Home Blog Page 23

தேவேந்திர குல வேளாளர்; முடிவெடுக்க திணறும் எடப்பாடி அரசு?

பள்ளர், குடும்பர், காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பண்ணாடி ஆகிய ஆறு வகுப்புகளை தாழ்த்தப்பட்டோர் பிரிவிலிருந்து நீக்கி தனியாக தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்பது டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றோரின் கோரிக்கை.

இதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க கலைஞர் கருணாநிதி நீதியரசர் ஜனார்தனன் தலைமையில் ஒரு நபர் கமிட்டியை 02/02/2011ல் அமைத்தார். பதவி இழந்ததால் அதன் அறிக்கை தாக்கல் ஆனதா என்பதே தெரியவில்லை.

அதன் பின் எடப்பாடி அரசு ஹன்ஸ் ராஜ் வர்மா தலைமையில் நான்கு நபர் கமிட்டியை அமைத்தது. அதன் அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டதாகவும் ஆனால் அதன் முடிவுகளை அரசு ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பது தெரியவில்லை.

நாங்குநேரி இடைதேர்தலில் புதிய தமிழகம் கொடியை பயன்படத்தக் கூடாது  என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் வரை பிரச்னை போகிறது.

சென்னை பல்கலை கழகத்தின் டாக்டர் சுமதி என்பவர் ஓராண்டு காலம் ஆய்வுகளை நடத்தி இது தொடர்பாக ஒரு அறிக்கையை அளித்து உள்ளார். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பதும் தெரியவில்லை.

இதுபோல் சமுதாயங்கள் தொடர்பான பிரச்னை களை எப்படி தீர்ப்பது என்று உச்ச நீதிமன்றம் வழி காட்டியுள்ளது. குமாரி மாதுரி பாட்டில் என்பவர் வழக்கில்  இது போன்ற பிரச்னைகளை சமுதாயங்களை பற்றிய நுண்ணிய அறிவும் ஆய்வும் செய்த நபர்களை கமிட்டி உறுப்பினர்களாக போட்டு முடிவெடுக்க  வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறது.

ஆனால் எடப்பாடி அரசு ஹன்ஸ் ராஜ் வர்மா தலைமையில் நான்கு நபர் கமிட்டி அப்படி தகுந்த வர்களாக இருக்கிறார்களா ? 

இவர்கள் தனி வகுப்பானால் அவர்களுக்கான இட ஒதுக்கீடு என்ன என்பது கேள்வியாகும். இப்போது இருக்கும் இட ஒதுக்கீட்டில் மறு பரிசீலனை செய்ய வேண்டி வரும். என்ன செய்யப் போகிறது அரசு?

இது தொடர்பாக எடப்பாடி அரசுதான் விளக்க வேண்டும்.

காந்தி தொடங்கிய ஹரிஜன் சேவக் சங் பள்ளிகளுக்கு நிதியை நிறுத்திய மத்திய அரசு?

மகாத்மா காந்தியின் 150  வது பிறந்த தின விழாக்களை கொண்டாடும் மத்திய அரசு அவரது பெயரை பயன்படுத்தும் அளவு அவரது கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறதா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.

ஏற்றுக் கொள்கிறார்கள். உதட்டளவில். நடைமுறையில்?

1932 ல் காந்தி சேவக் சங்கத்தை தொடங்கினார். இன்று நாட்டின் 26 மாநிலங்களில் அதற்கு கிளைகள் உள்ளன. அதன் நோக்கம் தீண்டாமையை ஒழிப்பது மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே சங்கத்தின் நோக்கம் .

தமிழ்நாட்டில் திருக்கோவிலூர் மதுரை என  இரண்டு இடங்களில் பள்ளிகள் உள்ளன. இரண்டிலும் சுமார் நானூறு மாணவர்கள் பயில்கிறார்கள். எல்லாம் தாழ்த்தப்பட்ட மிகப் பிற்பட்ட வகுப்பினர். இரண்டிற்கும் சுமார் பத்துபேர் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்கள் பணி புரிகிறார்கள்.

இந்த இரண்டு பள்ளிகளுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய சமூக நீதித்துறை நிதி ஒதுக்குவதை நிறுத்தி விட்டது. வேறு வழியில்லாமல் பள்ளிகளை மூடும் முடிவுக்கு அந்த சங்கம் வந்து விட்டது. 15 பள்ளிகள் 6 ஆக குறைந்துவிட்டன.

இதுதான் நரேந்திர மோடி அரசு  காந்திக்கு  செலுத்தும் மரியாதை.

விளக்கமாவது தருவார்களா??!!

ஒரு வக்கீல், ஒரு நீதிபதி, 49 பேரின் மனு; காலனியாதிக்க ராஜதுரோக குற்றம்?

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 124 A, பிரிட்டிஷ் காலனியாதிக்க ராஜதுரோக தண்டனைக்கான குற்றம்?

விடுதலை அடைந்து எழுபதாண்டுகளுக்கு பின்னரும் அந்தப் பிரிவை பயன்படுத்தி இந்திய குடிமகன் ஒருவரை அச்சுறுத்துகிறது என்பது நமக்கு இழிவைத்தான் தரும்.

இதில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று தாராளமாக சொல்லி  விட முடியும்.

ஆனால் உண்மை என்ன.

வழக்கு தொடுத்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜாவுக்கு இந்த வழக்கு நிலைக்காது என்று தெரியாதா?

அவர் எழுநூறுக்கும் மேலான பொதுநல வழக்குகளை தொடுத்தவராம். எல்லா சின்ன சின்ன காரியங்களுக்காக. எதுவும் நிலைத்ததாக தகவல் இல்லை.

மோடி அரசுக்கு எதிராக யாராவது குற்றம் சுமத்தினால் அச்சுறுத்துவது மட்டுமே அவரது நோக்கமாக இருக்கும் போல்தான் தோன்றுகிறது.

கும்பல் கும்பலாக சேர்ந்து கொண்டு கொலைசெய்வதை 49 படைப்பாளிகள் கண்டித்து இதை தடுத்து நிறுத்த பிரதமரை கேட்டுக் கொண்டு கடிதம் எழுகிறார்கள். இதைத்தான் ராஜதுரோகம் என்கிறார் வக்கீல் ஓஜா. வக்கீல் சொல்வதாவது புரிந்து கொள்ள முடியும். அதுதானே அவரின் வேலை.

வழக்கமாக காவல் நிலையத்தில் புகார் – மறுத்தால் நீதிமன்ற மூலமாக நடவடிக்கை.  இதுதான் வழமை.

ஆனால் இங்கு வக்கீல் நீதிமன்றத்திலேயே புகார் கொடுக்கிறார். அதை தலைமை குற்றவியல் நீதிபதி சூர்யா காந்த் திவாரி அனுமதித்து முதல்  தகவல் அறிக்கை பதிவு செய்ய  காவல் துறைக்கு உத்தரவிடுகிறார். இதுதான் மிகுந்த மனவலியை தருகிறது. நீதிபதிக்கு உள்நோக்கம் இருக்க முடியாது. ஆனால் தவறான புரிதல் இருக்கலாம். அதுதான் இந்த நிலையை உருவாக்கி இருக்கிறது.

அந்த 49 பேரில் எவரும் அரசியல்வாதிகள் அல்ல. எந்த கட்சிக்கும் எதிரானவர்களும் அல்ல. பின் ஏன் அவர்கள் பேரில் இத்தனை வன்மம்?

ராமச்சந்திர குஹா, அடூர் கோபாலகிருஷ்ணன், ஷ்யாம் பெனகல், அபர்ணா சென், அனுராக் காஷ்யாப், மணிரத்னம், ரேவதி எல்லாம் எந்த வகையிலும் அரசியல் தொடர்பு உள்ளவர்கள் அல்ல. எல்லாரும் தங்கள் வழியில் ஆகச் சிறந்த படைப்பாளிகள். அவர்களுக்கு மோடி அரசை குறை சொல்லி ஆகப்போவதென்ன?

அதைவிட வேடிக்கை வேறு 62 பேர் மோடி அரசுக்கு ஆதரவாக அரசுக்கு கடிதம் எழுதி தாங்கள் எல்லாம் இந்த 49 பேருக்கு எதிரானவர்கள் என்று காட்டிக் கொண்டார்கள். அதாவது அரசுக்கு ஜால்ரா? எவரும் எப்படி மனுக் கொடுப்பது ராஜத் துரோக குற்றம் ஆகும் என்றும் விளக்கி சொல்லவே இல்லை.

ஆனால் இங்கே ஒருவர் இருக்கிறார். பொன்னார் என்ற முன்னாள் அமைச்சர். அவர் சொல்கிறார். மனு கொடுப்பது தவறில்லை. ஆனால் மோடி அரசு எதுவுமே செய்ய வில்லை என்று குற்றம் சாடுவதுதான் தவறு என்கிறார். குற்றம் சாட்டினால் என்ன நடவடிக்கை எடுத்தோம் என்று சொல்லி விட்டுப் போவதுதானே முறை. அதை விடுத்து ராஜ துரோகம் வழக்கா போடுவீர்கள்? கேட்டால் எங்களுக்கும் வழக்குக்கும் தொடர்பு இல்லை என்பீர்கள்.

இந்த கொடுமையை மேல் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டால் தான் நீதி காப்பாற்றப்படும்.

இல்லாவிட்டால் வழக்கு நிலுவையில் இருக்கும். நடவடிக்கையும் இருக்காது. எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை பாயும் என்ற அச்சுறுத்தல் மட்டும் இருக்கும். அதுதானே உங்களுக்கு வேண்டும்.

இதுதான் நமக்கு கவலையை தருகிறது. அதாவது எல்லாம் செய்வார்கள். ஆனால் எதிலும் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று சொல்லி விடுவார்கள்.

விஜயதசமி விழாவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். அதில் வன்முறையை அரைகுறையாகத்தான் கண்டித்திருக்கிறார். அதாவது இந்த வன்முறை ஒருதலைப் பட்சமானது அல்ல என்கிறார். அதாவது தூண்டப் பட்டது என்று பொருள் எவ்வளவுதான் தூண்டினாலும் சட்டத்தை நாம் கையில்  எடுத்துக் கொள்ளக் கூடாது என்று  அறிவுறுத்தும் பகவத் ‘லிஞ்சிங்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி இந்தியாவின் பேரைக் கெடுக்காதீர்கள் என்கிறார்.

கொலை செய்வது பேரை கெடுக்குமா? லிஞ்சிங் நடைபெறுகிறது என்று குற்றம் சுமத்துவதால் பேர் கெடுமா? குற்றம் சுமத்தக் கூடாதா? குற்றம் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று தன் அமைப்பின் தொண்டர்களுக்கு  அவர் அறிவுரை கூறி இருக்கிறார். அது சரி. ஆனால் கண்டிப்பவர்கள் குற்றம் சாட்டக் கூடாது என்கிறாரே அது சரியா?

அவசர நிலை பிரகடனத்தை நீதிமன்றங்கள் சட்டத்துக்கு புறம்பானது என்று அப்போது கூறவில்லை .

மக்கள்தான் இந்திராவை தூக்கி எறிந்து ஜனநாயகத்தை காப்பாற்றினார்கள்.

இப்போதும் நீதிமன்றங்கள் அமைதி காப்பது  சரியா?

பேனர் வைப்பதில் அரசியல் கட்சிகளுக்கு ஒரு நீதி! அரசுக்கு ஒரு நீதியா! விலக்கு விதித்த உயர்நீதிமன்றம்

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்து போனதின் காரணமாக அரசியல் கட்சிகள் பேனர் வைப்பது தடை செய்யபட்டது.

ஒரு வழியாக இனி பேனர் கலாசாரம் இருக்காது என்று நினைத்த நேரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் சென்னை வருகையை ஒட்டி அவர்களை வரவேற்பதற்கு பேனர்  வைக்க அனுமதி  கேட்டு மாநில அரசு உயர் நீதிமன்றத்தை அணுக நீதிமன்றமும் அனுமதி அளித்து உத்தரவிட்டு  இருக்கிறது.

நீதிமன்றம் தானாக இந்த அனுமதியை தரவில்லை அரசு அணுகியது. அதுவும் பிரதமரும் சீன அதிபரும் வருவதை ஒட்டி அனுமதி கேட்கும்போது நீதி மன்றத்தால் மறுக்க முடியவில்லை.

அனுமதியையும் வழங்கி விட்டு பேனர் விழுந்து யாராவது இறந்தால் அதிகாரிகளின் மேல் குற்ற வழக்கு  பதியுங்கள் என்று உத்தரவும் இட்டிருக்கிறது. 

பேனர் வைக்காமல் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடியாது என்பதா நிலைமை.

கட்டுபாடுகளை விதித்து  ஐந்து நாட்களுக்கு மட்டும் இந்த அனுமதி அதற்கு வாக்குமூலம் தாங்கள் செய்யுங்கள் என்று எல்லாம் உத்தரவிட்டு இருந்தாலும் நாளை வேறு  சிலர் தங்களுக்கும் அனுமதி வேண்டும் என்று இதே நீதிமன்றத்தை அணுகினால் மறுக்க முடியுமா நீதிமன்றம்??

நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு அரசியல் கட்சிகளுக்குத்தான் அரசுக்கு அல்ல என்றாலும் அரசு தார்மீக ரீதியாக முன் உதாரணமாக பேனர் கலாச்சாரத்துக்கு  முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா? 

இந்த விதி விலக்கு கோரியதில் மத்திய அரசின் பங்கு என்ன?

கவனிக்கத் தக்க அம்சம் என்னவென்றால் உயர்நீதி மன்றம் அரசுக்கு அனுமதி பெற தேவையில்லை என்ற கருத்தையும் பதிவு செய்திருப்பதுதான். 

அரசு அனுமதி பெற தேவையில்லை என்றே வைத்துக் கொள்வோம்.   பிறருக்கு அனுமதி மறுக்கும் அரசு தான் மட்டும் பேனர் வைப்பது எப்படி நியாயமாகும்.?

தான் விதித்த விதியை தானே மீறலாமா?

பேனர் வைப்பதில் அரசியல் கட்சிகளுக்கு ஒரு நீதி! அரசுக்கு ஒரு நீதியா!!

ராதாபுரம்; வாக்கு எண்ணிக்கை வழக்கில் மறுக்கப்படும் நீதி??!!

தாமதிக்கபடும் நீதி மறுக்கப்பட்ட நீதியே!

2016 ல் நடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கில் முடிவு தெரிவதற்குள் ஐந்து ஆண்டுகள் கடந்து விடும் போல் தெரிகிறது.

ராதாபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை வழக்கில் இனி திமுகவின் அப்பாவு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டாலும் அவருக்கு இழக்கப் பட்ட அநீதிக்கு எப்படி ஈடு செய்ய முடியும்?

இந்த தாமதத்திற்கு யார் பொறுப்பு?

அதிமுகவின் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லும் என்றே அறிவித்தாலும் அப்போதும் தமிழக அரசு குற்றவாளியாகத் தான் பார்க்கப் படும். ஏனென்றால் தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்றாகி விடும். அதாவது நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கெஜெட்டட் அதிகாரி என்ற  தமிழக அரசின் உத்தரவு,

நடுநிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர் கெஜெட்டட் அதிகாரி என்ற பெயரில் சான்றொப்பம் வழங்கியது தான் பிரச்னை. அவரை அதிகாரமுள்ளவர் என்று அறிவித்தது தமிழக அரசு. அதை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்ளாமல் 203  தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் முடிவை அறிவித்தார். இன்று உயர்நீதி மன்ற நீதிபதி அவர் அதிகாரமுள்ளவர் என்று அறிவித்து அந்த வாக்குகளையும் சேர்த்து எண்ணி முடிவை அறிவிக்க உத்தரவிட்டார். இதுதான் இப்போது உச்சநீதிமன்ற பரிசீலனையில் இருக்கிறது.

அதை சேர்த்தால் வெறும்  49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இன்பதுரை தோற்றவராக அறிவிக்கப் படுவார்.

மேலும் மூன்று சுற்று வாக்குகளையும் மறு எண்ணிக்கை  செய்ய வேண்டும் என்பது அப்பாவுவின் கோரிக்கை.

வேறு பல அம்சங்களில் ஒரு தேர்தல் வழக்கு நீண்ட காலம் நிலுவையில் இருந்தால் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இந்த வழக்கில் வாக்கு எண்ணிக்கை மட்டுமே முக்கிய கேள்வி. மூன்று சுற்று வாக்கு மறு எண்ணிக்கையும் கூட வேறு சாட்சியம் தேவைப் படாத பிரச்னை.

இந்த் வழக்கு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நிலுவையில் இருந்தது நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க வைத்து விடும்.

சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்தும் கூட இன்னும் கால தாமதம் ஏற்படுவது சரியல்ல.

வழக்குகளை நாள்தோறும் நடத்தி வந்திருந்தால் இந்த தாமதம் ஏற்பட்டிருக்காது. 

தீர்ப்பு வருவதற்குள் சம்பத்தப் பட்ட உறுப்பினர் தனது பதவி காலத்தை நிறைவு செய்து விடுவார் என்பதுதான் இதுநாள்வரை நிலைமை, அந்த நிலை தொடரக் கூடாது.

உச்சநீதிமன்றம் விரைவாக இந்த பிரச்னையை விசாரித்து முடிக்கும் என்று நம்பி இருப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை.

 

வள்ளலார் பிறந்த நாளை மறந்ததா தமிழகம்??!!

05/10/1823   –   வள்ளலார் ராமலிங்க அடிகள் திரு அவதார திருநாள்.

சனாதனத்தின் முதல் எதிரி வள்ளலார். அதனால்தான் அவர் ஓரங்கட்டப்பட்டார்.

வள்ளலார் கொண்டாடப் பட்டிருந்தால் பெரியாரின் தேவையே  எழுந்திருக்காது.  வள்ளலார் நாத்திகர் அல்லர்.   நாத்திகம் பேசுபவர் தம் நாக்கு முடை நாக்கு என்றார் வள்ளலார்.

ஆனால் கடைசிவரை சாதி மத பேதங்களை எதிர்த்தே நின்றார். அதனால் தான் அவரை சனாதனம் சதி செய்து வீழ்த்தியது.

காவிக்குப் பதில் வெள்ளை ஆடை. மத சின்னங்கள் ஒதுக்குதல். உருவ வழிபாட்டை தவிர்த்தல். வள்ளலார் கண்ட சமரச சுத்த சன்மார்க்கம் களங்கங்கள் அற்ற   தூய ஆன்மிகம். 

இன்று மதத்தின் பேரால் நடக்கும் அத்தனை அட்டூழியங்களும் எந்த மதமும் போதித்தல்ல. மதத்தின் பேரால் ஆசாமிகள் திணித்த கொடுமைகள். அதில் ஊறிப்போன கறை சாதி.

இந்த கொடுமைகள் அகல இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டும். நாத்திகர் ஆக பெரியார் சொன்ன காரணம் மூட நம்பிக்கைகளுக்கு மதம் மரமாக இருக்கிறது என்பதால்தான் .

வள்ளலாரின் போதனைகளை பெரியார் தனது குடியரசு பத்திரிகையில் வெளியிட்டார் என்றால் அப்போதாவது தமிழ் சமூகம் அவரது முக்கியத்துவத்தை உணர்ந்திருக்க வேண்டாமா?

இன்னும் சுகி சிவம் போன்றவர்கள் தமிழ் உணர்வு பேசிக்கொண்டே ச்னாதனத்துக்கு எதிராக வெளிப்படையாக பேச தயங்குவதன் காரணம் பேச மேடை  கிடைக்காது என்பதால் தானே. ஆக பிழைப்புக்காக உண்மையைப்  பேச தயங்குகிறவர்கள்தான் நமது ஆன்மிக பேச்சாளர்கள்.

வள்ளலார்தான் சரியான முறையை சொன்னார். சனாதனத்தை ஒதுக்கினாரே தவிர எதிர்க்க வில்லை, அதற்காக சனாதனம் அவரை விட்டு விட்டதா?

வள்ளலார் நாம் செய்ய வேண்டியதை சொன்னாரே தவிர நமது எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்ட வில்லை. அதுதான் அவரது பலவீனமாக போய் விட்டது.

ஆனால் இறையருள் அவரை கைவிட வில்லை. இன்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் அவரது சன்மார்க்க கொள்கைகளை பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கெடுவாய்ப்பாக சன்மார்க்க தொண்டர்கள் ஒருங்கிணைக்கப் படாமல் சிதறிக் கிடக்கிறார்கள்.

சன்மார்க்கத் தொண்டர்கள் ஒருங்கிணையும் நாள் தான் நமக்கு ஆன்மிக விடுதலை நாள்.

உதட்டில் காந்தி உள்ளத்தில் கோட்சே?

அண்ணல் காந்தி அடிகளின் 150வது பிறந்த தினத்தில் நாட்டை ஆளும் பாஜக அவருக்கு மரியாதை செலுத்துகிறது.

அது உண்மையானதா?

உதட்டளவில் காந்தியின் பெயரை உச்சரித்துக் கொண்டே கோட்சேவின் கனவைத்தானே நிறைவேற்றி வருகிறார்கள்.

காந்தி சுடப்பட்ட போது அறிஞர் அண்ணா திராவிட நாடு இதழில் உலக உத்தமர் மகாத்மா காந்தி என்று ஒரு கட்டுரை வனைந்தார். அதில் காந்தி யின் செய்தியை இலட்சியத்தை நேருவின் வழி அறிவிக்கிறார். ஆம். ‘பரம ஏழைகளும் இது தாங்கள் நாடு என்று எண்ண வேண்டும். அதன் அமைப்பி௯ல் தங்களுக்கு முக்கியத்துவமும் அதிகாரமும் இருக்கிரதுன்று அவர்கள் நினைக்க வேண்டும். மக்களில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பதே இருக்கக் கூடாது. எல்லாச் சமூகத்தினரும் அன்யோன்மாக வாழ வேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே நான் பாடுபடுவேன். ‘இதுவே அவரின் லட்சியம்.

அது மட்டுமல்ல அண்ணா காந்தியாரின் கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு அவருக்கு  எதிராக நடந்த இந்துக்களின் சதிகளை விவரிக்கிறார். ‘இந்து மதத்திலே ஏறிப்போய், ஊறிப்போய் இருந்த கேடுகளை எல்லாம்  தமது பரிசுத்த வாழ்க்கையாலும், தூய்மையான உபதேசத்தாலும் புதிய தத்துவார்த்ததாலும் நீக்கும்  காரியத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். அவர் யாரிடமிருந்து அன்பு மார்க்கத்தை எதிர்பார்த்தாரோ அங்கிருந்தே அவர் உயிரைக் குடிக்கும் ஒரு வெறி பிடித்த இந்து கிளம்பினான். ‘அண்ணாவை மிகவும் பாதித்தது அண்ணலின் மறைவு என்பதை அவரது கட்டுரை பிரதிபலித்தது .

காந்தி வேளாண்மை செய்வோரின் உரிமைகளுக்கு போராடி இருக்கிறார். ஆனால் இன்று என்ன நடக்கிறது. விவசாயிகளின் வயிற்றில் அடித்து பெரு முதலாளிகளுக்கு லாபம் தேடித்தர மாநில மத்திய அரசுகள் உழைத்துக் கொண்டிருக்கின்றன.

காந்தியடிகளின் கனவை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது என்று மனசாட்சி உள்ள யாராவது சொல்ல முடியுமா?

காந்தியின் உருவ பொம்மைக்கு தீயிட்டு கொளுத்துவதுடன் அந்த பொம்மையை சுட்டு அதையும் வெளியிட்டார்களே அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுத்தார்களா?

சத்தியமும் அகிம்சையும் இறுதி வெற்றியை அடையும். அதுவே காந்தியின் கனவு.

உலக நாடுகள் பலவற்றுக்கும் காந்தி ஒரு உன்னதமான வழிகாட்டி. இந்தியாவில் நோட்டில் மட்டும் இருக்கிறார்.

இந்த உதட்டு வாழ்த்து இலங்கையில் இருந்தும் வருகிறது. காந்தி பிறந்த நாளில் அவரது உருவம் தாங்கிய அஞ்சல் தலை வெளியிடுகிறார்கள். ஆனால் நடைமுறையில் உரிமைக் குரல் கொடுக்கும் சிறுபான்மையினரை மிதித்துக் கொண்டிருக்கிறார்களா இல்லையா?

என்றைக்கு ஆட்சியாளர்கள் காந்தியை உள்ளத்திலும் இருத்தி அவர் வழி ஆட்சி நடத்த முனைகிறார்களோ அன்றுதான் நாட்டுக்கு உண்மையான விடிவு காலம். 

கரை வேட்டிகளால் அரசியலில் கறை படிந்து விட்டதாம்? பாஜக சொன்னதை வழி மொழியும் கமல்ஹாசன்!

திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை ஒழிக்க ஐம்பதாண்டுகளாக சனாதன சக்திகள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன.

அதன் ஊது குழலாக கமல்ஹாசன் அவ்வப்போது ஏதாவது உளறிக் கொண்டுதான் இருக்கிறார்.

கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முயன்று தோற்றுப் போய் ஏதாவது ஒரு கழக புல்லுருவியை பற்றிக் கொண்டு கரை என்று தவித்துக் கொண்டிருக்கும் பாஜகவின் கோஷத்தை கமல் ஹாசன் எடுத்துக் கொண்டு கரை வேட்டிகளால் தமிழக அரசியல் கறை படிந்துவிட்டதாக லயோலா கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.

திமுக அதிமுக மட்டுமல்ல தேமுதிக, பாமக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சி பிரமுகர்களும் தங்கள்  கட்சிகளின் கரை வேட்டியைத்தான் கட்டுகிறார்கள்.

இதில் யாரை குறிப்பிட்டு பேசுகிறார் கமல். ?

சொல்வதும் புரியவில்லை. எதிலும் உறுதியும் இல்லை. எதிலும் பட்டும்படாமலும் பேசி வரும் கமலை தமிழக மக்கள் கண்டு கொள்ளாவிட்டாலும் பத்திரிகைகள் அவர் பேச்சை பெரிது படுத்துவதால் கருத்து சொல்ல வேண்டியிருக்கிறது.

மொழி ஒரு தொடர்பியல் கருவிதானாம். எனவே அதை வைத்து அரசியல் செய்ய கூடாதாம். இதைவிட ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத் தனம இருக்க முடியுமா?

தொடர்புக்குத்தான் மொழி. அதை மற்றவன் மீது திணிக்கும் போது கமல் வாய்  திறப்பதில்லையே?

தமிழுக்காக போராடாதே. அது ஒரு தொடர்பு மொழிதான் என்கிறாரா?

கமலைப் போன்றவர்கள் அரசியலுக்கு வந்ததால்தான் அரசியலில் கறை படிந்து விட்டது. கறைகளை துடைத்தெறிவோம். 

தமிழை ஆட்சி மொழி ஆக்குவாரா மோடி?! மு க ஸ்டாலின் கேள்வி?!

தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சமீப காலமாக பிரதமர் மோடி தமிழின் தொன்மைத்தன்மை குறித்து வானளாவ புகழ்ந்து வருகிறார்.

தமிழர்களும் அக மகிழ்ந்து ஆகா நம்முடைய பிரதமர் போலாகுமா என்று புளகாங்கிதம் அடைகிறார்கள்.

உதட்டளவில் பாராட்டா உள்ளொன்று வைத்து பாராட்டா என்பதைக்கூட அறியாதவர்களா தமிழர்கள்?

உள்ளபடியே பிரதமர் தமிழ் உலகின் மிகத் தொன்மை வாய்ந்த மொழி என்று ஒப்புக் கொள்ளும் நிலையில் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழி  ஆக்குவதில் என்ன தடை? செய்வாரா பிரதமர். ?

முதலில் இந்தியாவின் 22 மொழிகளை ஆட்சி மொழி ஆக்கட்டும்.

மொழிப் பிரச்னையே வராது.

தான் பிறந்த மண்ணான இந்தியாவைத் தவிர பிறநாடுகள் பலவற்றில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகாரம் பெற்று விளங்குவதையும் ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார். 

தான் பிறந்த இந்தியாவில் வலுவிழந்து சென்ற பல நாடுகளில் கோலோச்சும் புத்த மதத்தைப் போல.

அமித் ஷா முன்பு சொன்னதை இப்போது சுப்பிரமணிய சாமி உரத்து சொல்லி வருகிறார். இந்தியாவில் ஒரு மொழிதான் பேச வேண்டுமாம். நீதி மன்ற மொழி சமஸ்கிரிதமாக இருக்க வேண்டுமாம். இன்னும் பா ஜ க வின் உயர் பொறுப்பில் அவரை வைத்துக் கொண்டிருக்கிறீர்களே ஏன் இந்த இரட்டை வேடம்?

 இந்தியை திணிக்க மாட்டோம் என்று உறுதி கூறினால் போதாது அதற்கு சட்ட வடிவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உங்களை நம்ப முடியும். 

                              செய்வீர்களா மோடி?

கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக நிதி கொடுத்தது தவறா?!

திமுக தனது கூட்டணி கட்சிகளான இந்திய கம்யுனிஸ்டு கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்டு கட்சிக்கும் கொங்கு நாடு முன்னேற்ற கட்சிக்கும் 25 கோடி ரூபாய் நிதி கொடுத்ததாக கணக்கு காட்டியிருக்கிறது.

இந்த தகவல் தேர்தல் கமிஷனுக்கும் வருமான வரித்துறைக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இப்படி வங்கி மூலம் வெளிப்படையான பண பரிவர்த்தனை குறித்து விமர்சனம் செய்கிறார்கள்.

இதில் ஏதாவது முறைகேடு இருந்தால் சட்ட பூர்வமான அமைப்புகள் கேட்கவேண்டும்.

எதிர்க் கட்சிகள் இதை கேள்வி கேட்க உரிமை இருக்கிறதா?

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனது வரவு செலவு தொடர்பாக மற்ற கட்சிகளுக்கு பதில் சொல்ல என்ன கடமை இருக்கிறது?

நிதி பெற்ற கட்சிகள்  தாங்கள் பெற்ற நிதியை எப்படி செலவு செய்தார்கள் என்பதை அந்தந்த கட்சி நிர்வாகிகளும் வருமான வரித்துறையும் தெளிவுபடுத்திக் கொள்வார்கள்.

மற்ற கட்சிகள் குறை சொல்வதை விட்டு விட்டு அவர்களும் தாங்கள் செய்யும் நிதி பரிவர்த்தனைகளை வங்கி மூலம் வெளிப்படையாக செய்து தங்கள் நேர்மையை நிரூபிக்க வேண்டும்.