Home Blog Page 29

எல்லாரும் பார்க்க வேண்டிய சீர்திருத்த சினிமா ‘கொளஞ்சி” !!!

எப்போதாவதுதான் நல்ல சினிமா வரும்.

அதையும் சதி செய்து விரட்டி விடுவார்கள். அதுதான் கொளஞ்சி சினிமாவுக்கும் நேர்ந்திருக்கிறது.

அப்பா மகன் உறவு-பிள்ளைகளை ஏன் அடிக்காமல் வளர்க்க வேண்டும். பிள்ளைகளின் முற்போக்கு சிந்தனைகள் எல்லாம் இந்த சினிமாவில் பேசப்படுகிறது.

மூடநம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறது.

அர்ச்சகரை எங்களை கருவறையில் உள்ளே விடுவீர்களா என்று கேட்டு அவரும் அது எப்படி என்று மறுப்பதை காட்டியிருப்பார்கள் .

பெரியார் – முருகன் படத்தை வீட்டில் வைத்திருப்பதை காட்டியிருப்பார்கள். அது பாஜகவின் எச். ராஜா கண்ணை உறுத்தி இருக்கும் போல. யாரும் கொளஞ்சி படத்தை பார்க்காதீர்கள் என்று அறிக்கை விடுகிறார். 

அதற்குப் பிறகுதான் எல்லாருக்கும் அதை பார்க்க வேண்டும் என்று தோன்றி இருக்கும்.

மூட நம்பிக்கை  ஒழிப்பு, சாதி ஒழிப்பு என்று படம் முழுக்க சீர்திருத்த கருத்துக்களை தூவி இருப்பார்கள்.

சமுத்திரகனி மட்டும்தான் பெயர் தெரிந்த நடிகர். ஒருவேளை ஸ்டார் வேல்யு இல்லாததால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வில்லையோ என்று எண்ணத்  தோன்றுகிறது.

தமிழ் மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் – பாடம்.

ஆபரேஷன் காஷ்மீர் என்ன ஆகப்போகிறது?!

முன்பே நிலை கொண்டுள்ள ராணுவ வீரர்கள் 35000 பேருடன் இப்போது அனுப்பப்பட்டுள்ள 35000 ராணுவ வீரர்கள் மற்றும் 26000 துணை நிலை ராணுவத்தினர் எல்லாம் சேர்த்து ஏறத்தாழ 96000 வீரர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை பாதுகாக்கப் போகிறார்கள்.

உங்கள் பையன்கள் கல் எறியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏன் என்றால் அவர்கள்தான் நாளை பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என்று எச்சரிக்கிறார் நமது ராணுவ தளபதி. கடந்த கால புள்ளி விபரங்களையும் தெரிவிக்கிறார்.

அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திடீர் என்று மேகபூபாவும் பாரூக் அப்துல்லாவும் அமித் ஷாவை சந்திக்கிறார்கள். காஷ்மீரை காஷ்மீர், ஜம்மு, லடாக் என்று மூன்று மாநிலங்களாக பிரிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.   

அமித் ஷா ஸ்ரீநகர் போனபோது எந்த தீவிரவாத அமைப்பும் கடை அடைப்பை அறிவிக்கவில்லை.

என்ன நடக்கிறது காஷிமிரில்?

அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 35A, 370 களை நீக்கப்போகிறார்கள் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்புமாக இருக்கிறது.

அதனால் கலவரம் வெடிக்கும். அதை அடக்க தேவையான முன் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அதனால்தான் இதை மோப்பம் பிடித்து தான் சமரசம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிக்கிறார். ஒதுங்கி இருங்கள் என்று இந்தியா கூறுகிறது.

ஆக தனது நெடுநாள் திட்டத்தை நிறைவேற்ற பாஜக முனைந்துவிட்டது என்பது உறுதியாக தெரிகிறது.

அதன் விளைவுகள்தான் இனிமேல் தெரிய வேண்டும்.

காத்திருப்போம் கவலையுடன் ?!

செலவு செய்ய தெரியாமல் 3676 கோடி நிதியை திருப்பி அனுப்பிய அதிமுக அரசு?!

ஒருபக்கம் மத்திய அரசு நிதி ஒதுக்க தவறுகிறது என்ற குற்றச்சாட்டு.

மறுபுறம் கொடுத்த நிதியை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பும் தமிழக அரசு.

இந்திய அரசின் தலைமை தணிக்கையாளர் கொடுத்த அறிக்கையில் மத்திய அரசு கொடுத்த 3676.55 கோடி நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பிய விபரம் தெரிய வந்திருக்கிறது.

2017-2018ம் நிதி ஆண்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய மொத்த நிதி 5920.39 கோடியில்  தான் மேற்கண்ட துகையை திருப்பி அனுப்பி இருக்கிறது தமிழக அரசு.

நூறு நாள் வேலைத்திட்ட நிதியை கூட திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டோர் வீடு கட்டும் திட்ட நிதியில் மத்திய அரசு 60% மத்திய அரசும் மீதி  40% நிதியை தமிழக அரசும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மத்திய அரசு நிதி திருப்பி அனுப்பப்படுகிறது. தமிழக அரசு தர வேண்டிய பங்கு நிதியை தர முடியாததால் திருப்பி அனுப்பப் பட்டதா என்பதும் தெரியவில்லை.

கிராமப்புற வேலை வாய்ப்பை பெருக்கும் திட்ட நிதியும் திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறது.

பல் திட்டங்கள் பயனாளிகளை அடையாளம் காண முடியாததால் திருப்பி அனுப்பப் பட்டது.

அதிமுக வினருக்கு ஆளத்தெரியவில்லை என்று குற்றம் சாட்ட முடியாது. தெரியும்.  ஆனால் செய்யவில்லை என்றால் என்ன காரணம். நிறைவேற்றி தங்களுக்கு என்ன பயன் என்பதுதான்.

தமிழக அரசு விளக்கம் தருமா?

கமிஷன் இல்லையேல் ஒமிஷன்தான் என்பதுதான் அதிமுக அரசின் கொள்கையா ?!

அதிமுக-வை மிரட்டி வருகிறதா பாஜக ?!!

நீட், இந்தி பாட சேர்ப்பு, அஞ்சல் ரெயில்வே துறைகளில் இந்தி திணிப்பு போன்ற பல பிரச்னைகளில் திமுகவும் அதிமுகவும் கிட்டத்தட்ட ஒரே நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.

திமுக கண்டித்தால் அதிமுக ஏற்க முடியாது என்று சொல்லும்.

தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக வுக்கு அதிமுக அரசு எடுக்கும் நிலைப்பாடுகள் அவ்வளவு திருப்தியாக இல்லை போல் இருக்கிறது.

அதனால்தான் மிரட்ட தொடங்கி இருக்கிறார்கள்.

ஒபிஎஸ் அமித் ஷாவை சென்று சந்தித்திருக்கிறார்.

தமிழகத்தில் எப்படியாவது பாஜக வை குறைந்த பட்சம்  கணக்கில் எடுத்துக் கொள்ளக்  கூடிய கட்சியாக மாற்ற முடிவெடுத்து இருக்கிறதாம் பாஜக தலைமை.

நாட்டையே ஆண்டாலும் தமிழகத்தில் சீண்ட ஆளில்லை என்ற நிலையை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எனவேதான் ஒபிஎஸ் சை அழைத்து அமித் ஷா நீங்கள் இப்படி நிலைப்பாடு எடுப்பது சரியில்லை. ஏன் வெளிப்படையாகவே பிரச்னைகள் அடிப்படையில் பாஜக வோடு அனுசரித்துப் போகக் கூடாது என்று கேட்டதாகவும் அதற்கு ஒபிஎஸ் சில சலுகைகளை கேட்டதாகவும் சொல்கிறார்கள்.

அதில் ஒன்று மகனுக்கு அமைச்சர் பதவி. தனக்கு முதல் அமைச்சர் பதவி. இரண்டும் பாஜக நினைத்தால் முடியும் என ஒபிஎஸ் நம்புகிறாராம்.

அருணாச்சல் பிரதேசத்தில் 33 சட்ட மன்ற உறுப்பினர்களோடு பீமா காண்டு முதல்வரை பாஜக வில் சேர்த்து ஆட்சியை தனதாக்கி கொண்டது பாஜக.

கோவாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 10 பேரை கூண்டோடு பாஜகவில் சேர்த்துக்  கொண்டு அமைச்சரவையை உறுதிப்படுத்தியது பாஜக .

கர்நாடகத்தில் கட்சி தாவல் தடை சட்டத்தை கேலிக் கூத்தாக்கி கட்சி மாறுதலுக்கு புது வியாக்கியானம் கொடுத்து அவர்களை ராஜினாமா கடிதம் கொடுக்க செய்து தனக்கு பெரும்பான்மையை தேடிக்கொண்டு குமாரசாமி ஆட்சியை கவிழ்த்து தன் ஆட்சியை  கொண்டு வந்து விட்டது பாஜக;

இப்படி நாடு முழுக்க கட்சி தாவல்களை ஊக்குவித்து பாஜக அரசுகளை நிறுவி வருகிறது.

அடுத்த இலக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என்கிறார்கள்.

எனவே தமிழகத்தில் ஒரு ஆறு பேரை நகர்த்தினால் பழனிசாமி அரசு கவிழ்ந்து விடும். தங்கள் நிலைப்பாடுகளை அதிமுக அரசு பின்பற்ற தவறினால் எந்த எல்லைக்கும் சென்று அதை செய்ய வைக்க பாஜக தயாராகி வருகிறது.

வரும் நாட்களில் ஒபிஎஸ் தமிழகத்தின் பீமா காண்டு ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வேதகாலத்தை ஆதரித்துப் பேசிய ஒபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி நிச்சயம்?!

அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் கிட்டத்தட்ட பாஜக  உறுப்பினர் போலவே பேச ஆரம்பித்து விட்டார்.

அதிமுக இதுவரை முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது ரவீந்தர நாத் குமார் ஆதரித்து பேசியது மட்டுமல்ல ஒருபடி மேலே போய் வேதகாலத்தை பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்.

‘வேத காலத்தில் நாட்டில் பெண்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் அளிக்கப் பட்டது. அன்றைக்கு பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டார்கள். அதிலும் குறிப்பாக சில நேரங்களில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் கூட அமர வைக்கப்பட்டார்கள்.’ என்றெல்லாம் பேசியதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் கல்வி மறுக்கப்பட்ட காலம் அல்லவா வேதகாலம்.

அவர்களுக்குக் என்ன அதிகாரம் எப்போது யாரால் வழங்கப்பட்டது?

பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட வரலாறுகள் தான் அதிகம்.. பின் ஏன் ரவீந்திரநாத் இப்படி பேசவேண்டும். நிர்பந்தம்?! தேவை? கொஞ்ச காலம் முன்புதான் அதிமுகவின் அன்வர் ராஜா அதே அவையில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து பேசி நீங்கள்  இறைவனின் சாபத்துக்கு ஆளாவீர்கள் என்று கடுமையாக கண்டித்து பேசினார். ஏன் அதிமுகவின் நிலை மாறியது? எப்படி மாறியது?

குன்னம் ராமச்சந்திரன் திடீர் என்று இந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்துவிட்டு இது எனது தனிப்பட்ட கருத்து என்கிறார். எல்லாம் நாடகம். ஆழம் பார்க்கிறார்கள். எதிர்ப்பு வருகிறதா யாரிடம் இருந்து வருகிறது என்று?

அதிமுக இந்திக்கு ஆதரவாக வெளிப்படையாக குரல் கொடுக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு பாஜக அளவுக்கு அதிகமாக நெருக்கடி கொடுக்கும். அதை மறுக்கும் தெம்பு இவர்களுக்கு இருக்கப்போவதில்லை.

அடிமைகள் குரல் வெளியே வர ஆரம்பித்து விட்டது!!!

பசுக்கள் மட்டுமே ஆக்சிஜனை வெளியிடுகின்றன? பாஜக முதல்வர் பிதற்றல் பேச்சு!

பசுக்களை புனிதப்படுத்துவதற்காக பாஜக வினர் என்னவெல்லாம் சொல்கிறார்கள்.?

இவர்கள் பேசுவது அறிவுடைமையா முட்டாள்தனமா என்று ஒரு விவாதமேடை நடத்தும் அளவு இருக்கிறது இவர்கள் பேசுகிற பேச்சு. 

அதுவும் ஒரு முதல் அமைச்சர் இப்படி பேசலாமா? அவர் மட்டுமல்ல. பல அமைச்சர்களும் இப்படித்தான் பேசுகிறார்கள். உயர்நீதி மன்ற நீதிபதியும் இப்படி பேசுகிறார். உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. எங்கே போகிறது நாடு?

உத்தரகாண்ட் முதல் அமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் சொன்ன ரத்தினக் கருத்துக்கள்.;

*   பசுமாடுகள் மட்டுமே ஆக்சிஜனை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

*   பசு மாட்டோடு நெருங்கி வாழ்ந்தால் காச நோய் கூட குணமாகிவிடும்.

அந்த மாநிலத்தின் விலங்குகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆரியாவும் இதே கருத்தை வெளியிடுகிறார்.

பிரக்யா சிங் தாகூர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவர் தனது புற்றுநோய் குணமானது கோமியத்தினால்தான் என்கிறார். ஒரு மருத்துவர்தான் அவருக்கு அறுவை சிகிச்சை அளித்ததை உறுதிபடுத்துகிறார்.

கோமியத்தை அஞ்சல் நிலையங்களில் விற்கும் வேலையையும் மத்திய அரசு செய்தது.

பதஞ்சலி நிறுவனம் பாபா ராம்தேவ் முயற்சியில் கோமிய விற்பனையில் முயன்று தோல்வி அடைந்தது.

வாசுதேவ் தேவ்னானி என்ற ராஜஸ்தான் கல்வி அமைச்சர் இதே கருத்தை வலுவாக பதிவிடுகிறார்.

கொடுமை? ராஜஸ்தான் உயர்நீதி மன்ற நீதிபதி மகேஷ் சந்திரா என்பவர் பசுவை தேசிய மிருகமாக அறிவிக்க கூறிவிட்டு பசு மட்டும்தான் ஆக்சிஜனை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று தீர்ப்பிலேயே குறிப்பிடுகிறார். 33 கடவுளர்கள் பசுவில் வசிக்கிறார்களாம். அதைவிட இன்னொரு கொடுமை ஆண் மயில் ப்ரம்மசாரியாம். பெண் மயில் மயிலின் கண்ணீரை குடித்தே கர்ப்பமாகுமாம். இதெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவைகளா? 

         இதற்கெல்லாம் அவர்கள் எந்த ஆதாரத்தையும் காட்டியதாக தகவல் இல்லை. இப்படி மூட நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் பரப்புவோர் மீது என்ன நடவடிக்கை?

ஆதாரம் இருந்தால் மக்கள் முன்னாள் சொல்லட்டுமே?

அறிவியல் பூர்வமாக வெளியிடப்பட்ட கருத்து வேறாக இருக்கிறது.

எல்லா மிருகங்களையும் போலவே பசுக்களும் ஆக்சிஜனை உட்கொண்டு பயன்படுத்தியது போக மீதத்துடன் கார்பன் டை ஆக்சைட் வாயுவை தான் வெளியிடுகின்றன. இது மனிதன் உள்ளிட்ட எல்லா மிருகங்களுக்கும் பொருந்தும். 

அதாவது 21% காற்றை உட்கொண்டால் அதில் 4-5% ஆக்சிஜனை மட்டும் உடல் பயன்படுத்துகிறது மீதத்தை கார்பன் டை ஆக்சைட் வாயுவோடு சேர்த்து  வெளியேற்றுகிறது.

ஏன் வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுகிறது என்பதற்கு வேறு சான்று தேவையா? எங்கே மூட நம்பிக்கை அதிகமோ அங்கே அவர்கள் வளரத்தான் செய்வார்கள்.

தமிழை விட சமஸ்க்ரிதம் தொன்மையனதாம்? +2 பாட புத்தகத்தில் தமிழக அரசு பிதற்றல்?

தமிழக அரசு வெளியிட்ட +2 ஆங்கில பாட புத்தகத்தில் தமிழ் ஏசு பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்றும் சமஸ்கிருதம் ஏசு பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது எனவும் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

உயர் தனிச் செம்மொழியான தமிழ் கால வரையறை செய்ய முடியாத அளவு தொன்மையானது. இலக்கியம், இலக்கணம் பேச்சு வழக்கு போன்ற அனைத்து வரையறைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழ்தான் தொன்மையானது என்பதை யாரும் ஒப்புக்கொள்வார்கள்.

அதிமுக ஆட்சியில் சங்கப் பரிவாரங்கள் எதை விரும்புகிறார்களோ அதை செய்வதற்கு  இவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் தமிழின் தொன்மையை விட்டுக் கொடுக்கும் அளவு செல்வார்கள் ஏறு எதிர்பார்க்கவில்லை. இந்த தவறு சரி செயப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தாலும் எத்தனை தவறுகளைத்தான் சரி செய்வார்கள்.

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழி இந்தி என்று குறிப்பிடப்பட்டு இருகிறது.

அதிமுக அரசின் உள்ளே இருக்கும் கருப்பு ஆடுகள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா? அல்லது  கிடப்பில் போட்டு எஜமான விசுவாசத்தை காட்ட்ப்போகிரார்களா?

உண்மையைத் தானே சொல்லி இருக்கிறோம் என்று பாஜக அரசுக்கு சாமரம் வசப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாடப் புத்தகங்களிலேயே தவறுகள் கொட்டிக் கிடந்தால் மாணவர்கள் எப்படி நிறைய  மதிப்பெண்கள் வாங்க முடியும்.

துரோகம் ஆரம்பம்??

முத்தலாக் தடை சரி! மூன்றாண்டு சிறை ஏன்? தடுமாறும் மோடி அரசு ?!

முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று அடம் பிடிக்கிறது. மோடியின் மத்திய அரசு.

முஸ்லிம் பெண்கள் மீது அவ்வளவு அளவு கடந்த பாசம்.

மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முத்தலாக் முறை செல்லாது  என்று பல இஸ்லாமிய நாடுகளும் சட்டம் போட்டிருக்கின்றன. நமது உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு சொல்லி விட்டது. அப்போது இதுபற்றி ஒரு சட்டம் இயற்றுங்கள் என்று சொன்னதுதான் தப்பாகிவிட்டது.

அதை சாக்காக வைத்து முஸ்லிம் பெண்கள் உரிமை பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் தடை செய்யப்பட்ட முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யும் முஸ்லிம்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை கொடுத்து சட்டம் இயற்றி இருக்கிறது மத்திய அரசு.

முந்தைய முயற்சிகள் போலவே இப்போதும் மேலவையில் நிறுத்தி வைக்கப்படுமா நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாஜக வின் கூட்டணி கட்சிகள் சிலவும் எதிர்ப்பதால் நிறைவேறுவது சிரமம்.

குடும்ப வன்முறை, வரதட்சணை போன்ற பிரச்னைகளில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் தண்டிக்கப்படும் போது முஸ்லிம்கள் மட்டும் தண்டிக்கப் பாடகக் கூடாதா என்ற கேள்வியை எழுப்பும் பாஜக விவாகத்து பிரச்னையில் வேறு எந்த மதத்தவர் தண்டிக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்வதில்லை. 

முஸ்லிம் பிரச்னைகளில் நாங்கள் தலையிடுவோம் அதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று முரட்டுத் தனமாக வலியுறுத்து வதுதான் பாஜக வின் நோக்கம்.

                  இல்லாவிட்டால் செல்லாத விவாகரத்து செய்ததற்கு மூன்றாண்டு தண்டனை தர தேவையில்ல. 

வைகோ, சீமான் போன்றோரை குறி வைக்கிறதா என்ஐஏ??!!

மிசா, தடா, பொடா என்று பல ஆள் தூக்கி சட்டங்களை பார்த்திருக்கிறோம். அவைகள் எல்லாம் கடந்த காலங்கள் ஆகிவிட்டன என்று நிம்மதியாக இருக்கும் நேரத்தில் வந்திருக்கிறது தேசிய புலனாய்வு முகமைக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் சிறப்பு அதிகாரங்கள்.

பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு விட்ட இந்த சட்டம் இனி என்ன செய்யப் போகிறதோ என்ற அச்சம் பலரையும் ஆட்டிபடைக்க தொடங்கிவிட்டது.

தடா 1995ல் அற்றுப் போக விடப்பட்டது. பொடா 2004 ல் திரும்பப் பெறப்பட்டது.

இப்போது என்ஐஏ வின் அதிகாரம் விரிவாக்கம் செய்யப்பட்டு மனித உடல் பாகங்களை விற்பனை செய்வது,கள்ள நோட்டுகள், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை உற்பத்தி செய்தல் விற்பது, கணினி பயங்கரவாதம், வெடிபொருட்கள் குற்றகள் சட்டம் பற்றிஎல்லாம் இனி இந்த முகமை விசாரணை செய்யும்.

பயங்கரவாதத்தை வேரறுப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை.

அதுவும் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு இந்தியாவிலும் தொடர்பு இருக்கிறது என்ற செய்திகள் நமக்கு அச்சத்தை தோற்றுவிக்கின்றன.

பயங்கரவாதத்திற்கு மதம்  இனம் என்றெல்லாம் பாகுபாடு இல்லை. அவர்களை மனிதர்களாகவே கருத முடியாது. ஒருவகையில் மூளைசலவை செய்யப்பட்ட மனித உருவில் நடமாடும் யந்திரங்கள். ஒருவித நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் அவர்களை சிகிச்சை செய்து குணப்படுத்துவதுதான் மனிதாபிமானம்.

ஆனால் அதற்காக கண்டுபிடிப்பதில் மெத்தனமாக இருந்து விலை கொடுக்க முடியாது.

யாரையும் பழி வாங்க தவறாக இந்த சட்டத்தை  தவறாக பயன்படுத்த மாட்டோம் என்று அமித் ஷா உறுதியளித்திருக்கிறார். அவரது உறுதி எல்லாம் நம்பத் தகுந்ததா என்பதே கேள்விக்குறி. ஆனால் வேறுவழி? அதனால்தான் திமுக உள்பட எல்லா கட்சிகளும் ஆதரவளித்து மக்களவையில் வெறும் ஆறுபேர் எதிர்த்து வாக்களிக்க நிறைவேறி இருக்கிறது.

முன்ப பொடாவை ஆதரித்து பேசிய வைகோ அதே பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 537 நாட்கள் சிறையில் இருந்தார். 

அந்த நிலை இன்று ஆதரித்திருக்கும் திமுகவுக்கும் வராது என்று யாராவது உறுதியளிக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம். என்றாலும் நம்பிக்கையுடன் இருப்பதாக ஆ ராசா பேட்டியளித்திருக்கிறார்.

முமுக தலைவர் ஜவாஹிருல்லா கூட திமுகவின் இந்த நிலைபாடு குறைபாடு உடையது என்று விமர்சித்திருந்தார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டியது. அதில் உடன்பட்டே ஆக வேண்டும். எனவே அதை  ஒழிக்கும் முயற்சிக்கும் ஆதரவு அளித்தே ஆக வேண்டும். தவறாக பயன் படுத்தினால் ஒற்றுமையாக நின்று எதிர்க்க வேண்டியதுதான். 

ஒரு நீதிபதியின் பார்ப்பனர் உரிமை பற்றிய பேச்சு?! மற்றவர்கள் சிந்திக்க வேண்டும்!!!

கேரள நீதிபதி வி. சிதம்பரேஷ் தமிழ் பிராமணர்கள் சந்திப்பில் உரையாற்றும்போது பிராமணர்கள் பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு மட்டுமே குரல் எழுப்ப வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

தான் வகிக்கும் பதவி பற்றி பேசிவிட்டு பேசலாமா என்பது பற்றி சர்ச்சை வருமளவு பேசியிருக்கிறார்.

பிராமணர்கள் இரட்டை பிறவிகள். தனித்துவ பண்புகள் கொண்டவர்கள். தூய்மையான பழக்கம் உடையவர்கள். உயரிய சிந்தனை உடையவர்கள். பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்கள். கர்நாடக இசை பிரியர்கள். நற்குணங்கள் கொண்டவர்கள் என்றெல்லாம் புகழ்ந்து பேசியிருக்கிறார். அதுபற்றி எல்லாம் யாருக்கும் அக்கறை இருக்காது. அவரவரும் தங்களை புகழ்ந்து கொள்வதில் மற்றவருக்கு என்ன பிரச்னை.?

ஆனால் சமூக நீதிபற்றி ஒரு நீதிபதி கருத்து தெரிவிக்க்கும்போது கவனமாக இருக்க வேண்டாமா? இடஒதுக்கீடு என்பது சமூகம் அல்லது சாதி அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டுமா என்று அவர் கேட்டிருப்பது உச்சநீதி மன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்பதை அவர் அறிய மாட்டாரா?

அடக்கி வைக்கப்பட்ட கல்வி, மறுக்கப்பட்ட உரிமைகள், பறிக்கப்பட்ட மக்களைப் பற்றி நீதிபதி அங்கே பேசியிருக்க வேண்டும். கடந்த கால அநியாயங்களை சரி  செய்ய முயற்சியுங்கள் என்று அவர்களை கேட்டிருக்க வேண்டும்.

சமூக நீதிக்கு பாதுகாப்பாக விளங்க வேண்டிய நீதிபதிகள் எத்தகைய கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்தால் அச்சமாகத்தான் இருக்கிறது.

எப்படியோ மற்றவர்கள் விழிப்புணர்வு பெற இது உதவினால் சரி.