Home Blog Page 34

மருத்துவர் ராமதாசின் நிதானத்தை இழந்த அநாகரிக மிரட்டல் ??!!

இத்தனை ஆண்டுகள் கட்டிக் காத்து வந்த நற்பெயரை இவ்வளவு விரைவில் மருத்துவர் ராமதாஸ் இழந்திருக்க வேண்டாம் .

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் யாரோ ஒருவர் மரம் வெட்டுவதைப் பற்றி கேட்டிருக்கிறார். தன்னை மரம் வெட்டி என்று பத்திரிகையாளர்கள் எழுதுவதை அவர் அறியாதவர் அல்ல.

இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது போக்குவரத்தை தடுக்க மரங்களை வெட்டி ரோட்டில் போட்டது வரலாற்று சிறப்பு மிக்கது.

அதற்குப் பிராயச் சித்தமாக லட்சக்கணக்கில் மரம் நடும் இயக்கத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பவர் அவர்.

அதிலெல்லாம் அவரை யாரும் குறை சொல்ல முடியாது.

சிலர் அவரை சீண்டுவதற்காகவே கூட வேண்டுமென்றே கேள்விகள்    கேட்டிருக்கலாம்.

நீ நூறு தடவை கேட்பாய் நான் அதையே பதிலாக சொல்ல வேண்டுமா? இனிமேல் மரம் வெட்ட மாட்டோம். கேட்பவனை வெட்ட வேண்டியதுதான். என்று பதில் சொல்வது அவருக்கு அழகா? 

இன்னும் மேலே போய் ஏண்டா நாய் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்.

அவருடைய வயதுக்கும் அனுபவத்துக்கும் இப்படி எல்லாம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுவது என்பது எந்த விதத்திலும் அவர்க்கு பெருமை சேர்க்காது.

எந்தப் பிரச்னை என்றாலும் முதலில் அறிக்கை வெளியிட்டு தனது அக்கறையை வெளிக்காட்டும் மருத்துவர் இப்படி தன்னையே இழந்து விட்டாரே என்ற வருத்தம் தமிழர்களுக்கும் இப்படி அவமானப்படுத்தி விட்டாரே என்ற கோபம் பத்திரிகை யாளர்களுக்கும் இனி நிரந்தரமாக இருக்கும்.

காயப்படுத்தியவர்தான் அதற்கு மருந்தும் போட வேண்டும். அதுதான் அவருக்கு அழகு.

உள்ளாட்சித் தேர்தலில் முறிகிறதா திமுக- காங்கிரஸ் கூட்டணி??!

திருச்சியில் இன்று நடந்த குடிநீர் கேட்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கேஎன் நேரு பேசும்போது வர இருக்கிற உள்ளாட்சி தேர்தல்களில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு காங்கிரசை தூக்கிச் சுமப்பது என்றும் கேட்டு அதிர வைத்தார்.

ஆனால் கேஎன் நேரு தானாக இதை பேசவில்லை. சில காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்பற்ற தன்மையில் பேசியதால்தான் இதை அவர் பேச வேண்டி வந்தது என்று அந்தக் கட்சிக்காரர்கள் கூறுகிறார்கள்.

நேரு தெளிவாக இது தன் சொந்த கருத்து என்றும் தன் கருத்தை தலைவர் ஸ்டாலினிடம் கூறப் போவதாகவும் இறுதி முடிவை தலைமை எடுக்கும் என்றும் கூறிவிட்டு தலைமை நீங்கள் தூக்கிச் சுமக்கத்தான் வேண்டும் என்று கூறினால் அதற்கும் தான் தயாராகவே இருப்பதாக தெளிவுபடுத்தினர் நேரு.

இன்று மாலையே பத்திரிகையாளர்களை கூப்பிட்டு தான் சொல்லியது தனது விருப்பம் என்றும் காங்கிரஸ் கூட்டணியை விட்டு திமுக வெளியேற வேண்டும் என்று தான் கூறவில்லை என்றும் மறுத்து விளக்கம் அளித்தார். திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு திரி கொளுத்தியவர்கள் காங்கிரஸ் காரர்கள்.

இன்னும் உள்ளாட்சி தேர்தல் தேதியே அறிவிக்கப்படவில்லை. இரு கட்சிகளும் இப்போதுதான் பாராளுமன்ற தேர்தலில் வரலாற்று சாதனை வெற்றியைப் பெற்று இருக்கிறார்கள்.

அடுத்த தேர்தல் வரும்போது இரு கட்சி தலைவர்களும் உட்கார்ந்து பேசி முடிவு செய்ய வேண்டிய பிரச்னையை பொறுப்பில்லாமல் பத்திரிகைகளுக்கு அறிக்கையாக கொடுத்தால் மறு தரப்பும் அதற்கு பதில் தரத்தானே செய்யும்.

சென்னையில் உள்ள 38 வார்டுகளில் போட்டியிட்டே தீருவோம் என்று முதலில் கொளுத்திப் போட்டது காங்கிரஸ்காரர்கள்.

ஆட்சிக்கு எதிரான மக்கள் உணர்ச்சியை பயன்படுத்த முனையும் போது  ஒற்றுமையை காட்ட வேண்டும்.

தலைவர்கள் பேசி முடிவு செய்ய வேண்டிய ஒன்றை தொண்டர்கள் அறிக்கை மூலம் முடிவு செய்ய முனையக்கூடாது.

மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சென்னையில் பேசும்போது உள்ளாட்சி தேர்தலில் அவரவர் மாவட்டங்களில் 100 சதவீதம் காங்கிரசார் போட்டியிட ஏற்பாடு செய்ய  வேண்டும். வெற்றிக்கு கூட்டணியை நம்பியிருக்க கூடாது. அவர்கள் வெற்றிக்கு உதவுவார்கள். நாம்தான் உழைக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

அதில் நியாயம் இருக்கிறது. மாவட்ட அளவில் கூட்டணி தலைவர்கள் பேசி முடிவு  செய்து கொள்ளுங்கள் என்று தலைமை விட்டு விட்டால் எது நடக்கும் என்று இப்போது சொல்ல முடியாது.

எது நடந்தாலும் அது ஊழல் ஆட்சியாளர்களுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது.

காவிக்கு மாறி விட்டதா அதிமுக? மழை வேண்டி யாகம் சொல்லும் செய்தி என்ன?

முன்பே அறநிலையத்துறை ஆணையர் மழை வேண்டி யாகம் நடத்த உத்தரவிட்ட செய்தி ஆச்சரியத்தை அளித்தாலும் சரி ஏதோ இறைவனை வேண்டி மழை பெற்றால் சரி என்று பொதுமக்கள் அமைதி அடைந்தார்கள்.

மழை வரவில்லை. தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. திமுக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிராக பலத்த அதிருப்தி எழுந்து ஆட்சியாளர்களை பயமுறுத்துகிறது.

இதில் இருந்து தப்பிக்க இபிஎஸ் -ஒபிஎஸ் இருவருக்கும் வேறு வழி தோன்றவில்லை  போல் தெரிகிறது.

எனவேதான் அதிமுக சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப் பட வேண்டும் ஏறு ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்களாம் .

யாகம் நடத்துவதால் யாருக்கு லாபம். அதை நடத்தும் பார்ப்பனர்களுக்குத் தான் லாபம். சும்மாவா நடத்துகிறார்கள். ஏன் நாடு செழிக்க அவர்கள் சம்பாவனை வாங்காமல் வருகிறார்களா? வந்தாலும் வருவார்கள். திராவிட இயக்கத்துக்காரர்கள் யாகத்தை ஏற்றுக்கொண்டு வருவதை வேண்டாம் என்பார்களா?

ஏன் எல்லா மத குருமார்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கக் கூடாது?

வேண்டாம் என்று மேலே சொல்லி இருப்பார்களோ?

சொன்னவுடன் இன்று எல்லா அதிமுக நிர்வாகிகளும் எல்லா கோவில்களிலும் யாக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜெயகுமார் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை  என்று நம்புகிறோம் அதனால் பிரார்த்தனை செய்கிறோம் என்று பேட்டி  கொடுக்கிறார்.

கிரிஜா வைத்தியநாதன் சிரித்துக் கொண்டே எல்லாரையும் கும்பிடு போட வைத்துக் கொண்டிருக்கிறார். நடப்பது அதிகாரிகளின் ஆட்சியே என்று ஜூனியர் விகடன்  எழுதியிருக்கிறது. பதில் சொல்வார்களா?

இதுதான் பெரியார், அண்ணா வழி என்று கூட இனி இவர்கள் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

அதிமுகவின் நிறம் மாறிக் கொண்டிருக்கிறது.

100 கோடி சொத்து, 5.5 கோடி கடனுக்கு ஏலம்? விஜயகாந்த் நிலைமை உண்மையா??!!

100 கோடி சொத்து வைத்திருப்பவர்கள் தங்களின் 5.5 கோடி கடனுக்கு சொத்தை ஏலம் போக விட்டு விட மாட்டார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் அது விஜயகாந்த் விஷயத்தில் நடக்கும்போது சந்தேகத்துக்கு உள்ளாகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் நூறு கோடி இருநூறு கோடி வாங்கி விட்டார்கள் என்று பிரேமலதா மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் இப்போது தான் ஒரு தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்த நேரத்தில் சொத்தை ஏல அறிவிப்பு வரும்வரை விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பார்களா என்ற கேள்வி எழுவது இயல்புதானே.

சிலர் இது ஒரு நாடகம் என்கிறார்கள். அதற்கு காரணம் வேண்டுமே? சம்பத்தப் பட்டவர்களுக்கு மட்டுமே அது தெரியும்.

நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம் என்று பிரேமலதா கூறுகிறார். ஆனால் இது கட்சிக்காரர்களை சோர்வடையச் செய்யும் என்பதை அவர் உணர்ந்திருகிறாரா அல்லது சோர்வடைய விடும் என்று விரும்புகிறாரா என்பதும் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் இனி அரசியல் கட்சிகளில் நடக்கும் எந்த நிகழ்வுகளிலும் பாஜக சம்பத்தப்படாமல் இருக்காது என்பதனால் இப்படியெல்லாம் சிலர் சிந்திக்கிறார்கள். 

தெலுகு தேசம் கட்சியை பாஜக எப்படியெல்லாம் சிதற அடித்திக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோமே?

சந்திரபாபு நாயுடு வெளிநாடு சென்ற நேரம் பார்த்து அவரது கட்சியின் மூத்த தலைவர்களும் ராஜ்ய சபா உறுப்பினர்களும் ஆன நான்கு பேரை பாஜகவில் இணைத்துக் கொண்டுவிட்டார்கள்.

புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் தெலுகு தேசம் கட்சிக்காரர்கள்.

பாஜக-வின் ஒரே நாடு ஒரே கட்சி லட்சியத்தில் விஜயகாந்தின் தேமுதிக சேதாரம் அடையாமல் இருந்தால் சரி!

தண்ணீர் பஞ்சம்; சென்னையை விட்டு மக்கள் எங்கே போவார்கள்?

தண்ணீர் பஞ்சம் சென்னையில் தலைவிரித்து ஆடுகிறது.

பத்தாயிரம் லாரிகள் தண்ணீர் கொண்டு வந்து கொட்டினாலும் மக்கள் தண்ணீருக்கு அலைகிறார்கள்.

அரசு என்ன செய்கிறது என்று உயர் நீதிமன்றம் கேட்கிறது. பதில்தான் கிடைக்கவில்லை.

புறநகர் பகுதிகளில் இருந்து தனியார் தண்ணீர் கொண்டுவரும்போது அரசால் ஏன் முடியவில்லை என்ற கேள்விக்கு விடை இல்லை.

ஒருவேளை தனியாரை  ஊக்குவிக்க அரசு சும்மா இருக்கிறதா? பருவமழை வரட்டும் என்று பொறுமையாக காத்திருக்கிறது அரசு என்றால் அப்படி ஒரு அரசு எதற்கு என்ற கேள்வி எழுகிறதே?

எதுவும் செய்யாமல் இருப்பதற்கு அரசு எதற்கு? கேரள அரசு கொடுப்பதாக சொன்ன தண்ணீர் போதாது என்பதிருக்கட்டும். ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.?  கொடுத்தால் தினமும் கொடுங்கள் இல்லாவிட்டால் வேண்டாம் என்பது என்ன கொள்கை? தினமும் கொடுங்கள் என்று இப்போது கடிதம் கொடுக்கப் போகிறார்களாம்.

சென்னையில் இருக்கும் நான்கு ஏரிகளும் முறைப்படி தூர் வாரப்பட்டிருந்தால் சென்னைக்கு தேவைப்படும் ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீரும் அங்கிருந்தே கிடைத்திருக்கும் என்கிறார்கள். ஏன் தூர் வாரவில்லை என்பதற்கும் எந்த பதிலும் இல்லை.

2020ம் ஆண்டில் 21 பெரு நகரங்களில் தண்ணீர் இருக்காது என்று மத்திய நிதி ஆயோக் அமைப்பு அறிவிக்கிறது. அந்த நிலை இப்போதே துவங்க ஆரம்பித்து விட்டதா?

எப்படி இருந்தாலும் ஆளும் கட்சி தனது தோல்வியை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

மீண்டும் முத்தலாக் தடை சட்ட மசோதா; இவர்களுக்கு வேறு வேலையே கிடையாதா??!!

முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் வழக்கம் சட்டப்படி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி விட்டது.

ஆனால் அப்படி முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முஸ்லிம்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை தரும் பாஜக வின் சட்டத்தை தான் எல்லாரும் எதிர்க்கிறார்கள்.

இது முஸ்லிம் பெண்கள் மீதான அக்கரையில் செய்யும் நடவடிக்கை அல்ல.    இஸ்லாத்தின் சட்டத்தின் மீது கை வைக்க வேண்டும். அவர்களை அச்சத்தில் ஆழத்த வேண்டும். இதுதான் பாஜக அரசின் திட்டமா?

இது நாட்டுக்கு நல்லதா? இந்து திருமண சட்டப்படி மனைவிகளை கைவிடும் கணவர்களுக்கு ஓராண்டு சிறை என்று இருக்கும்போது முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் மூன்றாண்டு சிறை என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த சட்டம் ராஜ்ய சபையில் முன்பு  நிறைவேறாமல் காலாவதி ஆனபடியால் இப்போது மீண்டும் அதே சட்டத்தை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இதைத்தவிர இவர்களுக்கு சிந்திக்க செயல்பட வேறு பிரச்னைகளே இல்லையா ?

ஒரு சிவில் பிரச்னையை கிரிமினல் ஆக்கும் வேண்டாத வேலை!!

இன்று சர்வதேச யோகா தினம்; தமிழரின் பங்கும் உண்டு !!!

இன்று சர்வதேச யோகா தினம் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்து இருக்கிறது.

எல்லா நாடுகளிலும் யோகா பரவியிருக்கிறது.

இதற்கு மத சாயம் பூசக் கூடாது. யோகாவிற்கு மதமில்லை. இது ஏதோ இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமானது போல பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது.

பதஞ்சலி யோகம் தந்த முனிவரின் காலம் கிமு 1ம் நூற்றாண்டு. அதற்கும் முன்பே யோகக் கலை இருந்திருக்கிறது.

திபெத்திய புத்த பிட்சுக்கள் கடுமையான யோகா பயிற்சியாளர்கள். அவர்களால் எத்தகைய உறைபனி நிலையிலும் சாதரணமாக வாழ முடியும். உடைகளை தங்கள் உடற்சூட்டினாலேயே காய வைத்துக் கொள்வார்களாம். இத்தகைய பயிற்சிக்கும் மதத்துக்கும் என்ன தொடர்பு?

தமிழர் சமயம் நூலில் கண்டவாறு “ஆதி தமிழர் காலத்தில் சித்தர்கள் யோகம் பயின்றவர்கள். அவர்கள் அதை ஓகம் என்று அழைத்தார்கள். இரசவாதம் பயின்றவர்கள் அவர்கள். காய கற்பத்தின் துணை கொண்டு மூச்சினை அடக்கி அதனால் ஏற்படும் வெப்பத்தினால் உடம்பின் சத்தை அமிர்தமயமாக்குதல், உடம்பை இலேசாக்குதல், கனமாக்குதல், கூடு விட்டு கூடு பாய்தல் முதலிய அருந்தொழில்கள் யோக முயற்சியின் பயனாகும். யோக முயற்சியை தமிழர்கள் தவம் என்ற சொல்லாற் குறிப்பித்தனர்.

தவத்தினால் வேண்டிய வேண்டியாங் கெய்துப எனவும் கூற்றங் குதித்தலுமாகும் எனவும் ஆசிரியர் திருவள்ளுவர் கூறியது காண்க.

ஏற்றி யிறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப்  பிடிக்கும் கணக்கறிவாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக் கூற்றை உதைக்குங் குறியது வரமே என்று திருமூலர் கூறியது காண்க. ”

உடற்பயிற்சி என்பதைத் தாண்டி மனம் தூய்மைப்படுவதே யோகம் எனலாம்.

பிரதமர் மோடி முதல் எல்லா மாநிலங்களிலும் பாஜக வினர் முன்னெடுப்பதால் அது அவர்களுக்கு சொந்தம் என்று எண்ணாமல் எல்லாரும் தினமும் யோகா பயிற்சி செய்வதே நலம் பயக்கும்.

நமக்கு சொந்தமானதை நாம் மறந்ததை மீண்டும் நினைவில் கொண்டு பயிற்சியை தொடர்வோம்.

அச்சமூட்டும் மோடியின் அடுத்த ஐந்து ஆண்டுகள்? குடியரசுத் தலைவர் உரையே சான்று!!

சொல்வது ஒன்று செய்வது வேறு என்பதுவே மோடியின் தாரக மந்திரம். 

கடந்த ஐந்து ஆண்டுகளிலும் மோடி இதைத்தான் செய்தார்.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை வெளிக்கொணருவேன் என்பதுதான் மோடியின் தொடக்க உறுதிமொழி.

எல்லாருக்கும் பதினைந்து லட்சம் தருவேன் என்பதை மறந்து விடுவோம். என்ன ஆயிற்று அந்த முயற்சி என்பதை யாவது பொறுப்புடன் சொன்னாரா? கடைசி வரையில் தனது சாதனை பட்டியலில் அதை சொல்லவே இல்லையே?

இந்த ஆண்டு மட்டும் காஷ்மீரில் நமது ராணுவ வீரர்கள் 74 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நம்மால் தடுக்க முடியவில்லையே?

விவசாயிகளுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்துவோம் என்கிறார் மோடி. முழுமையாக முடியுமா?

ஜிஎஸ்டி கொண்டு வந்து சிறு வியாபாரிகளை ஒழித்து விட்டு அவர்களுக்கு பென்ஷன் என்பது நல்ல திட்டமாம்.

அதேபோல் விவசாயிகளுக்கு 2022-க்குள் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை என்பது கனவாகவே போய்விடும் போல் இருக்கிறது. பாசனத்திற்கு தண்ணீர் தராமல் எப்படி விவசாயம் செய்வார்கள்?

வேளாண் பொருளாதார வளர்ச்சி ஆண்டிற்கு 10.5% இருந்தால்தான் அது சாத்தியம் . இப்போது இருக்கும் வெறும் 2.9% வளர்ச்சியை கொண்டு அதை எப்படி சாதிப்பீர்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

2030 ஆண்டில் நாட்டின் 40% மக்களுக்கு குடி தண்ணீரே இருக்காது என்று நிதி ஆயாக் சொல்கிறது. 21 பெருநகரங்களும் குடி தண்ணீர் இல்லாமல் போகும் என்று வேறு பயமுறுத்துகிறது. என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் அச்சத்தைப் போக்க?

அதேபோல் புதிய கல்வித் திட்டம் என்பது வேறு உள்நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கும் உரிய பதில் இல்லை.    கல்விக்கு வெறும் 4.3% பட்ஜெட்டில் நிதி ஒதுக்குபவர்களால் எதையும் சாதிக்க முடியாது.

இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளையும் செயலற்றதாக்கி விட்டு அல்லது தனது ஆதரவு கட்சிகளாக மாற்றி விட்டு சீனாவில் எப்படி கம்யுனிஸ்டு கட்சி மட்டுமே இருக்கிறதோ அப்படி இதியாவில் பாஜக மட்டுமே கட்சி என்ற நிலையை உருவாக்குவதே மோடியின் லட்சியமாக இருக்குமோ என்ற அச்சம் எல்லாருக்கும் வந்து விட்டது.

நேற்று சந்திரபாபு நாயுடுவின் தளபதிகளாக இருந்த ராஜ்ய சபா உறுப்பினர்கள்  நான்கு பேரை சத்தமில்லாமல் பாஜக தனக்குள் இணைத்துக் கொண்டது. இது பலருக்கும் விடப்பட்டிருக்கும் சமிக்ஞை. யார் வந்தாலும் காப்பாற்றப்படுவீர்கள் என்பதே அந்த சமிக்ஞை.

கோவாவிலும் வட கிழக்கு மாநிலங்கள் பலவற்றிலும் பாஜக செயல்படுத்திய கட்சி தாவல்களை நினைத்துப் பார்த்தால் இவர்களிடம் ஜனநாயகம் என்ன பாடு படப் போகிறதோ என்ற அச்சம் தான் எழுகிறது.

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் விவசாயத்தை அழித்து விடும் என்றாலும் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது நிறைவேற்றுவதில்.

பெருமுதலாளிகள்பாடு தான் கொண்டாட்டமாக இருக்கும்.

இன்னும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மோடி இந்தியாவை ஒரு வழியாக்கி விடுவார் என்ற அச்சத்தில் முகாந்திரம் இருக்கிறதா இல்லையா?   

அச்சத்தை போக்க ஏதாவது செய்யட்டுமே?!!வரவேற்போம்??!

சிவி சண்முகத்தை அவமதித்த பாஜக தலைமை??!!

எவ்வளவு அடித்தாலும் தாங்குவாண்டா என்ற வடிவேலுவின் காமெடியை மிஞ்சி விட்டது அதிமுகவை அவமானப்படுத்தும் பாஜகவின் செயல்.

துணை முதல்வர் ஒபிஎஸ்-ஐ பார்க்க முடியாது என்று வாசலில் காத்திருந்தவரை திருப்பி அனுப்பிய நிர்மலா சீதாராமன் இன்று நிதி அமைச்சர். கேட்டதற்கு ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்று அண்ணா சொன்னார் என்று தத்துவம் பேசினார் ஒபிஎஸ். அத்தோடு சரி. சாதாரண ராஜ்ய சபா எம்பி யான மைத்ரேயனை சந்தித்த நிர்மலா தன்னை அவமானப்படுத்தியதை  ஒபிஎஸ் எப்படி விழுங்கினாரோ அப்படியே இன்று சட்ட அமைச்சர் சிவி சண்முகமும் ராஜ்ய சபா உறுப்பினர் நவநீதகிரிஷ்ணனும் விழுங்கி இருக்கிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய பாஜக பாதி அரசியல் கட்சிகள் புறக்கணித்த நிலையில் வந்திருந்த கட்சிகளை அரவணைக்காமல் குறிப்பாக அதிமுகவை அவமதிக்க வேண்டிய அவசியம் என்ன?

இது என்ன அரசு சம்பந்தப்பட்ட கூட்டமா? விதிமுறைகள் இடம் தர வில்லை என கூற?    

அதிமுகவின் சார்பாக இருவரும் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்த அதிமுக தலைமையும் இந்த அவமானத்தை கண்டு கொள்ளவில்லை.

மீசையில் மண் ஒட்டாத குறையாக அமைச்சர் ஜெயக்குமார் இங்கே வியாக்கியானம் தருகிறார் அது ஒன்றும் பெரிதல்ல சாதாரணமான ஒன்றுதான் என்று. திமுகவின் டிஅர் பாலு இருந்தும் கலந்து கொள்ளவில்லை என்றும் சொல்கிறார். திமுக புறக்கணித்து விட்டது. எனவே அனுமதிக்கவில்லை என்ற பிரச்னை எழவில்லை.

ஒரு கூட்டணி கட்சியை இப்படி அவமானப்படுத்தலாமா என்றால் ஆடிட்டர் குருமூர்த்தி ஆர் கே நகரில் அதிமுக தோற்றபோது விமர்சித்த ‘ஆண்மையற்றவர்கள்’ என்ற ஆணவக் குரல் தான் நினைவுக்கு வருகிறது.

என்னதான் இருந்தாலும் தமிழ்நாட்டு அமைச்சரை அவமதித்தது நம்மையே அவமானப்படுத்தியது போல் இருக்கிறது.

கிராமக் கோவில்களை அறநிலையத்துறை கைப்பற்ற நடந்த முயற்சியை முறியடித்த 62 கிராம மக்கள்?!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் நாடு பகுதி 62 கிராமங்களை உள்ளடக்கியது.

அதன் காவல் தெய்வங்களாக ஏழை காத்த அம்மன், வல்லடிகாரர் கோவில் போன்றவை உள்ளன.

அவற்றை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த முயற்சி செய்தது.

இந்த முயற்சியை முறியடிக்க மக்கள் ஒன்றுசேர்ந்து போராட தீர்மானித்தனர்.

கடைகளை அடைத்து விட்டு ஊர்வலமாக சென்று மதுரை செல்ல தீர்மானித்தனர்.

பிரச்சனையை பெரிதாக்க விரும்பாத உதவி ஆணையர் எம்எல்ஏ மற்றும் காவல் துறை அதிகாரிகள்  அங்கே வந்து கையகப் படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் முன்பு போலவே கிராம மக்களே நிர்வகிக்கலாம் எனவும் தெரிவித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

கேள்வி; ஏன் அறநிலையத்துறை முன்பே மக்கள் கருத்தறிந்து நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது?  

யாரோ சொல்லி மக்களை கலந்து கொள்ளாமல் ஏன் இந்த முயற்சியில் இறங்க வேண்டும்.?

சமீபத்தில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மன் கோவில் நிர்வாகத்தையும் அற நிலையத் துறை கைப்பற்ற முயற்சி செய்தது.

கிராமக் கோவில்களை பொறுத்த வரை பாரம்பரியமாக நடைமுறையில் இருந்து வரும் வழக்கங்களை மாற்றம் செய்யாமல் இருப்பதே நல்லது. அப்படி ஏதேனும் புகார் வந்தால் மக்களை விசாரணை செய்து அதன் பின் முடிவெடுக்க வேண்டுமே தவிர அதிகாரிகள் தாங்களே முடிவு எடுப்பது சரியல்ல.