Home Blog Page 33

பார்ப்பன எதிர்ப்பாளர்கள் சாரங்கியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்??!!

ஓடிசாவின் பிரதாப் சந்திர சாரங்கி முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்டார். பார்ப்பனர் என்பது கூடுதல் செய்தி.

64 வயதில் மத்திய அமைச்சர் ஆனது மட்டும் இவர் சாதனை அல்ல. திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்க்கையை சமுதாய முன்னேற்றத்திற்கு தன்னை  அர்ப்பணித்துக் கொண்டவர். ஆங்கிலம், இந்தி சமஸ்கிருதம், ஓடியா ஆகிய நான்கு மொழிகளில் பேசுபவர். சொத்து சேர்க்காதவர். குடிசையில் வசிப்பவர். ஜோல்னா பையிலேயே தன் தேவைகளை அடக்கி கொள்கிறவர். சைக்கிளையே தன் வாகனமாக வைத்திருப்பவர். சுயேச்சையாகவே நீலகிரி தொகுதியில் வெற்றி  பெற்றவர். இதுபோல் பாராட்டத் தக்க குண நலன்களை கொண்டிருப்பதால் எல்லாராலும் பாராட்டப்படுகிறவர்.

ஆனால் இவர் எந்த சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறார் என்று பார்த்தால் இந்து  சனாதன தர்மத்தை பரப்புவதை தன் வாழ்நாள் கடைமையாக வைத்திருப்பவர்.

ஓடிசாவில் வசித்தாலும் தன் தாய் மொழியாக சமஸ்கிரிதத்தையே பாவிப்பவர்.    ஓடியா தெரிந்திருந்தும் பாராளுமன்ற உறுப்பினராக சமஸ்கிருதத்தில் பதவி  ஏற்றுக் கொண்டார். எங்கு வாழ்ந்தாலும் பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்தை மட்டுமே தங்கள் தாய் மொழியாக கருதுவார்கள். தனது முதல் பாராளுமன்ற உரையையும் இந்தியிலேயே பேசினாலும் ஆங்காங்கு சமஸ்கிருதம், ஓடியா, வங்காளி, ஆங்கிலம் என்று தெளித்து பேசியிருக்கிறார்.

கிரஹாம் ஸ்டைன் என்ற கிறிஸ்தவ பாதிரி மனைவி குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இவர் பெயரும் அடிபட்டாலும் வேறு சிலர்தான் தண்டிக்கப்பட்டார்கள். மதமாற்ற எதிர்ப்பு இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்.

சாரங்கி பெருமைக்குரிய ஸ்வயம் சேவகர் என்று அதன் சங்க சாலக் பெருமிதப்பட்டுக் கொள்வதில் வியப்பு  ஒன்றும் இல்லை. ஏன் என்றால் ஆர்எஸ்எஸ் இயக்கம் பார்ப்பனர்களுக்கு சலுகை காட்டுவதில் என்ன வியப்பு? அது அவர்கள் இயக்கம்.

அதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் சுய தேவைகளை புறக்கணித்து துறந்து பார்ப்பனீயத்தை கட்டிக் காப்பதில் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறவர்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருக்கும் சேவகர்கள் தன் நலம் கருதாதாவ்ர்கள் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அவர்கள் தங்கள் இனத்துக்காக பாடுபடுகிறார்கள். அதுதான் வேறுபாடு. மற்றவர்களை தங்கள் இனத்துக்காக இனத்தின் மேலாதிக்கத்துக்காக உழைக்கசெய்பவர்கள். அத்துடன் அதுதான் தங்கள் கடமை என்று நம்பச்செய்பவர்கள். 

பிராமணீயம் தழைப்பதன் ரகசியம் அவர்களிலே ஒரு பகுதியினர் தங்கள் இனப் பாதுகாப்பிற்காக தங்களை இழந்து உழைப்பதனால்தான். 

எந்த இனத்தில் இப்படி தங்களை இழந்து உழைப்பவர்கள் இருக்கிறார்கள்.

யூத இனமே கூட இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து கொள்ளவில்லை. ஆனாலும் உலகில் யூதர்களும் பார்ப்பனர்களும் தான் தங்கள் இன பாதுகாப்பை கடமை என கருதி உழைப்பவர்கள்.

ஏன் இவரை பார்ப்பனர் என்று அடையாளபடுத்துகிறீர்கள் என்றால் அவர் அதன் பிரதிநிதியாக செயல்படுகிறாரே ?

சுயமரியாதை, சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமத்துவம், சமநீதி, மத சுதந்திரம், மத சார்பின்மை போன்ற எதிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை.  எப்படி பாராட்டுவது? 

அதே நேரத்தில் மற்றவர்கள் சாரங்கியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது என்பதையும் பொதுமேடை பதிவு செய்கிறது.

ராஜ்ய சபா தேர்தலில் பாஜக மோசடிக்கு துணை போகும் தேர்தல் கமிஷன் ??!!

குஜராத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அமித்ஷாவும் ஸ்மிருதி இரானியும்.

இருவரும் இப்போது மக்களவைக்கு ஒரே சமயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள். இருவரது இடங்களும் ஒரே நேரத்தில் ராஜ்ய சபாவில் காலியாகின்றன.

பாஜகவுக்கு 100 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரசுக்கு 71 சட்டமன்ற உறுப்பினர்களும் இருப்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் பாஜக சார்பில் ஒருவரும் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

இங்கேதான் பாஜகவின் சதி அரங்கேறுகிறது. இரண்டு உறுப்பினர் காலியாக உள்ள இடங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தினால் இரண்டு இடங்களிலும் பாஜக  வென்று இரண்டு பேர் ராஜ்ய சபா செல்வார்கள். காங்கிரசுக்கு வாய்ப்பு பறி போகும்.

பாஜக திட்டமிடலாம். அதற்கு தேர்தல் கமிஷன் துணை போகலாமா? இதுதான் கேள்வி!

தேர்தல் கமிஷன் பாஜக வின் சதிக்கு துணை போகிற வகையில் ஜூன் 15 ல் இரண்டு காலியிடங்களையும் தனியான இடங்கள் போல ஒரு அறிவிப்பை வெளியிட்டது.   அதன்படி தேர்தலை தனித்தனியாக நடத்த முடியும்.

இந்த அறிவிப்பை எதிர்த்து காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் பரேஷ்பாய் தனனி என்பவர் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்.

அங்கேயும் தனது நிலைப்பாடு சரியே என்று தேர்தல் கமிஷன் வாதிடுகிறது. உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்று பார்க்கலாம். விடுமுறை காலம் முடிந்து இது பற்றி இறுதி உத்தரவு கிடைக்கலாம்.

அதிகாரம் கிடைத்தால் எப்படியெல்லாம் பாஜக விதிமுறைகளை சின்னா பின்னப்படுத்தும் என்பதற்கு இது ஒரு சிறிய சான்று.

கமிஷனர் உயிருக்கு ஆபத்து என தேர்தல் கமிஷன் கொடுத்த பதில் ?!

மோடியும் அமித் ஷாவும் தேர்தல் நேரத்தில் பேசிய பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் முன்பு மனுக்கள் இருந்தன.

அவற்றில் தலைமை கமிஷனர் சுனில் அரோராவும் சுஷில் சந்திராவும் நடவடிக்கை தேவை இல்லை என்றும் அசோக் லவசா மட்டும் மாறுபட்டும் உத்தரவிட்டு இருந்தனர்.

அதில் லவசா வின் குறிப்பு அல்லது கருத்து என்ன என்று தகவல் அறியும் உரிமை  சட்டத்தில் கேட்டதற்கு அதை தரக்கூடாத தகவல் என்றும் அதற்கான காரணம் கொடுத்தால் ஒருவரது உயிருக்கு ஆபத்து அல்லது நபர் பாதுகாப்பின்மை ஏற்படலாம் என்றும் பதில் கொடுத்துள்ளது தேர்தல் கமிஷன்.

அப்படி என்ன லவசா குறிப்பு எழுதினார் என்பதை உச்ச நீதிமன்றம் சென்றுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் தேர்தல் கமிஷனர் உயிருக்கே ஆபத்து என்னும் அளவில்தான் அங்கே நிலைமை இருக்கிறது என்றால் தேர்தல் ஆணையம் எப்படி நடுநிலையாக இயங்கும் என்ற சந்தேகம் எழுகிறது அல்லவா?

லவசாவின் குறிப்பு ஆவணமாக இருக்கும் எனவும் ஆனால் ஆணையில் ஒரு பகுதியாக இருக்காது என்றும் தேர்தல் கமிஷன் வினோதமான உத்தரவை பிறப்பித்தது நினைவில் இருக்கலாம். 

எல்லாம் மேலே உள்ளவர்களுக்குத்தான் வெளிச்சம் !

மோடி அரசின் குறுக்கு வழி வேலை நியமனங்கள் ?!

தங்களுக்கு வேண்டியவர்களை குறுக்கு வழியில் பணி நியமனம் செய்ய மோடி அரசு கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் ‘லேட்டரல் என்ட்ரி’ முறை நியமனங்கள்.

அரசு உயர் பதவிகளில் மேல் சாதிக்காரர்கள் ஆதிக்கம் எப்போதும் போல் கோடி கட்டிப் பறக்கும்.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள் என்ற காரணம் காட்டி நேரடியாக அரசு உயர் பதவிகளில் நியமிக்கும் வேலையை கடந்த ஆண்டே மோடி அரசு துவங்கியது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் செய்ய வேண்டிய நியமனங்களை மடை மாற்றி நேரடியாக நியமிக்க மேற்கொள்ளும் தவறான வழி இது. நீதிமன்ற பரிசோதனையில் இது நிற்குமா என்பது இனிதான் தெரியும்.

ஏன் அப்படி ஒரு முறையை அமுல்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு என்ன பதில்?

இணைசெயலர்கள் மட்டுமின்றி துணை செயலர்களையும் இதே முறையில் நியமனம் செய்ய திட்டம் தீட்டி வருகின்றனர். அப்படி செய்தால் 60% வேலைவாய்ப்புகள் தனியார் துறையில் வேலை பார்க்கும் திறமை மிக்கவர்கள் என்று இவர்கள் அடையாளம் காணும் நபர்களுக்கே கிடைக்கும். 

காலம் காலமாக வெளிப்படைத் தன்மை இல்லாமல் மற்றவர் வாய்ப்புகளை பிடுங்கி வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் இப்போது அதிகாரம் வந்ததும் அதே வாய்ப்பு பறிக்கும் திட்டத்தை அமுல்படுத்த துணிந்து விட்டார்கள்.

விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க இரண்டு வழிகள் ?!

மகாராஷ்ட்ராவில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 12000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மறுவாழ்வுத் துறை அமைச்சர் தேஷ்முக் எழுத்து மூலமான் பதிலில் தெரிவித்தார்.

32 ஆண்டுகளுக்கு முன் 1986 ல் சாஹேப்ராவ் கார்பே தன் குடும்பத்துடன் தொடங்கி வைத்த தற்கொலை இன்னும் முடியவில்லை. ‘விவசாயம் செய்து வாழமுடியாது ‘ என்பது அவர் எழுதி வைத்த தற்கொலை குறிப்பு.

2011ல் மட்டும் நாட்டில் நடந்த தற்கொலைகள் 1,35,585. அதில் விவசாயிகள் மட்டும் 14207 பேர். இதே விகிதம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கிறது.

2017-ல் மகாராஷ்டிரா அரசு 34000 கோடி விவசாய கடன் தள்ளுபடி அறிவித்தது.    அதேபோல் பல அரசுகளும் கடன் தள்ளுபடி செய்திருக்கின்றன.

கடன் தள்ளுபடி விவசாயிகள் தற்கொலை பிரச்னையை தீர்க்குமா? 

இந்த ஆண்டு கூட மகாராஷ்டிரா அரசு 19000 கோடி கடன் தள்ளுபடி அறிவித்தும் கூட ஜனவரி முதல் மார்ச் வரை 610 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை செய்தது விவசாய விளைபொருளுக்கு குறைந்த பட்ச கொள்முதல் விலை (Minimum support price). அதுவே அயோக்கியத்தனம் அல்லவா?

குறைந்துபட்ச லாபகர விலை மட்டுமாவது கொடுக்கலாம் அல்லவா?

கடன் தள்ளுபடியை வங்கிகள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கும் கதைகளும் இருக்கின்றன.

விளைபொருட்களை குளிர் சாதன கிட்டங்கிகளில் வைக்கும் வசதி இல்லாமை, கொள்முதல் பிரச்னைகள், லாபகர விலை கிடைக்காமல் நட்டத்துக்கு விற்கும்  அவலம், இயற்கை காரணங்களால் பயிர்கள் விளைச்சல் இல்லாமல் போவது போன்ற பல காரணங்கள் விவசாயிகளை வாட்டி வருகிறது.

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து அளவில் பயிர் காப்பீடு திட்டம் அமுல்படுத்துவது மிகவும் முக்கியம். அதை அமுல்படுத்துவதில் முறைகேடுகள் நடவாது பார்த்துகொள்வதில் கவனம் தேவை.

அதுவும் லாபகரமான விலை நிர்ணயம் மிகவும் முக்கியம். உயர்த்தினால் இப்போதைய விலை இரட்டிப்பாகும். அதாவது பொதுமக்கள் அரிசி கோதுமை  போன்ற அனைத்து விளைபொருட்களும் விலை ஏறுவதை ஏற்றுக்கொள்ள      வேண்டும். அரசு வேண்டுமானால் முடிந்த மட்டும் மானியம் தரட்டுமே?!

இந்த இரண்டும் உறுதி செய்யப்பட்டால் விவசாயிகள் தற்கொலைகள் தடுக்கப்படும் .

இல்லை என்றால் விவசாயத்தை விட்டு  ஓடும நிலைதான் தொடரும்.

தங்கதமிழ்ச்செல்வன் வெடியா புஸ்வாணமா??!!

தினகரனின் அமமுக நடந்து முடிந்த தேர்தல்களில் 5.5% வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்தாலும் அதன் தோல்வி பலத்த அடியைக் கொடுத்துக்  கொண்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி தொடங்கி வைத்த விலகல்கள் நெல்லை பாப்புலர் முத்தையா, மைக்கேல் ராயப்பன், வடசென்னை கலைராஜன், இன்பத்தமிழன் என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது.

சில நாட்களுக்கு முன்பு தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அமைச்சர்கள் பேச ஆரம்பித்தனர். தினகரன் வெற்றி பெரும் தலைவர் அல்ல என்று கூட தமிழ்ச்செல்வன் பேசினார். தேனியில் டெபாசிட்டை பறிகொடுத்த நிலையில் அவர் பேச்சில் கோபம்தான் வெளிப்பட்டதே தவிர முதிர்ச்சி இல்லை.

இந்நிலையில் தினகரன் கட்சி நிர்வாகி ஒருவரிடம் தங்கதமிழ்ச்செல்வன் பேசியதாக் வெளியான ஆடியோ பரபரப்பை உண்டு பண்ணியது.

அதில் கொச்சையான வார்த்தைகளால் தினகரனை விமர்சித்திருந்தார் தமிழ்ச்செல்வன். அவரைக்  கேட்காமல் தேனியில் கூட்டம் போட்டது எப்படி என்பதே அவர் கேள்வியாக  இருந்தது.

இன்று ஆலோசனை கூட்டம் போட்டு தங்கதமிழ்ச்செல்வனை கொள்கை பரப்பு  செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறார் தினகரன். அவர் இடத்தில் மாவட்ட செயலாளரையும் நியமிக்க போவதாக கூறியிருக்கிறார்.

தங்கதமிழ்ச்செல்வனுக்கு பத்திரிகையாளர்களிடம் பேசுவது எப்படி என்பது தெரியவில்லை. மனம்போன போக்கில் பேசினால் எப்படி மரியாதை வரும். அவர் நல்லவர் என்று அவரே சொல்லிக் கொள்வதால் என்ன பயன்?

நல்லவர்களுக்கு அரசியலில் மரியாதை இருக்காது என்பது அவருக்கு தெரியாதா?

ஒபிஎஸ்-ஐ எதிர்த்து இனி தேனி மாவட்டத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒட்டிக்கொண்டுதான் அரசியல் செய்ய முடியும். ஒபிஎஸ் ஒப்புக் கொள்வாரா?

இவர்கள் சண்டையில் எந்த கொள்கை பிரச்னையும் இல்லை. எல்லாம் தனிப்பட்ட விவகாரங்கள். எனவே பொதுமக்களுக்கு எந்த வேறுபாடும் இல்லை. இங்கே இருந்தால் என்ன அங்கே இருந்தால் என்ன ?

ஒருநாள் தலைப்பு செய்தியோடு முடிந்து விடும் இந்த தனிப்பட்ட சண்டைகள்.

சில தினங்களில் தெரிந்து விடும் தங்கதமிழ்ச்செல்வன் வெளியேற்றம் வெடியா புஸ்வாணமா என்று?

யாகத்தினால் மழை வந்ததா.. அறிவிப்பு பார்த்து யாகம் நடந்ததா??!!

ஜூன் 23ம் தேதி மழை பெய்யலாம் என வானிலை அறிவிப்பு மையம் அறிவித்தது.

அதிமுக மந்திரிகள் யாகம் நடத்த அழைப்பு விடுத்தது ஜூன் 20ல். வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு யாகம் நடத்தினார்கள்.

ஜூன் 21, 22 தேதிகளில் சிறு தூறல்கள் சில இடங்களில் விழுந்தவுடன் பாஜக மாநில தலைவர் தமிழிசை ‘ஆகா யாகத்தினால் வந்தது மழை’ என்று அறிக்கை விடுகிறார்.    இவர்தான் சொல்லியிருப்பார்போல யாகம் நடத்த சொல்லி. இவருக்கு யார் சொன்னார்கள் என்பது இவருக்கு மட்டுமே வெளிச்சம்.

இந்திய வானிலை கழகம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 38% குறைந்து பெய்திருக்கிறது என்று அறிவிக்கிறார்கள். அதாவது சராசரியாக பெய்யும் 114.2 mm  மழைக்கு பதில் இந்த ஆண்டு கிடைத்தது 70.9 mm மட்டும்தான். இந்த குறைபாட்டுக்கு இயற்கையைத்தான் குறை சொல்ல வேண்டும்.

யாகம் வளர்ப்பவர்கள் பருவ மழை வருவதற்கு முன்கூட்டியே செய்திருந்தால் அவர்களது நம்பிக்கையை பாராட்டி இருக்கலாம். எப்போது வானிலை கழகம் மழை  வரும் என்று அறிவிக்கும் என்று காத்திருந்து யாகம் செய்தது போல் இருக்கிறது இவர்கள் செய்திருக்கும் யாக காரியம்.

திமுக  தலைவர் ஸ்டாலின் சொன்னது போல இவர்கள் யாகம் செய்தது மழை வருவதற்காக அல்ல. தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள இந்த யாகத்தை செய்திருக்கிறார்கள் .

யாகம் பதவியை காப்பாற்றுகிறதோ இல்லையோ மழையை கொண்டு வந்தால் நல்லதுதான்.

அதிமுக இனி தனது பிரசுரங்களில் பெரியார், அண்ணாவை கண்ணில் காட்ட மாட்டார்கள். ஷ்யாமா பிரசாத் முகர்ஜியையும் நரேந்திர மோடியையும் போட்டுக் கொள்வார்களா??!!

மழை வந்ததோ இல்லையோ அதிமுக தலைவர்களுக்கு பஞ்ச கச்சம் கட்டியாச்சா??!!பூணூல் போட்டாச்சா??!!

எவருடைய நம்பிக்கையையும் காயப்படுத்துவது நமது நோக்கமல்ல. நம்பிக்கைகளும் அறிவுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்??!!

யாகம் நடத்தியும் மழை வரவில்லையே??

யாகம் நடத்தியவர்களுக்குத்தான் யோகம்?!!

கோவில் குருக்கள் 100 கிலோ தங்க மோசடியில் கைது??!!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சோமாஸ்கந்தர் சிலை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள் .

அதன்படி வடிவமைக்கபட்ட சிலையில் அப்போது கோவிலின் குருக்களாக இருந்த ராஜப்பா குருக்கள் என்பவர் சுமார் 100 கிலோ அளவுக்கு தங்கத்தை மோசடி  செய்திருப்பதாக அவர் மீது இந்து அறநிலையத்துறை காஞ்சிபுரம் காவல் துறையில் புகார் அளித்தனர்.

விசாரணை தொடங்கியவுடன் தெரிந்தது அவர் கனடாவுக்கு தப்பி சென்று விட்டது.    அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தேடி வந்த நிலையில் அவர் கனடாவில் இருந்து நேற்று காலை மும்பை விமான நிலையத்தில் இறங்கியவுடன் காவல்துறை கைது செய்து சென்னை சிலை கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைதவுடன் அவர் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் வயது  86.

அவர் தனது உருவத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இயல்பான உடையுடன் தான் இருக்கிறார். கொஞ்சமும் குற்ற உணர்வும் இருப்பதாக தெரியவில்லை.

விசாரணை முடிந்தபின்தான் முழு உண்மைகளும் வெளியே வரும் என்றாலும் கோவில் குருக்கள் வெளிநாடு தப்பி சென்றது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி  இருக்கிறது.

இறைப்பணி செய்பவர்கள் இறையச்சம் இல்லாதவர்களாக இருப்பது சமுதாயக் கேடு.

இதே காஞ்சிபுரம் கோவிலில் தேவநாதன் என்பவர் செய்த காம லீலைகள் ஏதோ ஒரு தனி நபரின் பலவீனம் என்று பக்தர்கள் அமைதிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கையில் அடுத்தடுத்து இறைப்பணி செய்பவர்கள் மீது வரும் குற்ற செய்திகள் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருப்பார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்தி விட்டது என்பது உண்மைதானே.

சிலை செய்யும் ஸ்தபதி மீது இதே போல் புகார்கள் வருகின்றன. அவருக்கும் இறையச்சமே இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

கோவில் கொடியவர்களின் கூடாரமாக மாறக்கூடாது என்று கலைஞர் வசனம் எழுதினார். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. 

அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்று ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா??!!

பொய் வழக்கு போடும் போலீசார் மீது என்ன வழக்கு போடுவது?!

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதாகவும் சில இடங்களில் கைது செய்வதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன.

வயல் வெளிகளில் நின்று கொண்டு பதாகைகளை கைகளில் வைத்துக் கொண்டு நிற்பதால் யார் பாதிக்கப் பட்டார்கள் என்று வழக்கு?

அனுமதி பெறாமல் போராடுவது குற்றம் என்றால் அனுமதி மறுத்தது யார் குற்றம்? 

மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவது ஆதிக்க நாடுகளில் வழக்கம் தான்.  சொந்த நாட்டில்? சொந்த நாட்டிலேயே அந்நியமாகிப் போனோமா?

அரசின் உரிமை மக்களின் கடமை என்பதெல்லாம் தாண்டி எந்த வகையில் போராடும் மக்கள் குடம் இழைக்கிறார்கள்? இதுதான் கேள்வி?

வழக்குப் போட்டு முடக்குவதுதான் அரசின் திட்டம் என்றால் அதற்கு காவல் துறை ஒத்துழைக்க வேண்டுமா?

முழுப் புரட்சி நடத்திய ஜெயப்பிரகாஷ் நாராயண் காவல் துறை சட்டத்திற்கு புறம்பான கட்டளைகளை நிறைவேற்ற மறுக்க வேண்டும் என்றார். 

அவசரநிலை பிரகடன காலத்தில் இந்திரா காந்திக்கு எதிராக மக்கள் கோபம் நீறு பூத்த நெருப்பாக இருந்து தேர்தலில் வெளிப்பட்டது.

காவல்துறை மக்களின் காவலனே தவிர சட்டத்தின் காவலனே தவிர ஆட்சியாளர்களின் காவலர்கள் அல்ல.

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாதம்தோறும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி இந்த பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளிவைக்க வைக்க வேண்டும்.

பொய் வழக்கு போடுவது நின்றால்தான் ஜனநாயகம் பிழைக்கும்.

உயர் நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் தேக்கம்; யார் பொறுப்பு??!!

தற்போது 24 உயர் நீதிமன்றங்களிலும் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிரதமருக்கு கடிதமெழுதியிருக்கிறார்.

35% அதாவது 377 இடங்கள் காலியாக இருப்பதால் இந்த வழக்குகள் அத்தனையும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்பட இன்னும் பத்தாண்டுகளுக்கு மேலாகும் என தெரிகிறது.

காலியாகும் இடங்களுக்கு உடனடியாக நீதிபதிகளை நியமிப்பதில் என்ன சிக்கல்? யார் இந்த தாமதத்திற்கு காரணம்? உச்சநீதிமன்றமும் மத்திய அரசும்தான் காரணம்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 என்றாவது மாற்றுங்கள் என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்திலேயே 58669 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனவாம்.      வெறும் 31 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவற்றை பைசல் செய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியே ஆகும் என்று இதே நீதி மன்றங்கள் தான் விளக்கி இருக்கிறார்கள். ஆக தெரிந்தே மக்களுக்கு நீதியை மறுக்கிறார்களா?

உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் தங்களுக்குள் அதிகாரப் போட்டி நடத்திக் கொண்டிருந்தால் பாதிக்கப்படப் போவது பொதுமக்கள்தான்.

நீதித்துறை தன்னை யும் சீர்திருத்திக் கொண்டு மத்திய அரசையும் சீர் திருத்த வேண்டும். நடக்கிற காரியமா இது? அரசியல் செய்யும் மத்திய அரசு இதிலும் தன் செல்வாக்கை நிலைநாட்ட முயன்றால் சீர்குலைந்து விடும் ஜனநாயகம். ?!!

எச்சரிக்கை! எச்சரிக்கை !!