Home Blog Page 3

சீனா திட்டமிட்டு பரப்பியதா கொரொனா வைரஸ் ?!

அப்படித்தான் சில அமெரிக்க சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள். அவர்கள் சீனா மீது பல லட்சம் கோடி நட்ட ஈடு  கேட்டு  வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

போதாததற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா வேண்டுமென்றே செய்திருந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்  என்று வழக்கம்போல் மிரட்டி இருக்கிறார்.

ஐரோப்பாவில் பல நாடுகள் இந்த சந்தேகத்தில்  இருக்கின்றன. ஆனால்  அதற்கு ஆதாரம் வேண்டுமே?

வூகானில் சீனா சில உயிரிகள்  தொடர்பான ஆராய்ச்சிகள் செய்து வருவதை   மறுக்க வில்லை. ஆனால் இந்த ஆட்கொல்லி உயிரி தங்கள் கட்டுப்பாட்டில் என்றுமே இருந்ததில்லை   என்று சீனா சொல்கிறது.

சீன விஞ்ஞானிகள் கொரொனாவை மனிதர்கள் உருவாக்க முடியாது என்று சொல்கிறார்கள். 

மனிதர்களால் உருவாக்க முடியாததை சீனர்கள் உருவாக்கியதாக சொன்னால் அது தவறுதான்.

சீனாவில் பாதிப்பு அதிகம் இல்லை என்பதை மட்டும் வைத்து அவர்களை குற்றம் சொல்வது தவறு.

ஆனாலும் எப்படி இந்த வைரஸ் தோற்றம் கொண்டது  பரவியது என்பது பற்றிய ஆழமான ஆராய்ச்சி அவசியம் தேவை. 

எதிர்காலத்தில் வைரஸ் ஒரு ஆயுதமாக பயன் படுத்தப் படாது  என்பதை  உறுதி படுத்தும் வரை மனித இனத்துக்கு ஆபத்து நீங்காது.

கொரொனாவிற்கு எதிராக ஊரடங்கை எதிர்க்கும் உலகின் ஒரே அதிபர் ?!

ஆம். கொரொனாவிற்கு எதிராக ஊரடங்கை எதிர்க்கும் ஒரே அதிபர் பிரேசிலின் அதிபர் போல்சனரோ .

இத்தனைக்கும் அந்த நாடு ஏறத்தாழ 2500  பேரை கொரொனாவினால் இழந்திருக்கிறது.  இன்னும் அச்சுறுத்தல் இருக்கிறது.

அந்த நாட்டின் சுகாதாரதுறை அமைச்சர் அதிபரின் கருத்தை எதிர்த்து கருத்து சொல்லி மக்களை ஊரடங்கை கடைபிடிக்க கோரினார். உடனே அவரை பதவி நீக்கம் செய்து விட்டார் அதிபர்.

நாட்டில் மக்கள் ஊரடங்குக்கு எதிராக போராட்டம் கூட நடத்தினார்கள். அதற்கு அதிபரின் ஆதரவு இருந்தது.

இன்று உலகின் பல பகுதிகளில் ஊரடங்குக்கு  எதிராக போராட்டங்கள் நடக்கின்றன.

ஆனால் நோயின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகும்போது சமூக விலகலை விலக்க முயற்சிப்பது அறிவுடைமை அல்ல.

நல்லவேளையாக இந்தியாவில்  அந்தக்  குரல்கள் எழவில்லை.

நிவாரணத்திற்கு ஜீடிபியில் 15% ஒதுக்கிய டிரம்ப் எங்கே? 0.05% ஒதுக்கிய மோடி எங்கே?

அமெரிக்கா வலுவுள்ள நாடாக இருக்கட்டும்.  நமது  பொருளாதார நிலை ஒப்பீட்டளவில் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டின் மொத்த  உள்நாட்டு உற்பத்தி  மதிப்பில் கொரொனா நிவாரணத்துக்காக 15% நிதியை ஒதுக்கி உள்ளார். அதாவது  74  லட்சம் கோடி ரூபாய்.

ஒவ்வொரு  அமெரிக்கனுக்கும் நிவாரண துகை நேரடியாக அரசிடம் இருந்து போகும். ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய். ஆனால் நமது  மோடி கொரொனா நிவாரணத்துக்காக  ஒதுக்கிய துகை நமது உள் நாட்டு  உற்பத்தி மதிப்பில் 0.05% தான்.

நமது ப சிதம்பரம் புள்ளி விபரம் கொடுத்தார். அதாவது வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் எல்லா இந்தியருக்கும் ஐந்தாயிரம் கொடுத்தால் கூட அறுபதாயிரம் கோடி ரூபாய் தான் செலவாகும். அதையாவது கொடுங்கள் என்றார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

மத்திய அரசு கொடுக்கும் அனைத்து நிவாரணமும் நேரடியாக நிறுவனங்களுக்கும்  மறைமுகமாக மக்களுக்கும் சென்றடையும்  விதத்தில் தான் இருக்கிறது. அதை நேரடியாக கொடுத்தால் என்ன என்று கேட்கிறார்கள்.

இதுவரை கொரொனாவை வைத்து மத்திய அரசை யாரும் விமர்சிக்க வில்லை. ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டிய நேரமிது.அரசும் விமர்சனங்களுக்கு  இடம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் கீழே இறங்கிய  மோடியின் மதிப்பு கொரொனாவில்  மேலும் இறங்கிக் கொண்டிருக்கிறது .

அதை தவிர்க்கும்   நோக்கத்தில்தான் பிரதமர் மோடியும் எதிர்க்கட்சிகளை ஆலோசனை கேட்கிறார்.

ஆனால் நடவடிக்கையில் அது பிரதிபலிக்க வேண்டுமே? பிரதிபலித்தால் மதிப்பு  உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

செய்வாரா மோடி?

மத்திய அரசு ஊழியர்களிடம் ஓராண்டு வசூல் அவசியமா ?

மத்திய அரசு தனது ஊழியர்களிடம்  ஒரு  நாள் சம்பளத்தை ஓராண்டுக்கு பிடித்தம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.

அந்த துகை பி  எம் கேர்ஸ்‌ பண்ட் நிதிக்கு போய் சேரும். இன்று அறிவித்து இருபதாம் தேதிக்குள் ஆட்சேபனை ஏதும் இருந்தால் தெரிவியுங்கள் என்கிறார்கள்.

யார் தெரிவிப்பார்கள்? இது ஒரு வகை கட்டாய வசூல் என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது.

கொரொனா நிவாரண நிதிக்கு எல்லாரும் வசூல் செய்கிறார்கள். மாநில  அரசுகள் தங்கள் ஊழியர்களிடம் சம்பளத்தில்  பிடித்தம் செய்கிறார்கள். ரயில்வே கூட தனது ஊழியர்களிடம் சம்பளத்தில்  பிடித்தம் செய்து பிரதமரின் நிதிக்கு கொடுக்க இருக்கிறார்கள். எல்லா துறையினரும் தங்கள் பங்கை செலுத்த தயாராக இருக்கும் நேரத்தில் மத்திய அரசு  எந்த வகையிலும் கட்டாய வசூலில் ஈடுபடக் கூடாது.

மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் பிரதிநிதிகள் இந்த முடிவை  கண்டித்திருக்கிறார்கள்.  மத்திய அரசு ஏதோ நிதி நெருக்கடியில் இருப்பது  போல் ஒரு தோற்றத்தை  இது உருவாக்கும் என்று அவர்கள் ஆட்சேபிக்கிறார்கள்.

176000 கோடி ரிசர்வ் வங்கி நிதியை எடுத்து யார் யாருக்கு மத்திய அரசு  கொடுத்தது என்பது பற்றி தெளிவான பதில் இல்லை.

இன்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் நிதி சலுகைகள் கூட மறைமுகமாகத்தான் ஏழைகளுக்கு பயன் அளிக்குமே தவிர நேரடியாக அல்ல.

ஒரு மாதம் இரண்டு மாதம் என்றால் இந்த கேள்வி எழுந்திருக்காது. ஒரு வருடத்திற்கு பிடிப்போம் என்றால் அதுவரை  கொரொனா பாதிப்பு நீடிக்கும்  என்று மத்திய அரசு  உறுதியாக நம்புகிறதா ?

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தால் என்ன கெட்டுவிடும்?

திமுக  உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வை ரத்துச் செய்து விட்டு அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்  பட்டு இருக்கிறது.

அதற்கு இதுவரையில் அரசிடம் இருந்து நேரடியாக  எந்த பதிலும் இல்லை. மாறாக அதிகாரிகள் மட்டத்தில் ஊரடங்கு முடிந்தவுடன் தேர்வுகள் நடத்தப் படும் என்று சொல்லப் பிடுகிறது. முன்பே அமைச்சர் செங்கோட்டையன் தேர்வை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னார்.

ஜூன் மாதம் கல்வியாண்டு துவங்கியபின் எப்படி வகுப்புகள் நடத்தி தேர்வுகள் நடத்துவீர்கள். இரண்டு மாதம் வகுப்புகள் நடத்தாமல்  பாடங்களை சொல்லிக் கொடுக்காத நிலையில் தேர்வுகள் நடத்துவோம் என்றால் மாணவர்களை நிறுத்துவதற்கு திட்டம் போடுகிறீர்களா ?

அவகாசம் இல்லை. அதனால் ஒன்பது பிளஸ் ஒன் மாணவர்களை  தேர்ச்சி  பெற்றதாக  அறிவித்து விட்டீர்கள் .

இவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தால் என்ன கெட்டுவிடும்?

எந்தக் கல்வியாளரும் இதற்கு எதிர்ப்பு  தெரிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் நலன் கருதி அரசு முடிவெடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் மத்திய அரசின் மறைமுக ஆதிக்கம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ள நிலையில்  அரசு விரைந்து நல்ல முடிவெடுக்க வேண்டும்.

கொரொனாவில் அரசியல் செய்வது பழனிசாமியா ஸ்டாலினா?

கொரொனாவில் கூட அரசியல் செய்கிறார் ஸ்டாலின் என்று  முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

நோயில் அரசியல் செய்வது ஒரு  நோய். அதை யார் செய்தாலும் கண்டிக்க வேண்டியதுதான். ஆனால் ஸ்டாலின் செய்வது அரசியலா அக்கறையா ?

ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் வேலை என்ன? ஆளும் கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டலாம் . கண்டிக்கலாம். ஆலோசனைகள் கூறலாம். மக்கள் மன்றத்திடம் முறையிடலாம். அதைத்தானே ஸ்டாலின் செய்கிறார். அது எப்படி அரசியல்  ஆகும்?

அனைத்துக்கட்சி  கூட்டத்தை  கூட்டி  தீர்மானங்கள்  நிறைவேற்றி அனுப்பி இருக்கிறார்கள்.

அதில் எதை ஏற்றுக் கொள்கிறார் எதை ஏற்றுக் கொள்ள வில்லை அல்லது இயலவில்லை எனது குறித்து முதல்வர் என்ன கருத்துக் கூறுகிறார்.

கோரிக்கைகள் குறித்து எதுவுமே கூறாமல்  எதை சொன்னாலும் அரசியல் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுவது என்ன வகை அரசியல்.

ரேஷன் அட்டைதார்களுக்கு நிவாரணமாக ரூபா ஐந்தாயிரம்‌ தரவேண்டும், கொரொனாவில் இறந்த குடும்பதினருக்கு பரிவுத் துகையாக ஒரு கோடி தரவேண்டும். 35000 கோடி உடனடியாக ஒதுக்கி நிவாரணப் பணிகளை முடுக்கி விட வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானம் போட்டிருக்கிறார்கள்.  இவைகளில் எவற்றை ஏற்றுக் கொள்கிறது அரசு அல்லது நிராகரிக்கிறது என்பது பற்றி  கருத்தை சொன்னால் அது அர்த்தமுள்ளது.

இன்று ஸ்டாலின் அறிக்கைக்கு எல்லாம் பதில் சொல்ல  வேண்டிய அவசியம் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. இதைவிட மக்களை அவமதிக்கும் செயல் உண்டா? 

மக்கள் தங்களை சமூக விலகலுக்கு உட்படுத்திக் கொண்டு கொரொனாவின் தாக்கத்தை குறைக்க உதவி இருக்கிறார்கள் .

இன்னும் ஆபத்து முழுமையாக நீங்கவில்லை .

இந்நிலையில்  பொறுப்பற்ற அறிக்கைகள் கொடுத்து ஏற்கெனெவே கேட்டு விட்ட தனது பெயரை  முதல்வர் மேலும் கெடுத்துக் கொள்ளவேண்டாம். 

ஏழைகளுக்கு கொரொனா வராது; முதல்வரின் கண்டுபிடிப்பு

முக ஸ்டாலினுக்கு பதில் சொல்வதாக நினைத்துக்  கொண்டு நேற்று முதல்வர்  சொன்ன இரண்டு செய்திகள் காமெடியாகப் போகும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

ஏழைகளுக்கு கொரொனா வராது என்பது முதல் கண்டுபிடிப்பு.

இன்னும் இரண்டு மூன்று நாளில் கொரொனா தமிழ்நாட்டில் என்பது இரண்டாவது கண்டுபிடிப்பு.

எந்த பொருளில் பேசினார் என்று அவர்தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

இரண்டுக்கும் அறிவியல் ஆதாரம் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஏன் முதல்வருக்கும் தெரியும்.

இருந்தாலும் நம்பிக்கை தருவதற்காகவும்  நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் அப்படி பேசினார் என்று எடுத்துக் கொண்டாலும் ஒரு முதல்வர் அப்படி பேசலாமா என்ற கேள்விக்கு  பதில்  இல்லை.

நோய்க்கு பராரி என்று தெரியுமா பணக்காரன் என்று தெரியுமா?

ஏழைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பது  அவர்களை பாராட்டுவதா இகழ்வதா?

எதிர்ப்பு சக்தியோடு நீ ஏழையாகவே இரு என்கிறார்களா ?

நோய் வாய்பட்டவர்கள் பணக்காரர்கள் அவர்களுக்கு நிவாரணம் தேவையில்லை  என்கிறார்களா ?

ஒருநாள் நோய் வாய்ப்பட்டவர்கள் இருபத்து ஐந்து பேர் என்றதும் இரண்டு மூன்று நாளில் நோயே இருக்காது என்பது எந்த அடிப்படையில்? அது அலட்சியத்துக்கு வழி வகுத்து விடாதா ?

முதல்வர் பேசும்போது கொஞ்சம் எச்சரிக்கை உடன் பேசினால் நல்லது.  இல்லாவிட்டால் அவரது பதவிக்கு உரிய கண்ணியம் கெட்டு விடும்.

ரமளான் நோன்பு ஊரடங்கு சட்டத்தால் பாதிக்குமா?

மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு  சட்டம் நீட்டிக்கப்  பட்டிருக்கிறது.

ரமளான் நோன்பு வரும் 25 ம் தேதி துவங்குகிறது. நோன்பாளிகள் நோன்பு காலம் முடிந்து பள்ளிவாசலில்  தொழுகையை நடத்தி நிறைவு  செய்வார்கள்.

ஆனால் ஊரடங்கு தடை காலத்தில் எல்லா மதவழிபாட்டு தலங்களும் மூடப் பட்டிருக்கும். 

எனவே முஸ்லீம்கள் வரலாற்றில் முதன் முறையாக தங்கள் தொழுகையை  பள்ளி வாசலில்  நிறைவு செய்ய இயலாமல் ரமளான் நோன்பை இருக்க வேண்டி வரும்.

பாகிஸ்தானில் பல இஸ்லாமிய அமைப்புகள்  ரமளான் மாதத்தில் பள்ளி வாசல்களை  மூடக் கூடாது என்று வற்புறுத்தி வருகின்றன.

ஆனால் அரசு அதற்கு செவி சாய்க்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.

இத்தனைக்கும் சவுதி அரபியா உட்பட பல இஸ்லாமிய நாடுகள் பள்ளி வாசல்களை மூடிவிட்டன.   நோய் தடுப்புக்கும் இறை  வழிபாட்டுக்கும் முரண் இருப்பதாக அவர்கள் கருத வில்லை.

இதுவரை இந்தியாவில் அத்தகைய குரல்கள் எதுவும் எழவில்லை.

அதே சமயம் இஸ்லாமிய சமூகம் ரமளான் நோன்பை நோற்பதற்கும் நிறைவு செய்யும்போது தங்கள் இல்லத்திலேயே தொழுகை  நடத்திக் கொள்வதற்கும் தயாராகவே இருக்கும்.

ரமளான் நோன்பை ஊரடங்கு சட்டம் எந்த வகையிலும் பாதிக்காது என்பதுதான் உண்மை.

நாளை தீர்ப்பு வரும் நிலையில் இன்று கைது அவசியமா?!

கொரொனா பாதித்த மக்களுக்கு தனியார் அரசின் அனுமதியில்லாமால் உதவிகள் வழங்கக் கூடாது  என்று அரசு தடை உத்தரவு போட்டதை எதிர்த்து திமுக போட்ட வழக்கில் நாளை உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் பொது மக்களுக்கு உதவிகள் வழங்கியதாக திமுகவின் ஒன்றிய செயலாளர் ஒருவர் கைது செய்யப் பட்டு பிணையில் விடுவிக்கப் பட்டிருக்கிறார்.

அரசுக்கு தெரிவித்து கொடுப்பது என்றால் அவர்களின் அனுமதியை பெறுவதில்  கட்டுப்பாடுகளை அதிகரித்து தாமதித்து அலைக்கழித்து தடுக்கும் விதத்தில் இருக்கும் .

அப்படி இருக்கக் கூடாது என்பதற்கு நீதிமன்றம் போதிய பாதுகாப்பு வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.

எப்படி இருந்தாலும் அரசு தங்களுக்கு  கிடைக்க இருந்த உதவிகளை தடுத்து விட்டது என்ற மக்களின் கோபத்தில் இருந்து அரசு தப்ப முடியாது.

மீண்டும் விஜயபாஸ்கர்.! முதல்வருடன் சமரசமா?

கொரொனா பாதிப்பு பற்றி மக்களுக்கு அறிவிக்கும் வேலையை செய்து கொண்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் என்று காணாமல் போனார்.

அமைச்சருக்கும் முதல்வருக்கும் பிரச்னை என்றும் அதனால் அமைச்சர் ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கிறார் என்றும்  செய்திகள் வந்த நிலையில்  அமைச்சர் வேலையை துறையின் செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் செய்து வந்தார்.

இன்று திடீர் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்து கொரொனா பதிப்புகள் பற்றி அரை மணி நேரத்துக்கும் மேல் விவரமாக பேசினார்.

செய்திகளை அமைச்சர் சொல்கிறாரா துறை செயலாளர் சொல்கிறாரா என்பது பற்றி  மக்களுக்கு அக்கறை  இல்லை. சொல்லும் செய்திகள் நல்லவையாக இருக்க வேண்டும் உண்மையாக இருக்க வேண்டும்.

ஆனால் இன்னமும் இந்திய அளவில் நோய் பாதித்த  மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது என்பதை மாற்ற முடிந்தால் இவர்களை பாராட்டலாம்; பொறுத்திருந்து பார்ப்போம்.