Home Blog Page 25

அதிகாரிகளை விட்டு விட்டு ப சிதம்பரத்தை மட்டும் குற்றவாளி ஆக்குவது ஏன்?

நேற்றைய தினம் ப சிதம்பரத்தை சிறையில் சந்தித்து சோனியாவும் மன்மோகன் சிங்கும் ஆறுதல் கூறினர்.

அப்போது மன்மோகன் சிங் எழுப்பிய கேள்விகள் மிக முக்கியமானவை.

‘ப. சிதம்பரம் துறையில் ஒரு டஜன் அதிகாரிகள் ஆராய்ந்து செய்த பரிந்துரையை ப சிதம்பரம் இறுதியில் ஒப்புதல் அளித்து இறுதிக் கையெழுத்து இட்டிருக்கிறார். அதில் இறுதி ஒப்புதல் அளித்த சிதம்பரம் மட்டுமே தவறு இழைத்ததாக எப்படி கருத முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் மன்மோகன்சிங்.

அதிலும் ஆறு பேர் உயர் தகுதி  படைத்த செயலாளர்கள். அந்த செயலாளர்கள் ப.சிதம்பரம் சொல்லித்தான் தாங்கள் பரிந்துரை செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்களா?

அப்படியே ஒரு அமைச்சர் அழுத்தம் கொடுத்ததால் பரிந்துரை செய்தோம் என்றாலும் அதுவும் தவறாக போய் விடுமே? அப்போது யார் அழுத்தம் கொடுத்தாலும் இவர்கள் கேட்பார்கள் என்று ஆகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இப்போது யார் சொல்லி இப்படி சொல்கிறார்கள் என்ற கேள்வியும் எழுமே?

சிதம்பரமும் செயலாளர்கள் செய்த பரிந்துரை தவறு என்று சொல்லவில்லை.

பின்னர் தவறு எங்கே நிகழ்ந்திருக்கிறது.

நீதிமன்றங்கள் இந்தக் கேள்வியை கேட்காததுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் வெற்றி யாருக்கு?

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைதேர்தல் முடிவுகளால் ஆட்சி மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றாலும் அரசியல் காட்சிகள் நிச்சயம் மாறும்.

இனி அதிமுகவுக்கு அரசியல் எதிர்காலம் இருக்கிறதா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் தேர்தலாக இவை அமையும்.

முன்பு நடந்த இடைதேர்தல் களில் திமுக அதிமுகவிடம் இருந்து 12 இடங்களை கைப்பற்றியது.

பின்பு நடந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக வெறி பெற்றது. அதே வெற்றி தொடருமா என்பது கேள்விக்குறி?

ஆளும் கட்சியின் பண பலத்தை சாதாரணமாக ஒதுக்கித் தள்ளி விட முடியாது.

பாஜகவின் அதிரடி மொழி வெறி இந்தி திணிப்பு நடவடிக்கைகளால் தமிழக மக்கள் மத்திய மோடி ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல அதற்கு ஆலவட்டம் போடுகிற எடப்பாடி ஆட்சியின் மீதும் அந்தக் கோபம நிச்சயம் திரும்பும்.

இதுவரை மத்திய  அரசை கண்டித்து எடப்பாடி அரசு எதுவுமே சொன்னதில்லை. மாறாக ராஜேந்திர பாலாஜி மோடி போற்றத் தகுந்த தலைவர் என்று மோடியை  பாராட்டிக் கொண்டே இருக்கிறார்.

மோடி அரசின் மீதான கோபம் அதிமுக அரசின் மீதுதான் திரும்பும். பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் அனுதினமும் மத்திய அரசை குறை சொல்லி அறிக்கை விட்டுக் கொண்டே இருக்கிறார். எனவே பாமக தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில்தான் இருப்பார்கள். அவர்கள் எப்படி அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள்? ஏனென்றால் பாமக விக்கிரவாண்டி தொகுதியில் ஏறத்தாழ நாற்பதாயிரம் வாக்குகள் வாங்கி இருக்கிறது. அது அதிமுகவுக்கு  போனால் நிச்சயம் அதிமுக வெல்ல வேண்டும். ஆனால் அதுதான் கேள்விக் குறியாக இருக்கிறது.

பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்பார்கள். ஏனென்றால் பணபலம். அதிகார பலம். ஆனால் இப்போது மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்களோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

எனவே எல்லா கணக்குகளையும் மீறி ஆளும்கட்சி தோல்வியை சந்திக்கும் வாய்ப்புகள்தான் அதிகம்.

கற்பழிப்பு புகாரில உ பி பாஜக தலைவர் சின்மயானந்தா கைது??!!

உ பி மாநில பாஜக தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தா தன்னை கற்பழித்ததாக சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் புகார் கூறினார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் மீது சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்தி வருகிறது.

அந்த மாணவி ஒரு மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் கொடுத்த பின்பும் நடவடிக்கை இல்லை.

கடைசியில் அவரைக் கைது செய்யா விட்டால் தான் தீக்குளிப்பேன் என்று மிரட்டல் விடுத்தார் அந்த மாணவி.

மிரட்டலை தொடர்ந்து இன்று சின்மயானந்தா கைது செய்யப்பட்டு சிறைக் காவலுக்கு அனுப்பப் பட்டிருக்கிறார்.

இதுதான் இன்றைய பாஜக அரசின் நிலைமை. உச்ச நீதிமன்றம் உத்தரவிடாவிட்டால் இந்த நடவடிக்கை இருந்திருக்குமா என்பது தெரியவில்லை.

கல்லூரி முதலிய பல நிறுவனங்களை சின்மயானந்தா நடத்தி வருகிறாராம்.    இத்தனை செல்வாக்கு மிக்கவர் இன்று சிறையில்.

கொடுமை என்னவென்றால் காங்கிஸ் தலைவர் திக்விஜய் சிங் சில நாட்களுக்கு முன்பு ‘காவி உடுத்தியவர்கள் கோவிலுக்குள் கற்பழிக்கிறார்கள். சுரான் விற்கிறார்கள். இதுவா சனாதன் தர்மம்” என்று பேசியிருந்தார். அதற்காக அவர்மீது பாஜக எம் எல் ஏ வின் மகன் திரிபாதி என்பவர் புகார் கொடுக்க அவர் மீதி வழக்கு  பதிவாகி இருக்கிறது.

இப்போது பாஜக தலைவர் சின்மயானந்தா கைதாகி இருக்கிறார். திக்விஜய் சிங் பேசியதில் உண்மை இருக்கிறதா இல்லையா?

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்??!!

நீட் தேர்வு மையத்தில் காட்டப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் மோசடிகளை தடுக்க முடியாதவைகள் என்று நிரூபணம் ஆகியிருக்கிறது.

தமிழகத்தை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வை மும்பையில் எழுதியிருக்கிறார். அங்கு வேறு ஒருவரை அவர் சார்பில் தேர்வு எழுத வைத்து வெற்றி பெற்று தேனியில் மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்து விட்டார்.

கல்லூரி முதல்வருக்கு வந்த ஒரு மின் புகார் உதித் சூர்யா நீட் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர் ஒருவர். இப்போது படிப்பவர் வேறு ஒருவர் என்று புகார் சொல்கிறது. விசாரணை ஆரம்பம் ஆகிறது.

உதித் சூர்யா மன உளைச்சல் காரணமாக கல்லூரியில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் அனுப்பி விட்டு தலைமறைவாகிறார். அவரது தந்தை ஒரு மருத்துவர். ஸ்டான்லி மருத்துவ மனையில் பணி புரிகிறார். அவர் தன் மகன் தான் மும்பையில் தேர்வு எழுதியதாகும். தேர்வுச் சீட்டில் அவரது புகைபடத்தை யாரோ மாற்றி விட்டதாகவும் சொல்கிறார். ஆனால் அவரும் அவரது குடும்பமும் விசாரணைக்கு  அகப்படாமல் தலைமறைவாகிவிட்டனர்.

எப்படியும் விசாரணையில் உண்மை வெளிவரத்தான் போகிறது.

ஆரம்ப கட்ட செய்திகள் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்தான் கேட்ட தொகை கிடைக்காமல் தன்னை பயன்படுத்தியவர்களை காட்டிக் கொடுத்து விட்டார் என்று தெரிகிறது.

வழக்கு ஒரு  உண்மையை தெளிவுபடுத்திவிட்டது. நீட் ஒன்றும் நியாயமான தேர்வு இல்லை என்பதே அது.

ஏதோ ஒரு மாணவர் செய்த தவறு முழு தேர்வையும் எப்படி தவறானதாக்கும் என்ற கேள்வி எழும். இன்னும் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை சொல்லாத போது எப்படி நீட் நடத்துகிறீர்கள் என்ற கேள்வியில் நியாயம் இல்லையா?

ஏமாற்றுக் காரர்கள் மருத்துவம் சேர எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள்.

ஏமாறுவதும் தற்கொலை செய்து கொள்வதும் அனிதாக்கள் தான்.

உச்சநீதிமன்றத்தில் மேலும் நான்கு நீதிபதிகள் – சமூக நீதி ஆய்வு வேண்டாமா?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மேலும் நான்கு நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமித்திருக்கிறார்.

தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியன், நீதிபதி கிருஷ்ணா முராரி, நீதிபதி ரவீந்தர பட், நீதிபதி  ஹ்ரிகேஷ் ராய் ஆகிய நால்வரும்தான் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

இவர்களில் எத்தனை பேர் உயர் குலத்தோர், பிற்பட்டோர் , தாழ்த்தப்பட்டோர்  சிறுபான்மையினர் என்ற விகிதம் இதுவரை பார்க்கப்பட்டதில்லை.

தகுதி படைத்த அனுபவம் உள்ளவர்களா என்ற அளவுகோலைக் கூட கொலிஜியம் என்ற நீதிபதிகளின் குழுதான் தீர்மானிக்கிறது.

34 இடங்களை எப்படி சமூக நீதி பார்த்து நியமிப்பது? மிகவும் கடினமான காரியம்தான்.

ஆனாலும் சமுதாயத்தின் எல்லா பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கும் அமைப்பாக உச்சநீதி மன்ற நீதிபதிகள் அமைந்திருந்தால் அப்போது தான் சமூக நீதி காக்கப்படும் நாடாக இந்திய கருதப்படும்.

பின்லாந்து போய் என்ன கற்று வந்தார் செங்கோட்டையன்?!

புதிய கல்வி திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பலை கிளம்பி இருக்கும் நேரத்தில் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு வால் பிடிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது.

பள்ளிப் பிள்ளைகளுக்கு 5ம், 8ம் வகுப்புகளில் பொதுத் தேர்வு என்பது அவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தத்தை கொடுக்கும் என்று எல்லாரும் ஆட்சேபிக்கிறார்கள்.

முடியாதுன் என்று சொல்வதற்கு பதில் முதல்வர் மத்திய அரசுடன் பேசி மூன்றாண்டுகளுக்கு பொது தேர்வில் இருந்து விதி விலக்கு பெற்றிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.

மூன்றாண்டுகளுக்கு பின் பிள்ளைகளை வதைப்போம் என்பதைப்போல் இருக்கிறது அமைச்சரின் அறிவிப்பு.

உலகத்தில் சிறந்த கல்வியை பின்லாந்து நாடு தன் குழந்தைகளுக்கு கொடுக்கிறது என்கிறார்கள்.

அங்கே போய் என்ன கற்று வந்தார் செங்கோட்டையன். ?

மத்திய அரசை எதிர்க்காமல் எல்லாவற்றுக்கும் தலையாட்டுவது என்பது எதிர்கால சந்ததியை விலை பேசுவதாகும்.

குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடாதீர்கள்.

கட்டாயக் கல்வித்திட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை நிறுத்தல் கூடாது என்று இருப்பதை மாற்றுவது புதிய கல்வி திட்டத்தின் நோக்கம்.

பின்லாந்தில் என்ன கல்வி முறை நடைமுறையில் இருக்கிறது என்பதையாவது செங்கோட்டையன் விளக்குவாரா? 

குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு முறையை முற்றாக கைவிட வேண்டும் தமிழக அரசு.

பல கட்சி ஜனநாயகம் தோற்று விட்டது- அமித் ஷா??!!

சர்வாதிகாரத்தை நோக்கி நாடு பீடு நடை போடுகிறது!

தலைமை தாங்குவது பாஜக. அதைத்தான் இன்றைய அமித் ஷாவின் பேச்சு காட்டுகிறது.

‘2014ல் மத்தியில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எங்கு பார்த்தாலும் பெருங்குழப்பம் நிலவியது. எல்லைகளில் பாதுகாப்பற்ற நிலை இருந்தது. பல கட்சி ஜனநாயக அமைப்பில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் ஏமாற்றம் காணப்பட்டது. மக்கள் அளித்த வரலாற்று வெற்றி 30 ஆண்டுக்கால கூட்டணி அரசு என்ற சகாப்தத்துக்கு முடிவு கட்டியது. ‘

இதுதான் அமித் ஷா பேச்சின் சாரம்.

பாஜக அல்லாமல் வேறு  கட்சி இருக்கக் கூடாது என்று பாஜக இன்று கூறவில்லை. காங்கிரஸ் அல்லாத பாரதம் என்ற முழக்கத்தை என்றோ எழுப்பிவிட்டது அது.  அதாவது காங்கிரஸ் வேறு கட்சி அகில இந்திய ரீதியில் பாஜகவை எதிர்க்கக் கூடிய கட்சி ஒன்று இல்லை.

எனவேதான் காங்கிரசை ஒழித்துக் கட்டி விட்டால் தங்களுக்கு எதிரியே இல்லை  என்று பாஜக நினைத்தது. அது உண்மைதான். ஏறத்தாழ அதில் பாஜக வெற்றியும் பெற்றுவிட்டது. காங்கிரஸ் அகில இந்திய ரீதியில் மீண்டு வரும் என்ற நம்பிக்கை தேய்ந்து வருகிறது.

எனவே இன்று இருக்கும் ஒரே மாற்று அகில இந்திய ரீதியில் பாஜகவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் இணைய முடியுமா என்பதுதான்.

முடியும் என்பதற்கான வாய்ப்புகள் பெருகி வருகின்றன.

பாஜக தோற்கும் என்பதற்கு ஆரூடம் தேவையில்லை.

அறம் அதை தோற்கடிக்கும்.

ஏனெனில் பாஜகவிடம் அறம் இல்லை.

சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, இன உணர்ச்சி, மொழி உரிமை இந்த ஐந்திலும் பாஜக வுக்கு இருக்கும் நிலைப்பாடுகள் அறத்திற்கு எதிரானவை.

எனவே பாஜக தோற்கும். மக்கள் தங்கள் கடமையை  விழிப்புணர்வுடன் செய்தால் போதும்.

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அதிபர் ஆட்சிமுறையை கொண்டுவர முயற்சித்தார்கள். நடக்கவில்லை. மோடி காலத்தில் அதற்கான வாய்ப்புகள் பெருகி இருக்கின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள்.

பாஜக வுக்குத்தான் தனி பெரும்பான்மை இருக்கிறதே பிறகு ஏன் கூட்டணி கட்சிகளுக்கு இடம் தருகிறீர்கள். ஒருமுறை தனி ஆட்சி நடத்துங்கள். எதிர்ப்பு  வலுக்கிறதா ஆதரவு பெருகுகிறதா என்பதை பிறகு பாருங்கள். 

சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம் போன்ற கட்சிகளுக்கு பாஜக இடம் தந்திருப்பதே பல கட்சி தேவையை உணந்திருப்பதால்தான். 

சர்வாதிகாரம் ஒருபோதும் வென்றதில்லை.

மீண்டும் அமித் ஷாவுக்கு லாலி பாடி இந்திக்கு ஆதரவளித்த ரஜினி ??!!

இந்தியே இந்தியாவின் மொழி என்று அமித் ஷா பேசிய பேச்சு ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் அடங்காத நிலையில் அவருக்கு ஆதரவாக ரஜினி கொடுத்திருக்கும் குரல் எதிர்காலத்தில் அவர் யார் பக்கம் நிற்பார் என்பதற்கு  அடையாளம் காட்டி நிற்கிறது.

‘பொதுவான மொழி ஒன்று இருந்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் நல்லது.’  

‘துரதிருஷ்ட வசமாக இந்தியை தென்னாட்டிலும் ஏன் வடநாட்டிலும் கூட பலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ‘ 

இதுதான் இன்று ரஜினி உதிர்த்த முத்துக்கள். 

அதாவது பொதுவான மொழி ஒன்று இருந்தால் நாட்டுக்கு நல்லதாம்.

ஏன் பொதுவான மொழி ஒன்று வேண்டும்?

இப்போது ஆங்கிலம் அல்லது இந்தி என்று இருக்கிறது.

ஆங்கிலம் அயல்நாட்டு மொழி. அயல்நாட்டு மொழிக்கு நம் நாட்டு மொழி இந்தி இருந்தால் என்ன? இதுதான் இந்தி வெறியர்கள் கேட்கும் கேள்வி.

நம் கேள்வி அவர்கள் காதில் விழுவதில்லை. 

எனக்கு இந்தியும் வங்காளியும் மராத்தியும் கன்னடமும் ஆங்கிலமும் அயல்மொழிகள்தான். ஒரே வேறுபாடு ஆங்கிலம் அந்நிய நாட்டு அயல் மொழி. மற்ற மொழிகள் என் நாட்டு அயல்மொழிகள். 

பொதுமொழியாக தமிழாக இருந்தால் தமிழன் எதிர்க்க மாட்டான். அப்படித்தான் ஒவ்வொரு மொழிக்காரனும் தன் மொழியே பொதுவான மொழியாக இருக்க ஆசைப்படலாம். என்ன தவறு?

இந்திக்காரன் தன் தாய் மொழியை மட்டும் படித்துக் கொண்டு கோலோச்சுவான் !      வெளிநாட்டு தொடர்புக்கு ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு அல்லது ஜெர்மன் ஏதாவது கற்றுக் கொள்வான். பறந்து செல்வான்.

மற்ற மொழிக்காரன் மட்டும் தன் தாய் மொழியோடு ஆங்கிலத்தையும் இந்தியையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

மொழி கற்றுக் கொள்ளும் பளு எல்லாருக்கும் சமமாக இருக்க வேண்டுமா வேண்டாமா? 

இந்த நியாயத்தை எதிர்கொள்ள முடியாமல்தான் இந்திக்காரன் மும்மொழி என்று பசப்புகிறான்.

எந்த வடநாட்டுக்காரனும் எந்த தென்னிந்திய மொழியையும் கற்றுக் கொள்ளப்போவதில்லை.

இப்போதே மோசடி செய்து தமிழ் கற்றுக் கொண்டதுபோல் போலியாக ஆவணங்கள்  தயார் செய்து தமிழர் வேலை வாய்ப்பை பறித்துக் கொள்கிறான்.

இந்தியை ஏற்றுகொள்ளாதது துரதிருஷ்டம் என்கிறார் ரஜினி. அதாவது ஏற்றுக்  கொண்டால் அதிருஷ்டம் என்றுதானே அர்த்தம்.

எந்த மொழியையும் யாரும் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம். இதில் ஏன் கட்டாயம்? கட்டாயப்படுத்துவது புகுத்துவது மத்திய அரசு.    புகுத்த மாட்டோம் என்று சொல்லிகொண்டே புகுத்துகிறவர்களை எப்படி எதிர் கொள்வது? இதுதான் பிரச்னை!

நல்லவேளை ரஜினி தன்னை அடிக்கடி தன்னை யார் பக்கம் என்று அடையாளம் காட்டிக் கொண்டே இருக்கிறார்.

ரசிகன் என்று ஒட்டிக கொண்டிருக்கும் தமிழர்கள் விழித்துக் கொள்ளட்டும்.

மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குரல் கொடுத்திருக்கிறார் இன்று. இந்திக்கு வால் பிடித்திருக்கிறார் ரஜினி இன்று.

ரஜினியை ரசிப்போம். அரசியலில் வாலாட்ட முயற்சித்தால் ஓட்ட நறுக்குவோம்?!

தமிழ்-தமிழர்க்கு எதிரிகள் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள். ??!!

உலகத்தின் முன் இந்தியாவின் மொழி இந்தியாம் ??!! அமித் ஷா போட்ட குண்டு?!

செப்டம்பர் 14 – அரசியல் சாசன சபை இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண்ட நாள். அதை கொண்டாடுவது இந்தி தினம். இன்று பேசிய பாஜக தலைவர் அமித் ஷா தன் கட்சியின் உண்மை முகத்தை காட்டினார்.

‘இந்திக்குத்தான் இந்தியாவை இணைக்கும் வல்லமை உண்டு.’

‘உலகத்தின் முன் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்த இந்தியாழ் மட்டுமே முடியும்.’

‘இந்தி இந்தியாவின் அடிப்படை மொழி’

‘இந்தியாவின் அடையாளமாக இந்தியே ஆக வேண்டும்.’

‘வல்லபாய்  படேல், மகாத்மா காந்தியின் கனவு இந்தியே இணைப்பு மொழி ஆக வேண்டும் என்பதே”

‘இந்தியயை புகுத்துவதில் பாதி வெற்றி மட்டுமே பெற்று இருக்கிறோம்.’

‘எனவே இந்தியர்கள் தங்கள் தாய்  மொழியுடன் இந்தியையும் கற்றுக் கொண்டு பயன் படுத்த வேண்டும்.’ ‘

இவைதான் அமித் ஷா உதிர்த்த முத்துக்கள்.

ஒரு பொறுப்புள்ள மத்திய அமைச்சர் இப்படியா பேசுவார்.?

நாட்டின் மற்ற மொழி பேசும் சுமார் 70% மக்கள் வருந்துவார்கள் என்பது அவருக்கு தெரியாதா?

இந்தியா வலுவாக இருக்கிறது. ஒற்றுமையாக் இருக்கிறது. அதை குலைக்கும் வகையில் இருக்கிறது அமித் ஷாவின் பேச்சு.

1963ம் ஆண்டின் அரசு அலுவல் சட்டம் இந்தியையும் ஆங்கிலத்தையும் தகவல் பரிமாற்ற சாதனங்கள் ஆக அங்கீகரிக்கிறது.

ஒரு இந்தியை ஏற்றுக் கொண்ட மாநிலம் இந்தியை ஏற்றுக் கொள்ளாத மாநிலத்துக்கு தகவல் அனுப்பினால் இந்தியுடன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்து அனுப்ப வேண்டும் என்று சொல்கிறது. இந்தியில் ஏன் அனுப்ப வேண்டும்? ஆங்கிலத்தில் மட்டும் அனுப்பினால் போதாதா என்று யார் கேட்பது.? இந்தியில் அனுப்பும் போது ஆங்கில மொழி பெயர்ப்பையும் அனுப்புகிறீர்களா?

ஒரே நாடு ஓரே மொழி என்றால் மற்ற மொழிக்காரர்கள் எங்கே போவார்கள்?

இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தியை யார் மீதும் திணிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை கொடுத்த ஜவஹர்லால் நேரு ஏன் அதை சட்டமாக்கி வருங்கால சந்ததியினருக்கு சட்ட பாதுகாப்பை வழங்க தவறினார்? பிற்காலத்தில் இந்தியை திணிக்க முயற்சிகள் நடக்கலாம் என்பது அவருக்கு தெரியாதா? நடக்கட்டும் என்பதுதான் அவரின் எண்ணமும் ஆக இருந்ததா? அதற்கு இடம் கொடுத்துதான் சட்டமாக்காமல் இருந்தாரா? அவரும் அந்த கூட்டத்தை சேர்ந்தவ்ர்தானே? அதை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருந்த நாம்தான் முட்டாள்கள் என்பதை இன்று அமித் ஷா நிருபித்து விட்டார். 

ஆங்கிலேயன் ஆட்சி செய்த போது ஆங்கிலத்தை கற்றவர்கள் இந்திக்கார்கள்  ஆளும்போது இந்தியை கற்றுக் கொள்ள வேண்டியதுதானே என்கிறார்களா?

தமிழன் தலைவிதி எவனுக்காவது அடிமையாக வாழ்வதுதானா? 

இது தமிழன் மீதான தாக்குதல் மட்டுமல்ல. இந்தி பேசாத அனைவர் மீதுமான தாக்குதல்.

அவர்கள் இந்தி திணிப்பை நிறுத்தப் போவதில்லை. எப்படி தடுப்பது என்று சிந்தித்து செயலாற்றுவது மட்டுமே இப்போது மற்றவர்களுக்கு இருக்கும் ஒரே வழி!

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜெவாலா இந்தி தான் எல்லாரையும் இணைக்கும் என்கிறார்.

இஸ்ரோ தலைவர் சிவன் உழைப்பால் உயர்ந்தவர். சந்தேகம் இல்லை. ஆனால் அவர் தான் தமிழர் என்று சொல்லிக் கொள்ளவே மறுக்கிறாரே? நான் இந்தியன் என்று சொல்லும் சிவன் பாராட்டுக்குரியவர். ஆனால் தமிழன் என்று சொல்ல மறுக்கும் சிவன்? இவரைப்போல விஞ்ஞானி ஆக வேண்டும் என்றால் தாய் மொழிப்பற்றை இனப்பற்றை கைவிட வேண்டும் என்பதா நிலைமை?

இந்திக்காரர்கள் உட்பட மற்ற மாநிலத்துக்காரர்கள் தங்கள் அடையாளங்களை விட்டு விடுகிறார்களா?

சாதி மத அடையாளங்களை சட்டப்படி ஒழிப்பார்களா?

அவர்கள் மட்டும் தங்கள் அடையாளங்களை விட மாட்டார்கள. மற்றவர்கள் விட வேண்டும் என்பது எப்படி நியாயம்?

இது நல்லதற்கல்ல??!!

1365 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நுழைந்த கணபதி வழிபாடு??!

கிபி 642 – 654 ஆண்டுகளில் வாதாபியை வெற்றி கொண்டு ஆண்ட முதலாம் நரசிம்ம பல்லவன் அங்கிருந்து கொண்டு வந்த கடவுள் தான் கணபதி என்று வரலாறு சொல்கிறது.

இதற்கு முத்துசாமி தீட்சிதர் பாடிய வாதாபி கணபதிம் பஜேஹம் என்ற பாடலையும் சான்றாக காட்டுகிறார்கள்.

இன்னும் எத்தனையோ கதைகள் பிள்ளையாரை சுற்றி.

பார்வதியின் அழுக்கில் இருந்து பிறந்தவர். அவரை சிவன் கொல்ல பின்னர் சிவனே அவருக்கு யானைத் தலையை கொடுத்தார். இது ஒரு புராணம்.

அடுத்த புராணம் – யானை உருக்கொண்டு சிவ பார்வதி கலந்து பிறந்தவர்.

எது எப்படியோ அறுவகை சமயங்களும் பிள்ளையாரை ஏற்றுக்கொண்டு விட்டன.

இதற்கெல்லாம் அறிவு தேவை இல்லை. நம்பிக்கை மட்டுமே போதும்.

அறிவால் கடவுள் நம்பிக்கையை அளக்க முடியவே முடியாது.

கேள்வி கேட்காமல் நம்புவதுதான் மதம் என்றாகி விட்டது. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

ஊரோடு ஓட்ட வாழ் என்று எல்லாரும் செய்வதை நாமும் செய்வதே நல்லது என்றாகி விட்டது.

இன்று பிள்ளையார் ஒரு அரசியல் ஆயுதம்.

மாற்று மதத்தினருக்கு சவால் விட ஒரு தேவை.

எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று  கேள் என்று இன்று சாக்ரடிஸ் பிறந்து வந்து சொன்னாலும் கேட்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

நம்பிக்கையையும் அறிவால் அளப்போம் என்று சொல்லும் நாள் வருமா??