Home Blog Page 24

ஐஐடி யில் மோடி; போற்றுவது தமிழை! நிகழ்ச்சி தொடங்குவது சமஸ்கிருதத்தில்?

சென்னை ஐஐடி-யில் பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வந்திருந்தார்.

விமான நிலையத்தில் வரவேற்பில் தமிழ் மொழியில் தொன்மை பற்றி தான் அமெரிக்காவில் பேசியதை நினைவு கூர்ந்தார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் பாடலை ஐநாவில் நமது நாட்டு  பிரதமர் ஒலித்த போது நமக்கு பெருமையாகத்தான் இருந்தது. பிரதமருக்கு நன்றி.

இதேபோல் வாஜ்பாயும் பலமுறை தமிழ் பாடல்களை நினைவு கூர்ந்திருக்கிறார். அவர் கவிஞர். அவரது தமிழ் நேசம் போலியானதாக யாரும் குற்றம் சாட்டியதில்லை.

ஆனால் மோடி தமிழை உயர்த்தும் போது மட்டும் சிலர் ஐயம் எழுப்புகிறார்கள்.

தமிழை உயர்த்தினால் போதுமா? தமிழை வாழ வைக்க வேண்டாமா? அலுவல் மொழியாக வாழ வைக்க வேண்டாமா? மாநிலத்திலும் மத்தியிலும்.

இது உதட்டளவில் ஆன வாழ்த்தா? மயங்க வைத்து மிதிக்கும் நோக்கம் கொண்டதா என்று மோடியை மட்டும் கேட்பதில் அர்த்தம் இருக்கிறதா இல்லையா?

ஏன் இந்த கேள்வியை வாஜ்பாயியை நோக்கி கேட்டதில்லை யாரும்?

மோடி அவ்வளவு புகழ்ந்து தமிழை பேசியபிறகு அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி சமஸ்கிருத பாடலுடன் தொடங்குகிறது என்றால் அது அவரின் கட்டுப்பாட்டில் இல்லையா?

தமிழ்நாட்டில் ஐஐடி இருந்தால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஏதாவது சட்டமா?

இதே நிலை பிரதமர் தமிழ்நாட்டில் கலந்து கொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளிலும் தொடர்கிறதே காரணம் என்ன?

இவர்களை எப்படி நம்புவது?

தமிழ்நாட்டில் தெலுங்கர்; குட்டையைக் குழப்பிய ராதாரவி ?!

பல காலங்களில் பலர் கிளப்பிய தமிழ்நாட்டில் தெலுங்கர் பிரச்னையை நடிகர் ராதாரவி இப்போது கிளப்பி இருக்கிறார்.

அவர் தந்தை எம் ஆர் ராதாவுக்கு திராவிட இயக்க தலைவர்கள் சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்பது ஒரு காரணம். மற்றொன்று சீமான் போன்ற சிலர் தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசுவோருக்கு அரசியல் அதிகாரம் ஏன் என்று கேள்வி எழுப்புவது.

எம் ஆர் ராதா திராவிட இயக்க தலைவர்களிலேயே ஒருவரான எம்ஜிஆரை சுட்டு சிறை தண்டனை பெற்றவர். எனவே அங்கீகாரம் தருவதில் திராவிட இயக்க தலைவர்களுக்கு தயக்கம் இருப்பதில் காரணம் இருக்கிறது. ஆனால் ராதாரவி அவரை காந்தியை கொன்ற கோட்சே உடன் ஒப்பிட்டிருக்க வேண்டாம். கோட்சே வுக்கு சிலை வைத்தால் நாங்களும் ராதாவுக்கு வைப்போம் என்கிறார். தேவையில்லாத சரியில்லாத உவமை. தன் தந்தையை ரவி இப்படி கொச்சைப் படுத்தியிருக்க வேண்டாம். அடுத்து சீமானின் பிரச்சாரம் எடுபடவில்லை என்பதோடு இப்போது அவர் தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டுவிட்டதாகத் தான் தெரிகிறது.

பெரியாரை எவனாவது தெலுங்கன் என்று உரிமை கொண்டாடினால் அவனை விட அடி முட்டாள் எவனும் இருக்க முடியாது.

சாதி மத ஒழிப்புக்காகவே தன் வாழ்நாளை செலவிட்ட ஒரு மகத்தான மனிதனை, மனித இனத்துக்கே அறியாமையில் இருந்து விடுதலை பெற்றுத் தர உழைத்த ஒரு உத்தமனை பாராட்ட மனமில்லை என்றாலும் இகழ எவருக்கும் உரிமையில்லை.      தெலுங்கு குடும்பத்தில் பிறந்தது ஒரு இயற்கை நிகழ்வு. அவ்வளவுதான். தன் வாழ்நாளில்தான் தெலுங்கன் என்ற உணர்வோடு வாழ்ந்தார் என்றோ தமிழ் தமிழர் உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றோ யாராவது நிரூபிக்க முடியுமா?

ஒரு வகையில் ராதா ரவி நாணயமானவர் தான்.

என் தாய்மொழி தெலுங்கு  எனவே நான் தெலுங்கன். இது ஒரு நாணயமான ஒப்புதல். வீட்டில் தெலுங்கு பேசுவேன். ஆனால் வெளியில் நான் தமிழன் என்று சொல்லிக் கொள்வேன் என்றெல்லாம் போலியாக உரிமை கோரவில்லை ராதாரவி. தெலுங்கராக குற்றமா என்ன?

அதற்கான அவசியமும் அவருக்கு  இல்லை. ஏனென்றால் எம் ஆர் ராதா திராவிட இயக்க முன்னோடி. நடிகவேள் என்ற பட்டம் பெற்றவர். ராதா இல்லாத சினிமா இல்லை என்ற அளவுக்கு தமிழ் சினிமாவில் கோலோச்சியவர். அவரை தெலுங்கர் என்றே பலருக்கு தெரியாது. அவர் அப்படி வாழ்ந்ததாகவும் தெரியவில்லை.

திராவிட இயக்கம் என்பது பார்ப்பனர் அல்லாத இயக்கம். அதில் தமிழர், கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் எல்லாரும் பங்காளிகள் என்பதை புரிந்து கொண்டால் அந்த காலத்தில் ஏன் தமிழ் தெலுங்கர் பிரச்னை வரவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியும். பொது எதிரியை வீழ்த்த நான்கு மாநிலத்தவரும் ஒருங்கிணைந்த காலம் அது.

இப்போது பிரிந்து விட்டோம். பிரிவினையின் எச்ச சொச்சங்கள இருக்கத்தான் செய்யும். கேரளாவில் தமிழர் மாவட்டங்கள் உள்ளன கர்நாடகத்தில் தமிழர் மாவட்டங்கள் உள்ளன. ஆந்திராவில் சித்தூர் போன்ற தமிழர் மாவட்டங்கள் உள்ளன. அதேபோல் தமிழகத்தில் தெலுங்கர்கள் மட்டுமா இருக்கிறார்கள்? கன்னடர்கள், இல்லையா? மலையாளிகள் இல்லையா?

வந்தாரை வாழ வைத்த தமிழகம் என்பதுதான் இந்நாட்டின் பெருமை.

தமிழ் நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும் என்பதில் ராதாரவிக்கு கருத்து வேறுபாடு இல்லை.

எங்களுக்கு உரிய பங்கும் மரியாதையும் இருந்தால் போதும் என்பதுதான் அவரது ஆதங்கமாக தெரிகிறது. அதுதான் இப்போது இருக்கிறதே? அதை சுட்டிக் காட்டி  பேசுவதால் எதை அவர் சாதிக்கப் போகிறார்.?

தெலுங்கர் இல்லாமல் அமைச்சரவை அமைக்க முடியாது என்கிறார். அதாவது நடப்பில் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். அதுதான் நடைமுறையில் இருக்கிறதே அதை சுட்டிக்காட்ட வேண்டிய  அவசியம் என்ன வந்தது?.

பொதுவாக தன்னை சமுதாய தலைவர்களாக காட்டிக் கொள்ள ஆசைப்படுபவர்கள் தான் இப்படியெல்லாம் பேசுவார்கள். அது சுய நலம். எல்லாருக்கும் புரிந்து அவர்களை கண்டுகொள்ள மாட்டர்கள் யாரும்.  இதுவும் நடைமுறைதான்.

அந்த லிஸ்டில் ராதாரவி சேரவேண்டிய அவசியம் வந்து விட்டதா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.

இவர் சகோதரியே ராதிகாவே பச்சைத் தமிழர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு பிள்ளையை பெற்றுக் கொண்டிருக்கிறார். அந்த பிள்ளை தமிழரா தெலுங்கரா என்ற கேள்வியை எழுப்பி அந்தப் பிஞ்சின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமா?

இப்போது இருக்கும் சுமுக சூழ்நிலையை கெடுக்கும் விதத்தில் யார் பேசினாலும் செயல்பட்டாலும் அவர்கள் தமிழகத்தின் எதிரியாகவே பார்க்கப்படுவார். 

அநேகமாக அடுத்து ரஜினி கட்சி ஆரம்பித்தால் அங்கு சென்று விடுவார் என்பது உறுதியாக தெரிகிறது. அதிமுகவில்  இருந்து கொண்டே ரஜினி முதல்வர் வேட்பாளர் என்றால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சொல்பவர் எப்படி அதிமுகவில் நீடிக்க முடியும்? அநேகமாக அவர்கள் இவரை விலக்கலாம். அல்லது ஒதுக்கி வைக்கலாம். அல்லது இவரே ரஜினியிடம் ஒட்டிக கொண்டு விடலாம்.

இப்படி எதையாவது சொல்லி தமிழர் – தெலுங்கர் பிரச்னையை கிளப்ப முயற்சிப்பவர்கள் எதையும் சாதிக்க முடியாது என்பதுடன் இதனால் தெலுங்கர் களுக்கு எந்த நன்மையையும் விளையப் போவதில்லை என்பதுதான் உண்மை. 

ஒரு சில சிந்திக்கத் தெரியாத பாமரத் தமிழர்கள் மத்தியில் வெறுப்பைத் தவிர. 

தமிழ் அறியாதவர்கள் தமிழ் நாட்டில் நீதிபதிகளா? டி என் பி எஸ் சி செய்யும் புதுக் குழப்பம்?!

விதிமுறைகளில் எல்லாரும் தமிழ்நாட்டில் நீதிபதிகள் தேர்வை எழுதலாம் என்று இருந்தாலும் இதுவரை பிற மாநிலத்தவர் எவரும் இங்கே வந்து தேர்வு எழுதி நீதிபதி ஆக முயற்சிக்க வில்லை. அதனால் விதி இருந்தாலும் அது நடைமுறைக்கு வராததால் எந்த பிரச்னையும் எழாமல் இருந்தது.

ஆனால் இப்போது நிலைமை என்ன. ரயில்வே, அஞ்சல் துறை, வங்கித்துறை என்று எல்லாவற்றிலும் பிற மாநிலத்தவர் தமிழகத்தில் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் விதிமுறைகள் இருப்பதை சாக்கு வைத்து பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதிகள் தேர்வை பிற மாநிலத்தவரும் எழுதலாம் என்று அறிவித்து இருப்பது குழப்பத்தைதான் ஏற்படுத்தும்.

விதிகள் மாற்றப்பட வேண்டும் என்றால் அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டுமே தவிர விதியை காரணம் காட்டி பிற மாநிலத்தவர் இங்கு நீதிபதிகள்  ஆகும் வாய்ப்புக்கு வழி விடக்கூடாது.

தமிழக அரசின் நிலைப்பாடு இது பற்றி என்ன என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

எல்லா கட்சிகளும் தாங்கள் எதிர்ப்பை தெரிவித்து விட்டன. அரசு ஏன் மௌனம் காக்க வேண்டும்?

டி என் பி எஸ் சி குரூப் 2 தேர்வில் தமிழ்ப் பாடம் அகற்றம் ??!!

தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வில் முதல் நிலை தேர்வில் மொழித்தாளுக்குப் பதிலாக பொதுஅறிவு கேள்விகள் சேர்க்கப் பட்டிருக்கின்றன.

ஆங்கிலமும் தமிழும் இருந்ததால் தமிழே தெரியாமல் ஆங்கிலத்தில் எழுதி தேர்ச்சி பெறும் நிலை இருந்ததால் அந்த முறை நீக்கப்பட்டு உள்ளதாக ஆணைய செயலாளர் விளக்கம் தருகிறார்.

தமிழ் தெரியாமல் அரசு வேலைக்கு செல்ல முடியாது என்றும் அவர் கூறுகிறார். அப்படியானால் ஏன் மொழித் தேர்வை தமிழில் மட்டுமே நடத்தக் கூடாது.?

விளக்கம் பல சந்தேகங்களை எழுப்பிவுள்ளது.

6500 பணியிடங்களுக்கு 15 லட்சம் பேர் தேர்வு எழுதும் நிலைதான் இன்று இருக்கிறது.

இதில் தமிழ் தேர்வை தவிர்த்து பணிக்கு செல்ல முடியும் என்ற நிலை வராமல் தடுக்க வேண்டிய கடமை  தேர்வானையத்துக்கு இருக்கிறது.

ஆணையம் தந்து முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும்.

தமிழ்ப் பாடத்திட்டத்தில் படித்தால் இனி வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு உறுதி; உயர் நீதிமன்றம்

ஓர் நல்ல செய்தி.

சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

தமிழ்ப் பாடத்திட்டத்தில் படித்தால் வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் தமிழகத்தில் அமுலில் உள்ளது.

ஆனால் இதை பயன்படுத்தி நாங்கள் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்றதால் எங்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகையை பெற உரிமை உண்டு என்று சிலர் கோரியதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இந்த கேள்விக்கு விடை காண வேண்டி வந்தது.

நீதிபதிகள் சுப்பையா, சி வி கார்த்திகேயன், சி எஸ் சரவணன் கொண்ட அமர்வு தெளிவாக பள்ளி முதல் கல்லூரி வரை முழுமையாக தமிழ் வழியிலேயே பயின்றவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு பெற உரிமை உண்டு என தீர்ப்பளித்திருக்கிறது.

அதற்கு அந்த கல்வி நிறுவனங்கள் அந்த மாணவர் தமிழ் வழியில்தான் படித்தார் என்று சான்று வழங்க வேண்டும். இதனால் இனி வேறு மாநிலங்களில் இருந்து நாங்கள் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்று விட்டோம் என்றோ ஆங்கில வழியில்  படித்தவர்கள் நாங்கள் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்று விட்டோம் என்றோ இட ஒதுக்கீடு கோர முடியாது .

இதனால் தமிழில் பாடத்திட்டத்தில் சேரலாம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை பெருகும்.

கடந்த ஆண்டு 320 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் தாங்கள் தமிழில் தேர்வு எழுதியதாக 3 பேர் உரிமை கோரி மறுக்கப்பட்டதால் அவர்கள் தொடர்ந்த வழக்கில்தான் இந்த தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

எந்த சமூக நீதி திட்டத்தையும் யாராவது நாலுபேர் கெடுக்க முனைவதை இது காட்டுகிறது.

இந்த இட ஒதுக்கீட்டை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

தமிழ்ப் பாடத்திட்டத்தில் படிப்போர்க்கு இன்னும் என்னென்ன சலுகைகளை அளிக்கலாம் என்று ஆராய்ந்து பார்த்து அவற்றை வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்.

இந்தி திணிப்பையும் எதிர்ப்போம். தமிழ் வழிக் கல்வியையும் ஊக்குவிப்போம் என்பதே சரியான பாதை.

அண்ணா பல்கலையில் சமஸ்கிருத திணிப்பு; குவியும் கண்டனங்கள்??!!

என்ன எதிர்ப்பு வந்தாலும் சமஸ்க்ரிதத்தை திணித்தே தீருவது என்று மத்திய பாஜக அரசு கங்கணம் கட்டி வேலை செய்து வருகிறது.

இப்போது பிரச்னை வெடித்திருப்பது அண்ணா பல்கலைக் கழகத்தில்.    மூன்றாமாண்டு பி டெக் மாணவர்கள் மூன்றாவது செமஸ்டரில் பகவத் கீதையை ஒரு பாடமாக படித்து தேர்வு எழுதுவதை கட்டாயமாக்கி வெளியிட்ட அறிவிப்புதான் பிரச்சனை ஆகியிருக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் கண்டித்து அறிக்கை வெளியிட்டபின் துணை வேந்தர் சூரப்பா தலையிட்டு கட்டாயம் என்பது நீக்கப்படுகிறது என்றும் மாணவர்கள் கொடுக்கப்பட்டிருக்கிற 12 பாடங்களில் தாங்களாகவே மூன்றை தேர்ந்தெடுத்து எழுதலாம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அவரது தெளிவில்தான் பல தகவல்கள் தெரிய வருகின்றன.

இந்த திணிப்பு என்பது அகில இந்திய தொழில் நுட்ப கல்வி இயக்ககம் (AICTE) தனது விதிமுறைகளில் இந்த  திணிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள்தான் சமஸ்கிருதத்தை 32 பாடங்களில் ஒன்றாக திணிக்கிறார்கள். தொழில் நுட்ப படிப்புக்கும் சமஸ்கிரிததுக்கும் என்ன தொடர்பு என்பதை அவர்கள் விளக்கவில்லை.

அந்த 32 பாடத்திட்டத்தில் 12 பாடத்திட்டத்தை அண்ணா பல்கலை தேர்ந்தெடுக்கிறது. நாங்கள் சமஸ்கிரிததை தேர்ந்தெடுக்க வில்லை என்கிறார் சூரப்பா. எனவே நாங்கள் சமஸ்கிருதத்தை திணிக்கவில்லை என்கிறார்.

ஏ ஐ சி டி இ தொகுத்த பாடங்களில் கீதை, உபநிஷத்துகள், பிளேட்டோவின் தத்துவங்கள், கிரேக்க தத்துவங்கள், என்று பட்டியல் நீளுகிறது. ஆனால் இவை தொழில்நுட்ப படிப்புக்கு எப்படி உதவும் என்பதுதான் கேள்வி.

பகவத் கீதையை படிப்பதால் ஒருவனின் பர்சனாலிடி வளர்கிறது என்றும் வாழ்வின் இலக்கை சாதிக்க வேண்டும் என்ற சக்தி பிறக்கும் என்றும் காரணம் சொல்கிறார்கள்.

அகில இந்திய அமைப்பு பரிந்துரைத்திருந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்வது அந்தந்த பல்கலைக் கழகங்களின் தனியுரிமை. எனவே அப்படியே அவற்றை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்கிறார் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி.

சூரப்பா நியமனத்தின் காரணம் புரிந்து விட்டது.

55 ஆண்டுகளில் முதன் முதலாக சரத் பவார் மீது வழக்குப் பதிவு செய்தது அமலாக்கப் பிரிவு??!!

மராட்டியத்தின் முதுபெரும் தலைவர் சரத் பவார். முதல் அமைச்சராகவும் மத்திய அமைச்சராகவும் கடந்த 55 ஆண்டுக்காலமாக கோலோச்சியவர்.

காங்கிரசோடு முரண் பட்டு தனிக் கட்சி கண்ட இவர் இப்போது அதே காங்கிரசோடு கூட்டு கண்டு பாஜக -சிவசேனா அணியை எதிர்க்கிறார்.

இவரது கட்சியில் இருந்து பலரும் விலகி பாஜக -சிவசேனாவில்  இணைந்து வருகையில் இப்போது இவரது சக்தியை முற்றிலும் முடக்க திட்டமிட்டு மத்திய அரசு அமலாக்கத் துறையை பயன்படுத்தி இவர் மீதும் குடும்பத்தினர் மீதும் ஆதரவாளர்கள் மீதும் கூட்டுறவு சங்க ஊழல் என்று ஒரு புகாரை சுரீந்தர் அரோரா என்பவர் கொடுத்த புகாரை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்திருக்கிறது.

மராட்டிய மாநில கூட்டுறவு வங்கி சம்பந்தப்பட்ட ஊழல் 25000 கோடி ரூபாய் அளவுக்கு நடந்திருப்பதாக புகார் சொல்கிறது.

இந்த ஊழல் 2002 முதல் 2017 வரையிலான 15 ஆண்டுகளில் நடந்ததாம். எல்லாம் கூட்டுறவு சங்கங்களுக்கு வங்கி கொடுத்த கடன் பற்றியதாகும். இதை எல்லாம் ஆடிட் செய்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை.

இதுவரை சரத் பவார் எந்த வங்கியிலும் எந்த கால கட்டத்திலும் இயக்குனராகக் கூட இருந்ததில்லை. பின் எப்படி அவர் தவறுக்கு துணை போய் இருக்க முடியும்? இது அவரது மகள் சுப்ரியா சூலே யில் கேள்வி.

மேலோட்டமாக பார்த்தால் இது மோசமான பழி வாங்கும் அரசியல்.

நீதிமன்றங்கள் எப்படி எந்த நடவடிக்கையை அங்கீகரிக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த பழி வாங்கும் நடவடிக்கையால் கூட்டுறவு சங்கங்கள் பாதிக்காமல் இருக்க வேண்டும்.

இந்தியாவின் தந்தை மோடியாம் – இந்தியர்களின் ஒட்டுக்களுக்காக டிரம்ப் வர்ணனை?

நமது பிரதமரை வெளிநாட்டு அதிபர் ஒருவர் அதிலும் பலம் வாய்ந்த அமெரிக்க அதிபர் புகழ்ந்தால் எந்த இந்தியனுக்கும் பெருமைதான் வரும். ஆனால் அந்த பெருமை டொனால்ட் டிரம்ப் நரேந்திரமோடியை இந்தியாவின் தந்தை என்று புகழ்ந்த போது வந்ததா என்றால் அது கேள்விக்குறிதான்.

தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் டிரம்பிற்கு இந்தியர்களின் நாற்பது லட்சம் வாக்குகள் மிக முக்கியம்.

அதுவும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் ஹூஸ்டனில் அம்பதாயிரம் இந்தியர்கள் கலந்து கொண்டு மோடிக்கு தெரிவித்த ஆதரவை கண்டபிறகு டிரம்பிற்கு இந்தியர்களின் வாக்கு மோடியிடம் இருக்கிறது என்ற உணர்வு வந்தேவிட்டது.

அதனால்தான் மோடி பயங்கரவாதத்தை காஷ்மீர் பிரச்னையை வெற்றிகரமாக எதிர்கொள்வார் என்று டிரம்ப் சான்று அளித்தார்.

இந்தியாவுடன் ஆன வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று குறிப்பிட்ட டிரம்ப் இதுவரை பிளவு பட்டு கிடந்த இந்தியாவை ஒன்றுபடுத் தியவர் மோடி என்று புகழாரம் சூட்டினரர்.

எல்லாம் பெருமைதான். ஆனால் இந்தியாவின் தந்தை மோடி என்றதைத்தான்  சீரணிக்க முடியவில்லை.

தேசத்தின் தந்தை காந்திக்கு முன் மோடியை ஒப்பிடலாமா? அது அவருக்கு செய்யும் அவமரியாதை இல்லையா?

மோடியின் தனித்துவம் பற்றி வேறு எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து பேசலாம். தவறு இல்லை. பிரம்மச்சரியம் காப்பவர். ஒழுக்கம் பேணுபவர். சொத்து சேர்க்காதவர். குடும்ப அரசியல் செய்யாதவர். அரசியலுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர். சாதனைகளை செய்ய துடிப்பவர். இதெல்லாம் நல்ல விடயங்கள்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரக். சனாதன தர்மத்தை தூக்கிப்பிடிப்பவர்.  பிராமணியத்தின் வேலையாள். கிறிஸ்தவ முஸ்லிம்களின் எதிரி. பெருமுதலாளிகளின் ஏஜென்ட். எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவதில் மூர்க்கமாக நிற்பவர். மொத்தத்தில் இட்லர், முசோலினி பாணி அதிகார வெறி பிடித்த தலைவர். இது எதிர்கட்சிகளின் விமர்சனம்.

இதில் எது சரி என்பதை இந்திய மக்கள் வாக்குப்போடும் சமயத்தில் தான் வெளிப்படுத்துவார்கள்.

இந்திய அரசியலில் டிரம்ப் தலையிடுவது சரிதானா?

உண்மையிலேயே மோடி இத்தகைய புகழ்ச்சிக்கு தகுதியானவராக வளர்ந்தால்  பொதுமேடை நிச்சயம் அகமகிழ்ந்து பாராட்டும். அந்த நாள் வருமா?

டிரம்ப் மீது எதிர்க்கட்சிகள் தேசத்துரோக குற்றச்சாட்டு வைத்திருக்கின்றன. (Impeachment) ஆம். தனது துணை அதிபரையே தேர்தலில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு. விசாரணை என்ன ஆகும் என்பது விரைவில் தெரியவரும்.

உண்மையிலேயே மோடி இந்தியாவின் தந்தை ஆகும் எண்ணம், தகுதி உள்ளவரா?

தேவைப்பட்டால் சங்கத்தை எதிர்ப்பாரா?

மகாத்மா காந்தி நல்ல இந்துவாக வாழ்ந்தார். ஒருபோதும் பிற மதங்களை வெறுத்ததில்லை. அதனாலேயே வெறி கொண்ட பார்ப்பனர் ஒருவர் அவரை கொலை செய்தார். அதை இன்றும்கூட பார்ப்பனர்கள் முழுவதுமாக கண்டிக்க வில்லை. இப்போது கூட காந்தியின் உருவபொம்மையை சுட்டு தங்கள் வெறியை காட்டிக் கொள்கிறார்களே?

அத்தகைய சக்திகளை மோடி கண்டிப்பாரா? அப்போது தெரியும்.

மோடி இந்தியாவின் தந்தையா? சங்கத்தின் வேலையாளா? என்பது.

தமிழகத்தில் சிறுபான்மையினர் பள்ளிகள் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டாமா?

தமிழகத்தில் சிறுபான்மையர் பள்ளிகள் 2022 வரை தமிழ்ப் பாடம் நடத்த வேண்டாம். அதற்குப் பிறகு நடத்தியாக வேண்டும். இதுதான் உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு.

இதையும் சிறுபான்மை நிருவனங்கள் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துமா என்பது அப்போதுதான் தெரியவரும்.

தமிழ்நாடு கற்றல் சட்டம் 2006 தமிழ் பாடத்தை கட்டாயமாக பத்தாம் வகுப்பு வரை கற்று தேர்வு நடத்த சொன்னது. ஆனால் அதை எதிர்த்து சிறுபான்மை நிறுவனங்கள் நீதிமன்றம் சென்றன. தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப் படாமல் எப்படி பாடம் நடத்துவது.

2006ல் சட்டம் இயற்றிய அரசு 2014ல் தான் சட்டத்தை அமுல்படுத்துகிறது. நீதிமன்றம் சென்ற பிறகுதான் அரசு தமிழ் ஆசிரியர்களை நியமிக்கிறது. அதுவரை ஆண்டுக்கு ஆண்டு விலக்கு அளித்துவந்த நீதிமன்றம் இப்போது 2022 வரை விலக்கு அளித்து அதன்பின் தமிழ் தேர்வு நடக்கும் என அறிவித்திருக்கிறது. சட்டத்தில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கவும் மறுத்துவிட்டது.

அரபு, உருது மொழிகளை  தாய் மொழியாக கொண்டிருந்தாலும் தமிழை ஒரு மொழியாக கற்று தேர்வது தமிழகத்தில் வாழ்பவர்கள் கடமை என்பதை சிறுபான்மையர் உணரவேண்டும். ஒப்புக் கொள்ளவேண்டும்.

நீதிபதிகள் நியமனத்தில் தலையீடுகள் நீதி பரிபாலனத்தை பாதிக்கின்றன?! தலைமை நீதிபதி புகார்?!

நீதி பரிபாலனம் நீதிபதிகள் நியமனத்தில் தலையிடுவதால் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவிக்கிறார் என்றால் நிலைமை எவ்வளவு தூரம் மோசமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கொலிஜியம் என்ற உச்சநீதி மன்ற சீனியர் நீதிபதிகளின் அமைப்பு நீதிபதிகளின் நியமனத்தில் அதிகாரம் செலுத்தி வருவது எந்த சட்டத்தின் அடிப்படையில் என்பதை  உச்ச நீதிமன்றம் தான் விளக்க வேண்டும்.

நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்ற கொலிஜியமும் மத்திய அரசும் முட்டி மோதிக் கொண்டுதான் இருக்கின்றன.

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி திரிபுராவுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ளாமல் ராஜினாமா செய்ததும் அதை தாமதித்து குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டதும் வழக்கறிஞர்கள் போராடியதும் இன்னும் ஈரம் காயவில்லை.

இப்போது குஜராத் தலைமை நீதிபதி குரேஷியை ம பி தலைமை நீதிபதியாக சிபாரிசு செய்து கொலிஜியம் தகவல் அனுப்புகிறது. அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாமல் பரிந்துரையை கிடப்பில் மூன்று மாதங்கள் போட்டுவிட்டு அவரை மும்பை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றுகிறது. பின் பல கடிதங்களுக்குப் பின் அவரை சிறிய நீதி மன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்து தகவல் கொடுக்கிறது. அதையும் கொலிஜியம் ஏற்றுக்கொண்டு குரேஷியை திரிபுரா நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கிறது.

ஆக குரைஷி நியமனத்தில் கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதில்தான் உச்ச நீதிமன்றம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இத்தகைய தலையீடுகள் நீதி பரிபாலனத்தை பாதிக்கும் என்றும் இது நீதிமன்றம் என்ற நிறுவனத்துக்கு நல்லதல்ல என்றும் தனது கருத்தை உச்சநீதி மன்றம் பதிவு செய்கிறது.

நீதிமன்றங்கள் அரசியல் வழக்குகளில் நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை இத்தகைய நிகழ்வுகள் பொடிப் பொடியாக்குகின்றன.

நீதிமன்றங்களை தங்கள்  கைப்பிடியில் வைத்திருக்க விரும்பும் அந்த சக்திகள் யார்?