Home Blog Page 27

இட ஒதுக்கீட்டுக்கு குழி பறிக்கும் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் ?!!

ரெட்டை நாக்குக்கு பேர் பெற்றவர்கள் ஆர் எஸ் எஸ் தலைவர்களும் அதன் கிளை பாஜக தலைவர்களும்.

ஒரே நேரத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் பேசுவார்கள், மேல் மட்ட தலைவர்கள் கூடாது என்றும் பேசுவார்கள்.

அதாவது இறுதி இலக்கு இட ஒதுக்கீடு ஒழிப்பு.

அப்படித்தான் சில நாட்களுக்குமுன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசும்போது ‘இட ஒதுக்கீடு வேண்டும் என்போரும், வேண்டாம் என்போரும் உட்கார்ந்து பேசி ஒரு சுமுக சூழ்நிலையில் ஒரு முடிவுக்கு வர வேண்டும்’ என்று பேசி உள்ளார்.

இட ஒதுக்கீடா இன்றைய முக்கிய தலையாய பிரச்னை.? இட ஒதுக்கீட்டின் மூலம் என்ன? பிற்பட்ட தாழ்த்தப்பட்டோர் கல்வி வேலை வாய்ப்புகளில் மிகவம் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பதுதானே?

ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இட ஒதுக்கீட்டின் பலன்கள் அவர்களுக்கு கிடைதிருக்கிறதா என்பதை ஏன் புள்ளி விபரங்களுடன் ஆய்வு செய்ய வில்லை? எல்லாருக்கும் போதுமான பிரதிநிதித்துவம் கிடைத்து  இருந்தால் பிறகு இட ஒதுக்கீடு தேவை  இல்லை. ஆய்வு செய்து புள்ளி விபரங்களை வெளியிடாதது யார் தவறு? வெளியிட்டால் இன்னமும் மேற்குலத்தார் ஆதிக்கம் நீடிக்கிறது என்பது தெரிந்துவிடும் என்பதால் தானே? 

அதைப்பற்றி மோகன் பகவத் பேசாமல் இட ஒதுக்கீட்டை ஒழிப்பது பற்றி பேசுகிறார் என்றால் இவர்களின் தந்திரத்தை மக்கள் உணர மாட்டார்கள் என்று இன்னும் நம்புகிறார் என்றுதான் பொருள் .

சாதி ஒழிப்பை சட்ட பூர்வமாக்கப்படுவது பற்றி ஆர் எஸ் எஸ் பேசட்டும்.

அதைக்கூட பேசுவார்கள் ஏனென்றால் பார்ப்பனீயத்தை ஒழிக்கவே முடியாது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

சாதி வேறு பார்பனீயம் வேறு என்பார்கள்.

கீழ்பட்ட இரண்டு சாதிகளுக்கு இடையே மோதலை வளர்த்து இடையில் குளிர் காய நினைப்பது ஆர் எஸ் எஸ் வழக்கம். அதுதான் பாஜகவுக்கும் இன்று கைகொடுத்துக்  கொண்டிருக்கிறது.

போதுமான வளர்ச்சி யை உறுதி செய்யும் வரை இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது.

அலுவல் மொழி ஆங்கிலம் கூடாதென்று ஏன் கூறுகிறார் மோகன் பகவத் ??!!

ஆர் எஸ் எஸ் தலைவர்கள் நேரிடையாக எதையும் கூற மாட்டார்கள்.

நோக்கம் இந்தி திணிப்பு என்றால் அதை நேரிடையாக கூறினால் இந்தி பேசாதவர்களின் எதிர்ப்பு வரும். எனவே அதற்கு மாறாக ஆங்கிலம் கூடாது  என்பார்கள். ஏனென்றால் ஆங்கிலம் இல்லாமல் இருந்தால்தான் அந்த இடத்தை இந்தி பிடிக்க முடியும். ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிக்கும் வரை இந்தியோ வேறு மொழிகளோ அந்த இடத்தை பிடிக்கவே முடியாது. எனவேதான் அந்நியமொழி இன்னமும் தேவையா என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

அந்த வகையில்தான் மோகன் பகவத் சமீபத்தில் இதே கருத்தை கூறியிருக்கிறார்.    இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அந்நிய மொழியில் அலுவலக உத்தரவுகளை எழுதிக் கொண்டிருப்பீர்கள்? ஏன் நீங்கள் உள்ளூர் மொழியில் எழுதக்கூடாது?  இதுதான் அவர் வைத்த கேள்வி.

உள்ளூர் மொழி என்றால் அவருக்கு இந்தி.

அதாவது மறைமுகமாக இனிமேல் இந்தியில் அலுவலக உத்தரவுகளை எழுதுங்கள் என்கிறார். ஆங்கிலம் எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்கும் பகவத் எத்தனை பேருக்கு இந்தி தெரியும் என்று கேட்க மாட்டார்.

அதேபோல் இந்தி பேசாத மாநிலமக்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் நீங்களும் இந்தியில் எழுதுங்கள் என்பார். இந்தி எங்களுக்கு அன்னியமாயிற்றே என்றால் ஆங்கிலமும் அன்னியம்தானே என்பார். ஆனால் நாங்கள் ஏன் இரண்டு அந்நிய மொழிகளை கற்க வேண்டும் என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டார்.  ஏனென்றால் அதற்குத்தான் மூன்று மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம் என்று நாமாகவே புரிந்து கொள்ள வேண்டும். 

மொழியைக் கற்கும் பளு இந்தியர் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி அவரவர் தாய்மொழியும் ஆங்கிலமும்தான்.

நேருவின் உறுதிமொழியை ஏற்றுக்  கொண்டதே மாபெரும் தவறு. அந்த உறுதிமொழியை சட்டமாக்க பாராளுமன்றத்தில் வடிவம் கொடுத்திருக்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ்-சின் மொழிக் கொள்கை நாட்டை நாசப்படுத்திவிடும்.

என்றைக்கு பன்முகத் தன்மையை ஆர்எஸ்எஸ் அங்கீகரிக்கிறதோ அன்றுதான் அமைதி நிலவும்.

சுவர் ஏறிக் குதித்து ப சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ ??!!

இன்று நடந்தது வரலாற்றில் ஒரு திருப்பு முனை .

முன்ஜாமீன் மனு  உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது நாளை மறுநாள் அது விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் இன்று ப சிதம்பரத்தை அவர் வீட்டு சுவரின்  ஏறிக் குதித்து கைது செய்திருக்கிறது சிபிஐ.

உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை ஏழு மாதங்கள் கழித்து தள்ளுபடி செய்கிறது. நிறுத்தி வைக்க மறுக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் அவரது மனு டெக்னிகல் காரணங்களை சொல்லி திரும்பக் கொடுக்கப் படுகிறது. வேறு மனு தாக்கல் செய்த பின் தலைமை நீதிபதி அதை நாளை மறுநாள் விசாரிக்க உத்தரவிடுகிறார். இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி சிபிஐ கைது செய்யும் என்பதால் ப சிதம்பரம்  காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்கிறார். வீட்டுக்கு போகிறார். வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்  படுகிறார்.

நீதிமன்ற வாரன்ட் அடிப்படையில்தான் கைது  என்று சிபிஐ சொல்கிறது. எந்த நீதிமன்றம் வாரன்ட் கொடுத்தது என்பது நாளைதான் தெரியும்.

நாடு சர்வாதிகாரத்தை நோக்கி பீடுநடை போட துவங்கி விட்டது என்பது தெளிவாக தெரிகிறது.

இனி எல்லாரையும் இப்படித்தான் அச்சுறுத்துவார்கள் என்பதும் தெளிவாகி விட்டது. முன்னாள் உள்துறை அமைச்சர் மூத்த வழக்கறிஞருக்கே இந்த கதி என்றால் சாமானியர் கதி? இந்த அச்சத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கைது போல்தான் தெரிகிறது.

காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவில் திமுகதான் முன்னெடுத்து ஒரு போராட்டத்தை நாளை டெல்லியில் நடத்துகிறது. நாளை அதற்கும் இப்படிப்பட்ட அச்சுறுத்தல் வரலாம்.

இனி ப சிதம்பரம் ஜாமீன் தான் கோரமுடியும். அதுவும் சிபிஐ காவல் கேட்கும்.  ஒரிருநாள் கொடுக்கப் படலாம். அதன்பின் ஜாமீன் தான் கோரலாம். கிடைக்கும்.  முன்ஜாமீன் மனு அவசியம் அற்றுப் போய்விட்டது.

உள்ளே வைக்க வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமே தவிர அவரை வழக்கில் தண்டிக்க முடியுமா என்பது கேள்வி?

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் எதுவும் சொல்ல முடியாது.

வழக்கின் தன்மை பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.

மகளை கொன்ற வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி- பீட்டர் முகர்ஜி இருவரும் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் தான் இந்த வழக்கு தொடர்கிறது. அது எந்த அளவு நிலைக்கும் என்பது தெரியாது.

அதேபோல் ஒரு அமைச்சர் மட்டும் இதை செய்து விட முடியாது. அவருக்கு கீழே இருக்கும் ஐந்தாறு ஐஏஎஸ் அதிகாரிகள் கையெழுத்து போட்ட பின்தான் கடைசியில்  அமைச்சர் ஒப்புதல் இடுவார். எனவே அவர்களும் இந்த வழக்கில் குற்றவாளிகள் ஆவார்கள். அவர்கள் இல்லாமல் அமைச்சரை மட்டும் குற்றம் சுமத்தி விடமுடியாது.    அமைச்சர் வற்புறுத்தினார் என்று அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்களா?   அப்படி கொடுத்தாலும் கூட என்ன வற்புறுத்தினாலும் அது குற்றம் என்றால் அதை செய்தவர்கள் அவர்களும்தான். எனவே அவர்களை விட்டு விட முடியுமா?

என்ன இருந்தாலும் அவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறதா என்பதை சிபிஐ தான் விளக்க வேண்டும். அரசியல் தலையீடு காரணமாக நடந்த கைது என்றுதான் என்பதுதான் பொதுவான மக்கள் கருத்து.

இன்னும் விடை காண வேண்டிய பல கேள்விகள் இந்த வழக்கில் எழுகின்றன.    காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

புகார் எழுந்தபின் தீர்ப்பை அகற்றிக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி??!!

சென்னை தாம்பரம் கிறித்தவக் கல்லூரி மாணவிகள் சுற்றுலா சென்றபோது இரு பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து விசாரணை நடக்க அதை எதிர்த்து பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் வைத்தியநாதன் தனது தீர்ப்பில் கிறித்துவ மிஷனரிகள் பற்றிய கருத்தை தீர்ப்பின் ஒரு பகுதியாகவே சொல்லியிருந்தார்.

அதில் “கிறிஸ்தவ மிஷனரிகள் எப்போதுமே ஏதாவது ஒரு தாக்குதலை நடத்திக் கொண்டே தான் இருக்கிறது. பிற மதத்தினரை கிறிஸ்தவ மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்கிறது. ஆணும் பெண்ணும் ஒன்றாக படிக்கும் கிறிஸ்தவ கல்லூரி நிறுவங்களில் தங்களது குழந்தைகளுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்று பல பெற்றோர் உணர்கின்றனர். இந்த கல்வி நிலையங்கள் பாரபட்சமற்ற கல்வியை வழங்கினாலும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை  கற்றுக் கொடுக்கிறார்களா என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது” என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு கிறிஸ்தவ பாதிரியார்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது பற்றி ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு கூட ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அவரே கிறித்துவக் கல்லூரியில் படித்தவர் என்பதால் மட்டுமல்ல இதுபோல் கருத்து சொல்வது அதுவும் தன் முன் இருக்கும் வழக்கிற்கு தொடர்பு இல்லாமல் சொல்வது தவறு என்று கூறியிருந்தார்.

இப்படி பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்த நிலையில் நீதிபதி வைத்தியநாதன் தான் தெரிவித்து இருந்த கருத்தை தீர்ப்பில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

இதில் இருந்து தெரிவது என்னவென்றால் நீதிபதிகள் வழக்கிற்கு தொடர்பில்லாமல் கருத்து சொல்வது தவிர்க்கப்படக் கூடிய ஒன்று. தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பற்றி பொதுமக்கள் தவறாக புரிந்து கொள்ள அது இடம் கொடுத்து விடும்.

இந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத்தான் தங்கள் தீர்ப்புகளிலும் வெளிப்படுத்துவார்கள் என்று தவறாக புரிந்து கொள்ளப்படும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா? 

அவர் யார்? என்ன அவர் பின்புலம் என்றெல்லாம் விசாரித்தால் அது நீதிமன்றத்தின் மாண்பைக் குலைத்து விடுமல்லவா ?

பழிவாங்கப்படும் ப. சிதம்பரம் ??!!

டெல்லி உயர் நீதிமன்றம் ப .சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுத்திருக்கிறது .

ஆறு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள். அத்தனையும் அவரது பதவிக் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பானவை. எனவே எந்த ஆட்சியாளரும் தனது காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எப்போதுமே கவலைப்பட்டாக வேண்டும் என்ற நிலைமை தோன்றி விட்டது.

சிபிஐ பழி வாங்குகிறதா தன் கடைமையை செய்கிறதா என்பதே கேள்வி?

இதே வழக்கில் அவரது மகன் கார்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.    வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பிணையல் வெளியே வந்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆகி விட்டார்.

ப சிதம்பரம் முன்னாள் நிதி, உள்துறை அமைச்சர் என்பதை தாண்டி இப்போது பாராளுமன்ற உறுப்பினர். தப்பியோடி விட முடியாது. அவர் மீது என்ன வழக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும். அதை மூத்த வழக்கறிஞர் ஆன அவர் சட்டப்படி சந்திப்பார்.

அவரின் பாஸ்போர்ட்டை கூட முடக்கட்டும். ஆனால் வழக்கை பதிவு செய்து நடத்துவதில் காட்டும் அக்கறையை விட அவரை கைது செய்து சில நாட்களாவது உள்ளே வைத்து விட வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுகிறதா சிபிஐ என்ற சந்தேகம் தான் அதிகமாக இருக்கிறது.

தலைமறைவாகும் அளவு அவர் தன் கடைமையை உணராதவர் அல்ல ப.சிதம்பரம்.

அனேகமாக நாளை உச்ச நீதிமன்றம் இது பற்றி ஒரு உத்தரவை இடும் என்று நம்பப்படுகிறது. 

அதற்குள் எல்லா தொலைக் காட்சிகளும் சிதம்பரம் தலைமறைவு, ஒளிந்து கொண்டார் என்றெல்லாம் செய்தி வெளியிடுகிறார்கள். அது பொறுப்பான செய்கை  அல்ல. பாஜக வை மகிழ்விக்க வேண்டுமானால் அது உதவும்.

பாஜகவின் கொள்கைகளை மத்திய அரசின் நடவடிக்கைகளை மிகவும் பலமாக விமர்சித்து வருபவர் ப.சிதம்பரம். அவருக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க பாஜக விரும்பியிருக்கலாம். அதற்கு விசாரணை அமைப்புகளை பயன் படுத்துவதுதான் தவறு.

சிபிஐ சுதந்திரமான அமைப்பு அல்ல என்பது நிரூபணமாகி வருகிறது.

முன்னாள் முதல்வர்களை வீட்டுக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் என்ன?!

காஷ்மீர் பிரச்னையில் தவறுக்கு மேல் தவறாக செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு.

இதற்கான விலையை நாம்தான் கொடுக்க வேண்டும்.

அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 370 & 35A அகற்றப்பட்டது இருக்கட்டும். அதற்காக பாஜக அரசு கைக்கொண்ட வழிமுறைகள் சரியா என்பதை இப்போது உச்ச நீதிமன்றம் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். அது இப்போது சொல்லும் என்று தோன்ற  வில்லை. பிரச்னை வேறு வடிவம் எடுத்து அல்லது ஆறிப்போய் அதற்குப் பிறகுதான் தீர்ப்பு வரும். அப்போது தீர்ப்புக்கு முக்கியத்துவம் இருக்குமா என்பது கூட இப்போது சொல்ல முடியாது.

ஆனால் பள்ளத்தாக்கு காஷ்மீரிகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. அதற்குப் பிறகுதான் அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள். சமாதானமாக போவதா அல்லது முடிவற்ற போராட்டத்துக்குள் நுழைவதா என்பதை.

சிக்கிம் எப்படி இந்தியாவோடு இணைந்தது? 16/04/1975ல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன்பின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு 16/05/1975 முதல் இந்தியாவோடு  இணைந்தது.

கோவா- போர்த்துகீசியர்கள் வெளியேற மறுத்தால் ராணுவப் படையெடுப்பு நடத்தி  18/12/1961ல் இந்தியாவோடு இணைக்கப்பட்டது.

அதேபோல் காஷ்மீர் – 26/10/1947ல் மகாராஜா ஹரிசிங் ஏற்படுத்திய இணைப்பு ஆவணம் மூலம் இந்தியாவோடு இணைந்தது. அப்போது இந்தியா வசம் ராணுவம், தொலைதொடர்பு, நாணயம், அயல்நாட்டு உறவு என்ற நான்கு துறைகள் மட்டும்தான் இருந்தன. அதை 1956 முதல் 1994 வரை குடியரசுத் தலைவர் இட்ட 47 ஆணைகள் படி  94 துறைகளில் மாநில அரசின் சம்மதத்துடன் மத்திய அரசுக்கு விரிவாக்கப்பட்டது.

அது மட்டுமல்ல இதே 370 பிரிவை சுட்டிக் காட்டி வட கிழக்கு மாநிலங்களில் மிசோரம், அருணாச்சல் பிரதேஷ், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து போன்ற பகுதிகளில் ஏற்பட்ட எதிர்ப்பு போராட்டங்களை இந்தியா முறியடித்தது. அதாவது இதேபோல் உங்களுக்கும் சிறப்பு  சலுகைகளை தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்து அவர்களை ம்டக்கினோம். இப்போது காஷ்மீர் சலுகை பறிக்கப்பட்டவுடன்  எங்கே இந்தியா நமக்கு கொடுத்த சலுகைகளையும் பறிக்குமோ என்ற அச்சம் அவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

இது நாட்டுக்கு நல்லதா? எல்லாம் போகட்டும். எதற்கு பரூக் அப்துல்லாவையும், உமர அப்துல்லாவையும், மெகபூபா முப்தியையும் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்?  

அவர்கள் என்ன தீவிரவாதிகளா?

அடக்க அடக்க தீவிரவாதம்தான் வளரும்.

எனவே காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய் என்ற குரல் இந்தியாவெங்கும் ஒலிக்கட்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி திமுக பாராளுமன்றத்தின் முன் வரும் 22ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்து அனைத்து கட்சிகளின் ஆதரவை கோரி உள்ளது.    பார்க்கலாம் யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்கள் என்று?

ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் சர்வாதிகாரத்தின் மூலம் ஒருபோதும் கட்டுப் படுத்தி விட முடியாது.

பால் விலையை உயர்த்தியதன் காரணம் என்ன?!

தமிழக அரசு பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கும் எருமைப்பாலுக்கும் ரூபாய் 4, 6 என்று உயர்த்தி விட்டு நுகர்வோருக்கு மொத்தமாக ரூபாய் 6 உயர்த்திவிட்டது.

இனி டீ பத்து ரூபாயிலிருந்து 13, 15 என்று உயர்ந்து விடும். பாலுடன் இணைந்த தயிர், மோர், பாலாடை, நெய் என்று எல்லாமும் ஏறும்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இங்கே விலை உயர்வு குறைவு என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகிறார்.

கர்நாடகத்தில் அரசு லிட்டருக்கு ரூபாய் 6 கொடுக்கிறதே அங்கே அரசு பால் விநியோகம் 80% தனியார் 20% என்ற விகிதத்தில் இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் அரசு 40% தனியார் 60% என்ற விகிதத்தில் இருக்கிறதே என்ற கேள்விக்கு பதில் என்ன?

அரசின் அணுகுமுறை தனியாருக்கு ஆதரவாகவே இருக்கிறது. கொஞ்ச நாள் முன்பு ராஜேந்திர பாலாஜி தனியார் பாலில் கலப்படம் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவில் இருக்கிறது என்று அச்சம் தெரிவித்தார். தனியார் வந்து பார்ப்பார்கள் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ அவர்கள் நீதிமன்றம் சென்று இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று தடை வாங்கிவிட்டார்கள்.

அமைச்சர் தன் வாக்கை நிரூபிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.

அரசு பாலில் வணிகர் போல நடந்து கொள்ளகூடாது. லாப நட்டம் இல்லா வகையில் நுகர்வோர் துயருறா வகையில் உயர்த்த முடியாதா?

பெட்ரோல் டீசல் விலை நாளும் ஏறி இறங்கி கொண்டுதான் இருக்கிறது. மக்கள் பழகிப்போய் விட்டார்கள். அதுபோல் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றினால் கூட பழக்கப்பட்டு விடுவார்கள். திடீர் என்று ஏற்றினால் தடுமாறத்தான் செய்வார்கள்.

எல்லாவற்றையும் விட கொடுமை முதல்வர் பழனிசாமி இந்த விலையுயர்வால் சாமானியர்கள் ஒன்றும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று சொன்னாரே அதுதான் வருத்தமாக இருக்கிறது.

ஏதோ ஒருவகையில் இந்த உயர்வு தனியாருக்கு லாபம் தருமோ?

என்ன தவம செய்தோமோ இப்படி ஒரு முதல்வரை பெறுவதற்கு?

எச் ராஜாவுக்கு பயந்து தடுமாறிய அமைச்சர் செங்கோட்டையன்??!!

பொதுமேடையில் மாணவர்கள் மத்தியில் நிலவும் சாதிக் கயிறு ஒழிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்  துறை இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை  பற்றி முன்பு எழுதியிருந்தோம்.

அதை முன்பு அமைச்சர் செங்கோட்டையனும் ஆட்சேபித்து ஏதும் சொல்லவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் மாணவர்களுக்கு இடையே சாதி வேற்றுமையை தடுக்கவே கயிறு கட்ட தடை விதிப்பு என்று பேட்டி கொடுத்தார்.

இடையில் பாஜகவின் எச் ராஜா தனது ட்விட்டரில் மாணவர்கள் கையில் கயிறு கட்டுவது மத நம்பிக்கை. அதில் அரசு தலையிட கூடாது என்று சொல்லியிருந்தார். உடனே அமைச்சர் செங்கோட்டையன் அந்தர் பல்டி அடித்து அப்படி ஒரு வழக்கமே தமிழகத்தில் இல்லை என்றும் அப்படி சுற்றரிக்கை அனுப்பி இருந்தால் அது திரும்ப பெறப்படும் என்று தெரிவித்தார். அது மட்டுமல்ல அந்த சுற்றறிக்கை தனது ஒப்புதல் இல்லாமல் அனுப்பப்பட்டது என்றும் பள்ளிக் கல்வி இயக்குனரை குற்றம் சுமத்தி இருக்கிறார்.

இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கை பயிற்சி ஐ ஏ எஸ் அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் என்று அவர் தெரிவித்து இருந்தார். எனவே சாதிக் கயிறு வழக்கம் இருக்கிறது என்பதற்கு சான்று இருக்கிறது. எப்படி அமைச்சர் அதை உடனே மறுக்கலாம். எச் ராஜா சொன்னால் உடனே அமைச்சர் பயந்து மறுத்துவிட்டார் என்று பொருள் ஆகாதா? செங்கோட்டையனிடம் இருந்து இதை  எதிர்பார்க்கவில்லை.

மருத்துவர் ராமதாஸ் அவர்களும் சாதிக் கயிறு பற்றி முரணாகத்தான் பேசியிருக்கிறார். காசிக்கயிறு கட்டுவது மத நம்பிக்கையின் அடையாளம் என்கிறார். யார் மறுக்கிறார்கள்? காசிக் கயிறுக்கும் சாதிக் கயிறுக்கும் வித்தியாசம் தெரியாதா?

வயதுக்கு வந்த பெரியவர்கள் கூட ஏன் ஒரு சில அமைச்சர்களும் கூட வளையல் அணிவது போல் வண்ண வண்ண நிறங்களில் கயிறுகள் கையில் அணிந்திருக்கிறார்கள். அதை யாரும் சாதிக் கயிறு என்று சொல்வதில்லை. ஏன் என்றால் அவர்கள் நம்பிக்கையில் பேரில் அணிகிறார்கள்.

ஆனால் பள்ளி மாணவர்கள்? அதில் அரசியல் செய்யலாமா? சாதி வெறியை பள்ளியிலேயே புகுத்தலாமா?

அரசியல் செய்ய மாணவர்களின் எதிர்காலத்தை அரசே பணயம் வைக்கலாமா?

சாதிக்கொரு வண்ணத்தில் கயிறு கட்டி அலையும் பள்ளி மாணவர்கள்?!!

பள்ளி மாணவர்கள் மனதில் சாதி உணர்வை பதிய வைக்க அவர்கள் கைகளில் சாதிக்கேற்ற சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், காவி என்று பல வண்ணங்களில் கயிறு கட்டி அனுப்புகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளியில் இப்படி சாதி பார்த்து கயிறு கட்டி வரும்படி பள்ளி ஆசிரியர்களே ஊக்கமளிக்கிறார்கள் என்பது இன்னும் வேதனை.

இவர்களிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி வளர்வார்கள்? சாதி வெறியோடுதான் வளர்வார்கள்.

எப்படி தமிழன் ஒன்றுபடுவான்? சாதியால் பிரிந்தே கிடைக்க வேண்டும் தமிழன் என்று யார் திட்டமிடுவார்கள்? சாதியை புகுத்தியவர்கள் தான் திட்டமிடுவார்கள்.

தமிழன் சாதியை மறந்து ஒன்று பட்டு விட்டால் தங்கள் பிழைப்பு போய் விடுமே என்று அஞ்சுகிறவர்கள் அவர்கள்.

இதற்கு ஆசிரியர்களும் அவர்களை கண்காணிக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களும்தான் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படி எங்கெல்லாம் சாதிக் கயிறு கட்டி வரும் வழக்கம் இருக்கிறதோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி எடுத்தால்தான் இந்த தீமையை ஒழிக்க முடியும்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

போதாது. கடுமையான தொடர் நடவடிக்கை எடுத்தால்தான் இந்த சமுதாய தீங்கு தொடராது.

ஆர் பி எப்; சுற்றறிக்கைகள் இந்தியில் மட்டுமாம்?! இவர்கள் திருந்தவே மாட்டார்களா??!!

ரெயில்வே பாதுகாப்பு படை துணை ராணுவ அந்தஸ்து பெற்றது. அதில் எல்லா மொழிக்காரர்களும் வேலை செய்கிறார்கள்.

அவர்களுக்கு இனிமேல் இந்தியில் மட்டுமே அறிவுரைகள், உத்தரவுகள் அனைத்தும் தெரிவிக்கப்படும்.

இந்தி தெரியாதவர்களுக்கு இந்தி தெரிந்தவர்கள் மொழிபெயர்த்து அவர்களுக்கு தெரிவிக்க வேண்டுமாம்.

இதைவிட கொடுமை வேறு ஏதாவது இருக்க முடியுமா?

கடைநிலையில் இருந்து உயர்நிலை வரை பலர் வேலை செய்து வருகிறார்கள். எல்லாருக்கும் இந்தி தெரியாது. ஏன் ஆங்கிலத்தில் மட்டுமே என்றால் கூட சிலருக்குத்தான் தெரியும்.

தமிழ், தெலுங்கு, மராட்டி மட்டுமே தெரிந்தவர்கள் அர் பி எப்பில் வேலை பார்க்கக் கூடாதா? வேலை பார்க்க வேண்டுமென்றால் இந்தி கற்றுக் கொள் என்று தானே சொல்கிறார்கள்?

எத்தனையோ முறை இதுபோல் இந்தியை திணிக்க முயன்று எதிர்ப்பு கிளம்பியவுடன் அதை திரும்ப பெற்றுக் கொள்வதாக சொல்வது வாடிக்கை ஆகி விட்டது.

ஏதாவது ஒரு நேரத்தில் எதிர்ப்பு குறைந்த நேரத்தில் இந்தி மட்டும் என்பதையே இறுதி ஆக்கி விடுவார்கள்.

எல்லாவற்றையும் நீதிமன்றம் சென்றுதான் நியாயம் பெற வேண்டும் என்பது அன்னியர் ஆட்சியில் வேண்டுமானால் வாடிக்கையாக இருக்கலாம்.

சொந்த நாட்டில் ஒரு அரசு தன் குடிமக்களை இப்படி இரண்டாம் தர குடிமக்களாக கொடுமைப்படுத்தக் கூடாது.

தெரியாமல் செய்தால் மன்னிக்கலாம். தெரிந்தே செய்பவர்களை என்ன செய்வது?

உடனே இந்த உத்தரவை  திரும்ப பெற்று தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் சுற்றறிக்கைகளை அனுப்ப ரெயில்வே துறை  நடவடிக்கை எடுக்க வேண்டும்.