலக்கு கோரிய தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஏற்றுக்  கொள்ள வில்லை என்பதையும் இரண்டு ஆண்டுகளாய் மறைத்தார்கள்.   மீண்டும் சட்டம் இயற்றி அனுப்புவோம் என்ற முக ஸ்டாலின் ஆலோசனையை  ஏற்க மறுத்து கடிதம் எழுதி விட்டு காத்திருக்கிறார்கள்  அதிமுக அரசினர்.

அதே வஞ்சகத்தை எழுவர் விடுதலை பிரச்னையிலும் தொடர்கிறது மத்திய அரசு.

உச்ச நீதிமன்றம் மாநில அரசு முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்று சொன்ன பிறகு தமிழக  அமைச்சரவை கூடி தீர்மானம் போட்டு ஆளுனருக்கு அனுப்பினார்கள்.   ஓராண்டாகிறது.   எதுவும் தெரியவில்லை.

இப்போது தகவல் கசிகிறது அதுவும் ஆந்திர பத்திரிகையில்.   அதாவது ஆளுநர் தமிழக முதலமைச்சரிடம் தான் எழுவரை விடுதலை செய்யக் கோரும் தீர்மானத்தை  ஏற்கவில்லை என்பதை.

யாரும் இதை மறுக்க வில்லை.    ஆளுநருக்கு அமைச்சரவை முடிவை மறுக்கும் அதிகாரம் கிடையாது என்பதை உச்சநீதி மன்றம் பல தீர்ப்புகளில் தெளிவாக சொல்லி விட்டது.

இப்போதும் ஆளுநர் மறுக்கிறார் என்றால் அது மத்திய  அரசின் முடிவுதான்.     இவராகவா  தனியாக முடிவெடுக்கிறார்?

ஆக  பாஜக அரசின் முடிவைத்தான் பன்வரிலால் புரோகித் நிறைவேற்றுகிறார்.

அதை முறையாக அனுப்பினார் என்றால் மீண்டும் அமைச்சரவை கூடி மீண்டும் அதே முடிவை மீண்டும் அனுப்பப் வேண்டும்.   அப்போது ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலை உருவாகும்.

அதை செய்யாமல் மீண்டும் நீதிமன்றம் சென்றால் அவர்களும்  இதைத்தான் சொல்வார்கள்.

இரண்டாவது முறையும் அமைச்சரவை பரிந்துரை  செய்தால் கூட அதையும் பந்வாரிலால் மறுப்பார்.   வேண்டுமானால் நீதிமன்றம் சென்று அது தவறு என்று தீர்ப்பு வாங்கி வாருங்கள் என்பார்.   அதில்  கொஞ்சம் வருடங்கள் செல்லட்டுமே அவர்கள் சிறையில் வாடட்டுமே ??!!

இன்னும் எத்தனை காலம் இவர்கள் ஏமாற்றுவார்கள்?

கல்கி ஆசிரமத்தில் சிக்கிய ரூபாய் 93 கோடி ?! ஆன்மிக வணிகத்தில் கொள்ளை லாபம்??!!

முன்னாள் எல்ஐசி முகவர் விஜயகுமார் இந்நாள் கல்கி பகவான்.  இவர் மனைவி அம்மா பகவான்.

ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு மாநிலங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் கல்கி பகவானுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் ரூபாய் 93  கோடி அளவுக்கு சிக்கியது  .   அதில் ரொக்கம்  62  கோடி , தங்கம் வைரம்  31 கோடி  நகைகளும் அமெரிக்க டாலர்களும் கைப்பற்றப் பட்டிருக்கின்றன.

அவருக்கும் அவர் மகனுக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கும் என்கிறார்கள். அவர் மனைவியும் தானும் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொள்வது கூடுதல் தந்திரம்.

ஆன்மிக வியாபாரம் எப்படி நாட்டில் கொடிகட்டிப் பறக்கிறது பாருங்கள்.

எல்லாம் நடுத்தர மேல்தட்டு மக்களின் பணம். நம்பிக்கையை விதைத்து  ஆசையை தூண்டி மக்களின் தேவைகளை காசாக்கிக் கொள்ளும் தந்திரம்.   

இது இந்திய தண்டனை சட்டத்தின் எந்த பிரிவு பொருந்தும் என்பது காவல் துறைக்குதான் வெளிச்சம்.

மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை தாங்களாகவே விரும்பி ஏமாறும் நிலைக்கு தள்ளுவது தண்டிக்கத்தக்க குற்றமா இல்லையா என்பதை நீதிமன்றங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு , ஆந்திரா  . கர்நாடகா என்று மாநிலம் மட்டுமல்ல அகில உலகத்திலும் இவர்கள் ஆசிரமம் அமைத்து அங்கேயும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளர்கள் .

சென்ற ஐந்தாண்டுகளில் ஐநூறு கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவே இல்லை என்பது வருமான வரித்துறையின் குற்றச்சாட்டு.

நமது கவலை வருமான வரி மட்டும்தான் பிரச்னையா?

மக்களை ஏமாற்றுவது தண்டிக்கப் படத்தக்க குற்றம் அல்லவா?   அதற்கு யாரும் புகார் கொடுத்தால்தான்  விசாரணை  நடவடிக்கை எல்லாம் இருக்குமா?

தானாக முன்வந்து இந்த குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்க சட்டத்தில் இடமே இல்லையா?

நான் சட்டப்படி ஏமாற்றுகிறேன் என்னை சட்டம் தண்டிக்க முடியாது என்பதுதான் இவர்களின் நிலை.

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று நாம் பாடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

இந்த செய்திகளை பார்த்தாவது மக்கள் அங்கு செல்வதை நிறுத்துவார்களா?!