Home Blog Page 31

அத்திவரதர் பக்தர் கூட்டம் காட்டும் உண்மைகள்?!

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமியும் அத்திவரதரும் வேறு வேறு சுவாமிகள் அல்ல.

ஒருவர் எப்போதும் இருப்பவர். அத்தியில் ஆனவர் நாற்பது ஆண்டுகள் குளத்தில் வைக்கப்பட்டு பக்தர்களால் வெளியே எடுக்கப்பட்டு தரிசிக்கபடுபவர்.

                     எப்போதும் இருப்பவரை காண கூட்டம் கூடுவதில்லை. ஆனால் அவரே நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வருகிறார் என்றால், அவரை பார்க்க லட்சக்கணக்கில் மக்கள் திரள் கூட்டப் படுகிறது. கூடுகிறார்கள். 

பத்திரிகைகள் பக்கம் பக்கமாக புராணக் கதைகளை எழுதி நிரப்பி விற்கிறார்கள் .    படிப்பவர்கள் பரவசமாகி கூட்டத்தில் கலக்க போகிறார்கள்.

செல்பவர்களை யாராவது புராணக் கதையை பற்றி தெரியுமா அதை நம்புகிறீர்களா என்று கேட்டு யாரும் பிரசுரிப்பதில்லை.

எல்லாரும் செல்கிறார்கள். நானும் செல்கிறேன். இதுதானே மனநிலை. அதில் அவர்களுக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைத்தால் எல்லார்க்கும் நல்லதே.

குடியரசுத் தலைவர் துணை குடியரசுத் தலைவர், என்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை வரச் செய்ய அவர்களால் முடிகிறது. அந்த நெட்வொர்க் அவர்களிடம் இருக்கிறது. அந்த விளம்பரத்தில் பாமரன் மூழ்கி விடுகிறான்.

விவிஐபி அந்தஸ்தில் பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் பாதுகாப்போடு அத்திவரதரை தரிசிக்க முடிகிறது. மாவட்ட ஆட்சியர் கையெழுத்தை போலியாக போட்டு டோனர் பாஸ் தயாரித்து பயன்படுத்தப்படுகிறது.

சிலர் ஆயிரக்கணக்கில் மோசடி செய்து தரிசனம் செய்ய வைக்கின்றனர்.

இதில்  ஆதாயம் அடைந்தவர்கள் பட்டியல் மற்றும் அளவை இந்து அறநிலையத்துறை வெளியிடுமா?

எவருடைய  நம்பிக்கையையும் விமர்சிப்பதோ குறை சொல்வதோ நமது நோக்கமல்ல. ஆனால் நடைமுறையில் பக்தி தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

எங்கும் இருக்கும் இறைவன் எல்லா பிம்பங்களிலும் இருப்பான்தானே !!!

அந்த உண்மையை பிரச்சாரம் செய்வது நமது கடமை அல்லவா!!

“மைலார்டு” ஒழிகிறது ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் ?!

உயர்நீதி மன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகளை ‘மை லார்டு’ என்று அழைக்கும் வழக்கம் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கியது.

சுதந்திரம் அடைந்தும் இன்னும் மன்னர் காலத்து பழக்க வழக்கங்களை தொடர்ந்து கொண்டு இருப்பது கேவலம். அதுவும் மை லார்டு என்று நீதிபதிகளை அழைக்கும் வழக்கம் உயர் நீதிமன்றங்களில் சகஜம்.

சில வழக்கறிஞர்கள் மூச்சுக்கு மூன்று முறை மை லார்டு போட்டு பேசுவார்கள்.

வாதம் தொடங்கும்போதோ முடிக்கும்போதோ சொன்னால் போதும். ஆனால் விவாதித்துக் கொண்டிருக்கும்போதே அடிக்கடி மை லார்டு போட்டு பேசுவது கேட்பதற்கே என்னவோ போலிருக்கும். ஒரு சில நீதிபதிகள் அதை ரசிக்கலாம்.  பெரும்பாலானவர்கள் ரசிப்பதில்லை.

பழைமையை மதிப்பது வேறு. கண் மூடித்தனமாக எதையும் பின்பற்றுவது வேறு.

சட்டங்கள் எல்லாம் அடிக்கடி மறுபரிசீலனை செய்ய வேண்டியவை. எதுவும் நிலையானதில்லை. காலத்துக்கு காலம் மாறும். இன்னமும் தேசத்துரோக குற்ற பிரிவை பிடித்துக்கொண்டு தொங்குகிறோம் அல்லவா?

ஜெய்ப்பூரில் நீதிபதிகளே முன்வந்து இந்த வழக்கத்தை ஒழிக்க முன் மொழிந்திருப்பது பாராட்டத் தக்கது. சார் என்று அழைத்தாலே போதும் என்று அவர்கள் பரிந்துரைத்து  இருக்கிறார்கள்.

சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கறிஞர்கள் மை லார்டு ஒழிப்பு பற்றி  முடிவேடுக்க வேண்டும்.

நீட் மசோதா; பொய் அம்பலம்! பதவி விலகுவாரா சிவி சண்முகம்?

நீட் மசோதா பிரச்னையில் நடந்த மோசடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய உள் துறை துணைச்செயலர் ராஜிஸ் எஸ் வைத்யா தாக்கல் செய்த அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.

தமிழக அரசின் இரண்டு மசோதாக்களும் உள்துறை அமைச்சகத்துக்கு 20/02/2017 அன்றே கிடைத்ததாகவும் 11/09/2017ல் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் குடியரசுத் தலைவர் இந்த மசோதாக்களை நிறுத்தி வைத்தும் நிராகரித்தும் 18/09/2017ல் உத்தரவிட்டதாகவும் அவற்றை 22/09/2017லேயே தமிழக அரசுக்கு அதற்கான ஆவணங்களுடன் இணைத்து திருப்பி அனுப்பி விட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எல்லா கட்சிகளும் நீட் மசோதா என்ன ஆயிற்று என்று கேட்டுக்கொண்டே இருக்கையில் மத்திய மாநில அரசுகள் கனத்த மௌனம் காத்தன.

எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூட நிர்மலா சீதாராமன் கூறினார்.

பாராளுமன்ற தேர்தல் நடக்கும் போது சொல்ல வேண்டாம் என்று இருவரும் கள்ள மௌனம் காத்திருக்கிறார்கள்.

அதன் பலனை தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டன.

ஆனாலும் சட்டமன்றத்தில் கூசாமல் அப்படி எதுவும் எங்களுக்கு வரவில்லை என்று சட்ட அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். பச்சைப் பொய் அல்லவா?

ராஜினாமா செய்யச்சொல்லி திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதற்கு சொன்னது  பொய் என்றால் ராஜினாமா செய்ய தயார் என்று கூட அவர் கூறினார்.

இப்போது என்ன செய்ய போகிறார் சிவி சண்முகம்?

உச்சநீதி மன்ற தீர்ப்பு யாருக்கு சாதகம்? குமாரசாமிக்கா, எடியூரப்பாவுக்கா?

சபாநாயகருக்கு எப்போது முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது- ராஜினாமா செய்தவர்கள் சட்ட மன்றத்திற்கு போகலாம் போகாமலும் இருக்கலாம்.-இப்படி ஒரு இடைக்கால தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ளது.

இதன்மூலம் சபாநாயகர் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்ளலாம் மறுக்கவும் செய்யலாம். தகுதி நீக்கம் செய்ய முடியுமா என்பது வேறு?

இதில் எதை செய்தாலும் நாளை நடக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்த  பாதிப்பையும் அது ஏற்படுத்தாது.

ஆளும் கட்சியின் வலு 101 ஆகவும் பாஜகவின் வலு 107 ஆகவும் இருக்கும். எனவே வெறும் எண்ணிக்கை அடிப்படையில் குமாரசாமி ஆட்சி கவிழும் என்பதுதான் இன்றைய எதார்த்த நிலை.

வேறு ஏதாவது அதிசயம் நடந்தால் தவிர குமாரசாமி ஆட்சியை காப்பாற்றுவது கடினம்.

                        ஆனால் கட்சி தாவல் பாதுகாப்பு சட்டம் ஏதாவது கொண்டு வர வேண்டும் என்று பாஜக திட்டமிடலாம். அது ஒரு சட்ட மன்ற உறுப்பினரின் அடிப்படை உரிமை என்று கூட வாதிடலாம். 

ஆட்சியை பிடிக்க எந்த எல்லைக்கும் பாஜக போகும் என்பதற்கு கர்நாடகமே உதாரணம்.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக இல்லை ?!

உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் கேட்டு மாநில தேர்தல் கமிஷன் கொடுத்த மனுவை  நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதாவது வரும் அக்டோபர் மாதம் கடைசிவாரத்தில் தேர்தல் எப்போது நடக்கும் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.

அப்படி அறிவிப்பை வெளியிடாவிட்டால் என்ன நடக்கும்.? நீதி மன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். அவ்வளவுதானே? எதிர்கொண்டால் போயிற்று. இதுதான் அதிமுக அரசின் அணுகுமுறையாக இருக்கிறது.

சட்ட மன்ற தேர்தலுக்கு முன்னாள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி தனக்கு செல்வாக்கு இல்லை என்பதை வெளிக்காட்ட எந்த அரசுதான் விரும்பும்?

அதற்கு தமிழகம் கொடுக்கும் விலைதான் அதிகம்.

உள்ளாட்சி நிதி பங்காக தமிழகத்திற்கு வர வேண்டிய சுமார் நான்காயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால் நிதியை விடுவிக்க முடியாது என்றார்.

தேர்தலுக்கும் நிதிக்கும் தொடர்பில்லை. கொடுக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நிலை.

ஆனால் மத்திய அரசு தேர்தல் நடத்தாதயை சாக்காக வைத்து நிதியை நிறுத்தி வைக்கலாம்.

ஆக தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் காத்திருக்க வேண்டும். அதாவது அப்போதும் மாநில அரசு மனது வைத்தால்தான்.

அஞ்சல் துறை தேர்வை ரத்து செய்து பணிந்த மத்திய அரசு?!

அஞ்சல் துறை தேர்வுகளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்வித்தாள்களை வழங்கி நடத்தியது மத்திய அரசு.

திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தன.

ஆச்சரியமாக திமுகவுடன் சேர்ந்து அதிமுக எம்பிக்களும் மேலவையில் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தினர்.

வழக்கும் தாக்கலாகி முடிவுகளை அறிவிக்க தடை ஏற்பட்டது.

இந்நிலையில் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாராளுமன்றத்தில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப் படுவதாகவும் இனி தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் தேர்வுகள் நடத்தப் படும் என்றும் அறிவித்தார்.

எல்லா கட்சியினரும் நன்றி தெரிவித்தனர்.

இந்த முடிவுக்கு தமிழ் நாட்டில் எழுந்த எதிர்ப்பே முக்கிய காரணம். ஆக இதர மாநிலங்களின் உரிமைகளையும் தமிழ்நாட்டில் நடத்தப்படும் போராட்டங்கள்தான் பாதுகாக்கின்றன.

ஏதோ இப்போதைக்கு ரத்து செய்து விட்டார்களே என்று நினைக்கக் கூடாது. உண்மையில் அந்த முடிவை எடுத்து அமுல்படுத்திய யார் மீதாவது பொறுப்பை சுமத்தி உரிய தண்டனை வழங்கி இருந்தால் மட்டும்தான் அவர்கள் இதில்  உண்மையில் அக்கறை காட்டுவதாக ஏற்றுக் கொள்ள முடியும்.

அதில்லாமல் வெறுமனே ரத்து மட்டும் செய்திருப்பதால் மீண்டும் அடுத்த முயற்சியை எப்போது வேண்டுமானாலும் கையில் எடுப்பார்கள் என்றுதான் பொருள்

கர்நாடகத்தில் பாஜக நடத்தும் கட்சித்தாவல் அசிங்கங்கள் ??!!

கர்நாடகத்தில் மத சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது.

அதை கவிழ்த்து தான் ஆட்சியில் அமர பாஜக எல்லாவித அரசியல் அசிங்கங்களையும் அரங்கேற்றி வருகிறது.

பலியாவது கட்சித் தாவல் தடை சட்டம்.

இப்போது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இருந்தால்தான் ஒரு கட்சியில் பிளவை ஏற்படுத்த முடியும்.

அதை முறியடிக்கும் நோக்கில் பாஜக திட்டமிட்டு இருப்பது தான் ராஜினாமா நாடகம்.

இன்று ராஜினாமா செய்திருக்கும் 16 எம் எல் ஏக்களும் ராஜினாமா செய்யாமல் கட்சிகளை எதிர்த்து பேசியிருந்தால் அவர்களை கட்சி தாவல் தடை சட்டப்படி  தகுதி இழப்பு செய்ய முடியும்.

நாங்களாகவே ராஜினாமா செய்கிறோம் என்றால் ஆளும் கட்சியின் பலம் குறைகிறது அல்லவா.

ராஜினாமா செய்பவர்கள் ஒன்றும் பலன் இல்லாமலா ராஜினாமா செய்வார்கள்?  ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றம் சென்றவர்கள் என்ன பலனை எதிபார்த்து அதை செய்திருப்பார்கள்?

இது ஜனநாயக மோசடி அல்லாமல் வேறு என்ன?

நாளை குமாரசாமி நம்பிக்கை ஓட்டில் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பது  வேறு.

ராஜினாமா செய்தவர்கள் இதுவரை ஏற்றுக் கொள்ளத்தக்க என்ன காரணத்தை சொல்லி இருக்கிறார்கள்?

இதுமாதிரி சட்டத்தை இழிவு படுத்து வதை விட பேசாமல் கட்சி தாவல் தடை சட்டத்தையே ரத்து செய்து விடலாம்.

வேலூரில் அதிமுகவுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு; மௌனம் கலைப்பாரா ரஜினி??!

அதிமுகவுக்கு நன்றாக தெரிந்து விட்டது. மோடி ஆதரவு என்று சொன்னால் இங்கே மதிக்க ஆளிருக்காது என்று.

எனவே தேடிபிடித்து ரஜினி ரசிகர் மன்ற ஆட்களை வேலூரில் ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக களம் இறக்கி விட்டிருக்கிறார்கள்.

எப்போதும் எல்லாத அளவுக்கு  மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பின்னும் மோடிக்கு எதிர்ப்பு அலை அதிகமாக அடிக்கத் துவங்கி இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான்.

எல்லா மாநிலங்களிலும் ஜனநாயக நெறிமுறைகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு  மற்ற கட்சிகளை உடைத்து ஆட்சியை பிடிக்கும் வேலையை வெட்கமின்றி செய்து வருகிறது பாஜக.

பின்னால் இருந்து இயக்கும் ஆர்எஸ்எஸ் இதுதான் தக்க தருணம் என்று கணித்து  காங்கிரசை இல்லாமல் செய்துவிட முயற்சித்து வருகிறது.

சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்ற ரஜினி தன் ரசிகர் மன்ற ஆட்களை உள்ளே விட்டு ஆழம் பார்க்கிறாரா?

வருங்கால கூட்டணி அமைய இப்போதே அச்சாரம் போடுகிறாரா?

ரஜினியை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்று மாபா பாண்டியராஜன் சொல்லியிருப்பது அவர்களுக்கு உள்ளே இருக்கும் மோதலை காட்டுகிறது.

மொத்த அமைச்சரவையும் வேலூரில் களம் இறக்கி விடப்பட்டு இருக்கிறது.

இதற்கெல்லாமா மக்கள் மயங்கி விடுவார்கள்?

அஞ்சல் துறையில் இனி வடவர்களுக்கே வேலை?! தொடரும் வஞ்சகம்?!!

இன்று நடைபெறும் அஞ்சல் துறை கிளை போஸ்ட் மாஸ்டர், உதவிகிளை போஸ்ட் மாஸ்டர், தபால் டெலிவரி செய்பவர்கள் போன்ற பல் வேறு பணிகளுக்கு நடைபெறும் தேர்வில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்விகள் இருக்கும் என அதிர்ச்சி தகவலை ஒருநாள் முன்னதாக அறிவித்து எல்லாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது அஞ்சல் துறை.

இதுவரை எல்லா மொழிகளிலும் கேட்கப்பட்டு வந்த கேள்விகள் ஏன் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு யார் பதில் சொல்வது?

உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை தேர்வுகளை நடத்தி கொள்ளுங்கள் ஆனால் முடிவுகளை மட்டும் வெளியிடாதீர்கள் என்று உத்தரவிட்டு இருக்கிறது.

இந்த அநியாயத்தை யார் கேட்பது?

நாங்கள் செய்து கொண்டே இருப்போம். விழித்துக் கொண்டால் இல்லை என்போம்.  மீண்டும் சீண்டுவோம். விழித்தால் மீண்டும் மறுப்போம் என்று தொடர்ந்து கொண்டே  இருக்கும் இந்த நாடகத்துக்கு முடிவு ஏது?

இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே நடத்தினால் பிரச்னை வரும் என்று தெரியாமலா இந்த முடிவை எடுத்திருப்பார்கள்? அடிப்படை அறிவு இல்லாத எவரும் இந்த முடிவை எடுத்திருக்க முடியாது. எனவே தெரிந்தே தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே தேர்வு நடத்தி அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இத்தனை பேர் தேர்ந்து  எடுக்கப்பட்டு அவர்கள் வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு அனுப்பபட இருக்கிறார்கள். அது நல்ல முன்னேற்றம் இல்லையா என்பார்கள்? பிறகு ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே தேர்வு என்பது நிலைப் பட்டு விடுமல்லவா?

ஏனப்பா இந்த வேலையை ஏன் வேறு மாநிலத்துக்கு சென்று பார்க்க வேண்டும்.   இங்கே காலியாக இருக்கும் இடத்தில் நான் பணி செய்வதில் உனக்கு என்ன பிரச்னை என்ற கேள்விக்கு யார் பதில் சொல்வது?

எல்லாரும் கண்டித்து அறிக்கை விட்டு விட்டார்கள். அதற்கு நீதி மன்றம் சென்று நீதி பெற வேண்டும்.

எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால் நடப்பது நமது அரசல்ல என்றுதானே ஆகும். ?

தவறுகளை தெரிந்தே அடுக்கிக் கொண்டே போகிறது பாஜக அரசு. இது எங்கு கொண்டு போய்விடுமோ?

தேசதுரோக வழக்கில் வைகோ தண்டிக்கப்பட்டது வரலாற்று பிழை ?!

ஆங்கிலேய ஆட்சிகால மனநிலையில் இருந்து நாம் வெளி வரவில்லையோ என தோன்றுகிறது.

வைகோ மீதான வழக்கில் நீதிபதி கேட்டதாக சொல்லப்படும் கேள்வி நீங்கள் பிரபாகரன் மீதான ஆதரவை நீங்கள் அதிகரிக்கும் விதத்தில் பேசினீர்களா என்பது.

பிரபாகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்வது தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகும் இப்படி ஒரு தீர்ப்பு வர முடியும் என்பதை கற்பனை செய்யவே முடியவில்லை. பிரபாகரன் தீவிரவாதியல்ல அவர் ஒரு இனத்தின் விடுதலைப் போராளி என்னும் கருத்தில் உறுதியாக இருப்போர் கோடானு கோடி. எல்லாரையும் தண்டித்து விடமுடியுமா?

உச்சநீதி மன்ற தீர்ப்பிற்கு என்னதான் பொருள்.?

தவறான புரிதல்தான் இந்த தவறான தீர்ப்பிற்கு அடித்தளம் இட்டிருக்க வேண்டும்.

மேல்முறையீட்டில் இந்த தண்டனை உறுதியாக நிற்காது என்பதே நமது கணிப்பு.

தற்காலிகமாக சில சிரமங்களை வைகோவிற்கு இது அளிக்கலாம். அவைகள் நிரந்தரம் அல்ல.

மேன்முறையீட்டு நீதிமன்றம் நிச்சயம் தடை கொடுக்கும் என்றும் வைகோ ராஜ்ய சபைக்கு போவது தடை படாது என்றும் நம்புகிறோம்.

இதில் திமுகவிற்கு ஒரு நிரடலும் இல்லை. திமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வழக்கு என்பதால் அதில் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதோ வைகோ குற்றவாளி என்பதோ திமுகவின் நிலைப்பாடு அல்ல. அது காவல்துறையின் நிலைப்பாடு.நீதிமன்றம் அதுபற்றி தீர்ப்பு சொல்லும். அதில் நீதி நிச்சயம் வெல்லும்.  வைகோ புடம் போட்ட தங்கம் போல் வெளிவருவார்.

ஆயுதம் தாங்கி விடுதலைக்கு போராடிய சுபாஷ் சந்திர போஸ்

இந்திய போராளிகளின் பெருமிதம்.

பிரபாகரன் தமிழர்களின் குல சாமி !

தமிழ்ப்போராளிகளின் பெருமிதம்.!

அந்தப் பெருமையை தட்டிப் பறிக்க எவராலும் முடியாது!