Home Blog Page 22

வடவர் பசப்பு பற்றி அன்றே சொன்னார் அண்ணா??!!

தமிழ் மொழி உலகத்தின் மிக தொன்மையான மொழி! ஐநாவில் பேசும்போது கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழர் கொள்கையை பறை சாற்றியது! தமிழ் நாட்டுக்கு வந்தபோது சீன அதிபருடன் தோன்றும்போது வேட்டி சட்டையில் மிளிர்ந்தது! அவருக்கு தமிழிலேயே வரவேற்பு சொன்னது! நமது பிரதமர் தமிழின் மீது கொண்டிருக்கும் நேசத்துக்கு தமிழர் அவரைக் கொண்டாட வேண்டாமா என்று இங்கே ஒரு பொன்னார் பொங்கியது!

ஆகா! அடடா! நமது பிரதமர் தமிழின் மீதும் தமிழர் மீதும் அத்தனை பற்றா கொண்டிருக்கிறார் என்று சிலரின் மனம் சலனப்படும் அளவு பிரச்சாரம் செய்யப் படுகிறது.

19/06/1955ல் அண்ணா தம்பிக்கு எழுதிய  கடிதத்தில் ‘மானே! தேனே! சொன்னவர் பற்றி வடவர் பசப்பு’ என எழுதியதை பேராசிரியர் அ ராமசாமி நினைவூட்டுகிறார்.

அண்ணா சொல்கிறார்;

“இப்போது  பாரத நாட்டியம்  கருநாடக சங்கீதம், கதகளி, திராவிட மொழி, திராவிட சிற்பம் இவைகளை இன்னும் பதம் கெடாமல் பாதுகாத்திடும் வித்தகர்களின் திறமை, புலமை ஆகியவற்றை வடநாட்டவர் பாராட்டிப் பேசும்போது எனக்குத் தம்பி ரோம்நாட்டின் மாளிகையிலே கண்ணீரையும் கவிதையையும் சேர்த்து வடித்துக் கொடுத்த கிரேக்க அடிமையின் கவனம்தான் வருகிறது.

மிகப் பழங்காலம் முதற்கொண்டே வளமாக இருந்த திராவிடம் என்று அவர்கள் புகழ்கிறார்கள்; மிக உயர்ந்த மொழி திராவிடத்தில் இருக்கிறது என்று அவர்கள் பாராட்டுகிறார்கள்; பாராட்டிவிட்டு எனினும் இந்தி படித்தால்தான் வாழ்வு உங்களுக்கு என்று துணிந்து கூறுகிறார்கள்.

முறையை மாற்றினால் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் செய்துவிடலாம் என்ற நினைப்பில் வந்த வண்ணம் இருக்கிறார்கள் வட நாட்டுத் தலைவர்கள்.

அடிக்கடி செல்வோம்; அன்பாகப் பேசுவோம்; புகழ் பாடுவோம்; புன்னகைக் காட்டுவோம் அவர்கள் ஏமாந்து போவார்கள்; எடுபிடி ஆகி விடுவார்கள் என்று எண்ணுகிறார்கள்.

புகழுரை பொழிவதன் மூலம் மயங்கி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் வடநாட்டுத் தலைவர்களுக்கு நாம் ஏமாளிகள் அல்ல என்பதை  எடுத்துக் காட்ட வேண்டும். வழுக்கி விழுந்த வனிதாமணிகள் வந்தார்க்கு விருந்தளிக்கட்டும். தாயகத்தின் தளை ஓடித்திட  நாம் பணியாற்றுவோம்.”

இன்று அண்ணா இல்லையே என்ற ஏக்கம் பிறக்கிறதல்லவா ?

இருந்தாலும் அவர் ஊட்டிய அறிவாயுதம் இருக்கிறதே !

ஆறுதல் அடைவோம்! தெளிவு பெறுவோம்!!

நீட் பயிற்சி மைய கொள்ளையர்கள் வளர மத்திய அரசு காரணம்?!

மருத்துவ படிப்பின் மீதான மோகம் மிகப் பெரிய மோசடிகளுக்கு வித்திடுகிறது.

சமுதாய அந்தஸ்துடன் நிலையான வருவாய் அளிக்கும் ஒரே படிப்பாக மருத்துவம் இருப்பதாக பெரும்பாலோர் கருதுவதால் இந்த இழி நிலை.

மருத்துவம் சமுதாய தொண்டு என்று யாரும் படிக்க வருவதில்லை.

அதனால்தான் பெற்றோரே பிள்ளைகளை முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முனைகிறார்கள்.

தகுதி பெற்றோர் மட்டுமே மருத்துவம்  படிக்க  வேண்டும் என்பதுதான் நீட்டின் நோக்கம் என்றால் நிர்வாக ஒதுக்கீட்டில் தகுதி பெற்றோர் மட்டும்தான் சேர்க்கப்படுகிறர்களா ? நீட்டின் நோக்கம் நிர்வாக ஒதுக்கீட்டில் நிறைவேறாது என்றால் எதற்கு நீட்? 

நீட் தேர்வே தேவையில்லை என்று போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நீட்தேர்வு கட்டாயம் என்று இருப்பதால் நீட் தேர்வை மையமாக வைத்து பயிற்சி மையங்கள் காளான்கள் போல பெருத்து விட்டன.

அத்தகைய பயிற்சி மையங்களுக்கு விதி முறைகள்  ஏதும் இல்லை.  அதனால்  அவர்கள் வைத்ததுதான் சட்டம்.   கேட்பதுதான் கட்டணம்.

நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி நிர்வாகம் சார்பில் நீட் பயிற்சி மையம் நடத்தப் பட்டு  வருகிறது.

வருமான வரி அதிகாரிகளுக்கு வந்த தகவல் அடிப்படையில் அவர்கள் சோதனை நடத்தியதில் ரூபாய் இருநூறு  கோடி அளவுக்கு வருமானம் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து முப்பது கோடி ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப் பட்டிருக்கிறது.

ரசீது வழங்காமல் பணம் வசூலிப்பது  அதிக கட்டணம் என்று முறைகேடாக சம்பாதித்த பணம் பல நூறு கோடிகளில் இருக்கும் எனத் தெரிகிறது.

அரசுக்கு வரி ஏய்ப்பு மட்டும்தான் பிரச்னை. அதை கட்டி விட்டால் எத்தகைய முறைகேட்டையும் அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதுதான் இன்றைய நிலை.

ஒரு தவறான திட்டத்தை மக்களிடம் திணித்தால் அவர்கள் அதை எதிர்த்துப் போராடுவதற்குப் பதில் அதில் தாங்கள் மட்டும் எப்படி பயனடையலாம் என்று முயற்சிப்பதே இத்தகைய முறைகேடுகளுக்கு காரணம்.

பயிற்சி மையத்தில் படிக்கும் அத்தனை பேருக்கும் இடம் கிடைத்து  விடப்  போவதில்லை. ஆனாலும் அலைகிறார்கள்.

ஒன்று நீட் பயிற்சி மையங்களுக்கு விதிமுறைகள் வகுக்க வேண்டும் அல்லது நீட்டையே ஒழிக்க வேண்டும். இதில் இரண்டாவதுதான் எளிதில் பிரச்னையை தீர்க்கக் கூடியது.

 

அன்புமணிக்கு அமைச்சர் பதவி கேட்டு மோடியை சந்தித்தாரா மருத்துவர் ராமதாஸ்?

எழுவர் விடுதலை, காவேரி-கோதாவரி இணைப்பு, பாதுகாக்கப்பட்ட டெல்டா வேளாண் மண்டலம்  என்று பல கோரிக்கைகளுக்கு வடிவம் கொடுக்கத்தான் பிரதமர் மோடியை டெல்லி சென்று அன்புமணியுடன் சந்தித்த தாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறினாலும் பலர் அவர் சந்தித்தது தன் மகன் அன்புமணிக்கு அமைச்சர் பதவி கூறித்தான் என்று சொல்கிறார்கள்.

இது ஒரு ஊகம்தான்.

ஆனால் மருத்துவர் பிரதமரை அவர் சென்னை வரும் நாள் முன்தினம் டெல்லி  சென்று பார்த்து இந்த கோரிக்கைகளை கொடுத்தார் என்பதுதான் கேள்விகளை எழுப்புகிறது.

பிரதமரும் நாளை சென்னை வரும்போது பாருங்கள் என்று கூறாமல் அனுமதி வழங்கி இருக்கிறார். பெரிய மனதுதான்.

அப்படி ஓர் கோரிக்கையை எழுப்பி இருந்தாலும் அதில் தவறு ஏதும் இல்லை.

ஆனால் அனு தினமும் மத்திய அரசை குறை கூறி  அறிக்கை வெளியிடும் ராமதாஸ் தன் வார்த்தைகளில் கண்டனத்தை மழுங்கச் செய்து விட்டிருந்தாலும் இத்தனை கேடுகளை செய்யும் மத்திய  அரசில் அனுபுமணி சென்று என்ன செய்து விட முடியும் என்பது தெரியாதா?

முன்பு அமைச்சராக இருந்தபோது என்னவெல்லாம் செய்து சாதனை செய்தார் என்று பட்டியலிட்டு கோரிக்கை வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆப்பரேஷன் தமிழ்நாடு என்று திட்டம் தீட்டி செயல்பட தொடங்கி இருக்கும் பாஜக எந்த வணிகத்துக்கும் தயாராகவே இருக்கும்.

பகிரங்கமாக கோரிக்கை வைத்தால் இன்னும் பலர் போட்டிக்கு வந்து விடுவார்களே என்ற தயக்கம் கொஞ்சம் இருக்கலாம். இல்லாவிட்டால் பகிரங்கமாக கோரிக்கை வைக்கவும் தயங்க மாட்டார்.

உண்மை நெடுநாள் உறங்காது. வெளிவந்தே தீரும்.

ரபேல் விமானத்துக்கு தேங்காய் உடைத்து எலுமிச்சை வைத்து பூசை செய்த ராணுவ அமைச்சர்?

பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற நமது ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல் ரபேல் விமானத்தை பெற்றுக்கொண்டார்.

அப்போது விமானத்துக்கு பூசைகள் செய்தார். அதுதான் இப்போது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

விமானத்தில் ஓம் என்று சமஸ்கிரிததில் எழுதுவதும் தேங்காய் உடைத்து எலுமிச்சை  பழங்களை நான்கு சக்கரங்கள் அடியிலும் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை செய்திருக்கிறார்.

இது இந்தியாவின் இந்துக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று நம்பியதால் அவர் அதை செய்திருக்கிறார்.

ஒரு மத சார்பற்ற அரசின் பிரதிநிதியாக தன்னை அவர் பார்க்கவில்லை.

அதை இந்துக்கள் மத்தியில் தன்னை ஆழமாக பதிய வைக்கும் என்று அவர் நம்பியதால் தான் அவர் இதை செய்திருக்கிறார்.

அரசு அலுவலகங்களில் மத சடங்குகள் கூடாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு  சொல்லி இருக்கின்றன. அது மதிக்கப்பட வேண்டாமா? அரசே சட்டத்தை மீறலாமா?

ராஜ்நாத் ஏன் தன் வீட்டில் தன் மத சடங்குகளை செய்கிறார் என்று யாரும் கேட்க வில்லை.

இதற்கு பதில் சொல்லும் வகையில் நிர்மலா சீதாராமன் முன்பு இருந்த வேற்று மத அமைச்சர் இதுபோன்று தன் மத சடங்கை செய்தபோது ஏன் யாரும் விமர்சிக்க வில்லை என்று கேட்டிருக்கிறார்.

ஒருவேளை அவர் ஏ கே அந்தோணியை மனதில் வைத்து கேட்டார் என்று வைத்துக் கொண்டாலும் யார் செய்திருந்தாலும் தவறுதான்.

அதற்காக நாங்களும் அந்த தவறை செய்வோம் என்பது எப்படி சரியாகும்.?

பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளுக்கு தீனி போடுவது மத வெறியை வளர்க்க மட்டும் தான் உதவும். நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு அது கேட்டையே தரும்.

அரசியல் சட்டத்தில் செகுலர் என்று இருப்பதை எடுத்துவிட்டு பின்பு பாஜக அரசு இதுபோன்ற காரியங்களை செய்யட்டும்.

முயன்றால் தெரியும் அதன் விளைவுகள் என்ன வென்று.?

ராஜீவ் கொலையை நியாயப் படுத்தி சீமான் பேசியது எழுவர் விடுதலைக்கு தடையாகுமா?

விக்கிரவாண்டி இடைதேர்தலில் சீமான் பேசும்போது ‘ஆமாம் நாங்கள்தான் ராஜிவை கொன்றோம். எங்கள் இனத்தை அழித்த குற்றத்துக்கு எங்கள் மண்ணில் தண்டனை கொடுத்தோம்’ என்று பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

 அது உண்மையாக இருந்தால் சீமான் பெருந் தவறை செய்திருக்கிறார்.            பேசியது சட்டப்படி குற்றமா என்பதெல்லாம் இருக்கட்டும்.

இப்படி பேசுவது எழுவர் விடுதலையில் சிக்கலை உருவாகும் என்பது அவருக்கு தெரியாதா?

விடுதலைப் புலிகள் இன்னமும் இருக்கிறார்கள். மீண்டும் எழ முயற்சிக்கிறார்கள்.  என்றெல்லாம் குற்றம் சுமத்தி இந்திய அரசு, இல்லாத விடுதலை புலிகள் மீதான தடையை இன்னமும் நீடித்துக் கொண்டு இருக்கிறது. 

ராஜிவ் காந்தி இலங்கைப் பிரச்னையைக் கையாண்டது மிகப் பெரிய ராஜதந்திர பிழை.

அமைதிப் படையை ஏன் அனுப்பினோம்? யாரைப் பாதுகாக்க? அமைதியை நிலைநாட்ட என்று சொல்லி உள்ளே நுழைந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டதை யாருமே வரவேற்க வில்லை. அது மிகப் பெரிய தாக்கத்தை, இந்தியாவுக்கு எதிரான தாக்கத்தை உருவாக்கியது என்பதை மறுக்க முடியுமா?

 தமிழர்களும் சிங்களர்களும் செய்து கொள்ள வேண்டிய ஒப்பந்தத்தை இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்டது ஏன்?

அதனால்தான் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் மு கருணாநிதி திரும்பி வந்த இந்திய அமைதிப் படையை வரவேற்க செல்ல மறுத்து விட்டார். அப்போது யாராவது ராஜ துரோகம் என்று குற்றம் சாட்டினார்களா?

என் இனத்தை சுட்டுக் கொன்றவர்களை வரவேற்க மாட்டேன் என்றார் கலைஞர்.

இந்தியா ஈழத் தமிழர்களுக்கு நியாயம் பெற்றுத் தந்ததா, இல்லை அவர்களை வஞ்சித்து விட்டதா என்பது பற்றி கருத்து வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன.

அதெல்லாம் இருக்கட்டும், ராஜீவ் காந்தி செய்தது எல்லாம் தவறுதான்.  வரலாற்றுத் தவறுதான்.

                      அதற்காக அவரை நம் மண்ணில் கொலை செய்ததை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

                      பழி வாங்கல் தமிழ் மண்ணின் பண்பாடா? 

விடுதலைப் புலிகள் கோழைகள் அல்ல.    ராஜீவ் காந்தி கொலைக்கு புலிகள் பொறுப்பேற்கவில்லை.

அது ஒரு துன்பியல் சம்பவம் என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு.

சர்வதேச சதியே ராஜீவ் கொலைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு இன்னமும் அப்படியே இருக்கிறது.

விடுதலைப் புலிகள் அவர்கள் மண்ணில் வீரம் செறிந்த போரை நடத்தினார்கள்.    பிரபாகரன் தமிழ் இனத்தின் தவப்புதல்வன். தமிழர் அனைவரும் கொண்டாடவேண்டிய தலைவன். போர் தர்மத்தை கடைபிடித்து இறுதிவரை  போரிட்டு வீழ்ந்த போராளி. சிங்கள பொதுமக்களுடன் விடுதலைப் புலிகள் போரிட்டதே இல்லை. 

இத்தகைய மாபெரும் வீரனுக்கு ராஜீவ் கொலை தந்தது புகழா களங்கமா என்பதை வரலாறுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ராஜீவ் கொலை பற்றிய மர்மங்கள் இன்னும் அவிழ்க்கப் பட வில்லை.

சந்திராசாமி மறைந்து விட்டார். முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைந்து விட்டார்.  சு.சாமி பரமசிவன் கழுத்தில் இருக்கம் பாம்பைப் போல் இருக்கிறார்.

உண்மைகள் வெளி வருமா என்பதே தெரியவில்லை.

இந்நிலையில் சீமான் பேச்சு பிரச்னையை இன்னமும் சிக்கலாக்குகிறது. இவர் தலைவர் ஆவதற்கு ஈழத் தமிழர் விலை கொடுக்க வேண்டுமா?

நாங்கள் கொன்றோம் என்றோம் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவரா? அதன் தலைவரை நேரில் பார்த்து வந்து விட்டால் நீங்களும் புலிகளாகி விடுவீர்களா?

சீமான் பேசியது சட்டப்படி குற்றமா என்பதை காவல் துறையும் நீதிமன்றமும் தீர்மானிக்கட்டும்.

காங்கிரசாரும் இதை பெரிது படுத்துவது பாஜக வுக்குத்தான் கொண்டாட்டமாக இருக்கும்.

வன்னியருக்கு உள் ஒதுக்கீடு பிரச்னையில் ராமதாசை சிக்கலில் மாட்டிய ஸ்டாலின்?!

வன்னியருக்கு  இட ஒதுக்கீடு பிரச்னையில் மிகவும் பிற்பட்டோருக்கு  20 %  ஒதுக்கியவர் கலைஞர். அதில் வன்னியரோடு பல பிற்பட்டோரையும் சேர்த்ததில் ராமதாசுக்கு மனக்குறை இருந்தாலும் கோரிக்கை நிறைவேறியதில் அவருக்கு மகிழ்ச்சிதான்.

இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி  திமுக தலைவர் முக ஸ்டாலின் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு திமுக ஆட்சியில் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது ராமதாசுக்கு தலைவலியை உண்டாக்கி இருக்கிறது.

ஏற்கெனெவே அருந்ததியருக்கு தாழ்த்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில்  3% உள் ஒதுக்கீடு செய்து அமுல் படுத்தியவர் கலைஞர்.  இப்போது ஸ்டாலின் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு செய்ய உறுதி அளித்துள்ளதால் அவரால் அதை செய்ய முடியும் . அதை அவர் செய்தால் தனக்குள்ள வன்னியர் பிரதிநிதி என்ற முத்திரை காணாமல் போய் விடும். அந்த அச்சம் தான் இப்போது மருத்துவரை ஆட்டிப்  படைக்கிறது.

நன்றி சொல்லவும் முடியவில்லை. ஏன் என்றால் சில நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடியை சந்தித்து தன் மகனுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா அல்லது வழக்கில் இருந்து விடுபட உதவி கேட்டாரா என்பது தெரியவில்லை.

ஆனால் மறுநாள் சென்னை வரும் பிரதமரை அதற்கு முதல் நாள் டெல்லி சென்று சந்தித்தால் பல ஊகங்கள் வெளி வரத்தான் செய்யும்.

இந்நிலையில் பிரதமரை சந்தித்த கையோடு பிரச்சாரத்துக்கு செல்லப் போகிறேன் என்று அறிவித்திருப்பது ஊகத்துக்கு மேலும் வலு ஊட்டுவதாக அமைந்திருக்கிறது.

குறைந்த பட்சம் உள் ஒதுக்கீடு பிரச்னையில் ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்பதாக அறிவித்திருக்கலாம். அதை செய்யவும் மருத்துவருக்கு மனமில்லை.

வன்னியர்களின் ஏகப் பிரதிநிதியாக இனி ராமதாஸ் கோலோச்ச முடியுமா என்பது இந்த இடைத்தேர்தலில் தெரிந்துவிடும். 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை குழி தோண்டி புதைக்கும் காங்கிரஸ் தலைவர்கள்??!!

தேசிய அளவில் மதவாத பாஜக வுக்கு பதில் சொல்லக் கூடிய மதசார்பற்ற சோஷலிச முற்போக்கு கொள்கைகளை கொண்ட கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் அதை வளர விட மாட்டோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதன் தலைவர்களாக இருப்பவர்களே செயல்படுவதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

எழுவர் விடுதலை பிரச்னையை எடுத்துக் கொள்வோம்.

ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு பின்னர் பதினெட்டு பேர் விடுதலை செய்யப்பட்டு மீதமுள்ளவர்களின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு அவர்களும் இருபத்தி ஒன்பது ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டு இப்போது எல்லா ஆயுள் தண்டனை கைதிகளையும் போலவே எங்களையும் விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையும் விசாரிக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் மாநில அரசு இது பற்றி முடிவு செய்யட்டும் என்று அனுமதி வழங்கிய பிறகு அமைச்சரவையும் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி அவர் அமைச்சரவை தீர்மானத்தைத் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் முடிவை அமுல் படுத்துங்கள் என்று ஆளுனரை கேட்பதில் யாருக்கு என்ன தயக்கம் கருத்து மாறுபாடு இருக்க முடியும்?

காங்கிரசுக்கு இருக்கிறது.  அது எப்படி இந்த மண்ணில் வளர முடியும்?                மாநில தலைவர் கே எஸ் அழகிரி நாங்கள் எழுவர் விடுதலையை எதிர்ப்போம் என்கிறார். பின்னர் சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்கிறார். சட்டம் மாநில அமைச்சரவை தீர்மானம் போட்டு நிறைவேறி ஆளுநருக்கு அனுப்பி விட்டது, கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா?

ஆளுநர் அமைச்சரவையில் முடிவுக்கு கட்டுப் பட்டவரா இல்லையா? அவர் மத்திய அரசின் கண்காணியாகவே இருக்கட்டும். அதற்காக மாநில அமைச்சரவையை அதன் முடிவை அமுல்படுத்த மாட்டாரா?

புதுவை துணை நிலை ஆளுனருக்கே அமைச்சரவையின் முடிவில் தலையிட அதிகாரம் இல்லை என உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்லி  இருக்கிறது.

ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டார்கள் என்பது உண்மையா இல்லையா? அப்படியானால் இன்னமும் ராகுலும் பிரியங்காவும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்களா? 

அவர்களே மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றால் நீங்கள் யார்? தமிழர்கள் ஆக கூட இருக்க வேண்டாம். மனிதர்கள் இல்லையா?

சீக்கிய முதல்வர் பியாந்த் சிங்கை சுட்டுக் கொன்ற கொலையாளிகளுக்கு மன்னிப்பு  அளித்தது  உங்கள் காங்கிரஸ்.

இந்திரா காந்தியை கொன்ற கொலையாளிகள் சீக்கியர் என்பதால் மன்மோகன் சிங்கை ஒதுக்கி விட்டீர்களா? எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்? நல்ல வேலையாள் கிடைத்தார் என்பதாலா?

எழுவர் விடுதலை ஆதரிப்பதன் மூலம் காங்கிரசின் மதிப்பு கூடுமே தவிர குறையாது.   

பெருந்தன்மை வேண்டாம். மனிதாபிமானம் கூடவா இல்லை.

வெளங்கிடும் காங்கிரஸ்?

மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? குஜராத் பள்ளியில் கேள்வி?!

அரசு உதவி பெறும் ஒரு தனியார் பள்ளி ஏராளமான கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறது.

அதில் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன ஒரு தேர்வில் ‘மகாத்மா காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?’ என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

கொலைகாரன் கோட்சேவால் தேசத்தந்தை கொலை செய்யப் பட்டதை மறைக்க இந்த கேள்வி கேட்கப்பட்டதா?

ஆட்சியாளர்கள் இதனால் மகிழ்வார்கள் என்று கருதி இப்படி ஒரு கேள்வியை புகுத்தினார்களா?

நிச்சயம் இந்த கேள்வியை தயாரித்தவர் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை அறியாதவராக இருக்க முடியாது.

வேண்டுமென்றே இப்படி ஒரு கேள்வியை தயாரித்து ஏன்?

இதற்கு ஒரு விசாரணை நடத்தி வேண்டும் என்றே குற்றம் இழைத்திருந்தால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படித்தான் தங்கள் நிலைப்பாட்டை யார் மூலமாகவாவது தெளித்து விடுவது அவர்களுக்கு கை வந்த கலை.

அரசு இதில் சம்பந்தப் படவில்லை என்று கழன்று கொள்வார்கள். ஆனால் இதை அரசு அனுமதிக்குமா? நடவடிக்கை எடுக்குமா? பாஜக அரசில் எது வேண்டுமானாலும் நடக்கும்??!!

பூரண கும்ப மரியாதையை தடுத்த சீன அதிபரின் அதிகாரிகள்??!!

இந்தியா ஒரு மத சார்பில்லா நாடு.

அதன் அரசியல் சட்டத்தில் மதசார்பின்மை, செகுலர், கோட்பாடாக இணைக்கப் பட்டுள்ளது.

அதை இந்து ராஷ்ற்றமாக மாற்றும் முயற்சியில் பாஜக அரசு இறங்கி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆர் எஸ் எஸ் இன் கொள்கை இந்து ராஷ்ற்றம். எனவே பாஜகவுக்கும் அதே கொள்கைதானே?

சீனக் குடியரசு கம்யுநிச்டுகளின் ஆட்சியில் இருக்கிறது.

பௌத்தர்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அரசில் மதத்தை புகுத்த முடியாது.

ஒரே கட்சி சீன கம்யுனிஸ்டு கட்சி பல கட்சிகள் இருக்கின்றன. எல்லாம் கம்யுனிஸ்டு கட்சிக்கு ஆலோசனை கூறும் கட்சிகளே தவிர நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்று கூறும் எதிர் கட்சிகள் அல்ல. அதுதான் சீனாவின் தனித்துவம் .

அத்தகைய நாட்டின் அதிபர் இந்தியாவுக்கு வரும்போது அவருக்கு எத்தகைய வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதை அவர்களுடன் கலந்து முடிவு செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் இந்த நாட்டின் அடையாளம் இந்து மதம் என்று கூறுபவர்கள் ஆயிற்றே. அதனால் நாங்கள் எங்கள் மத ரீதியில் வரவேற்கிறோம் என்று உலகுக்கு காட்ட எண்ணி மயிலாப்பூர் கோவில் அர்ச்சகர்களை வரவழைத்து பூரண கும்ப மரியாதை கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அது பார்ப்பனர்கள் சம்பந்தப்பட்ட மத சடங்கு. அப்படி செய்தே தீர வேண்டும் என்றால் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்களையும் வைத்து வரவேற்பு கொடுங்களேன்.  எல்லாருக்கும் அரசின் நடவடிக்கைகளில் பங்கு இருக்க வேண்டும்.

அதை சீன அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் தவிர்க்கும் படி கூறிவிட்டதால் அதிபருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட வில்லை. அர்ச்சகர்கள் வேறு வழியின்றி திருப்பி அனுப்பப் பட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன அரசு தன் அலுவல்களில் மத சடங்குகளை தவிர்க்கிறதா இல்லையா? 

தங்கள் கொள்கையை வலியுறுத்திய சீன அதிகாரிகளுக்கு பாராட்டு.

அரசே தவிர்த்திருக்க வேண்டிய சம்பவம் இது.

எதிர்காலத்தில் ஆவது அரசு முகத்தில் கரியை பூசிக்கொள்ள வேண்டாம் என்பதே பொதுமக்களின் விருப்பம்.

49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்த காவல்துறை?!

தேசதுரோக குற்றப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்  என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

படைப்பாளிகள் மீது இந்த பிரிவில் வழக்கை பதிவு செய்த பிறகு நாட்டில் பெரும் கண்டனங்கள் எழுந்தன. என்னென்னவோ செய்து  பார்த்தும் நிலைமை மோசமாகி வந்தது.

இந்நிலையில் முசாபர்பூர் காவல் துறை சிறப்பு கண்காணிப்பாளர் மனோஜ் குமார் இந்த வழக்கில் கூறப்பட்ட புகார்கள் விஷமத்தனமானவை என்றும் அவற்றுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும் விசாரணையில் தெரிய வந்ததால் அவர்கள் மீது  பதியப் பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இப்போது கேள்வி?  ஒரு  காவல் துறை கண்காணிப்பாளருக்கு தெரியும் சட்டம் இதை பதிவு செய்ய உத்தரவிட்ட தலைமை நீதித்துறை நடுவருக்கு தெரியாதா?  எதன் அடிப்படையில் வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார் அவர் என்பதையும் விசாரித்து மக்களுக்கு  தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

சாதாரணமாக எந்த  குற்றத்தையும் விசாரித்து முடிவெடுக்க வேண்டிய கடமை காவல் துறைக்குத்தான் இருக்கிறது.

அது முதல் புகார் காவல் துறையிலேயே கொடுக்கப் பட்டிருந்தால் அதுதான் நடைமுறை. அவர்கள் விசாரித்து முடிவெடுக்கலாம். ஆனால் இங்கு புகார் நீதிமன்றத்தில் கொடுக்கப் பட்டு நீதிமன்றம் அதில் சொல்லப் பட்ட புகாரை படித்து அதன் பின் வழக்கை  பதிவு செய்ய  உத்தரவிட்டிருக்கிறது. மேலெழுந்த வாறு பார்த்தாலே குற்றம் நடந்த அறிகுறி தெரிந்தால் தான் விசாரிக்க வேண்டும்.

இந்த புகாரில் பிரதமருக்கு மனு கொடுத்து அதில்  கும்பல் கொலைகளை விசாரியுங்கள். அது நாட்டுக்கு பெருத்த அவமானம் என்று புகார் சொல்லி இருக்கிறார்கள். விசாரித்து பதில் கொடுப்பதுஸ் பிரதமர் அலுவலகத்தின் கடமை.    அவர்கள் இந்த மனு குற்றம் என்று சொன்னார்களா?  பிரதமர் அலுவலகம் புகார் எதுவும் கொடுக்காத நிலையில் யாரோ ஒருவர் விளம்பரம் தேடி புகார் கொடுத்தால் அதை பதிவு செய்வீர்களா?

பாதிக்கப் பட்ட படைப்பாளிகளுக்கு என்ன நட்ட ஈடு கொடுப்பது ? யார் கொடுப்பது?

விளம்பரம் தேடி புகார் கொடுத்த வக்கீல் சுதிர்குமார் ஓஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடுமை என்னவென்றால் அந்த வக்கீல் வழக்கை ரத்து செய்த கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை கோரி மீண்டும் புகார் கொடுத்திருக்கிறாராம்.

சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அவர்மீது வக்கீல்கள் சங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையில் பொதுமக்கள் கருத்து பொய்ப்புகாரை அடக்கி விட்டது என்பதுதான் மகிழ்ச்சிக்குரிய உண்மை.