Home Blog Page 26

வேற்று மாநிலத்தவர் குடியேற்ற திட்டமே ஒரே குடும்ப அட்டை திட்டம்?!

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் எதற்காக கொண்டு வரப்படுகிறது?

நம் கெட்ட நேரம். இங்கே இருக்கும் அரசு நம் உரிமைகளை பாதுகாக்கும் அரசாக இல்லை.

பொதுவிநியோகம் பொதுப்பட்டியலில்  உள்ளது. தமிழகத்தில்  நல்ல முறையில் நாட்டுக்கே வழி காட்டும் வகையில் பொது விநியோக திட்டம் அமுலில் உள்ளது.

ஏறத்தாழ இரண்டு கோடி குடும்பங்களுக்கு குடும்ப அட்டை மூலம் விநியோகம் செய்வது என்பது சாதாரண காரியம் இல்லை. அதிலும் மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை ஏன் மாற்ற வேண்டும்.?

மத்திய அரசு இதில்  தன் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறதா? மாநில உணவுப் பழக்கங்களில் தலையிடுகிறதா? வேற்று மாநிலத்தவர் இங்கே குடிவரும்போது அவர்களுக்கு உதவ இந்த அட்டைகள் பயன்படும் என்றால் மத்திய அட்டை வழங்குங்கள். ஏன் மாநில அட்டையுடன் இணைக்க வேண்டும்?

குடும்ப அட்டை கிடைத்தவுடன் அவர்களுக்கு  வாக்குரிமை கிடைக்கும். ஆக தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கையில் வேற்று மாநிலத்தவர் உள்ளே நுழைக்கப் படும் ஆபத்து இருக்கிறதா இல்லையா?

எந்த இந்தியரும் எங்கேயும் வசிக்கலாம். உண்மைதான். ஆனால் ஒரு மாநிலத்தின் தன்மையை உருக்குலைக்கும் அளவு ஊடுருவ உரிமை உள்ளதா? இது ஒரு மொழி வாரி படைஎடுப்பாக அமைந்து விடக் கூடாதல்லவா?

பொதுபட்டியலில் உள்ள உரிமையை   மாநில அரசு பயன்படுத்தி வருகையில் அதை எடுத்து மத்திய அரசிடம் கொடுத்து  விட்டால் மாநில உரிமையை இழந்ததாக ஆகுமா ஆகாதா? 

அமைச்சர் காமராஜ் இந்த திட்டத்தில் சேரத் தயார் என்றும் அதற்கு ஒரு குழு அமைத்து அதன் படி செயல்படப் போவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

14 மாநிலங்கள் சேரப்போகின்றன என்றால் நாமும் சேர வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே?

ஒருவேளை அங்கும் குடியேற்றத் திட்டத்தை அரங்கேற்றப் போகிறதா பாஜக அரசு?

தமிழக அரசு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை ஏற்கக் கூடாது?

பிள்ளையார் பந்தலில் தலித் எம் எல் ஏவுக்கு அவமரியாதை??!!

ஆந்திர மாநில மடிகா வகுப்பு எம்எல்வாக இருப்பவர் மருத்துவர் உண்டவல்லி ஸ்ரீதேவி. இவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மடிகா வகுப்பு ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட வகுப்பு.

ஒய் எஸ் ஆர் ரெட்டியின் நினைவு நாள் விழாவுக்கு சென்ற ஸ்ரீதேவியை அனந்தவரம் கிராம கட்சிக்காரர்கள் அங்கே இருந்த கணேஷ் சதுர்த்தி பந்தலுக்கு அழைத்தார்கள்.  அங்கு சென்ற ஸ்ரீதேவியை அங்கே இருந்த கொம்மிநேனி சிவய்யா என்ற உயர் சாதி  சௌதாரி வகுப்பை சேர்ந்தவர் சாதியை சொல்லி அவமானப்படுத்தி இருக்கிறார். பிள்ளையார் தீட்டாகி விட்டார். ஏன் இவரை இங்கே அழைத்து இடத்தை மாசு படுத்துகிறீர்கள் என்று சத்தம் போட்டு தகராறு செய்திருக்கிறார்.

அவர் தெலுகு தேசம் கட்சியை சேர்ந்தவர் என்றாலும் இதேபோல் சென்ற ஆண்டும் தெலுகு தேசம் கட்சியை சேர்ந்தவர் ஒருவர் அவர் கட்சியை சேர்ந்தவராலேயே அவமானப் படுத்தப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

காவல் துறை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.

ஒரு உண்மை தெளிவாகிறது.

தலித்துகள் இன்னும் முழுவதுமாக சாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. இன்னும் எத்தனை  ஆண்டுகள் ஆகுமோ?

சாதி பேதம் பாரோம் என்பதெல்லாம் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

சட்டப்படி சாதி ஒழிப்பு ஒன்றே ஒரே சமுதாயத்தை உருவாக்க முடியும்.

சட்டப்படி ஒழிக்க முடியுமா? ஒழிக்க விடுவார்களா?? யார் அவர்கள்??

சாலை வரி வசூலிக்கும் அரசுக்கு சுங்கம் வசூலிக்க உரிமை இல்லை.

வாகனங்கள் பதிவு செய்யப்படும் போதே சாலை வரி வசூலித்து விடுகிறார்கள்.

அதில் வேண்டுமானால் காலத்துக்கு ஏற்ப சாலை வரியை உயர்த்திக் கொள்ளலாமே தவிர கூடுதலாக சுங்க வரி வசூலிக்க அரசுக்கு உரிமை உண்டா என்பது கேள்விக்குரியது. 

சுங்க வரி வசூல் செய்யும் டோல் கேட்டுகளை நாங்கள் வென்று வந்தால் எடுத்து விடுவோம் என்று பாஜக 2014ல் கூறியது.

இப்போது சுங்க வரி தாறுமாறாக உயர்த்தப்பட்டு மக்கள் தொல்லைக்கு உள்ளாகிறார்கள்.

அது மட்டுமல்ல எவ்வளவு உயர்த்துகிறார்கள் என்பது அரசுக்கே கூட தெரியாமல் நடக்கிறதாம். அந்த அனுமதியை அரசு உரிமதார்களுக்கு வழங்கினால் அவர்கள் கொள்ளைதான் அடிப்பார்கள்.

இதனால் பேருந்து கட்டணம் உயரும். சரக்கு கட்டணம் உயரும். விலைவாசி உயரும்.

ஆதாயம் அடைவது ஆளும் அரசியல் கட்சிகள் தான். அதுமட்டுமல்லாமல் போக்குவரத்தும் பாதிக்கபடுகிறது.

வெளிப்படைத்தன்மை இல்லாததால் ஊழல் நடக்கிறது.

பொதுமக்களை தொல்லைக்குள்ளாக்கும் சுங்க வரி எப்போது ஒழியும்?

விதிக்கப்படாத அபராதத்தை எதிர்த்து மேன்முறையீடு செய்த தமிழக அரசு

சென்னையில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசுபட்டு விட்டதாகவும் அதை தமிழக அரசு தடுக்க தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டி தொடுக்கப்பட்ட வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் நீர்நிலைகளை சாக்கடையாக மாறிவிட்டதை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதாவும் எனவே மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழக அரசு ரூபாய் 100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் ஆனால் இதில் இறுதி முடிவு எடுக்கும் முன்பு நிபுணர் குழு சிபாரிசு அறிக்கையுடன் தலைமை செயலாளர் தீர்ப்பாயத்தின் முன்பு ஆஜர் ஆக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதாவது இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அதன்படி தலைமை செயலாளர் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரூபாய் நூறு கோடி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது உறுதி செய்யப்படாத அபராதத்தை எதிர்த்து மேன்முறையீடு. இதை எப்படி மாநில அரசு வழக்கறிஞர்கள் அங்கீகரித்தார்கள் என்பது தெரியவில்லை.

இறுதி விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம் அபராதத் துகை எதுவும் விதிக்கப்பட வில்லை என்று கூறி மேன்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

இதில் யார் குற்றவாளி? பொறுப்பில்லாமல் செயல்பட்ட தமிழக அரசு வழக்கறிஞர்கள் குழுதான்.

தமிழக அரசின் சட்டத்துறை இவை எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் மானத்தை காக்க வேண்டும்.

திருமலையில் வேற்று மதத்தவர் வேலை செய்யக் கூடாதாம்?!

திருப்பதி தேவஸ்தானத்தில் சுமார் 48 பேர் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருக்கிறார்கள்.

அவர்கள் பணி விலக வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு உத்தரவிட்டுள்ளது.

எந்த மதத்தில் இருப்பது அவரவர் விருப்பம். ஆனால் அவர்கள் இந்துக் கோவில்களில் பணிபுரிந்தால் இந்துவாக மட்டுமே இருக்க வேண்டுமா?

திருமலையில் மதமாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் அதை  தடை செய்ய வேண்டும் என்றும் பாஜக கோரி வருகிறது.

அவர்கள் பணியில் சேர்ந்தபோது இந்துக்கள் என்று சொல்லி சேர்ந்தார்களா? அல்லது பணியில் சேர்ந்த பிறகு மதம் மாறினர்களா?

செய்யும் பணிக்கும் நம்பும் மதத்திற்கும் என்ன தொடர்பு?

அவர்கள் இறைப்பபணிக்காக என்று சொல்லி சேர்ந்தால் அவர்கள் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் மத நம்பிக்கை சாராத பணிகளுக்கு வேற்று மதத்தவர் பணியில் இருக்க என்ன தடை.?

சர்ச்சுகளில் மசூதிகளில் வேற்று மதத்தவர் பணி புரிகிறார்களா என்பது முக்கிய கேள்வி.

பிற மதங்களில் வேற்று மத நம்பிக்கைகளுக்கு இடம் இல்லை.

ஆனால் இந்து மதத்தில் மட்டும் நாத்திகம் பேசுகிறவர்கள் கூட இந்துக்கள் தான்.

ஜெகன் மோகன் ரெட்டி கூட கிறிஸ்தவர்தான். சமீபத்தில் குடும்பத்துடன் இஸ்ரேல் சென்று வந்தார். அவர் அவ்வப்போது ஏழுமலையான் கோவிலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்.

எனவே பிற மதங்களில் இல்லாத சுதந்திரம் இங்கு இருக்கிறது என்பதே நமக்கு பெருமை. அதை ஏன் இழக்க வேண்டும்?

எழுவர் விடுதலையில் தமிழக அரசின் இரட்டை வேடம்?!

நளினியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது.

இது சரியான தீர்ப்பு அல்ல. மேன்முறைஈட்டில் நிற்காது.

ஆனால் நளினி மேன்முறையீடு செய்வாரா என்பது தெரியவில்லை.

09.09.2018ல் எழுவரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். அது சரியா என்ற கேள்விக்கும் மாநில அரசின் பரிந்துரையை நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா என்பதற்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை.

நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் முன்வைத்த வாதம் அரசின் இரட்டை நிலைப்பாட்டை தோலுரித்து காட்டுகிறது.

அகில இந்திய சிறை சீர்திருத்த கமிட்டி பரிந்துரையை ஏற்று மோசமான குற்றங்களில் சம்பந்தப்பட்ட கைதிகளை விடுவிப்பதில்லை என்று அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாகவும் அதன்படி அரசியல் சட்ட பிரிவு 161 ஐ பயன்படுத்தி விடுதலை செய்ய போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டார்கள்.

161ஐ பயன்படுத்தப் போவதில்லை என்ற அரசின் கொள்கை முடிவு உண்மையா அல்லது 09.09.2018ல் அரசு விடுதலை செய்ய கேட்டு ஆளுனருக்கு செய்த பரிந்துரை உண்மையா? எது அரசின் நிலைப்பாடு? 

இதையும் ஏற்றுக் கொண்டு அரசு பரிந்துரை செய்து விட்டது எனவே அதற்கு மேல் அரசுக்கு உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் தீர்பளித்து இருப்பது சரியல்ல.

ஆக எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்று மாநில அரசு கருதுகிறதா? யார் இந்த மாநிலத்தை ஆளுகிறார்கள். தமிழக அரசா? மத்திய அரசீன் பிரதிநிதி ஆளுநரா? இதுதான் ஜனநாயகமா?

கூட்டணியில் இருந்து  கொண்டு அதற்கு மேல் பேசமுடியாது என்று ஆளுநர் செப்டம்பர் 9க்கு முன் முடிவெடுக்க வேண்டும் என்று ராமதாஸ் அறிக்கை விடுகிறார்.

ஆளுநர் நிராகரித்தால் வேறு ஒன்றுமே செய்ய முடியாதா?

மீண்டும் அரசு பரிந்துரைத்தால் ஆளுநர் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும் என்கிறார் ராமதாஸ். அப்போது மட்டும் என்ன உறுதி?

மாநில அரசு உறுதியாக இருந்தால் மட்டுமே இது முடியும்.

காந்தியை கொன்றவனை பதினைந்து வருடத்தில் விடுவித்தவர்கள் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை மட்டும் சாகும் வரை சிறையில் கிட என்கிறார்கள்.

யார் கொலை செய்தாலும் சிரச்சேதம் பார்ப்பான் கொலை செய்தால் மட்டும் அவனது தலைமயிரை சிரை என்று மனு நீதி எழுதியவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

அடிமைகளின் ஆட்சி என்றால் கோபப்படுவார்கள் அதிமுக வினர். நீங்கள் செய்வதற்கு என்ன பெயர் என்று நீங்களே கூறுங்கள்.

வன்முறைக்கு வித்திடும் முகமது ஷெரிப், பாஜக நாராயணன், ஆளுநர் சத்ய பால் மாலிக்??!!

கருத்து வேறுபாடுகள் எத்தனை இருந்த போதும் அவற்றை ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வெல்வதுதான் நீதி.

ஆனால் சிலர் வன்முறைக்கு வித்திடும் பேச்சுக்களால் ஜனநாயகத்திற்கே சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக பேச்சாளார் முகமது ஷெரிப் ‘நாங்கள் முஸ்லிம்களுக்காக மட்டும் பேசுவதாக இருந்தால் முத்தலாக் சட்டம் கொண்டு வந்தவுடனேயே பிரதமர் மோடியின் தலையை எடுத்திருப்போம். உள்துறை மந்திரி அமித் ஷா உயிரோடு இருந்திருக்க மாட்டார்.’ என்று பேசியிருக்கிறார். உடனே அந்த  கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அவரை கண்டித்து பொறுப்பில் இருந்து  நீக்கியுள்ளார். கட்சியில் இருந்தே நீக்கியிருக்க வேண்டும். அவர் அரசியலில் இருப்பதற்கே அருகதை அற்றவர்.

இன்று புதிய தலைமுறை தொலைகாட்சியில் அருணனுடன் கலந்து கொண்ட பாஜக நாராயணன், வைரமுத்து தலையை வெட்டுவதாக நயினார் நாகேந்திரன் பேசியது தவறில்லை என்கிறார். அவர் வணங்கும் ஒருவரை வேசி என்று எழுதினால் என்ன செய்வீர்கள் என்றும் கேட்கிறார். அப்படி எழுதவில்லை என்று மறுத்ததை பேச விடாமல் தடுக்கிறார். ஏன் வழக்கு போட வேண்டியதுதானே என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாமா? அப்படி ஒருவர் ஆராய்ச்சி செய்து  எழுதியதை மேற்கொள் காட்டியது எப்படி குற்றம் ஆகும் என்ற கேள்விக்கு எவரிடமும் பதில் இல்லை. ஒன்று விளக்கம் சொல்வதை கேள். இல்லையா சட்டப்படி நடவடிக்கை எடு. தண்டனை கொடு. அல்லது நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு பிறகாவது திருந்து. நான் அறிவை பயன்படுதாதவரை தூண்டி விட்டு தலையை எடுக்க சொல்வேன் என்கிறாரா?

காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் பொறுப்பான பதவியில்  இருப்பவர். அவர் கூறியதாக இன்று சி என் என் டிவியில் ஒரு செய்தி வெளியாயிற்று. அவர் சொல்கிறார். இனி காங்கிரஸ்காரர்களை 370 ஆதரவாளர்கள் என்றே அழையுங்கள்.  அவர்கள் அவர்களை ஷூவால் அடிப்பார்கள்  என்று பேசியிருக்கிறார். அப்படி பேசியிருந்தால் அது எப்படி சரியாகும். மக்களை வன்முறைக்கு தூண்டுவதாக ஆகாதா? அதை ஒரு அரசியல் சட்ட பொறுப்பு வகிக்கும் ஆளுநர் பேசலாமா? மற்றவர் பேசினால் வழக்கு? ஆளுநர் பேசினால்?

சட்டம் ஆளும் கட்சிக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரே மாதிரி இருக்கவேண்டும்.

சர்வாதிகாரத்தை நோக்கி நாடு பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

பியுஷ் மானுஷை பாஜகவினர் தாக்கியபோது காவல் துறை என்ன செய்தது??!

சேலம் மாவட்ட பாஜக அலுவலகத்துக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர் பியுஷ் மானுஷ் காஷ்மீர் நிலைப்பாடு மற்றும் பல பிரச்னைகள் பற்றி பேசுவதற்காக முன் அறிவிப்பு கொடுத்து விட்டு காவல் துறையினர் இருக்கும்போது  நுழைகிறார். அவரை மாவட்ட  தலைவர் வரவேற்று பேசிக்கொண்டிருக்கிறார்.

பேச்சு சூடாகி அவருக்கு பாஜகவினர் செருப்பு மாலை போட்டு அடிக்கத் துவங்குகிறார்கள். காவல் துறை அதிகாரிகள் ஏனோதானோ என்று தடுக்க முயற்சித்து அதனையும் மீறி அவருக்கு பலமான அடிகள் விழுகின்றன.

இந்த சம்பவத்திற்கு யார் காரணம்.?

தாக்குதலை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி கொடுக்கிறார். இன்னும் சிலரும் கொடுக்கிறார்கள் .

முதலில் பியுஷ் மனுஷ் பாஜக அலுவலகம் சென்றுதான் தனது மாற்றுக் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று இல்லை. தவிர்த்திருக்கலாம்.

காவல் துறை பாதுகாப்பில் இருக்கிறது. அவர்கள் இந்த சந்திப்புக்கு அனுமதி கொடுத்திருக்கக் கூடாது. கொடுத்தால் தகுந்த பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அடிக்க விட்டு விட்டு வேடிக்கை பார்க்க எதற்கு காவல்துறை. ?

இந்தப் பிரச்னையில் குற்றம் காவல்துறையின் மீதுதான் அதிகம் இருப்பதாக தோன்றுகிறது.

இரண்டு தரப்பின் மேலும் வழக்கு பதிந்திருக்கிறது காவல் துறை.

இப்படி சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் நடவடிக்கைகளுக்கு காவல் துறை  துணை போனது போல் இருக்கிறது நடந்த சம்பவம்.

உலகின் நுரையீரல் எரிகிறது; யாருக்கும் பதட்டமில்லை ??!!

அமேசான் மழைக்காடுகள் உலகின் 20% ஆக்சிஜனை தருகின்றன. ஐந்தரை லட்சம் கிலோ மீட்டர் பரப்பளவு. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பைப்போல் இரண்டு மடங்கு பெரியது. பிரேசில் ,பெரு , ஈக்வடார், பொலிவியா, கயானா என்று பல நாடுகளில் பரவி இருந்தாலும் பிரேசிலில் மட்டும் அறுபது சதம் காட்டின் நிலப்பரப்பை பிரேசில் கொண்டுள்ளது.

உலகின் ஒட்டு மொத்த தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் மூன்றில் ஒரு பங்கு இங்குள்ளது

நானூறுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் இன்னமும் வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்கின்றனர்.

இந்த ஆண்டு மட்டும் 73000 தீ விபத்துக்கள் என்றால் இவை இயற்கையானவையா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எல்லாம் மனிதர்களின் பேராசை.

காட்டை அழித்து வேளாண்மை செய்யப் போகிறார்களாம். உலகிற்கு ஆக்சிஜனை அளித்து எங்களுக்கு என்ன என்ற எண்ணம்தான்.

உலக நாடுகள் தீயை அணைக்க உதவ தயாராக இருந்தும் வேண்டாம் என்று மறுத்து விட்டது பிரேசில். என்ன காரணம்?

ஏன் அவரவர் நாட்டில் மரங்களை வைத்து காத்துக் கொள்ளுங்களேன் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

பூமிப்பந்தில் வாழும் மனிதர்கள் செய்யும் பூமியின் அமைப்பில் மாற்றம் செய்யும் காரியங்கள் ஏதோ அவர்களை மட்டுமே பாதிப்பதாக இருந்தால் பரவாயில்லை.      ஒட்டு மொத்த மனித  இனத்தையே பாதிப்பதாக இருந்தால்?

அமேசான் நெருப்பு இப்போதைக்கு அணையுமா? அணைந்தாலும் மீண்டும் தொடங்காமல் இருக்குமா?

காஷ்மீர் மக்களை நலத்திட்டங்கள் மூலம் வளைக்க மத்திய அரசு திட்டம்??!!

மோடி அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தவிர எந்த முஸ்லிம் நாடும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

சவுதி இளவரசர் இந்தியா என்பது இந்துக்களுக்கானது என்ற தனது புரிதலை வெளிப்படுத்தி விட்டார்.

ஐநாவிலோ வேறு எங்குமோ இனி சர்வதேச அளவில் காஷ்மீர் பற்றி விவாதமோ பேச்சு வார்த்தையோ நடவடிக்கையோ வர வாப்புக்கள் குறைவு.

உள்நாட்டிலும் பெருத்த ஆட்சேபணை இல்லை. காங்கிரசே இதில் பிளவு பட்டிருக்கிறது. சில தலைவர்கள் ஆதரவு தெரிவித்த பிறகு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

எதிர்கட்சிகளை இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஒரே கட்சி திமுக. அகில இந்திய ரீதியில் இன்று பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக செயல்படுவது திமுகதான்.

திமுகவின் மதிப்பு இதனால் மிகவும் கூடியிருக்கிறது.

அதுவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் நடந்த ஆர்ப்பாட்டம் காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க மட்டுமே என்று தெளிவு படுத்திவிட்டார். 370 பிரிவு நீக்கத்தை பொருத்தவரை எங்களது எதிர்ப்பு அதை நீக்க கடைபிடிக்கபட்ட விதிமுறை மீறல்கள்தான் என்றும் கூறினார். அதாவது எதிர்ப்பு இருந்தாலும் இந்த ஆர்ப்பாட்டம் தலைவர்களை விடுவிக்கத்தான் என்றார்.

காஷ்மீரில் நிலவரம் உண்மை என்னவென்று தெரியவில்லை. பார்வையிடச் சென்ற எதிர்கட்சித் தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். நிலவரம் அமைதியாக இருந்தால் ஏன் திருப்பி அனுப்ப வேண்டும்?

கல்லெறிதல் தினமும் நடக்கிறது என்றும் இல்லை என்றும் தகவல்கள் மாறி மாறி வருகின்றன. உண்மை நிலவரம் என்ன?

எத்தனை மாதங்களுக்கு ராணுவ கட்டுப்பாட்டில் மக்களை வைத்திருக்க முடியும்?

காஷ்மிரிகளை வென்றெடுக்க மத்திய அரசு 85 மக்கள் நலத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி இலவச மின்வசதி, சமையல் காஸ், கடன் உதவி, பென்ஷன் திட்டம் என்று பட்டியல் நீளுகிறது. இதற்கு மக்கள் மயங்குவார்களா? 

மத்திய அரசின் திட்டமே அங்கு வசிக்கும் விளிம்பு நிலை மக்கள் நிச்சயம் மயங்குவார்கள் என்பதுதான். அரசியல் அக்கறை இல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தை மட்டுமே அளவுகோலாக பார்ப்பவர்கள் இங்கே இல்லையா? அங்கு மட்டும் இருக்க  மாட்டார்களா? அவர்கள்தான் மத்திய அரசின் இலக்கு.

இதை நிறைவேற்ற ஒரு மாதம் கெடு வைத்திருக்கிறது மத்திய அரசு. அதற்குள் அவர்களை வளைக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறுவழியை யோசிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் இனி லடாக் தனி பிரதேசம்தான். ஏனென்றால் இதற்காக அவர்கள் வெகுகாலம் போராடி வந்திருக்கிறார்கள். இனி ஒருபோதும் அதை இழக்க அவர்கள் சம்மதிக்க மாட்டர்கள். அந்த பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பாஜக என்பதில் இருந்தே மக்கள் ஆதரவு யாருக்கு என்பது புரியும். காஷ்மீரிகள் லடாக் மக்களை அரவணைத்து செல்வதில் இருந்து தவறி விட்டார்கள் என்பது உண்மை.  அதுவும் லடாக்கை முஸ்லிம் பிரதேசமாக முயற்சித்தார்கள் என்பதும் குற்றச்சாட்டு.

இனி சட்ட மன்ற வரையறை ஒரு பிரச்னை ஆகும். எத்தனை லட்சம் மக்களுக்கு ஒரு சட்ட மன்ற உறுப்பினர் என்ற வரையறையை காஷ்மீர் அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக செய்து கொண்டார்கள்  என்பது பழைய குற்றச்சாட்டு. இனி அதுவும் விவாதத்துக்கு வரும்.