Home Blog Page 28

தலைவர்கள் இல்லாமல் தள்ளாடும் காங்கிரஸ்??!!

பதினெட்டு மாதங்கள் காங்கிரஸ் தலைவராக இருந்து பாராளுமன்ற தேர்தலை முன்னின்று நடத்திய ராகுல் காந்தி, அமேதியில் தோற்று முன் எச்சரிக்கையாக நின்ற வயநாட்டில் வென்று தன் தலையை காப்பாற்றிக் கொண்டு கட்சியை வெற்றி பெற வைக்கும் முயற்சியில் தோற்று விட்டார்.

அத்துடன் காங்கிரஸ் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் கூடி கூடிப் பேசியும் வேறு ஒருவரை தலைவராக தேர்ந்து எடுக்க தடுமாறி கடைசியில் மீண்டும் சோனியாவை தற்காலிகமாக தலைவராக தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.

ஒருவழியாக காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்ற பாஜகவின் முழக்கம் வெற்றி பெற்றுவிட்டதா?

பிரியங்கா காந்தியை முயற்சித்துப் பார்த்து அதிலும் வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும் அவரை முன்னிலைபடுத்தியே வருகிறது காங்கிரஸ்.

தேசிய அளவில் செல்வாக்கு படைத்த தலைவர்கள் காங்கிரசில் அருகி விட்டனர்.

மத சார்பின்மை, சோசியலிசம், மாநில உரிமைகள் பாதுகாப்பு போன்றவற்றில் காங்கிரசிற்கு இருக்கும் கொள்கைப்பிடிப்பு வேறு எந்த அகில இந்திய கட்சிக்கும் இல்லை. எனவே காங்கிரசின் வீழ்ச்சி முற்போக்கு சக்திகளின் வீழ்ச்சியாகதான் பார்க்க வேண்டும்.

இது எல்லாவற்றையும் முடக்கப் பார்க்கும் இயக்கம் பாஜக. அநேகமாக பாஜகவுக்கு சவால் விடும் அகில இந்திய எதிர்கட்சிகள் இல்லை என்ற தோற்றத்தை சமீப காலமாக அது ஏற்படுத்தி வருகிறது. அது நாட்டுக்கு நல்லதல்ல.

காங்கிரசின் வீழ்ச்சி முற்போக்கு சக்திகளுக்கு பின்னடைவுதான்.

அத்திவரதர் வளர்ப்பது பக்தியா? மூடநம்பிக்கையா? உண்டியல் வசூலா??!!

பக்தியே!

இதுவரை எழுபது லட்சம் பேர் தரிசித்திருக்கிறார்கள். தினமும் ஒரு லட்சத்தில் இருந்து நாலு லட்சம் வரை. எல்லாம் தாங்களாகவே தங்கள் செலவில் வந்தவர்கள். நாற்பது ஆண்டுகளுக்கு பிறகுதான் அவரை மீண்டும் தரிசிக்க முடியும் என்ற தகவல் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்தி இருந்தது. இவர்கள் எவரும் பக்தியை அறிவைக் கொண்டு அளப்பவர்கள் அல்ல. நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை. அது மட்டும்தான் அவர்களுக்கு தெரியும். பத்திரிகைகளில் எழுதப்பட்ட வரலாறுதான் ஆதாரம். திருப்பதி வேங்கடாஜலபதியும் இவரும் வெவ்வேறானவர்களா அல்லது கருவறையில் இருக்கும் வரதரும் இவரும் வெவ்வேறானவர்களா என்பதெல்லாம் பக்தர்களுக்கு பொருட்டல்ல.

அகில இந்திய அளவில் ஆர்எஸ்எஸ் மௌனப் பிரச்சாரம் செய்தது. நம்பிக்கை உள்ளவர்களை காஞ்சி நோக்கி படை எடுக்க உந்து சக்தியாக இருந்தது. அந்த பிரசார பலம் இந்தியாவில் யாருக்கும் இல்லை.

எல்லாரும் போகிறார்கள். நாம் போக வேண்டும். குடும்பம் குடும்பமாக ஊரோடு சேர்ந்து செல்வது ஒரு தனி அனுபவம். குடும்ப பிரச்னைகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. அவர் அவர்கள் பிரச்னை தீர நிச்சயம் அத்திவரதர் உதவுவார். செம்மறி ஆட்டுக் கூட்டம் என்று யாராவது விமர்சித்தால் கூட அதைப்பற்றியெல்லாம் கவலைப்படும் மனநிலையில் பக்தர்கள் இல்லை. எல்லாவற்றையும் விட தரிசனத்தில் கிடைக்கும் மனநிம்மதி போதும். பக்தி என்பதற்கு வேறென்ன விளக்கம் வேண்டும்? 

மூட நம்பிக்கையே! 

1791ல் தான் அத்திவரதர் வரலாறு தொடங்குகிறது. அதாவது வெறும் 228 ஆண்டுகளுக்கு முன்னர்தான். அவரது வரலாறு குறித்தோ இப்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் பற்றியோ கல்வெட்டோ குறிப்புகளோ இல்லை என்று கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமி கூறுவதாக இந்து முன்னை ஆர் ஆர் பாலாஜி கூறுகிறார். யாகம் செய்யும்போது நெருப்பு பட்டு வரதர் உடல் பாதிக்கப்பட்டதால் அவர் தண்ணீருக்குள் வைக்கப்பட்டார் என்பதுதான் புராணக் கதையாக பத்திரிகைகள் சொல்கின்றன.

மூலவர் கற்சிலையாகவும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரதர் தண்ணீரிலும் இருக்கிறார்கள். இறைவனை தீ பற்றுமா என்பது இருக்கட்டும். இந்த பக்தர்கள் இப்படி கூறப்படும் கதைகளை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? எத்தனை பேருக்கு இந்தக் கதைகள் தெரியும்? மாயோன் தமிழ்கடவுள்.    அவர் வேறு இவர் வேறா? அதைப்பற்றியெல்லாம் எந்த பக்தர்களும் கருத்து சொல்ல மாட்டார்கள். வரலாறு உண்மை என்றால் ஏன் இத்தனை யுகங்கள் காத்திருந்து வெளிப்பட வேண்டும்? எனவே பார்ப்பனீயம் வளர துணை செய்ய அத்திவரதர் பயன்படுகிறார். மூடநம்பிக்கை வளர்ந்தால்தான் நாம் வாழ முடியும் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் கூட்டுவதே இந்த கூட்டம்.

உண்டியல் வசூலே!

இதுவரை உண்டியல் வசூல் ஐந்து கோடியை தாண்டி போய்க்கொண்டிருக்கிறதாம். அதுவும் பார்ப்பனர்கள் சதி செய்து உண்டியல் அதிகம் வெளியே தெரியாதவாறு பார்த்துக் கொள்கிறார்களாம். அறநிலையத்துறை கண்காணிப்பில் இது சாத்தியமில்லை என்றாலும் துறையே அவர்கள் கைகளில் தானே இருக்கிறது. எதை  எப்படி செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தானே தீர்மானிக்கிறார்கள்.

அர்ச்சகர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை வசூல் ஆவதாக சிலர் கூறுகிறார்கள். இதைப்பற்றி உண்மைதகவல்களை அதிகாரிகள் தான் தர வேண்டும். ஆனால் உண்டியல் வசூல் இதில் முக்கிய  பங்கு வகிக்கிறது. பெரிய கோவில்கள் எல்லாவற்றிலும் வசூல்தான் பிரதானம். அதிகம் வசூலித்தால் அது பெரிய கோவில். அதில் பலன் அடைகிறவர்கள் பார்ப்பனர்களாக இருக்க வேண்டியது அவசியம். யார் யாரோ பலனடைய எந்த பார்ப்பான் வேலை செய்வான்? பண வசூலை பிரதானப் படுத்தாத பெரிய கோவிலே இல்லை. அதைத்தான் அத்திவரதரும் செய்கிறார்.

இதில் எதில் உண்மை இருக்கிறது என்பதை பொதுமக்கள் விவாதித்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டியதுதான். 

அரசியல் களத்தை மாசுபடுத்தும் இபிஎஸ்?!

முதல்வர் தன் பதவிக்கு உரிய கண்ணியத்தை காக்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும்.

ஆனால் அவர் வார்த்தைகளை ஆராயாமல் அள்ளி விடுகிறார்.

வேலூர் தேர்தல் முடிவுக்குப் பின் ‘மிட்டாய்’ கொடுத்து பொய் வாக்குறுதிகளை கொடுத்து பெற்ற வெற்றி என்று விமர்சித்ததில் ஆரம்பித்து இப்போது ஸ்டாலினை விளம்பரத்துக்காக பேசுகிறார் ‘சீன்’ போடுகிறார் என்று தொடர்ந்து கடைசியில் ப.சிதம்பரத்தை ‘பூமிக்கு பாரம்’ என்று பேசும் அளவுக்கு போனது தமிழக அரசியல் களத்தையே மாசு படுத்திவிட்டது.

இபிஎஸ் இதுபோல் பேசி பழக்கப்பட்டவறல்ல. இப்போது பேச ஆரம்பித்து விட்டார் என்றால் அவரது இயல்பு இதுதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முன்பே கம்பராமாயணத்தை எழுதிய சேக்கிழார் என்று பேசியதில் தனது கௌரவத்தை பாதி இழந்திருந்த நிலையில் இனியாவது பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று  முடிவெடுத்திருக்க வேண்டும்.

திண்டுக்கல் சீனிவாசன் ராஜேந்திர பாலாஜி வரிசையில் முதல்வர் சேருவது உண்மையில் வருத்தத்துக்கு உரியதுதான்.

இனிமேலாவது கொஞ்சம் நிதானித்து பேசுங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களே?

வெங்கையா நாயுடு பேசுவது நடக்குமா? பின் பேசுவது யாரை ஏமாற்ற??!!

சென்னையில் வெங்கையா நாயுடு தன் புத்தக வெளியீட்டு விழாவில் சில நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

ஆனால் அவைகளை எல்லாம் நடக்க விடாமல் செய்வது மத்தியில் ஆளும் கட்சிதான்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதிட அனுமதிக்க வேண்டும் என்றார். பல ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் என்று சாக்கு சொல்லி மறுத்து வருகிறது மத்திய அரசு.

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். சென்னை, மும்பை, கொல்கத்தா என்று மூன்று கிளைகளாவது  வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். தவிர்த்துக் கொண்டிருப்பது மத்திய அரசு.

அதேபோல் கட்சி தாவல் சட்டத்தை கடமையாக்க வேண்டும் என்றும் ஒபிஎஸ்ஐ மேடையில் வைத்துக்கொண்டே பேசியிருக்கிறார். ஊக்கமளித்தது மத்திய அரசு.

வெங்கையா பேசுவது தமிழர்களை ஈர்க்க. செய்யும் இடத்தில இருக்கும் அமித் ஷா ஒன்றும் சொல்ல வில்லை.

ஏதாவது சொல்லி தமிழர்களை ஏமாற்றும் நோக்கில் வெங்கையா பேசியிருப்பார் என்று தோன்ற வில்லை. அவர் இனி தான் அரசியலில் இல்லை என்றாலும் கடைசி  வரை சங்க தொண்டராகத்தான் இருப்பார். அவரது வலையில் தமிழர்கள் விழ தயாராக இல்லை.

மோடி, எடப்பாடி, ரஜினி கூட்டணி வெற்றி பெறுமா??!!

வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீடு சென்னையில் நடந்தது. அதில் அடுத்த தமிழக தேர்தலை மனதில் கொண்டு பேச்சாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

பாஜக பிடியில் எடப்பாடியும் ஒபிஎஸ்சும் இருப்பது எல்லாருக்கும் தெரியும். அது மட்டுமே தேர்தலில் வெற்றி பெற உதவாது என்பதும் தெரியும்.

எனவேதான் ரஜினியை சேர்க்கப் பார்க்கிறார்கள்.

எப்போதுமே வலதுசாரி சிந்தனை உடைய ரஜினி இதுவரை எதிலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்.

2021 சட்ட மன்ற தேர்தலில் வந்தே விடுவார் என்று மணியன், கராத்தே தியாகராஜன் , போன்றோர் காத்திருக்கிறார்கள். அவர் மாட்டவே போவதில்லை.

சிலருக்கு வந்து அவர் மூக்கறு பட வேண்டும் என்ற ஆசை.

குருமூர்த்தியும், கஸ்தூரிரங்கனும் எம் எஸ் சாமிநாதனும் மேடையில் இருந்து இந்தக் கூட்டணி யார் சார்பானது என்று அறிவித்தனர்.

ரஜினி பாதி பார்ப்பனர் என்பது அவர்கள் எண்ணம்.

அதிமுக முழுதும் ரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்வார்களா?

வேலூரில் ஏ சி சண்முகம் பெற்ற வாக்குகள் அவர்களுக்கு இந்த தைரியத்தை கொடுத்திருக்கலாம்.

இந்த கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் வேண்டுமானால் சேரலாம். மருத்துவர் ராமதாஸ் சேருவாரா என்பது கூட சந்தேகம்தான்.

மோடி -அமித் ஷா இருவரும் கிருஷ்ணர்-அர்ஜுனன் போன்றவர்கள் என்றார் ரஜினி. துரியோதனன்-சகுனி போன்றவர்கள் என்று காங்கிரசின் கே எஸ் அழகிரி ஒப்பிடுகிறார்.

காஷ்மீர் நடவடிக்கையை துணிச்சலான நடவடிக்கை என்று பாராட்டிய ரஜினி அதில் இருக்கும் சிக்கல்களை பற்றி குறிப்பிடவில்லை .

மொத்தத்தில் இந்த மூவரும் சேர வேண்டும் என்ற திட்டம் பாதியிலேயே உடைந்து விடும் வாய்ப்புகள் தான் அதிகம்.

காங்கிரசை விமர்சித்து தன் வேலையைக் காட்டிய வைகோ??!!

வைகோவின் மாநிலங்கள் அவை பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

காஷ்மீரை துண்டாடிய பாஜகவை கடுமையாக தாக்கிய வைகோ காங்கிரசை அதிகம் தாக்கியதுதான் விமர்சனத்துக்கு உள்ளானது.

பேசியதில் தவறு ஒன்றும் இல்லை. காங்கிரஸ் செய்ததைத்தான் வைகோ சுட்டிக்காட்டினர். இப்போது அவர்கள் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இருக்கும் பாஜக தனது கோர முகத்தை காட்டும்போது அதை மட்டும் கண்டிக்காமல் காங்கிரசையும் விமர்சிப்பது இருவரையும் சம தூரத்தில் வைப்பது போன்றது.

காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்கிறது. இது அவர்களுக்குள் புகைச்சலை ஏற்படுத்தாதா?

பாஜகவை திருப்திபடுத்த வைகோ முயற்சிக்கிறார் என்ற பழி வராதா?

இலங்கை தமிழர்களை பழி வாங்கிய காங்கிரஸ் இதுவரை அதற்கு பிராயச்சித்தம் செய்ய முன்வரவில்லை.

இந்திராகாந்தியை கொலைசெய்த சீக்கியர்களை மன்னித்து மன் மோகன் சிங்கை கொண்டாடுகிற காங்கிரஸ் இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெறுவதற்கு என்ன முயற்சி செய்திருக்கிறது? ஏழு பேர் விடுதலையிலும் காங்கிரஸ் நியாயம் செய்யவில்லை.

ஒருவேளை அந்த கோபம்தான் வைகோவை காங்கிரசுக்கு எதிராக பேச வைத்ததோ என்னவோ?

எப்படி இருந்தாலும் பாஜக எதிரணியில் எழுந்துள்ள புகைச்சல் பாஜகவை மகிழ்ச்சி அடையத்தான் செய்யும்.

கேஎஸ் அழகிரியும் ஈவிகேஎஸ் இளங்கோவனும் வைகோவை விமர்சிக்க வைகோ சூடாக பதில் கொடுக்க இது எங்கோ கொண்டு போய் விடுமோ என்ற அச்சம் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

திமுக  கூட்டணி முறியும் என்பதற்கு அறிகுறியாக இதை நிச்சயம் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

எதிர்வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கு வியூகம் வகுப்பதில் இது நிச்சயம் சிக்கலை ஏற்படுத்தும்.

வைகோ கொஞ்சம் நிதானிப்பது நல்லது.

தமிழ்நாட்டை துண்டாடி கைப்பற்ற முயற்சிக்குமா பாஜக ??!!

தமிழ்நாட்டில் மட்டுமே பாஜகவால் காலூன்ற முடியவில்லை.

எனவே அடுத்த குறி தமிழ்நாடு என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

என்ன செய்யும் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டை ஒன்றாக வைத்திருக்கும் வரை தமிழ் இன உணர்வு மத ஆதிக்கத்தை வளர விடாது.

எனவே அவர்களை பலவீனப்படுத்த ஒரே வழி அவர்களைப் பிரிப்பதுதான். ஏற்கெனெவே மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார்.

அப்படி இரண்டு பேரை தயார் செய்து இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் ஆக பிரிக்க கோரிக்கை வைக்க தயார் செய்வதில் பாஜகவுக்கு பிரச்னை ஒன்றுமில்லை.

அதை வைத்து கோரிக்கையை நிறைவேற்றுகிற வகையில் தமிழகத்தை பிரிக்க பாஜக திட்டமிடலாம்.

ஏற்கெனெவே தெலுங்கு சமுதாயத்தை ஆந்திரா தெலுங்கானா என்று இரண்டாக பிரித்து வைத்த அனுபவம் இருக்கிறதே?

முன்பே சாதி வாரியாக கட்சிகளை பிரித்து அரவணைக்க பாஜக முயற்சித்தது. அது நிறைவேரவில்லை.

இப்போது முக்குலத்தோர், தேவேந்திரர் சமுதாயங்களுக்கு எனவும், கவுண்டர் சமுதாயத்துக்கு எனவும், வன்னியர் பட்டியல் வகுப்பினருக்கு எனவும், தமிழகத்தை மூன்றாக பிரிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக செய்திகள் வருகின்றன. 

அந்த முயற்சியை தமிழர் கட்சிகள் சாதி கடந்து ஒன்றுபட்டு எதிர்த்து நிற்காவிட்டால் தமிழ்நாடு உடைவது உறுதி!!

தங்கள் சொற்படி நடக்கும் கட்சிகள் ஆட்சி நடக்கா விட்டால் தமிழ்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாஜக தமிழ்நாட்டை பிரிக்க தயங்காது. அதற்கு இன்னும் ஓரிரு வருடங்கள் தேவைப்படலாம்.

அதற்குள் அதிமுகவின் ஒரு பகுதி பாஜகவில் இணைந்தால் அந்த முடிவு தள்ளிப் போகலாம்.

காஷ்மீரை பிரித்து பந்தாடிய அமித் ஷா ?! அவசர நிலை அடுத்து வருமா?

ஒருவழியாக தனது அறுபது ஆண்டு திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டது பாஜக.

அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 35A & 370 இரண்டையும் அகற்றிவிட்டு காஷ்மீரை இரண்டாக பிரித்து அவற்றையும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக அறிவித்ததன் மூலம் மொத்த மாநிலத்தையும் தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்து விட்டது பாஜக.

அதுவும் ஜம்மு காஷ்மீர் சட்ட மன்றம் உள்ளதாகவும் லடாக் சட்டமன்றம் இல்லாததாகவும் இயங்கும்.

நாடு முழுதும் மாநில சுயாட்சி கோரிக்கை கள் வலுவாகி வரும் நிலையில் இந்து மத ஒற்றுமை என்ற பிம்பத்தில் தனது மாநில உரிமை ஒழிப்பு திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது பாஜக. 

மெகபூபா, உமர் அப்துல்லா இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பரூக் அப்துல்லா எங்கே என்று தெரியவில்லை.

இந்து வெறியை பலப்படுத்த இந்த நடவடிக்கை பாஜகவுக்கு  உதவியிருக்கிறது.

பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தெலுகுதேசம், டிஆர்எஸ். ஒய்எஸ்ஆர் கட்சி, பிஜேடி அதிமுக போன்ற கட்சிகள் ஆதரவளித்திருக்கின்றன .

இந்த நடவடிக்கை மேலும் இந்து வாக்கு வங்கியை பாஜக வலுப்படுத்திக் கொள்ள உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் நாட்டுக்கு நல்லதா என்பதை வரலாறுதான் சொல்ல வேண்டும்.

அறிவிக்கப்படாத அவசர நிலை என்று டிஆர்பாலு பேசியிருக்கிறார்.

அவசர நிலையை அறிவிக்காமலேயே தனது திட்டங்களை அமைக்க அதிகாரங்களை வைத்துக் கொண்டே சாதிக்கும் வழிகளைத் தான் பாஜக செயல்படுத்தும்.

மதசார்பற்ற சக்திகள் வலுவிழந்து வருவதைப்போன்ற ஒரு தோற்றத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தினாலும் அவர்கள் தங்களை ஒன்றுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துகிறது.

எல்லாவற்றையும் விட இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்ற ஆய்வுக்கு நிற்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் இந்த பிரச்னை வேறு வடிவங்களை எடுத்திருக்கும். அப்போது தீர்ப்பு பயனில்லாமல் போகலாம்.

அடுத்து பாஜக என்ன செய்யும் என்பதே பொதுமக்களின் கவலை.?

காஷ்மீரில் சிறப்பு அதிகாரங்கள் பறிக்கப்பட்டால் என்ன நடக்கும்??!

அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 35A மற்றும் 370 பிரிவுகள் காஷ்மீர் மாநிலத்திற்கு என்று சிறப்பு அதிகாரங்களை அளிக்கிறது.

மகாராஜா ஹரிசிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தபோது விதித்த நிபந்தனைகளை இந்தியா ஏற்றுக்கொண்டு தனது அரசியல் சட்டத்தில் அதற்கென சில பிரிவுகளை வகுத்தது.

அவைகளின் படி ராணுவம், தகவல் தொடர்பு, தவிர பிற துறைகள் தொடர்பாக இந்திய பாராளுமன்றம் இயற்றும் சட்டங்கள் காஷிமிரின் சம்மதம் இல்லாமல் காஷ்மீருக்கு பொருந்தாது. இந்திய சட்டங்கள் அனைத்திலும் அவை காஷ்மீர் தவிர இதர பகுதிகளுக்கு இது பொருந்தும் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

பிற மாநிலத்தவர் காஷ்மீரில் நிலங்கள் வாங்க முடியாது. ஆனால் அவரால் எங்கும் வாங்கலாம். காஷ்மீர் ஆண், வெளி மாநில பெண்ணை மணந்தால் அங்கே சொத்து வாங்கலாம் ஆனால் ஒரு காஷ்மீரியை மணந்த பெண் அங்கே சொத்துக்கள் வாங்க முடியாது. முக்கியமாக காஷ்மீர் மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ கூட்டவோ கூடாது.

அதேபோல் யார் நிரந்தர குடியிருப்பாளர் என்பதையும் அவர்களுக்கு மட்டுமே காஷ்மீரில் அரசு வேலை உதவி சலுகைகள் உண்டு என்பதையும் இந்த பிரிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

இதைஎல்லாம் இப்போது மோடி அரசு மாற்றப் போகிறது என்ற அச்சம் எல்லார மனதிலும் எழுந்திருக்கிறது.

யாத்ரீகர்களை திரும்புங்கள் என்றும் சுற்றுலா பயணிகளை வெளியேறுங்கள் என்றும் கெடுபிடிகள் செய்து வரும் மத்திய அரசு காஷ்மீரில் மத்திய அரசு என்னவோ  செய்யப்போகிறது என்ற அச்சத்தை மக்கள் மனதில் விதைத்துவிட்டது.

பாராளுமன்றம் ஆகஸ்டு ஏழாம் தேதி நிறைவுறும்போது செய்யப் போகிறதா இல்லை சில நாட்கள் கழித்து செய்யப் போகிறதா என்பது தெரியவில்லை.

உடனடியாக வேறு எந்த நாடும் இந்த பிரச்னையில் தலையிடாது என்றாலும் பிரச்னை முற்றினால் ஐநா தலையிடும் வாய்ப்பை தள்ள முடியாது.

எதுவாக இருந்தாலும் தீர்வு என்பது சம்பந்தப்பட்டோர் ஒத்துழைப்புடன் ஏற்பட்டால்தான் நிலைக்கும்.    

வலுவில் எந்த தீர்வையில் நிலைக்க வைத்து விட முடியாது.

அதை நினைவில்  கொண்டு இந்திய அரசு செயல்பட வேண்டும் என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பும்.

வேலூரில் அதிமுக வென்று என்ன ஆகப்போகிறது?!

இருக்கும் ஒரு உறுப்பினரும் பாஜகவின் செல்லப் பிள்ளையாக இருக்கிறார்.

ரவிந்திரநாத் குமார் தன் பெயரை இனி வந்தேமாதரம் குமார் என்று மாற்றிக்கொள்ளலாம்.

அந்த அளவு தன் பாஜக பாசத்தை காட்டிவிட்டார்.

ஒவ்வொரு மசோதா வரும்போதும் தன் எதிர்ப்பை காட்டிக் கொண்டதில்லை.

முத்தலாக் மசோதாவில் மக்களவையில் ரவீந்திரநாத் ஆதரவு தெரிவிக்க நவநீதகிருஷ்ணன் மேலவையில் எதிர்ப்பு தெரிவிக்க ஒபிஎஸ்-இபிஎஸ் கோஷ்டி பாராளுமன்றம் வரை சென்று விட்டதை நாடு பார்த்தது.

எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் என் கருத்து வேறு தன் கட்சி கருத்து வேறு  என்று கூறி தனக்கும் கட்சிக்கும் இடையே உள்ள இடைவெளியை காரணம் காட்டி மோடியிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சிக்கிறாரே தவிர திராவிட இயக்க உறுப்பினராகவே அவர் செயல்பட வில்லை.

ஏ சி சண்முகம் இருவர் கோஷ்டியிலும் இல்லாமல் தான் மோடி கட்சிதான் என்று வெளிப்படையாகவே காட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஏ சி சண்முகம் போய் புதிதாக என்ன செய்து விட முடியும்.

ஏற்கெனெவே தன்னை மோடியின் செல்லபிள்ளை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு அடிமையை அனுப்புவதில் பயன் இல்லை என்று தீர்மானித்து 37 பேரோடு 38வது உறுப்பினராக சென்று உரிமைக்கு குரல் எழுப்புங்கள் என்று திமுக வேட்பாளரை மக்களவைக்கு வேலூர் தொகுதி மக்கள் அனுப்புவார்கள் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும்.

இடையில் ஆளும்கட்சிப் பணம் தண்ணீராக பாய்கிறது என்கிறார்கள். என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு விரும்புகிறவருக்கு முன்பு வாக்களிததைப் போலவே இப்போதும் வாக்களிப்பார்கள்  .