Home Blog Page 32

ராகுல் இனி காங்கிரஸ் தலைவர் இல்லை!! பிரதமர் வேட்பாளரும் இல்லையா??!!

நான் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டேன். இனி புதிய தலைவரை தேர்ந்துஎடுப்பது கட்சியின் கடமை என்று அறிவித்திருக்கிறார் ராகுல் காந்தி.

தனி ஒருவனாக நின்று போராடியதாவும் சொல்வதைத்தான் ஏற்க முடியவில்லை. வேறு காங்கிரஸ் தலைவர்களே இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

சரி. இப்போது தலைவர் இல்லை. நாளை பிரதமர் வேட்பாளராக போட்டியிடமாட்டரா என்ற கேள்வியும் எழுகிறது.

அதிகாரத்தில் இருக்கும்போது பதவிவிலகுவதுதான் பெருமை சேர்க்கும். அதிகாரம் இழந்த போது பதவி விலகுவதில் என்ன பெருமை?

நேரு குடும்பத்தை விட்டால் தலைமை தாங்க வேறு தலைவர்களே இல்லை என்பது ஒரு தேசியக்கட்சிக்கு இழுக்குத்தான்.

ஏன் அப்படி ஒரு தலைவர் தோன்றவில்லை.? ஏன் என்றால் அது காங்கிரஸ்!

பாஜகவில் அந்த நிலை ஒரு போதும் எழாது. ஏன் என்றால் அது ஒரு மதவாத கட்சி.    அதுவும் சாதியம் ஆட்சி செய்யும் மதவாதம். அதுவும் பார்ப்பனீயம் தனக்கொரு நீதி மற்றவர்க்கு ஒரு நீதி என்பதை எல்லாரையும் ஏற்றுக் கொள்ள வைக்கும் மதவாதம்.    அங்கு தலைவர்கள் முக்கியம் இல்லை. இன்று மோடி. நாளை ஒரு கட்கரி. இவர்களை எல்லாம் இயக்கும் ஆர்எஸ்எஸ் தன்னை  முன்னிலைப்படுத்தியதே இல்லை. ஆனால் அவர்கள் தீர்மானிக்கும் சக்தியாக என்றுமே நிலைப்பார்கள்.

மேலாகப் பார்க்கும்போது ராகுல் செய்வது நல்லது போல்தான் தோன்றும்.

நேரு குடும்பத்தை விட்டு வேறு ஒருவர் காங்கிரசின் தலைவராக மிளிர வேண்டிய வாய்ப்பை ராஜீவ் காந்தி கெடுத்தார். வி பி சிங்கிற்கு அந்த வாய்ப்பை கொடுத்திருக்கலாம். ஆனால் போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு அந்த வாய்ப்பை கொடுக்க தகுந்த தருணமாக அமையவில்லை.

மாநில உரிமைகளை மதிக்கும் தேசிய கட்சியாக காங்கிரஸ் இருப்பதால் அது வலுப் பெற அவசியம் இருக்கிறது.

மாற்றாக ஒரு இளைஞரை நியமிக்க வேண்டும். வயதானவரை பெயருக்கு போட்டால் எந்த மாறுதலும் விளையப்போவதில்லை.

காங்கிரசில் மாற்றங்கள் வரவேற்கப் பட வேண்டியவையே.

தமிழில் தீர்ப்புகள் இனி வருமா?? மாநில நீதித்துறைகளை சிதைக்க பாஜக அரசு திட்டம்!

இந்தியன் ரெவின்யு சர்விஸ், இந்தியன் போலிஸ் சர்விஸ், போல இந்தியன் ஜுடிசியல் சர்விஸ் ஒன்றைக் கொண்டு வர பாஜக வின் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இப்போதுதான் மாவட்ட அளவில் தமிழில் தீர்ப்புகள் வருகின்றன. வழக்கு நடத்துவது சாட்சியம் விசாரிப்பது ஆவணங்கள் தாக்கல் செய்வது என்று அனைத்தும் தமிழில் நடப்பதால் பொதுமக்கள் ஓரளவு வழக்கின் தன்மைகளை புரிந்து கொண்டு வருகிறார்கள்.

உயர்நீதிமன்றத்திலும் தமிழில் எல்லாம் வரவேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தியன் ஜுடிசியல் சர்விஸ் என்ற ஒன்றை உருவாகி மாவட்ட நீதிபதிகள் முதற்கொண்டு நியமனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிடுகிறது பாஜக அரசு. முன்பே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2009, 2013ல் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு மாநிலங்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட திட்டம் அது.

இப்போது மீண்டும் அதை கொண்டுவர அவசியம் என்ன?

மாநில உரிமைகளை தட்டிப் பறிக்கும் வேலைகளில் தொடர்ந்து இறங்கி வருகிறது  பாஜக அரசு.

மாநில அரசுகள் வசம் உள்ள அதிகாரத்தை மத்திய அரசு தட்டிப் பறிக்க நினைக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி களுக்கும் மத்திய அரசுக்கும் இருக்கும் அதிகார சண்டையை  முதலில் தீர்த்துக் கொள்ளட்டும்.

மிகக் கொடிய அதிகார பறிப்பு திட்டம் இது.

சாட்சி விசாரணை, ஆவண தாக்கல், வாக்குமூல பதிவுகள் போன்ற அனைத்து வகைகளிலும் மாநில மொழி குறிப்பிடத் தக்க பங்கு வகிக்கிறது. அதை மாற்றுவீர்களா?

வெளி மாநிலத்தவர் தேர்வு எழுதி இங்கு வந்து நீதி பரிபாலனம் செய்யப் போகிறார்களா?

ரயில்வேயில் நடந்த மோசடி போல அரியானா மாநிலத்தில் இருந்து தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்றதாக சான்று வாங்கி பணியில் சேர்ந்தார்களே அதைப் போன்ற மோசடிகள் தான் நடக்கும்.

உச்சநீதி மன்றங்கள் தவிர அனைத்து நீதி மன்றங்களும் பொதுப்பட்டியலில் உள்ளதால் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாநில அரசு தன் அதிகாரத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்கக் கூடாது. 

இன்னும் என்ன செய்வார்களோ என்று தினம் தினம் அச்சத்தை அதிகரித்துக் கொண்டே போகிறது பாஜக வின் மத்திய அரசு!!!

எங்கே கொண்டு போய் விடுமோ இந்த ஆதிக்க வெறி ?!

‘தமிழர்கள் கோழைகள்’ கிரண் பேடி தாக்குதலின் பின்னனி?!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒரு பாஜக காரர்.

தமிழகத்தில் ஒரு இடம் தவிர அத்தனை இடங்களையும் திமுக கூட்டணி கட்சிகள் கைப்பற்றியதை அவரால் சீரணித்துகொள்ள முடியவில்லை போலும்.

அதனால்தான் பொங்கி இருக்கிறார். தமிழத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து அவருக்கு அக்கறை இருந்தால் அதை அவர் வேறு விதமாக காட்டியிருக்கலாம் .

பிரச்னைக்கு என்ன காரணம் என்று கருத்துக் கூறும்போது ‘மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அக்கறையில்லாத அதிகார வர்க்கம், அத்துடன் மிக அதிகமாக சுயநலம் மற்றும் கோழைத்தனமான மனோபாவம் கொண்ட பொதுமக்கள்

ஆகியோர்தான் காரணம்” என்று பதில் அளித்துள்ளார்.

இவ்வளவு மோசமாக தமிழக மக்களை விமர்சிக்க இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

பாஜக ஆதரவு இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?

அதிமுக அரசு மீது மத்திய அரசுக்கு கோபம் இருக்கலாம். அதை பேடி வெளிப்படுதுகிறாரா?

வந்த நாள் முதல் இந்த நாள் வரை கிரண்பேடி பிரச்னைக்கு உரியவராகவே இருக்கிறார்.

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களில் தலையிடுவது போன்ற மோசமான  முன் உதாரணங்களால் பேடி அடையாளம் காட்டப் படுகிறார்.

இப்போது  உச்சநீதி மன்றத்தின் பரிசீலனையில்  இருக்கிறது அவரது தலையீடு  பற்றிய பிரச்னை.

விளம்பரம் இல்லாமல் ஒரு நாள் கூட பேடியால் காலம் தள்ள முடியாது என்கிறார் புதுவை முதல்வர் நாராயணசாமி.

ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் பேசாமல் இருந்தால் போதும் என்கிற அளவுக்கு ஆகி  விட்டது.

பா  ஜ க கட்சிக்காரர்களை நியமன சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆக்கியதால் எந்த விளைவையும்  அவர்களார் ஏற்படுத்த முடியவில்லை.

இத்தகைய  அத்துமீறல் களால் தான் புதுவை மக்கள் வெறுப்புற்று பா ஜ க வுக்கு எதிராக வாக்களித்தார்கள்.    இன்னும் திருந்தாமல் தமிழ்நாட்டு மக்களை கோழைத்தனமானவர்கள் என்றுப் ஏசும் அளவுக்கு சென்றுவிட்டார்.

”  மோடி டேக் பேக் பேடி ”   என்பதுதான் இன்றைய குரல். !!

 

சாதி ஆணவக் கொலைகள் மிகப் பெரிய சமுதாய சீர்திருத்த சவால்?!

உடுமலை சங்கர்- ஓமலூர் கோகுல் ராஜ் கொலைகள் சாதி ஆணவக் கொலைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.

ஆனால் அவைகள் சமுதாயத்தில் சின்ன அதிருப்தி அலைகளை மட்டுமே உருவாக்கி விட்டு மறைந்துவிட்டன.

எந்த விழிப்புணர்வுகள் இவற்றை ஒழிக்க முடியுமா அது மலர்ந்ததா? இல்லை என்பதே பதில்.

ஆனால் கோவையில் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை விரும்பிய குற்றத்திற்காக ஒரு அண்ணன் தன் தம்பியையே வெட்டிக் கொன்றதுதான். தம்பியின் மனைவியும் அவனது கொலைவெறித் தாக்குதலில் உயிர் இழந்துவிட்டார்.

உருளைக் கிழங்கு மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்பங்கள்  தங்களை துப்புரவுத் தொழிலாளிகளை விட மேல் சாதி மக்களாக மனோபாவம் கொண்டிருந்ததுதான் பிரச்னை.

சாதிவெறி அடித்தட்டு மக்களிடம் அதிகம் இருப்பதுதான் வேடிக்கை. இந்த கொடுமையை எப்படி ஒழிப்பது? விழிப்புணர்வை எப்படி கொண்டு வருவது? சட்டம் ஒன்றே இவர்களை திருத்தும். ஆம். சொன்னால் கேட்க மாட்டார்கள். சட்டம் சொன்னால் கேட்பார்கள். சில நியாயங்கள் தடி கொண்டுதான் சொல்லப்பட வேண்டும்.

அதற்கான முயற்சிக்கு பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேசி அடித்தளம் போட்டிருக்கிறார். அரசுகள் முன் முயற்சி எடுக்க வேண்டும். அதிமுக அரசு  எடுக்குமா?

அதிமுக அரசு நடுத்தர மேல்சாதி மக்களை நம்பி இருக்கிற கட்சி.

சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் சக்தி அதற்கு ஏது?

மத்தியிலோ மத ஆதிக்க ஆட்சி.

மதம் சாதிகளின் பிறப்பிடம். எப்படி ஒழியும் சாதி வெறி?

நீதிபதிகள் போராட்டங்களுக்கு எதிராக கருத்து சொல்வது நியாயமா?!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் முன்பு அமமுக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு போட்டனர்.

அதை விசாரித்த நீதிபதி அந்த திட்டத்தால் என்ன பாதிப்பு? தமிழகத்திற்கு கொண்டு வரும் திட்டங்களை எல்லாம் பொத்தாம் பொதுவாக எதிர்க்கக் கூடாது என்றும் என்ன பாதிப்பு என்றும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமுல்படுத்த போவதில்லை என்று தமிழக அரசு அறிவித்து விட்டது. பின் ஏன் போராட்டம் என்றும் கேட்டார்.

போராட்டம் நடத்துவது முழு நேர வெளியாகி விட்டது என்றும் கருத்து தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே எல்லா வேலைகளிலும் வெளி மாநிலத்தவர் வந்துவிட்டனர். ஓட்டல வேலை, முடி வெட்டும் வேலை கட்டிட வேலை என்று எல்லா பக்கமும் அவர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மாண்புமிகு நீதிபதி அவர்களின் கருத்துக்கள் எல்லாம் சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுகிறது. அவைகள் எல்லாம் தனிப்பட்ட கருத்துக்கள். தீர்ப்பு அல்ல. அவரே விசாரணையின் போது தரப்படும் விபரங்களை வைத்து தனது கருத்துக்கு முரணாகவே கூட தீர்ப்பு சொல்ல வேண்டி வரலாம். அதற்குள் ஏன் இப்படி எல்லாம் கருத்து சொல்ல வேண்டும்?

நீதிமன்ற மாண்பு இதனால் பாதிக்கப்படலாம்.

                 ஹைட்ரோ கார்பன் திட்டமும் வெளி மாநிலத்தவர் தமிழ் நாட்டில் அனைத்து தளங்களிலும் வேலை வாய்ப்புகளை பறிப்பதும் எதிர்த்து போராட வேண்டிய பிரச்னைகள் இல்லையா?

போகிற போக்கைப் பார்த்தால் வெளிமாநிலத்தவர்க்கு ரேஷன் கார்டு கொடுத்து மேலும் அவர்களுக்கு இங்கே வாக்குரிமையும் கொடுத்து தமிழ்நாட்டின் அரசியல் தளத்தை கைப்பற்ற சூழ்ச்சி நடக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

மாண்புமிகு நீதிபதிகள் கருத்து சொல்லும்போது மிக கவனமாக மாற்றுக் கருத்துக்கு இடம் அளிக்காமல் பேசவேண்டும் என்றே பொதுமேடை பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.

பாகிஸ்தான் வரக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே தோனி நன்றாக விளையாடவில்லையா ??

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தின் 337 ரன்களை எடுக்க முயன்று 306 ரன்களில் இந்தியா சுருண்டது.

31 ரன்களை தோனி நினைத்திருந்தால் எடுத்திருக்க முடியும் என்றும் 42 ரன்கள் எடுத்து வெளியேறாமல் இருந்த தோனி வேண்டுமென்றே பாகிஸ்தான் அரைஇறுதி போட்டிக்குள் நுழைவதை தடுக்கும் எண்ணத்திலேயே ஏனோ தானோ என்று ஆடினார் என்றும் வலைதளங்களில் விமர்சனங்கள் எழுகின்றன.

இப்படியெல்லாம் எழுதுகிறவர்கள் விளையாட்டையே கொச்சைப்படுத்துகிறார்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை இந்தியாவின் தோல்வி பாகிஸ்தானுக்கு இழப்பு என்று எழுதியிருந்தது குறிப்பிடத் தக்கது.

தோனி மௌனம் காப்பது சரியே. விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொன்னால் விளையாடவே முடியாது.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்பது மாநில ஒழிப்புத் திட்டத்தின் ஒரே இலக்கு?!!

மாநிலங்களை இல்லாமல் ஆக்க முடியாது. ஆனால் செல்லாதது ஆக்கி விட முடியும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது பாஜக வின் மத்திய அரசு.

முடிந்த வரை மாநிலங்களை வெறும் பொம்மை அமைப்புகள் ஆக்குவதன் மூலம் வலுவான் மத்திய அரசை அமைத்து அங்கு மேல்சாதி ஆதிக்கத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அந்த நோக்கில்தான் பாஜக அரசின் அனைத்து திட்டங்களும் வடிவமைக்கப் படுகின்றன.

இல்லாவிட்டால் இப்போது நாடு முழுமைக்கும் ஒரே ரேஷன் கார்டு வேண்டும் என்று  யார் அழுதார்கள்? எந்த அமைப்பு கோரிக்கை வைத்தது? அல்லது எந்த தனி மனிதர்தான் கோரினார்?

எப்படிஎல்லாம் மாநில உரிமைகளை பறிப்பது என்பது ஒன்றே அவர்களது  குறிக்கோளாக இருக்கிறது.

நாடு முழுக்க சுமார் 81கோடிப்பேர் மானிய விலையில் உணவு தானிய பொருட்களைப் பெற்று பயன் அடைந்து வருகிறார்கள். இந்திய உணவுக கழகம்  மத்திய உணவுக கழகம், மற்றும் தனியார் உணவுக கழகங்களின் கிட்டங்கிகளில் சுமார் 61.2 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் கையிருப்பு வைக்கப் பட்டுள்ளன.

இதற்கென அனைத்து தகவல் களையும் தொழில்நுட்ப கட்டமைப்புக்குள் வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கூறுகிறார்கள்.

தொழில் நுட்ப தகவல்களை ஒருங்கிணைக்க ஒரே ரேஷன் கார்டு தேவையில்லையே?  மாநிலங்களிடம் இருக்கும் தகவல்களை ஒருங்கிணைத்தால் போதுமே? அல்லது மாநிலங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் கொடுத்து அவற்றை ஒருங்கிணைக்க முடியுமே? எதற்கு மாநிலங்கள் வசம் இருக்கும் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறீர்கள்?

நாங்கள் மானியம் கொடுக்கிறோம் அதனால் எல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிறீர்களா? நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு மானியத் துகையிலும் மாநிலங்களின் பங்கும் இருக்கிறது!! எங்கள் பணத்தை எங்களுக்கே திருப்பி கொடுக்கிறீர்கள். அவ்வளவுதான்!

ஆந்திரா குஜராத், அரியானா, ஜார்கண்ட், கர்நாடகம், கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா ,திரிபுரா ஆகிய பத்து மாநிலங்களில் போது விநியாக திட்டங்களின் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் வசதிகள் உள்ளதாம்.

எனவே இன்னும் ஓராண்டுக்குள் அதாவது ஜூன் 30, 2020 க்குள் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமுல்படுத்த மாநிலங்களுக்கு ‘கெடு’ விதித்திருப்பதாக வந்திருக்கும் செய்திதான் அதிர்ச்சி அளிக்கிறது.

நமது உரிமைப் பட்டியலில் உள்ள அதிகாரத்தை நம்மிடீமிருந்து பறிக்க கெடுவிதிக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.?

மாநில அரசு நினைத்தால் இந்த திட்டத்தை நிறைவேற்ற மறுக்க முடியும்?

ஆனால் இந்த ஆமாம்சாமி அரசு எதிர்க்குமா? அல்லது தலைவணங்கி ஏற்றுக் கொள்ளுமா?

மாநில அரசின் கட்டுப்பாட்டில்  இருக்கும்போதே பொது மக்கள் அட்டையில் மாற்றங்கள் செய்யவும் புது அட்டை பெறவும் அல்லாடுகிறரர்கள். அகில இந்திய கட்டுப்பாட்டுக்குள் சென்றால்?

பிற மாநில மக்களுக்கு உதவுமாம்?  ஏன் அவர்கள் இங்கே பதிவு செய்து  கொண்டு வாங்க விதிமுறைகளை உருவாக்குங்கள். அல்லது அந்த  கார்டுகளுக்கு இங்கே பொருட்கள்  பெற ஒரு வழிமுறைகளை வகுங்கள்.

குடும்ப அட்டையில் இந்தியை இடம்பெற செய்ய இது ஒரு வழியாக கூட பாஜக அரசு திட்டமிடலாம். 

எந்த நியாயமும் இந்த திட்டத்தில் இல்லை.

எதுவாக இருந்தாலும் அமுலில்  இருக்கும் மாநில திட்டத்தில் சேர்த்துக் கொள்வது மட்டுமே ஒரே  தீர்வு!!

ரஜினியின் தர்பார் கட்சியின் கொ ப செ ஆகிறாரா கராத்தே தியாகராஜன் ??!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார் கராத்தே தியாகராஜன். அவர் தென் சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர். நடவடிக்கை எடுத்தது காங்கிரஸ் அகில இந்திய பொறுப்பாளர் கே சி வேணுகோபால். எனவே ராகுல் காந்திக்கு தெரியாமல் நடவடிக்கை எடுத்திருக்க முடியாது.

கொஞ்ச காலமாகவே அதிகமாக பேசி வருகிறார் கராத்தே. காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்கbவேண்டும் அதிக இடங்களை பெற வேண்டும் என்றெல்லாம் பேசி பதிலடியாக் கேஎன் நேரு இன்னும் எத்தனை காலத்துக்கு காங்கிரசை தூக்கி சுமப்பது என்று கேட்க வைத்தார்.

உண்ணா விரத போராட்டத்தில் திமுக தலைமை மேலிட பொறுப்பாளர்களை அனுப்பாமல் சட்ட துறை செயலாளரை அனுப்பியதை விமர்சித்து பேசி பிரச்னையை கிளப்பினார்.

தூத்துக்குடி போராட்டத்தின் போது ரஜினிகாந்த் போராட்டத்தை விமர்சித்து பேசியபோது அவருக்கு சப்போர்ட் செய்து பேசினார். அவரை சந்தித்து அடிக்கடி ஆலோசனை நடத்தினார்.

எனவே தொடர்ந்து பிரச்னை ஏற்படுத்தி வந்ததால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானார். எடுத்த பிறகும் உள்கட்சி பிரச்னைகளை தொடர்ந்து பொதுவெளியில் பேசிவருகிறார்.

எல்லாவற்றுக்கும் மேல் அவரது தலைவர் ஆன ப சிதம்பரத்தை சந்தித்து பேசிய பிறகும் உள்கட்சி பிரச்னைகளை பேசி வருகிறார்.

ப சிதம்பரம் தனது ட்விட்டரில் தான் தியாகராஜன் பேசியதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் மாநில தலைவர் அழகிரியை சந்தித்து வருத்தம் தெரிவிக்க அறிவுறித்தியதாகவும் சொல்லிய பிறகும் வருத்தம் தெரிவிக்காமல் பேட்டி கொடுக்கிறார்.

ரஜினிகாந்த் 200% கட்சி ஆரம்பிப்பது உறுதி எனவும் போட்டி ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும்தான் இருக்கும் எனவும் சொல்லும் அளவு தியாகராஜன் சென்று விட்டார்.

                       எனவே ரஜினி தர்பார் படத்தை முடித்து விட்டு கட்சி ஆரம்பிக்கும்போது அதில் கொள்கை பரப்பு செயலாளர் ஆக தியாகராஜன் முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது. 

அங்காவது உறுதியாக நிற்கட்டும். தியாகராஜன், மணியன், போன்றோர் ரஜினி எப்போது கட்சி  ஆரம்பிப்பார் என்று இலவு காத்த கிளியாக காத்து இருக்கின்றார்கள்.

பாஜக வலையில் விழுந்த ரஜினி தனியாக நிற்பது போல பாவனை செய்து கூட்டத்தை கூட்டி காவிக்கட்சி தீட்டும் திட்டத்திற்கு துணை போவார் என்பதும் அதற்கு இன்றைய ஆளும் அதிமுகவும் துணை போகும் என்பதும்தான் எல்லாராலும் எதிர்பார்க்கப்படும் எதிர்கால அரசியல்.

அதில் பங்கேற்க தன்னை தயார் செய்துகொள்ளும் தியாகராஜன் காங்கிரஸ் தலைவர் அழகிரியை குற்றம் சாட்டி அவரை ப சிதம்பரத்திற்கு எதிரானவர் போல சித்திரிக்க முயல்வது அவர் சமாதானமாக போவதற்கு அறிகுறியாக தெரியவில்லை. காரைக்குடி தொகுதிக்கு கார்த்தி சிதம்பரத்திற்கு பதிலாக நாசே ராமச்சந்திரனை அழகிரி  பரிந்துரை செய்தார் என்று அவரை சிதம்பரத்திற்கு எதிரானவர் ஆக சித்தரிக்கிறார்.

இன்றோ நாளையோ தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து அழகிரியை  தியாகராஜன் சந்திக்காமல போனால் ரஜினியின் தர்பார் கட்சியில் தியாகராஜன் கொ ப செ தான் என்பது உறுதியாகி விடும்.

பாராளுமன்றத்தில் பொளந்து கட்டிய திருமாவளவன் ?!

தமிழ்நாடு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தமிழில் பிரமாணம் செய்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.

திருமாவளவன் தனது முதல்  பேச்சை தமிழில் பேசி பாராட்டுதல்களை பெற்றார்.    பாராட்டு தமிழில் பேசியதற்காக மட்டுமல்ல. காவிரிப் பிரச்னை, தண்ணீர் பற்றாக்குறை, இலங்கையை நட்பு நாடு என்று பாராட்டுவது, இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு குற்றங்கள் போன்று தமிழர்களின் மனத்தில் நிறைந்திருந்த குமுறல்களை வார்த்தைகளால் கொட்டினார்.

சபாநாயகர் இது ரொம்ப சென்சிடிவ் மேட்டர் என்று எச்சரித்த போதும் இடைவிடாமல் தனது கருத்தை  பதிவு செய்தார்.

ஒரு கட்டத்தில் தமிழர்களின் உணர்வுகளை நீங்கள் புறக்கணித்தால் நாங்கள் இந்தியர்கள் அல்ல என்று சொல்லும் நிலைக்கு ஆளாக்கி விடாதீர்கள் என்று  பேசியபோது பாஜக உறுப்பினர்கள் பெருத்த ஆட்சேபனைகளை எழுப்பினார்கள்.

இதனால்தான் தான் சிதம்பரம் தொகுதி தேர்தல் முடிவுகள் தாமதப்படுத்தப் பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் தமிழ் ஊடகங்கள் திருமாவின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்காதது ஏன் என்ற கேள்வியும்  எழுகிறது.

தொடர்ந்து திருமா தமிழிலேயே பாராளுமன்றத்தில் பேசவேண்டும்.

அவர் மட்டுமல்ல அனைத்து தமிழ் உறுப்பினர்களும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக கலந்துபேச வேண்டும் அல்லது தமிழில் மட்டம் பேச வேண்டும். மொழிபெயர்ப்பு வசதி இருக்கும்போது எல்லாரும் அவரவர் மொழியில் கேட்டுக் கொள்ளுவார்கள்.

மொழிபெயர்ப்பு வசதி இருப்பதால் தமிழில் பேசுவதால் எந்த குறைபாடும் வரப்போவதில்லை.

திருமா தமிழில் பேசிய அளவு ஆங்கிலத்தில் உணர்ச்சி பூர்ப்வமாக பேசியிருக்க முடியாது.

பிரதமர் மோடி டி20 மாநாட்டில் இந்தியில் பேசுகிறார். பிறநாட்டு தலைவர்களுடன் இந்தியில் பேசுகிறார். அந்த உரைகள் மொழி பெயர்த்து தரப் படுவதால் எந்த தகவல் பரிமாற்ற பிரச்னையும் ஏற்படுவது இல்லை.

அதே போல் எல்லா மாநில உறுப்பினர்களும் அவரவர் தாய் மொழியில் பேசினால் எந்த தவறும் இல்லை.

தமிழ்நாடு வழிகாட்டி எல்லாரும் அவரவர் தாய்மொழியில் பேசினால் நல்லதுதானே?

திருமாவளவன் தமிழர்களின் பெருமிதம்!!

அதிமுகவை இயக்குவது பாஜக; திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் ???!!

ஒருவழியாக அமமுக வில் இருந்து விரட்டப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் அறிவாலயத்தில் முக ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

திரும்பவும் அதிமுகவுக்கு போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கும் ஒபிஎஸ் கும் இருக்கும் பகை காரணமாக வேறு எங்கும் போக முடியாத நிலையில் திமுகவில் ஐக்கியமானாலும் அதற்கு ஒரு தத்துவ விளக்கம் கொடுத்துள்ளார் அவர்.

அதாவது அதிமுகவை  இயக்குவது பாஜக என்றும் எனவே தன்மானம் இழந்து  அங்கே செல்ல மனம் இடம் தரவில்லை என்றும் கூறுகிறார்.

கட்சி மாறும் எவரும் ஏதாவது  சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனால் இவர் சொல்வதில் உண்மை  இருக்கிறதா என்றால் ஒரு பாதி உண்மைதான். அதாவது அதிமுக வை இயக்குவது பாஜக தான். ஆனால் அதற்காகத்தான் நான் அங்கே செல்ல வில்லை என்று  தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது ஆய்வுக்குரியது.

ஆட்சியில் இருப்பதால்தான் இன்று அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது.   ஆட்சியில்  இல்லாமல் அதிமுக என்ற கட்சி வலுவான தலைமை  இல்லாமல் இயங்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது.

ஒபிஎஸ் – இபிஎஸ் என்ற இரட்டை தலைமை அதிமுகவை ஆட்சியில் இல்லாமல் இயக்க முடியுமா? அந்த ஆட்சியை பாஜக உதவியில்லாமல் தக்க வைத்திருக்க  முடியுமா? 

அந்தக் காரணத்தினால்தால் மக்கள் அவர்களை நிராகரித்தார்கள்.

ஐந்து தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்தாலும் 13 தொகுதிகளில் இருந்ததை பறி கொடுத்து விட்டார்களே?

எப்படியோ அடிமைகள் கூடாரம் காலியானால் சரி!!!